Sunday, August 13, 2017

ஜி.எஸ்.டி. தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு



ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நாடு முழுவதும் உள்ள தொழில் முனைவோர், சிறு குறு விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பை சமாளித்து ஓரளவு மீண்டு வந்த மக்கள் மத்தியில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுத்துள்ளது.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் விலைவாசி குறையும்.. விவசாயிகள் பயன்படுத்தும் உரங்கள் மீதான வரி ரத்து செய்யப்படும் என பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு நேர்மாறாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

கவர்ச்சிகரமான கோஷங்களிலும் வார்த்தை ஜாலங்களிலும் விளையாடுவது மோடி அரசுக்கு வாடிக்கை என்பதைக் கடந்த மூன்று ஆண்டுகளில் புரிந்துகொள்ளதாவர்கள் பாவம் அப்பாவிகள்- சாதாரண மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளில் இந்த அரசுக்கு அக்கறையில்லை. இதற்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஒரு சரியான உதாரணமாகும்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்த முனைந்த நேரத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அதைக் கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பினார். பிரதமரான பின்பு அவர் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டது ஏன்? ஆதார் அட்டையை எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த பாஜக தற்போது அதை மிகத் தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பான குழப்பங்கள் வர்த்தகர்கள், பொதுமக்களை மட்டுமின்றி அரசுத் துறைகளையும் பாதிக்கும் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டாமா?

உரங்களின் மீதான 5 சதவீத வரிவிதிப்பால் ரூ.11 முதல் ரூ.75 வரை விலை உயர்ந்துள்ளது. 25 வகையான வரிகள் மாநிலத்திற்கு மாநிலம் சிறு வேறுபாடுகளுடன் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ஜி.எஸ்.டி என்ற வரிவிதிப்பின் கீழ் ஒரே வரியாக செலுத்துவதில் பெரிய நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. ஆனால் நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் தொழில், கிராமத்தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஜி.எஸ்.டி. என்ற இந்த வரிவிதிப்பு கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. வரிவிதிப்பில்லாத பட்டியலில் இருந்து 550 பொருட்கள் வரிவிதிப்பு பட்டியலுக்குள் வந்துள்ளன. ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள ஏழை மக்களுக்கு இது மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு உரங்கள் மீது 1 சதவீத சேவை வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் மட்டும் வரிவலக்கு அளிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.யில் உரங்களுக்கு 12 சதவீதம் பூச்சி மருந்துகளுக்கு 18 சதவீதம் என வரிவசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தற்போது உரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவுமே அதிகம்தான்.

தமிழ்நாட்டில் விவசாயம் பொய்த்துப்போய் கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் இது போன்ற தாக்குதலால் மேலும் மேலும் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள நெல் விளைவிக்கும் பிரதான மாவட்டங்களான டெல்டா மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறு குறு விவசாயிகள் அனைத்துப் பகுதியினரும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மைக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான இடு பொருட்களுக்கும் வரிவிலக்கு அளித்தால்தான் விவசாயம் பிழைக்கும். நாமும் பிழைப்போம்.

(தொடர்புக்கு 94421 26516)
                           

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.