ஒரு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிர்வாகம் ஆங்கிலவழி வகுப்புகள்
நடத்தக் கோரிய வேண்டுகோளை கல்வித் துறை நிராகரித்ததைத் தொடர்ந்து நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
மானிய விதிகள், தனியார்
பள்ளிகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் ஆகியவற்றின்படி மானியத்தை உரிமையாகக்
கோரமுடியாது. சுயநிதி வகுப்புகளை பல அரசு மற்றும் உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் நடத்தி வருகின்றனர். அது போல
தொடங்க நிர்வாகம் விரும்பவில்லை என்று நினைக்க வேண்டியிருக்கின்றது. கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி பெறும் உரிமை
ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு. இவ்வுரிமையைப் பெற எவரும் முயற்சிக்காதது புதிராகவுள்ளது.
அரசும் இலவசக் கல்வியைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. கல்வி உரிமைச் சட்டம் பயிற்று மொழி பற்றி திட்டவட்டமாக
எதுவும் கூறவில்லை. தாய்மொழிவழியில் கல்வியை அளிக்க முடிந்த அளவு முயற்சிக்க வேண்டுமென்றே
கூறுகின்றது. ஆங்கிலவழிக் கல்வி அளித்திட உரிமை கோரமுடியாதென்றோ, ஆங்கில வழிக் கல்விக்கு
மானியத்துடன் ஆசிரியர் பணியிடங்கள் அளிப்பது பற்றி அரசின் நிலைப்பாட்டைக் கேட்டோ
வழக்கை முடித்திருக்கலாம். வழக்கிற்கே சம்பந்தப்படாத அரசுப் பள்ளி, அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றி பல கசப்பான கருத்துகளை நீதிபதி
தெரிவித்திருக்கிறார். இவை பெரும்பாலும் தனியார் பள்ளி நிர்வாகிகளும், அரசுசாரா அமைப்புகளும் சொல்லி வரும் எந்த ஆய்விலும் நிறுவப்படாத குற்றச்சாட்டுகள்தான். கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட ஒருவருக்கும் தன் பக்க
நியாயத்தை எடுத்துவைக்க உரிமையுண்டு. அவரை விசாரிக்காது தண்டனை அளிக்கமுடியாது. ஆனால் அரசுப் பள்ளி
ஆசிரியர்கள் குரலைக் கேளாமலேயே நீதிபதி சொன்ன கருத்துகள் நீதிபால் நின்றவையல்ல.
நான் கலந்து கொண்ட சில கூட்டங்களில் அரசுசாரா அமைப்பைச் சார்ந்தவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
பள்ளிகளுக்கு வருவதில்லை
என்று கூறுவார்கள். நான் அவர்களிடம் எந்தப் பள்ளியில் எந்த ஆசிரியர் பள்ளி வருவதில்லை என்று
கேட்பேன். எல்லோரும்
என்பார்கள். ஒரு பள்ளி, ஒரு ஆசிரியர் பெயர் தெரிவித்தாலே போதும் என்று நான் கேட்க மௌனமாகி விடுவார்கள். இவ்வாறு பொத்தாம் பொதுவாகக் குறை கூறக்கூடாது. இது போல உங்களைப் பற்றியும், உங்கள் அமைப்பு பற்றியும் குறை சொன்னால் ஏற்பீர்களா என்று கேட்டு முடித்துவிடுவேன். ஒரு
ஆசிரியர் தொடர்ந்து பள்ளிக்கு வராதிருந்தால் மேலதிகாரிகளோடு தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்
கொள்ள வேண்டுமே= தவிர, ஆசிரியர் பங்கேற்காத கூட்டங்களில்
அவர்களைப் பற்றி அவதூறாகப்
பேசக்கூடாது. என்று அறிவுறுத்துவேன். பயோமெட்ரிக் கருவி மூலம் ஆசிரியர் வருகையையும்
இருப்பினையும் உறுதிப்படுத்த
வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு குதிரையை தண்ணீருக்கு அழைத்துச் செல்ல ஒருவர் போதும்.. ஆனால் அதற்கு விருப்பம் இல்லாதபோது தண்ணீரைக் குடிக்க வைக்க ஆயிரம் பேர் சேர்ந்தாலும் முடியாது என்பது
ஒரு ஆங்கிலப் பழமொழி. ஆசிரியர் இருப்பை உறுதிப்படுத்தலாமே தவிர, கற்பித்தல் பணி நடைபெறுவதை உறுதிப்படுத்த முடியாது.
அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்பது மற்றொரு குற்றச்சாட்டு. தரம் பற்றி எனது பல கட்டுரைகளிலும் விளக்கியுள்ளேன்.
பொதுத்தேர்வுகளைக் கொண்டு தரத்தை மதிப்பிடுவது தவறானது. மாணவரது பன்முக வளர்ச்சிக்குப்
பள்ளிக் கல்வி
உதவ வேண்டும். தேர்வு ஒரு பக்கத்தை மட்டுமே மதிப்பிடுகின்றது. தேர்விற்குக் கொடுக்கப்படும் அபரிமித
முக்கியத்துவம் காரணமாக
இதர நோக்கங்கள் துறக்கப்பட்டன, மறக்கவும் பட்டன. தேர்வு முடிவுகளைக் கொண்டு மதிப்பிட்டாலும் அரசுப் பள்ளிகள் தரமற்றவை
என்று= சொல்லமுடியாது.
சில நூறு அரசுப் பள்ளிகள் நூறு சதத் தேர்ச்சியும், பெரும்பான்மையான பள்ளிகள் 90
விழுக்காட்டிற்கு மேலும், மொத்தத்தில் சராசரியாக 85 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளபோது அவற்றை தரமற்றவை என்று எவ்வாறு கூற
முடியும்?
ஐந்தாம் வகுப்பு மாணவர் இரண்டாம் வகுப்புப் பாடநூலைப் படிக்க முடியவில்லை என்பதால் தரமற்ற கல்வி என்று சொல்லப்படுகின்றது. ஆசர் ஆய்வில் தனியார் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் வாசிப்பிலும் கணிதச் செயல்களைச் செய்வதிலும் அதிக வேறுபாடில்லை எனக் காணப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்விக் குழு
தனியார் பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை விரிவாக விளக்கியுள்ளது. தனியார் பள்ளி
மாணவர்கள் குறைந்தது இரண்டாண்டு முன்பருவக் கல்வி பெற்று ஒன்றாம் வகுப்பிற்கு வருகின்றனர். முன்பருவக் கல்வி நெறிகளுக்கு முரண்பட்டு எண்ணும் எழுத்தும்
அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்க்கு முன்பருவக் கல்வி கிடையாது. ஒன்றாம் வகுப்பிலேயே வேறுபாடுகள் தொடங்கிவிடுகின்றன.
அரசுப் பள்ளிகளின் கதவுகள் அனைவர்க்கும் திறந்திருக்கும். எல்லா மாணவர்க்கும் அரசுப்பள்ளியில் சேரும் உரிமையுண்டு. தனியார் பள்ளிகளில் பெற்றோரின் சமூக, பொருளாதார கல்வி நிலையறிந்தே மாணவர் சேர்க்கப்படுவர். பெற்றோர் இருவரும் பட்டதாரிகள் என்றால்தான் விண்ணப்பப் படிவங்களையே கொடுக்கும் பள்ளிகளும் உண்டு. அரசுப் பள்ளி
மாணவர் பெரும்பாலும் கல்விச்சூழலே இல்லாத வீடுகளிலிருந்தே வருகின்றனர். வீட்டுப்பாடம் செழ்ய
வீட்டில் உதவி செய்வார்
யாரும் இருக்கமாட்டார்கள். தனிப்படிப்பிற்குச் செல்லும் வசதியும் இருக்காது. தனியார் பள்ளி மாணவரில் பெரும்பாலோர் பள்ளியில் கற்பதைத் தவிர தனிப் படிப்பிற்கும் செல்கின்றார்கள். இவ்விருவகை மாணவரையும் ஒரே தராசில் எப்படி எடை போட முடியும்?
மேலும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் இருக்க அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு இரண்டு அல்லது மூன்று
ஆசிரியர்களே உள்ளனர். பாடத்திட்டம் ஒன்றே, பாடநூல்களும் ஒன்றே. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்க்கு ஆசிரியர் நேரம் 40 விழுக்காடே கிடைக்கின்றது. இந்த வேறுபாடுகளுக்கு ஆசிரியர்கள் காரணமல்ல.
அரசுதான் பொறுப்பேற்க
வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் பணி மட்டுமே. ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது
பள்ளி சம்பந்தப்படாத பல பணிகளும் சுமத்தப்படுகின்றன. கட்டாயக் கல்விச்சட்டமும்
தேர்தல், மக்கள்தொகைக்
கணக்கெடுப்பு போன்ற பணிகளிலிருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களை விடுவிக்கவில்லை. வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் ஒரு\ தொடர்பணி. அப்பணியினைச் செழ்வோர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே. இவை மட்டுமல்லாமல்
அலுவலகப் பணியென்று
உதவிக் கல்வி அலுவலரால்
அழைக்கப்படுவதாலும் மாணவரது உரிமையான ஆசிரியர் நேரம் வெகுவாகக் குறைகின்றது. ஆசிரியர் நேரம் முழுமையும் மாணவர் பெறுவதை உறுதி செய்தாலே தொடக்கப்பள்ளிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
தனியார் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலோர் ஆசிரியர் பயிற்சி பெறாதவர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் முழுத்தகுதி பெற்றவர்கள். இத்தகைய சூழலில் பணியாற்ற வேண்டியிருந்தும்
மிகுந்த அர்ப்பணிப்போடு
தம் தொழிலைச் செய்து
வருகின்றனர். தி இந்து, புதிய தலைமுறை போன்ற இதழ்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆற்றி வரும் சேவையை விளக்கும் கட்டுரைகள் உள்ளத்தைத் தொடும். தன் நகையை அடகு வைத்து பள்ளிக்கு
உபகரணங்கள் வாங்கிய ஆசிரியர், ஊர் மக்களை ஒன்று கூட்டி பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியுள்ள ஆசிரியர்கள்
பற்றிய செய்திகள் மெய்சிலிர்க்க
வைக்கும். தம் குழந்தை அங்கு கற்காவிட்டாலும் ஊர் குழந்தைகளுக்காக உழைக்கும் ஆசிரியர்கள் பற்றிப் பொத்தாம் பொதுவாக குறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
ஆசிரியர்கள் வட்டித் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபடுகின்றர்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகின்றது. மூன்று லட்சம் ஆசிரியர்களில் ஒரு சிலர் தவறுகள் செய்யலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது
கல்வித் துறையின் பணி.
பிற உபதொழில்களை வைத்துக்
கொண்டிருக்கும் ஆசிரியர்கள்
தங்கள் முறையான பள்ளிப்
பணியை எவ்வாறு செழ்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும். வகுப்பறையைப் புறக்கணித்து வேறு தொழிலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது
கல்வி அதிகாரிகள்
கடமை.
இப்படி பிரச்சினையை அதன் அனைத்துப் பரிமாணங்களோடும் புரிந்துகொள்ளாமல் ஒட்டு மொத்த ஆசிரிய சமுதாயத்தையும் கேவலப்படுத்துவது மாபெரும் தவறு. அதுவும் நீதிமான்களே ஆசிரியர் பற்றிய அவதூறுகளில் இறங்குவதை ஏற்கவே முடியாது. தனியார் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றை ஆய்ந்திட உயர் மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அது
போல் அரசுப்
பள்ளிகளுக்கென ஒரு குழு அமைத்து பிரச்சினைகளை ஆழமாக அறிந்து தீர்த்திடலாமே?
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.