Friday, July 28, 2017

தொடரும் மதவெறிக்கு எதிராக சிந்த வேண்டியது இரத்தமல்ல, பகைமை உணர்ச்சி

ஜூன் 28 அன்று புது தில்லியின் ஜந்தர் மந்தரில் சிறுபான்மை இஸ்லாமியருக்கு எதிராகத் தொடரும் மதவெறி தாக்குதலுக்கு எதிராக நூற்றுக்கணக்கில் திரண்டிருந்தோரிடையே 22 வயது முகம்மது அசாருதீன் மேலே கண்ட வாசகங்களைப் படிக்கையில் உணர்ச்சி மேலிட கண்ணீர் சிந்தாதோர் ஒருவரும் இருக்கவில்லை என்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி. 17 வயதே நிரம்பிய தனது தம்பியைத் தங்கள் கண்ணெதிரே ஒரு வெறிக்கும்பல் அடித்துக் கொன்றதைப் பார்க்க நேர்ந்த ஓர் அண்ணனின் வாசிப்பு அது. அவரும் கடுமையாகத் தாக்குண்டிருந்தார். பண்டிகை நாளுக்காகத் துணிமணிகள் வாங்கிவர ஜூன் 22 அன்று அரியானாவில் இருக்கும் தங்களது சிற்றூரில் இருந்து தில்லி சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள். ஏதோ காரணத்தை வைத்து இவர்களோடு வம்பு வளர்த்துச் சண்டை இழுத்து மதரீதியான அவதூறுகளைப் பொழிந்து அடிதடியைத் தொடங்கிய மதவெறியர்கள் நடத்திய தாக்குதலில் குரூரமான முறையில் கொல்லப்பட்டு விழுந்தவர் ஜுனைத். இனி, அத்தகைய வெறியர்களால் துரத்தப்பட முடியாத சொர்க்கத்தில் போய்ச் சேர்ந்துவிட்டதாக ஜுனைத் சொல்வது போன்ற இந்த வாசகங்களைத் தமது பத்திரிகையாள நண்பர் எழுதிக் கொடுத்திருக்க, இதைத்தான் அசாருதீன் கண்டனக் கூட்டத்தில் படித்தார்.

என் பெயரின் நிமித்தம் வேண்டாமே... (NOT IN MY NAME) என்று தலைநகரில் எழுந்த இந்த எதிர்ப்புக்குரல் தில்லியில் மட்டுமல்ல, மும்பை, பெங்களூரு, மும்பை, லக்னோ, ஹைதராபாத் போன்ற பல முக்கிய மாநகரங்களிலும் திரைநட்சத்திரங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்க எழுச்சிகரமாக நடந்துள்ளது. ஆட்சியாளர்களே, உறுதியான தலையீட்டைச் செய்து மதவெறி தாக்குதல்களுக்கு முடிவு கட்டுங்கள் என்ற தீர்மானமான குரல் அது. உங்களது நீடித்த மௌனத்தை உடைத்து உண்மையைப் பேசுங்கள், இஸ்லாமியருக்கு எதிரான இந்த வெறித்தன மனநிலையை மேலும் வளர்த்தெடுக்காதீர்கள், சிந்த வேண்டியது பகைமை உணர்ச்சியைத் தானே தவிர இரத்தத்தை அல்ல போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை உயர்த்திப் பிடித்த இந்தப் போராட்டத்தில், ஷப்னா ஆஸ்மி, கொன்கோனா சென், ரஜத் கபூர் போன்ற பல திரைக் கலைஞர்களும், அர்பிதா சாட்டர்ஜி போன்ற சமூக ஆர்வலர்களும், ராமச்சந்திர குஹா போன்ற ஆய்வாளர்களும், கலைஞராக மட்டுமின்றி தீரமிக்க செயல்பாட்டாளராகவும் விளங்கும் கிரீஷ் கர்னாட் போன்றோரும் மட்டுமல்ல, ஏராளமான சாதாரண மக்களும் எழுச்சியோடு இந்த முழக்கங்களில் இணைந்தனர்.


ஜுனைத் மரித்ததற்குமுன், ராஜஸ்தானில் ஆள்வார் பகுதியில் பால் வியாபாரம் செய்துவந்த ஃபெலுகான் தமது மகன்கள் கண்ணெதிரேஅடித்துக் கொல்லப்பட்டார். எருமை வாங்கப்போன இடத்தில் இந்தப் பசு 12 லிட்டர் கறக்கும் என்று ஒரு வியாபாரி கறந்து காட்டியதைப் பார்த்து ஆர்வத்தோடு அதை வாங்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றி வந்த பாவத்திற்காகத் தம்முயிரை இழந்தார் அவர். பசுப் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் திரியும் காவிப்படை காலிகள் வண்டியை வழியில் நிறுத்தி, பசுவைக் கொல்வதற்காக இழுத்துச் செல்வதாகக் குற்றம் சாட்டி உருட்டுக் கட்டைகளைக் கொண்டு அவரை அடித்தே கொன்றுவிட்டனர். அதுமட்டுமின்றி கொல்லப்பட்டவரின் மகன் இர்ஷாத் உட்பட மற்றவர்கள் மீது கொல்வதற்காக மாட்டுக் கடத்தல் செய்ததாகப் புகாரைப் பதிவும் செய்தனர்.

பெண்கள் இயற்கை உபாதைக்கு அமருமிடத்தில் புகைப்படம் எடுத்தவர் களைத் தடுத்ததற்காக ராஜஸ்தானில் ஓர் இஸ்லாமியர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதன் மீதான அதிகபட்ச கருத்தாக, மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா சொல்ல முடிந்தது இதுதான்: பிரதாப்கர் பகுதியில் திரு ஜாஃபர்கான் என்பவர் இறந்தது துரதிருஷ்டவசமானது. நியாயம் நிச்சயம் பிறக்கும். அண்மைக் காலத்தில், சிறுபான்மையினரையோ, தலித் வகுப்பினரையோ எந்தக் காரணத்தைச் சொல்லியும் அல்லது எதையும் சொல்லாமலும் கூட கும்பலாகச் சென்று தாக்கிக் கொல்லும் கொடுமைகள் நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வருகின்றன. உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்ததற்குப்பின் மாட்டுக்கறி விற்பதான புகாரில் எந்த ஒட்டலையும் அடித்து நொறுக்கலாம். அதன் உரிமையாளரைத் தாக்கலாம், வழக்கொன்றும் பதிவாகாது என்ற துணிவு வந்திருக்கிறது. வட மாநிலங்கள் பலவற்றிலும் சங் பரிவாரத்தின் வேட்டை, வெறித்தன தாக்குதல், கொலைவெறிச் செயல்கள் நடைபெறுவது ஏதோ இயல்பான வாழ்க்கையின் பகுதிபோல கடந்து செல்லும் உளவியலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் மதவெறியர்களும், அவர்களுக்கான அரசுகளும்.

இதே நாட்டின் குடிமக்களான சிறுபான்மையினர் தங்களது மத அடையாளத்தையோ, பெயரையோ இனி உயிருக்கான அச்ச உணர்வின்றி வெளிப்படுத்த இயலாது என்பது போன்ற நிலை வேகமாக உருவாகிக் கொண்டிருப்பதை, ஒரு மதச்சார்பற்ற தேசம் எப்படி அனுமதிக்க முடியும்? அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வேண்டிய
ஆட்சியாளர்கள், பண்பாட்டுக் காவலர் என்ற போர்வையில் கொலைவெறியோடு அலையும் குற்றவாளிகளைச் சந்தித்து உச்சிமோந்து அங்கீகாரம் அளிக்கும் அராஜகத்தை எப்படி சகிப்பது ?

குஜராத் தொடங்கி நாட்டின் பல பகுதிகளில் தலித் மக்கள் வேட்டையாடப்பட்டதை நினைவில் இருந்து துடைத்தெறியச் சொல்லிவிட்டு, ராம் நாத் கோவிந்த் என்ற பழுத்த ஆர்.எஸ்.எஸ்காரரை தலித் என்ற அடையாளத்தோடு குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகக் களமிறக்கும் அராஜகத் துணிவு ஆட்சியாளருக்கு வாய்த்துள்ளது.

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரிக்கொள்கை, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற ஒற்றைத் தன்மையில் தங்களது போர்முனையை வகுத்திருக்கும் சங் பரிவாரத்தின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு முகம் அபாயகரமானது என்பதை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஆனாலும், நம்பிக்கைகள் வற்றிப்போன காலமல்ல இது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமார் நிறுத்தப்பட்டிருக்கிறார். வகுப்புவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தின் குறியீடு இது என்று வருணித்துள்ளார் மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி.


பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரான போர்க்குரல் பரவலாக ஒலிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தொன்மை நாகரிக வளர்ச்சி குறித்து சிவகங்கைக்கு
அருகே கீழடியில் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்திருக்கும் வலுவான சான்றாதாரங்களில் வெளிப்பட்ட மதச்சார்பின்மை அடையாளத்தைக் கண்டு அதிர்ந்து, அந்த அகழ்வாராய்ச்சியைக் குழி தோண்டிப் புதைக்கத் துடிக்கும் மோடி அரசின் முயற்சிகளுக்கு எதிராகப் பரந்துபட்ட சாதாரண மக்களிடையே கேள்வி வெடிக்கிறது. இந்த இரண்டு பிரச்சினைகள் மீதான சிறப்பு மாநாடு ஒன்றினை ஜூன் 26 அன்று, சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் இணைந்து நடத்தியது மகத்தான வெற்றி பெற்றது.

ஜூன் 28 அன்று நாட்டின் பல பகுதிகளிலும் திரண்ட மக்கள் திரள், அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்று முழக்கம் எழுப்பியுள்ளது. வாழ்வுரிமை எங்களது அடிப்படை உரிமை, வாழ்வுரிமையைப் போலவே, இப்படி பொதுவெளியில் எதிர்ப்புக்குரல் எழுப்ப வந்து நிற்பதும் எனது அடிப்படை உரிமை என்ற குரலை, பெங்களூரு கூட்டத்தில் முழங்கி இருப்பவர், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர். கடுமையான சவால்கள், அராஜகமான தாக்குதல்கள், கொடூரமான ஒடுக்குமுறைகள் எப்போதும் எதிர்ப்பின்றிப் போய்விடுவதில்லை. பொய்மைகளின் வெற்றி நிரந்தரமானதுமில்லை.
9445259691

SV.VENU@GMAIL.COM

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.