Wednesday, August 2, 2017

வாட்ஸ் அப் வாழ்க்கை - டாக்டர். ஜி.ராமனுஜம்

கோழிகள் கூவி குருகுகள் இயம்பிக் கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தடைந்த காலைப் பொழுதில் முதலில் கண்களைத் திறக்கிறோமோ இல்லையோ செல்போனைத் திறக்க மறப்பதில்லை நாம். அப்படித் திறந்தது முதல் கண்ணயரும் வரை நாம் பார்ப்பவற்றில் முதலிடம் நமக்கு வாட்ஸ் அப்பில் வந்து குவியும் தகவல்கள். அல்லும் பகலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமது உள்ளங்கைக்குள் உள்ள செல்போனில் உள்ள செய்திகளே தீர்மானிக்கின்றன. அதிலும் உடல்நலன் சார்ந்துதான் எத்தனை செய்திகள்! காலை எழுந்து பல்தேய்க்கலாம் எனப் பற்பசையை எடுக்கும்போதுதான் ஃப்ளோரிடாவில் ஒருவர் ஃப்ளோரைட் அதிகம் உள்ள பற்பசையை வைத்துப் பல்தேய்த்ததால் பற்களெல்லாம் பணால் ஆகி வாயின் ஓரங்களில் தந்தம் போல் ரெண்டு முளைத்த செய்தியைப் படத்தோடு பார்த்தது நினைவுக்கு வந்து பற்பசையைத் தூக்கி எறிந்து விடுவோம். சரி ஆலும் வேலும் பல்லுக்குறுதி, வாட்ஸ்அப்பும் ட்விட்டரும் செல்லுக்குறுதி என்று சொல்வதற்கேற்ப வேப்பங்குச்சியால் தேய்க்கலாம் என நினைத்தால் வேப்பங் குச்சியால் தொடர்ந்து பல்தேய்த்து வந்தால் வெண்மைநிறம் மாறிப் பற்கள் பச்சையாகிவிடும் என மருத்துவக் குறிப்பைப் படித்தது நினைவுக்கு வரும்.

துர்நாற்றம் என்பது முதுகுபோல். நம்முடையது நமக்கே தெரியாது. அடுத்தவர் பிரச்சினை அது எனப் பல்தேய்க்காமலே காப்பி குடிக்கலாம் என முடிவு செய்வோம். காப்பி குடித்தால் கல்லீரலுக்கு நல்லது என ஃபாரினி லிருந்து ஒரு தகவல் ஃபார்வேர்டு ஆகி வந்ததை நினைவு கூர்ந்தவாறே காப்பி கலக்க நினைக்கும்போது காப்பி குடித்தால் கணையத்துக்குப் பாதிப்பு என்று கனடாவில் நடந்த ஆராய்ச்சி முடிவொன்று உங்கள் மனதுக்குள் ஆராய்ச்சி மணியை ...ச்சீ..... அபாய மணியை ஒலிக்கவிடும். காப்பி குடிக்காமலே நமது வயிறு கலகலக்கத் தொடங்கிவிடும். (அதிலும் ஒரு பிரச்சினை. கழிவறைகளில் கிழக்கத்திய முறை, மேற்கத்திய முறை இரண்டிலும் உள்ள சாதக பாதக பயங்கரங்களும் தனித்தனி செய்தியாக ஒரே நபரால் பல்வேறு குழுக்களில் பகிரப்பட்டது நினைவுக்கு வந்து எதில் நுழைவது எனக் குழம்பிக் காலைக் கடன் மல்லையாவிற்குக் கொடுத்த வாராக்கடன் போல் ஆகிவிடும்).

குளிக்கச் சென்றால் அங்கும் குழப்பங்கள் உபரியாக உற்பத்தி ஆகின்றன. தண்ணீரா, வெந்நீரா.. எது சிறந்தது எனப் பாப்பையா இல்லாமலேயே பட்டிமன்றம் ஒன்று மனதுக்குள் ஓடும். `டையில் முடிந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இரண்டுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் சரிசமமாக ஓட்டுக்கள் கிடைக்கும். (கூடுதலாக வெந்நீர் என்று சொல்வதே சரி! சுடுதண்ணீர் எனச் சொல்வது இலக்கணப்பிழை என்ற தமிழார்வலர் ஒருவர் தகவல் ஒன்று அனுப்பியதும் சேர்ந்து நினைவுக்கு வரும்). அதிலும் தலையில் முதலில் விடவேண்டுமா அல்லது காலிலிருந்து துவங்கவேண்டுமா .. கேசாதிபாதமா அல்லது பாதாதிகேசமா எனப் புலவர்கள் குழம்புவதுபோல் குழப்பமான சிந்தனைகள் தோன்றும். தலைமுழுகுவதற்கே தலைமுழுகிக் குளிக்காமலேயே போய்விடலாம் என்றால் குளிக்காமல் போனால் என்னென்ன பாதகங்கள் வரும் என ஆசாரக்கோவையை ஆதாரமாகக் காட்டி வந்த செய்தி ஒன்று நம்மைத் தீராக் குழப்பத்தில் தள்ளும்.

ஒருவழியாகக் குளியல் பிரச்சினையை முடித்துவிட்டு, சாப்பிட அமர்ந்தால் அங்கேதான் பெரும் பிரச்சினை ஆரம்பமாகும். ஃப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலுவிடம் தேவையான ஆணிகள் எவை, தேவையில்லாத ஆணிகள் எவை எனக் கேட்கும்போது நீ பிடுங்கும் எல்லாமே தேவையில்லாத ஆணிதான் என்பார். அதேபோல் டயட் சம்மந்தமான வாட்ஸ்அப் தகவல்கள் நீங்கள் சாப்பிடும் உணவுகள் எல்லாமே விஷம்தான் எனக் குண்டைத் தூக்கிப் போடும். இட்லி சாப்பிட்டால் இடுப்பில் சதை போடும், தோசை சாப்பிட்டால் தொந்தி போடும் என வரும் தகவல்கள் நம்மைக் குழப்பும்.சாதமாவது சாப்பிடலாம் என்றால் பிளாஸ்டிக் அரிசி என்றொரு பிசாசு கிளம்பும். பிளாஸ்டிக் அரிசி சாப்பிட்டுவிட்டு வெயிலில் வெளியே சென்றவர்க்கு வெப்பத்தால் உடலுறுப்புக்கள் உருகி ஓடிவிட்ட பயங்கரச் செய்தி ஒன்று படத்தோடு தோன்றும். முன்பெல்லாம் ப.அரிசி என்றால் பச்சரிசி, பு.அரிசி என்றால் புழங்கலரிசி எனப் புரிந்துகொள்வோம். இப்போது பி.அரிசி என்று பிளாஸ்டிக் அரிசியைக் குறிப்பிடுகிறார்கள் என்று வாட்ஸ்அப் வதந்திகள் வரத் தொடங்கியுள்ளன.

சாப்பிடாமலே போய்விடலாம் என்றால் ஆதார்கார்டுக்கு அடுத்து அவசியமானது காலை உணவே. காலை உணவைத் தவிர்ப்பவர்கள் காலனுக்கு உணவாகிறார்கள் என்ற தகவல் நம்மைத் தாக்கி நிலைகுலையச் செய்யும். நீ ஒரு மனிதனாக இருந்தால் அவசியம் இந்தத் தகவலைப் பிறரிடம் பரப்பு என்ற எச்சரிக்கை வேறு தொடர்ந்து வரும்.

சரி! யாருக்காவது போன் செய்து கேட்கலாம் என்றால் செக்கோஸ்லோவியாவில் செல்போனைக் காதுக்கு அருகே வைத்துக் கொண்டு பேசியவரின் காதுகள் கருகிய புகைப்படம் நமது கவனத்துக்கு வரும். மேலும் தினமும் காலை ஆறு மணி முதல் மறுநாள் காலை ஐந்து ஐம்பத்தொன்பது வரை செல்போனிலிருந்து கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். ஆகவே இந்த நேரத்தில் மட்டும் செல்போனைப் பயன்படுத்தாதீர்கள் என நாசா வெளியிட்டுள்ள நம்பத்தகுந்த செய்தி ஒன்றும் நம் மனதில் மின்னும்.

இப்பவே கண்ணைக் கட்டுகிறதா? இன்னும் என்ன உடை அணிவது, எந்த வாகனத்தில் போவது, என்ன வேலைக்குச் செல்வது, வரும் சம்பளத்தை எப்படிச் செலவழிப்பது என நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நானோ விநாடியிலும் நாம் எவ்வாறு செயல்பட வேண்டுமென அறிவுறுத்தும் தகவல்கள் கோஹ்லி அடிக்கும் ரன்கள்போல் குவிந்துகொண்டே இருக்கின்றன. என்னது? கட்டுரையைப் படித்துவிட்டுச் சிரிக்கிறீர்களா? அதிகமாகச் சிரிப்பது ஆரம்பக்கட்ட மனநோயின் அறிகுறி என்று எச்சரிக்கும் செய்தியை இன்னும் பார்க்கவில்லையா?

(9443321004 –ramsych2@gmail.com)



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.