அந்த வர்த்தக சங்கக் கூட்டத்தில் ஆச்சரியமான முடிவு ஒன்று எடுத்திருந்தார்கள். ஆம். திரைப்பட
பாடலாசிரியர் நந்தவன சந்தன மன்னருக்கு பாராட்டு விழா நடத்துவது என்பதே அந்த முடிவு.
நகரத்தில் சேராத அதே நேரத்தில் கிராமம் என்று சொல்ல முடியாத
பேருர் மானாமதுரை. ஊருக்குள் பலசரக்குக் கடை, நகைக்கடை,
ஜவுளிக்கடை, தேனீர்க்கடை, உணவகம் இப்படி எண்ணற்ற வியாபார
மையங்கள் இருக்கின்றன. அரசு அலுவலகங்கள் மட்டுமல்ல கல்வி நிலையங்கள், வங்கிகள் ஏராளமாய் இயங்குகின்றன.
மானாமதுரை வர்த்தக சங்கம் நீண்ட காலமாக இங்கு உள்ளது. இருபது பேர்களோடு ஆரம்பித்த இந்த வர்த்தக சங்கம் இன்று நூற்றுக்கு
மேற்பட்ட உறுப்பினர்களோடு உறுதியாக நிற்கிறது. சொல்லிக்கொள்வது மாதிரி சாதனை
எதுவும் இவர்கள்
நிகழ்த்தாவிட்டாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு
தடவை முறையாக கூட்டம் போட்டு விடுவார்கள்.
கூட்டத்தில் ஏதாவது கோரிக்கைகள் மீது தீர்மானங்கள் போட்டு மாவட்டக் கலெக்டர், மத்திய
மாநில அமைச்சர்கள் ஆகியோருக்கு அனுப்பி
வைப்பார்கள். அனுப்பும் தீர்மானங்கள் கிணற்றுக்குள் போட்ட கல்லாகும் என்று
தெரிந்திருந்தாலும் அதற்காக கவலைப்படுவதில்லை. தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு போய்க்கொண்டேஇருக்கும்.
தேர்தல் முடிந்ததும் பதவிக்கு
வருகிற சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், பேருராட்சித் தலைவர் முதலியோருக்கு தவறாது ஒரு பாராட்டு விழா நடத்தி எளிய விருந்திற்கும்
ஏற்பாடு செய்வார்கள். கூட்டங்கள் நடக்கும்போது டிபன்
வழங்கும் பொறுப்பை யாராவது வசதியான வர்த்தகர் ஏற்றுக் கொள்வார்.
பிற செலவுகளை உறுப்பினர்கள்
பகிர்ந்து கொள்வார்கள்.
மாதந்தோறும் வசூலாகும்
சிறு துளியான சந்தாத் தொகை பெரு வெள்ளமாகி வங்கியில் தேங்கிக் கிடக்கிறது. சும்மா கிடக்கிற இந்தப் பணத்தை ஏதாவது
செலவழித்தால் என்ன? சங்க உறுப்பினர்களில் சில
வாலிபர்களிடம் இந்த எண்ணம் ஏற்பட்டது.
பேங்க்ல சங்கப் பணம் ஏகப்பட்டது
இருக்கே.. நம்ம பேர் சொல்ற மாதிரி எதாவது பெரிய நிகழ்ச்சி நடத்தினா என்ன?
ஆமா..ஆமா.. நல்ல யோசன
நம்மகிட்ட நன்கொடை வாங்கி எத்தன பேரு கலை நிகழ்ச்சி, பொதுக்கூட்டம்னு நெறைய நிகழ்ச்சி நடத்துறாங்க.. நாம பணத்த வச்சுக்கிட்டு பேசாம இருந்தா எப்படி? ஊரெ மெச்சுகிற மாதிரி பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடத்துவோம்.
ஆன்மீக நிகழ்ச்சி நடத்தலாமா?
யாரு கேப்பா?
பட்டி மன்றம்?
அதைவிட சினிமா டி.வி.
சம்மந்தப்பட்ட ஆட்கள வச்சு கூட்டம் நடத்தினா கூட்டம் அலைமோதும்.
எந்த நடிகர் நடிகையைக்
கூப்பிடுவது.. யாரு மூலம் கூப்பிடுவது..?
பலரும் பலவிதமாகப் பேசி குழம்பி,
குழப்பி,
பிறகு தெளிவாகி ஒரு முடிவிற்கு வந்தார்கள்.
திரைப்படக் கவிஞர் நந்தவன சந்தன
மன்னர் நம்ம ஊர்க்காரர். பத்து வருசமா சினிமாவுல இருக்கார். ஐயாயிரம் பாட்டுக்கு மேல் எழுதி இருக்காரு. இந்த வருசம் அவருக்கு நம்ம ஊர்ல ஒரு பாராட்டு விழா நடத்துவோம். அடுத்தடுத்து அவர வச்சு பெரிய நடிகர் நடிகைகளை நம்ம ஊருக்கு கூட்டி வருவோம்...இப்படி
ஒரு முடிவை எடுத்தனர்.
நந்தவன சந்தன மன்னரை தொடர்புகொண்டதில் சம்மதம் சொல்லி தேதியையும் கொடுத்து விட்டார்.விழா
நடத்த மானாமதுரையில் பெரிய மண்டபம் கிடையாது. வீதியில் நடத்தினால் நன்றாக இராது. அதனால் அந்த தனியார் கல்லூரியில்
நடத்துவது, கல்லூரி விளையாடு மைதானத்தில் கொட்டகை
போடுவது, கல்லூரி
மாணவ மாணவிகளையும் கலந்து கொள்ள வைத்து இதுவரை கவிஞர் இப்படியொரு கூட்டத்தைக் காணாத நிலையை உருவாக்குவது என்கிற வகையில்
விழாவை நடத்திட திட்டமிடப்பட்டது. மாவட்டக் கலெக்டர் மட்டுமல்ல, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரும் இந்த பாராட்டு விழாவிற்கு வருகை தர
ஒப்புதல் வழங்கினர். விழா வேலைகள் மும்முரமாக நடந்தன. மானாமதுரை நகரம் இதுவரை கண்டிராத அளவில் மேடை கொட்டகை
வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு
அமர்க்களப்பட்டது. விழா மாலை ஐந்தரைக்கு என்ற
போதிலும் நான்கு மணிக்கே ஜனங்கள்
வரத் தொடங்கி விட்டார்கள்.
கல்லூரி மாணவிகள் தங்களது
தோழிகளுடன் துள்ளிக் குதித்து ஓடிவந்தார்கள். மாணவிகள்
வரும்பொழுது மாணவர்கள் வராமல் இருப்பார்களா..?
மாணவர்களும் கும்பலாக ஆஜராகி
வருகின்ற மாணவிகளைப் பார்த்து கிண்டலடிக்க மாணவிகளும் கிண்டலாய் பதிலடி கொடுக்க
சிரிப்பும் உற்சாகமும்
கரைபுரண்டோடியது.
கட்டழகே கட்டழகே கட்டிப் பிடிக்கவா?
வெட்ட வெளியில் உனக்கு விரிப்பு விரிக்கவா?
நான்கு மாணவர்கள் கோரசாக இந்தப் பாடலை மாணவிகளை நோக்கிப் பாடினர். இவர்கள் பாடுவதைக் கேட்டு எந்த மாணவியும் கோபப்படவில்லை. முகம் சுளித்துக் கூட தங்கள் எதிப்பைக் காட்டிக் கொள்ளவில்லை. கலகலவென
சிரித்தவாறு அரங்கை நோக்கிச் சென்றனர். ஆனால் இதனைக் கேட்டு அங்கு காவலுக்கு நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷ்ணமானார்.
அருகில் நின்ற காவலர்களை
அழைத்தார். இந்தப்
பசங்களை வேன்ல ஏத்தி ஸ்டேஷனுக்கு கொண்டுபோய்
கவனிக்க உத்திரவிட்டார்.
பாராட்டு விழா தொடங்கியது.
பிரமுகர்கள் முழங்கினார்கள். கவிஞர் ஒரு வார்த்தை வங்கி எந்த சூழலுக்கும்
ஏற்றபடி பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர். பக்திப் பாடலாக இருந்தாலும் சரி..
படப்பாடலாக இருந்தலும் சரி இவரிடம் வசீகர வரிகள் அருவியாய் கொட்டும். காலியாகாத வார்த்தை கஜானா இவருடையது.
கவிஞரிடம் எப்போது போய்ச்
சேர்வோம் என்று தேசீய விருது ஏங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படியாக கவிஞர் நந்தவன
சந்தனமன்னர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தார். அதே வேளையில்
காவல் நிலையத்தில்...
எவ்வளவு திமிர் இருந்தா
பொம்பளப் பிள்ளைகளப் பாத்து கட்டழகே.. கட்டிப் பிடிக்கவா..
விரிப்பு விரிக்கவான்னு பாடுவீங்க?
அந்த மாணவர்களின் மெலிந்த
உடம்புகளில் லத்தி விளையாடியது. அடிக்கிற போலீஸாருக்கும் சரி, அடிவாங்கிற மாணவர்களுக்கும் சரி இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் நந்தவன
சந்தன மன்னர் என்பது தெரியாது.
(99445
09530 –selvakathiravan54@gmail.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.