Thursday, August 10, 2017

பன்மொழிப் புலவர் ஜகந்நாதராஜா


எத்தனையோ தமிழ் அறிஞர்களும் ஆளுமைகளும் மக்களுக்குத் தெரியாமலேயே மாண்டு போகிறார்கள். அவர்களுள் பன்மொழிப் புலவர் ஜகந்நாதராஜாவும் ஒருவர். 1933-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 26-ம் நாள் ராஜபாளையத்தில் தோன்றியவர்தான் ஜகந்நாதராஜா. ஆறாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்று அனைத்திலும் இலக்கிய இலக்கணப் புலமை பெற்று கவி எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களைத் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். இவர் மொழி பெயர்த்த திருக்குறளையும் புறநானூற்றையும் தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டும் சிறப்பித்தது. கிருஷ்ண தேவராயர் எழுதிய ஆண்டாள் வரலாற்றை `ஆமுக்த மால்யதா என்று தெலுங்கில் படைத்த காவியத்தைத் தமிழாக்கம் செய்ததற்காக, சாகித்ய அகாதமி முதன்முதலில் தனது மொழிபெயர்ப்புக்கான விருதை ஜகந்நாதராஜாவுக்கு அளித்துச் சிறப்பித்தது.

தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய `பாரதி காலமும் கருத்தும் என்ற நூலை சாகித்ய அகாதமிக்காக தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். தமிழில் `தரிசனம், `காவிய மஞ்சரி, `கற்பனைப் பொய்கை முதலிய நூல்களுடன் `ஆபுத்திர காவியம் என்னும் பெரிய காவியத்தையும் படைத்துள்ளார். மணிமேகலை இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல ஆய்வுகளைச் செய்துள்ளார். மேலும் 1958ஆம் ஆண்டு மணிமேகலை மன்றம் ஏற்படுத்தி பல இலக்கியப் பணிகளைச் செய்தார்.

தன்னிடமிருந்த பல்வேறு மொழி இலக்கிய ஆய்வு மற்றும் தத்துவ நூல்களைக் கொண்டு தனி நூலகமாக அமைத்தார். `ஜகந்நாதராஜா இலக்கியத் தத்துவ ஆய்வு நூலகம் என்ற பெயரில் அவரது மருமகனார் முனைவர் ராதாகிருஷ்ணராஜாவால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜகந்நாதராஜா 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இந்திய குடியரசுத் தலைவர் விருது மற்றும் மலேசிய பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டம் முதலியவற்றைப் பெற்றுள்ளார். அவரது ஆய்வு நூல்கள் தமிழர்களுக்கு இன்றும் வழிகாட்டியாக விளங்கி வருகிறது எனின் மிகையன்று.

9442145256 - sekernatesan@gmail.com










0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.