தமது அரசின் பணமதிப்பு
நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகம் இரண்டையுமே,
125 கோடி இந்திய மக்களும் உளமார வரவேற்பு
அளித்துக் கொண்டாடி ஏற்றுக்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி
புளகாங்கிதம் அடைந்துள்ளார். ராஜஸ்தான்
மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமது கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் மட்டுமின்றி முன்னதாக வேறு மாநில எம்பிக்களோடு பேசும்போதும் இப்படியான பெருமிதம் பொங்கப் பேசியுள்ளார் அவர். அதுமட்டுமல்ல,
அதற்கு அடுத்த வரி முக்கியமானது: தேர்தல்களை மனத்தில்
நினைத்துக் கொண்டு மென்மையான பொருளாதார
நடவடிக்கைகளை எடுப்பது தவறு; நமது கெடுபிடியான, தீவிரமான
நடவடிக்கைகளைத் தான் மக்கள்
எதிர்பார்க்கின்றனர்;
நமது நேர்மையின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அது.
எப்போதும்போல் எந்த
விஷயத்திலும் சம காலத்தில் முதல், கடைசி சொல் தமதாக இருப்பதாகப் பார்த்துக் கொள்வதில் அவர் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்பவர். தமது திட்டங்களோடு அவர் எடுத்துக் கொள்ளும் செல்ஃபிதான் இந்த அறிக்கையும்!
வேதனைகளோடு புலம்புபவர்களுக்கு
புகைப்படம் எடுக்கும் இடத்தில் என்ன வேலை, தள்ளி நின்று பாருங்கள் போதும்!
கால் கடுக்க வங்கிகள் முன்பாக நாள்கணக்கில் நின்ற வலியை மக்கள் எப்போதோ மன்னித்து மறந்தும்
விட்டனர். நகராத வரிசையில்
மயங்கி விழுந்தோரையும், பழைய ரூபாய்த் தாள்களை மாற்றப் போன இடத்தில் மாரடைப்பில் உயிர் நீத்த சாதாரண
மக்கள், ஓயாத பணியில்
மரித்துப்போன வங்கிப் பணியாளர்கள் எல்லோரது நினைவுகளையும் எப்போதோ அவரவர் ஆதார்
அட்டையோடு சேர்த்துத் தூக்கி
எறிந்தாயிற்று. கள்ளப்பணத்தை
ஒழித்துக் கட்டவும், கணக்கில் வராத
கறுப்புப்பணத்தை மீட்டெடுக்கவும்
முனைந்திருக்கும் ஓர் அரசியல் அவதார
புருஷரின் உன்னத செயல்பாடுகள்
தானே பேசுபொருளாக இருக்க
முடியும்! குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுக்க இருபத்து நான்கு மணி நேரமும் உள்நாட்டில் சிந்திக்க நேரமில்லை என்றால் அயல்
நாடுகளுக்குச் சென்று ஓய்வெடுத்துச் சிந்திக்கும் அவர்
என்ன செய்வார் பாவம்! ஆனாலுமென்ன, புதிய நோட்டுகளுக்கும் கள்ள நோட்டு அடிப்பவர்கள் புறப்பட்டு விட்டனர், ஒற்றைப்
பெரும்புள்ளியும் கறுப்புப்பண
வேட்டையில் சிக்கவில்லை, பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக வங்கிகளுக்குத் தான் பல்லாயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு, மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பழைய 500/1000 ரூபாய்த் தாள்களின் மொத்த மதிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்
படேலால் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை என்றெல்லாம் கேள்வி கேட்பவர்கள் அப்பாவிகள் அல்லது தேச விரோதிகள்! மிக மிகக் குறைத்து
மதிப்பிடப்பட்ட ஒரு கணக்கீட்டின்படியே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்த மாதங்களில் பறிபோயிருக்கும் வேலை வாய்ப்புகள் 15 லட்சம் ஆகும். தொலைந்து போன சிறு, குறு, நடுத்தரத் தொழிலகங்கள், காணாமல் போன
நிறுவனங்கள், மூடிய கதவுகளுக்கு
வெளியே வாழ்வாதாரங்களை இழந்து கலைந்து நொறுங்கிப்
போன இதயங்களின் கணக்கு
என்னவாக இருக்கக்கூடும்!
ஆனால், இதே காலத்தில், பெருந்தொழில்
அதிபர்களது ஊதியப் பைகளின் கனம் புயல் வேகத்தில் அதிகரித்திருக்கிறது என்கிறது செஃபி நிறுவனம்
சேகரித்திருக்கும் ஆண்டுப் புள்ளிவிவர அறிக்கை.
தங்களது நிறுவனத்தின் சராசரி மட்டத்தில் உள்ள ஊழியரது
ஊதியத்தைப் போல் 1200 மடங்கு அதிக சம்பளம் பெறுகின்றனர் சில கார்பொரேட் நிறுவனத் தலைவர்கள். வெறும் 15 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் போதும் என்று பல ஆண்டுகளாக ஞானியாகவே வாழ்ந்துவரும்
முகேஷ் அம்பானிக்கு அவரது
கம்பெனிகளது பங்குகளிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் மட்டுமே ரூ 1400 கோடியைத் தாண்டும். ஆறே ஆறு தொலைத்தொடர்பு
நிறுவனங்கள் தங்களது வருவாயில்
குறைத்துக் காட்டியிருக்கும் தொகை
மட்டுமே ரூ. 60,000 கோடி! பொற்காலத்தில் வாழ்கிறது வல்லரசாகத் துடிக்கும் ஒரு தேசம்! ஒரு வேளை வல்லரசுக்குத் தேவையான இலக்கணம் இவைதானோ!
சரக்கு மற்றும் சேவை
வரி, எதற்காக அமல்படுத்தப்படுகிறது என்றால், வரி
கட்டாது ஏய்க்கும்
வர்த்தகர்களை வளையத்திற்குள் கொண்டுவந்து அவர்களது தேச பக்தியை வளர்த்தெடுத்து பக்தி
பரவசத்தோடு அரசின் கஜானாவை நிரப்ப வைக்க! என்ன நடந்து
கொண்டிருக்கிறது நடைமுறையில்? ஏற்கெனவே தப்ப முடியாதபடி விசுவாசத்தோடு அனைத்துவித வரிகளையும் மறு கேள்வியின்றி செலுத்திவரும் திருவாளர் பொதுஜனத்தின் பாக்கெட்டிலிருந்து
மேலும் சுரண்டி எடுத்து மறைமுகவரி
வசூலைப் பன்மடங்கு அதிகரித்துக் காட்ட அதிரடி விலையேற்றம் எல்லாப் பொருள்கள் மீதும் சுமத்தப்பட்டு
வருகிறது. தேச பக்தியுள்ள
இந்தியன் ஜிஎஸ்டியை எப்படி எதிர்க்க முடியும்? இரண்டு மாதங்கள் போனால், எல்லாவற்றுக்கும் பழகிக் கொண்டு விடுவார்கள் மக்கள். கூடுதல் வரி வசூல் யாரது நலனைக் காப்பாற்ற என்றோ, சாதாரண மக்களுக்கான திட்டங்களுக்காக ஒற்றை நயா பைசா பயன்படுத்தப்பட மாட்டாது என்பதோ எந்த சானல்
விவாதத்திலும் வராது பார்த்துக் கொள்ள
இருக்கின்றனர் ஆட்கள்.
அந்த இடைவேளையில், மாட்டிறைச்சி விவகாரமோ, காதலர் தின எதிர்ப்போ, இந்தி மொழி தொடர்பான கவன ஈர்ப்போ
எத்தனை எத்தனை விஷயங்கள்
இருக்கின்றன! மோதிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, மோடி கொண்டு வந்துகொண்டிருக்கும் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் குறித்து என்ன தெரியப்போகிறது? தேசிய கீதம் ஒலிக்கிறது, எழுந்து நில்லுங்கள்,
வந்தே மாதரம் பாடிவிட்டு இடத்தைக் காலி செய்யுங்கள்! அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளத்தில் எங்கே மாற்று சிந்தனை, மாற்றுக் குரல் ஒலித்தாலும், அறிஞர்கள் மாணவருக்கு எதிராகக் குண்டர் சட்டத்தை ஏவிவிட ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசிகள்
தமிழக ஆட்சியிலேயே
இருக்கையில், தங்களது ஆட்சி
நடக்கும் மாநிலங்களில் யார் எதிர்த்துப் பேசிவிட முடியும் என்பது மத்திய ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும். சொந்த நாட்டு விவசாயிகள் தற்கொலை குறித்தோ, வறட்சியின்
கொடுமையிலிருந்து விடுபட கோரிக்கைகள் எழுப்பும் இயக்கங்களோடோ பேச நேரமற்று இருக்கும் ஒரு பிரதமர், பாலஸ்தீன மக்களது உரிமைகளை நசுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல் நாட்டுக்குச் சிறப்பு விருந்தினராகப் போய்வரவும், அதன் அதிபர் இந்தியில் பேசுவதில் நெக்குருகிப் போகவும் நேரம் கண்டுபிடிப்பது சூட்சுமம் நிறைந்தது. மூன்றாகப் பிரிந்து பிளவுபட்டு அடித்துக் குத்திக் கொண்டிருக்கும் போதும்,
தமிழக ஆளும் கட்சியினர்
மோடியின் சன்னிதானத்தில் ஒரே வரிசையில் நின்று குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் களப்பணி
ஆற்றிக் கொண்டிருப்பதும், நீட் தேர்வு விஷயத்தில்
தமிழக மாணவர் நலனைக் காற்றில்
பறக்கவிட்டு வெற்று அறிக்கைகளை
அளந்து விட்டுக்
கொண்டிருப்பதும், நெடுவாசல்-கதிராமங்கலம்
கிராமத்து மக்கள் தங்களது வாழ்வாதாரம், வேளாண் உழவு மண், நீர்ப்படுகை, உடல் நலம், சுற்றுச்சூழல் எல்லாம் காவு வாங்கப்படுவதற்கு எதிராகப் போராட்டங்களில் இறங்குகையில் அதிரடி ஒடுக்குமுறையை ஏவிவிட்டுக் கொண்டிருப்பதும்
தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல –
தமிழக மண்ணில் மாற்றுக் கொள்கைக்கான வித்து ஊன்றப்பட்டுவிடக் கூடாதென்ற மத்திய
ஆட்சியாளரது கண்காணிப்பில்
அரங்கேறிக் கொண்டிருப்பவை என்பதை கவனிக்கத் தவறக் கூடாது.
புதிய தாராளமயக்
கொள்கை, மூலதனத்தின் நலனை, லாப வெறியை, ஊழல் வலையை, வருவாய் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருவதோடு, சாதிய- மத - இன - மொழி வேறுபாடுகளை முன்னிறுத்தும்
பிற்போக்கு அரசியலையும் ஊதி ஊதி வளர்த்தெடுத்து மக்களிடையே பிளவை விதைக்கிறது. சந்தைப் பொருளாதாரம் சாதாரண மக்கள் நலனுக்கு எதிரானது என்ற விவாதங்களைப் பின்னுக்குத் தள்ளவும், ஒன்றுபட்ட எதிர்ப்பலைகளை வலுவிழக்கச் செய்யவும் இந்தச் சேவையை
தாராளமய உலகமய தத்துவார்த்தம் ஆற்றுகிறது. மக்கள்
நலனை விரும்பும் ஜனநாயக
ஆர்வலர்கள், இன்றைய நிகழ்ச்சிப்போக்குகளின் மைய அரசியலுக்கு எதிரான கருத்தைப் பரந்த மக்களிடையே உருவாக்க மேலும் கூடுதல்
உழைப்புக்குத் தயாராக வேண்டிய காலம் இது.
சவால்கள் கடுமையானவை. ஆனால், நம்பிக்கையோடான
முன்னெடுப்பும், சலிப்பற்ற
விழிப்புணர்வு செயல்பாடுகளும்
மாற்றத்தை நனவாக்கும் பாதையைச் சமைக்கும்.
-94452 59691 sv.venu@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.