1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேள தாளத்தோடு தொடங்கப் பெற்றன. அவை வீரியமிக்க
ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் மாபெரும் மாற்றம் என்று ஊடகங்களில் பாராட்டப்பெற்றன. 25 ஆண்டுகட்குப் பின்
அச்சீர்திருத்தங்களின் பலன்களைப் பார்த்தால் ஒரு விழுக்காட்டினரே பயன்பெற்றனர் என்றும் பெரும்பாலோர் மிகக்
கடுமையாகப் பாதிக்கப் பட்டனர் என்றும் பல பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்
காட்டுகின்றனர்.
சீர்திருத்தங்கள் கொணரப்பட்ட அதே சமயத்தில் உலகவங்கியின் உதவியோடு அனைவர்க்கும் கல்வி-2000 என்ற திட்டமும் நடைமுறைக்கு வந்தது. அதன்படி
உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் கி.பி. 2000-ஆம் ஆண்டிற்குள் தொடக்கக் கல்வி பெற இலக்கு
வைக்கப்பட்டது. நமது அரசியல் சட்டம் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக்
குழந்தைகளுக்கும் கட்டாய, இலவசக் கல்வி என்ற இலக்கை வைத்துள்ள பொழுது நீர்த்த உலகவங்கித் திட்டத்தைச்
செயல்படுத்த முன்வந்தது மறைமுக கல்வி மறுப்புத் திட்டமே. 12-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்து வந்த தமிழக அரசும் உலக வங்கியின் திட்டத்தைச் செயல்படுத்த சட்டம் இயற்றியது. ஐந்தாம் வகுப்பு முடிய அல்லது 14 வயது வரை,
எது பிந்தியதோ அது வரை இலவசக் கட்டாயக் கல்வி என்று சட்டம் கூறியது. அதாவது ஒரு மாணவன் 14 வயது வரை தொடக்கக்கல்வி நிலையிலேயே தொடரலாம் என்று பொருள்படும் நகைப்பிற்குரிய சட்டம் அது. இதற்கு மாறாக 12-ஆம் வகுப்பு வரையில் உள்ள இலவசக் கல்வியை 12-ஆம் வகுப்பு வரை அல்லது குறைந்தது 10-ஆம் வகுப்புவரை கட்டாயமாக்கியிருந்தால் ஒரு மாபெரும் புரட்சிகரமான செயலாகப் போற்றப்பட்டிருக்கும்.
1948-ல் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. அது முதல் ஒவ்வொரு ஐந்தாண்டும் பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன. பாடநூல் வெளியீட்டாளர் களுக்கே இவற்றால் பயன். வெறும் வெட்டும்
ஒட்டுமாகவே அமையும். மாற்றத்திற்கான காரணங்கள் இருக்காது. ஆங்கிலப் பாடத்திட்டம் மட்டும் புதுமை கொழிக்கும். அதனைப் புரிந்து கொள்வது ஆசிரியர்களுக்குக் கடினம். சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் ஏவியது அமெரிக்கக் கல்வியில் மாபெரும் மாற்றத்தைக் கொணர்ந்தது. ஆசிரியர் இயக்கமொன்று அது போன்று பாடத்திட்டங்கள் அர்த்தமுள்ளவாறு புதுப்பிக்க வேண்டுமென்று அறிக்கைவிட்டது. அன்றையக் கல்வி அமைச்சர் அதனைச் சவாலாக ஏற்று புதிய பாடத்திட்டங்கள் வகுக்கக் குழுக்கள் அமைத்தார். அவற்றில் ஆசிரிய இயக்கங்களைத் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்கக்
கேட்டுக் கொண்டார்.
அதுவே இயக்கங்களின் அதிகாரபூர்வ
பிரதிநிதிகள் உறுப்பினர்களாகச்
செயல்பட்ட முதலும்
கடைசியுமான பாடத்திட்டக் குழுக்கள். பாடத்திட்டங்கள் வெகுவாக மாற்றப்பட்டன. இயக்கங்களின் வேண்டுகோளை ஏற்று நாவலர் மூன்று லட்சம் ஆசிரியர்களுக்கும் 21 நாட்கள் புத்தறிவு முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்தார்.. இயக்கங்களின் ஆதரவோடு நடைபெறும் மாற்றங்கள் சீர்திருத்தங்களாக அமையும் என்பதற்கு 1971 பாடத்திட்டச் சீரமைப்பு உதாரணமாகும்.
அதற்கு அடுத்த பெரிய அளவு மாற்றம் மேநிலைக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தியதே. 1948 கலைத்திட்டம் தேசியக் கல்வி என்ற
உன்னத லட்சியத்தைக்
கொண்டதென்றால், உயர்கல்வியும்
பாமரனுக்குக் கிடைக்க
வேண்டுமென்ற நோக்கோடு மேனிலைக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது. தெளிவான குறிக்கோள்களுடன் இவ்விரு மாற்றங்கள் மட்டுமே அமைந்தன. மற்ற மாற்றங்கள் மாற்ற வேண்டுமே என்பதற்காகவே செய்யப்பட்டன. கல்விக் கொள்கை ஏதுமின்றி செய்யப்படும் மாற்றங்களினால் பயன் குறைவே. மாற்றங்களைச் செயல்படுத்துவோர்க்குத் தெளிவு கொடுப்பது கொள்கையே.
மேநிலை கணிதப் பாடத்திட்டக் குழுத் தலைவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஜி.சங்கரநாராயணன்நியமிக்கப் பட்டார்.
மதுரைகாமராஜர் பல்கலைக் கழகக் கணிதத் துறைத் தலைவர் முனைவர் எம்.வெங்கட்ராமன் ஒரு உறுப்பினர். முதல் கூட்டத்திலேயே அவர்கள் இருவரும் பள்ளிக் கல்வியோடு
சம்பந்தப்பட்டவரே பாடத்திட்டக்
குழுத் தலைவராக இருக்க
வேண்டுமென்று வாதிட்டு என்னைத் தலைவராக்கினார்கள். பிற பாடக்குழுத் தலைவர்கள் அனைவரும் கல்லூரிப்
பேராசிரியர்கள். என்.சி.ஈ.ஆர்.டி.யோடு நெருங்கிய தொடர்பு கொண்ட பேரா. வெங்கட்ராமன் கணிதப் பாடத்திட்ட நோக்கங்களைத் தெளிவுபடுத்தினார். பல்வேறு பாடத்தொகுப்புகளிலும் கணிதம் ஒரு பாடமாக இருக்கின்றது. உயர்கல்வியில்
கணிதத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடியவர்கள்
மிகக் குறைவானவரே. பொறியியல்,
வணிகவியல்,
வானியல்,
வெப்பதட்பவியல், பொருளியல்,
நிர்வாகவியல் போன்ற பல துறைகளிலும் கணிதம் தேவைப்படுகின்றது. நீண்ட நிரூபணங்களைக் கொண்ட தேற்றங்களைவிட அத்தேற்றங்களில் உள்ள கணிதக் கோட்பாடுகளைப் பல துறைகளிலும் பயன்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக உருவாக்குவதே மேநிலைக் கல்வி கணிதப் பாடத்திட்டத்தின் நோக்காக அவர் முன்வைத்தார். அதன்படி உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தில் கடைசி பாடப்பகுதியாக கணித உருமாற்றல் (Mathematical Modelling) வைக்கப்பட்டது.. கணித ஆசிரியர்களுக்குப் பல துறைகளைப் பற்றியும் அறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆசிரியர்களுக்கான புத்தறிவுப் பயிற்சி எடுத்தவர்கள் இயற்பியலுக்கு அப்பால் கணிதப் பயன்பாடுகளை அறிந்தவரல்லர். எனவே அப்பகுதி 11-ஆம் வகுப்பிற்குத் தள்ளப்பட்டு அடுத்த திருத்தத்தின் பொழுது முற்றிலும் கைவிடப்பட்டது ஒரு சோக நிகழ்வெனலாம். மாற்றங்கள் கொணரும்பொழுது அவற்றைச் செயல்படுத்துபவரையும் முன்கூட்டியே ஆயத்தப்படுத்த வேண்டும் என்பது ஒரு பாலபாடம். இன்று இந்நிலையினின்று மாறி இளங்கலைப் பட்டப்படிப்பிற்குத் தயாரிக்கும் வகையில் பாடத்திட்டம் மாறிவிட்டது மேநிலைக் கல்வியின் நோக்கங்களுக்குப் புறம்பாகும். கோத்தாரி கல்விக் குழு, தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு ஆகியவற்றை அறியாது மாற்றங்கள் செய்யப்படுவதின் விளைவே இவை எனலாம்.
அமைச்சர்கள், இயக்குநர்கள் மாறும்போது மாற்றங்கள் கொண்டு வருவது ஒரு வாடிக்கை. என்.சி.ஈ.ஆர்.டி.யின் ஆதரவோடும், நடுவணரசு உதவியோடும் முழுமையான அகமதிப்பீட்டுத் திட்டம் பெரும் ஆரவாரத்தோடு செயல்படுத்தப்பட்டு இயக்குநர் மாறியவுடன் கைவிடப்பட்டது. அதே போன்றதுதான் கட்டாய உடற்கல்வி மதிப்பீட்டுத் திட்டம்.
பிரசவத்திலேயே மரித்தது. நான்கு நிலைகளில் அமைக்கப்பெற்ற ஆசிரியர் குறை தீர்ப்பு மையங்கள் அமைச்சர் மாறியதும் செயலிழந்துவிட்டன. ஆசிரியர் இயக்கங்களும் கண்டுகொள்ளவில்லை. பொதுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க உதவிய பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் வரலாற்றுச் செய்திகளாகிவிட்டன. மேலிருந்து செயல்படுத்தப்படும் புதுமைகள் அவற்றை அறிமுகப்படுத்தியவர் பணி மாறியவுடன் கைவிடப்படும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்தது.
அண்மையில் புதிய கல்வி அமைச்சர், புதிய கல்விச் செயலர் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புகளை வெளியிட்டனர். பொதுத் தேர்வுகளில் தர வரிசைப் பட்டியல் வெளியிடுவதில்லை என்ற அறிவிப்பு பொதுவாக நல்வரவேற்பைப் பெற்றது.
2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்வுப் பட்டியல் பள்ளியாண்டு தொடங்கும் முன்னரே வெளியிடப்பட்டுள்ளது தேர்வையே முன்னிறுத்தக்கூடியதாக இருக்கின்றது. தேர்வினின்று விடுதலை கிடைப்பதற்கு மாறாக பள்ளி திறந்த நாள் முதல் பொதுத் தேர்வை நோக்கியே வகுப்பறைக் கற்பித்தல் அமையும். பொதுத் தேர்வு இல்லாத வகுப்புகள் வழக்கம்போல் கவனத்திற்கு வரவில்லை. சீர்திருத்தம் அங்கே தானே தொடங்க வேண்டும்?
ஜூன் 16-ஆம் நாள் 41 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
மாற்றம் மாற்றத்திற்காக என்றிருக்கக்கூடாது. முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல உதவ வேண்டும். பிரச்சினைகளுக்குத் தீர்வுகளாக மாற்றங்கள் அமைய வேண்டும். ஒரு தனி நபரது விருப்பு வெறுப்புகளுக்கு இடம் இருக்கக்கூடாது. கல்வி அமைப்பில் மாணவர், ஆசிரியர்,
நிர்வாகி அல்லது அதிகாரி ஆகியோர் மனித உள்ளீடுகளாவர். உட்கட்டமைப்பு வசதி, நிதி ஆதாரம் ஆகியவை பிற உள்ளீடுகள். நல்ல குடிமகன், நல்ல சமூகம் ஆகியவை வெளியீடுகள். கற்பித்தல்-கற்றல் இவ்வெளியீடுகள் உருவாக உதவும் சாதனங்கள். உள்ளீடுகள் ஒன்று போல் அல்லாதவை. பல வகை மாணவர், பலவகை ஆசிரியர்,
சிறந்த அல்லது சாதாரணமான உட்கட்டமைப்பு
வசதிகள் என்றாலும் வெளியீடு
ஒன்று போன்றது. எடுத்துக்காட்டாக
படித்த நடுத்தர வர்க்கத்தைச்
சார்ந்த மாணவர்க்கும், முதல் தலைமுறை தாய்மொழி தமிழல்லாத மாணவர்க்கும் வேறுபாடுகள் அதிகம். பள்ளிச் செயல்முறைகளை உள்ளீடுகளைப் பொறுத்து அமைத்துக் கொள்ள வேண்டும். இது ஒன்றே ஒரே வழி எனக் கிடையாது. ஒவ்வொரு வகுப்பும் மாறுபட்டது. அதனை அறிந்தவர் ஆசிரியரே. ஆசிரியர்தான் தனது வகுப்பறையை நிர்ணயிக்கக்கூடியவர். நாடு முழுமைக்கும் ஒரே முறை என்பது யதார்தத்திற்கு
முரண்பட்டது. வகுப்பறைச்
சுதந்திரத்தை ஆசிரியர்க்களிக்காது
கொண்டுவரும் மாற்றங்கள்
வெற்றியைத் தரா.
(044-2360551
/ rajagopalan31@gmail.com)
1 comments:
சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு பிளாக் மறுபடி செயல்படத் தொடங்கியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. வாசகர்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.
கே.ராஜு
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.