ஜவஹர்லால்
நேரு, மார்ஷல் டிட்டோ,
கமால் அப்துல் நாஸர் ஆகிய மூவரும் 1950களில்
உலக நாடுகளின் கவனத்தை அதிகம் ஈர்த்த தலைவர்கள். உலக நாடுகளை அணி சேரா அமைப்பின்
கீழ் ஒன்று திரட்டி வெற்றி கண்டதால் கிடைத்த கவனம் அது. அமெரிக்கா அல்லது சோவியத்
யூனியன் பின்னால் திரண்டு இரு துருவங்களாக நிற்க வாய்ப்பு இருந்தபோது, இத்தலைவர்கள்
பெரும்பாலான நாடுகளை இரு அணிகளிலும் சேர்ந்திடாமல், நடுநிலை வகிக்க வைத்தனர்.
ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை ஒரு
துருவ உலகமாக மாற்றிடவும்,
உலக நாடுகளின் அரசுகளையெல்லாம் தங்களின் கைப்பாவைகளாக மாற்றிடவும்
எத்தனித்து வருகிறது. பனிப்போர் முடிவுற்ற பின்னரும் நேட்டோ அமைப்பைக்
கலைத்திடாமல் உலக நாடுகளை நேட்டோவின் இராணுவ பலத்தைக் கொண்டு அச்சுறுத்தும் விதமாகவும்
செயல்படுகிறது.
தன்
அணி சேராக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு அமெரிக்காவுடன் கேந்திரமான உறவை இந்தியா
உருவாக்க முயல்வது நமது அயல்துறைக் கொள்கையில் மோடி அரசு செய்ய முனையும் அடிப்படை மாற்றம்.
தற்போது அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள கடல்வழி மற்றும் வான்வழி
பரிவர்த்தனை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளி
அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இனி அமெரிக்க விமானப் படையும், கப்பல்
படையும் எரிபொருள் நிரப்புதல் போன்ற சேவைகளுக்கு இந்திய விமான தளங்கள் மற்றும்
கப்பல்படைத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அமெரிக்காவுடன் கூட்டாளி என
நாம் பெருமையடித்துக் கொண்டாலும் அது உண்மையில் அமெரிக்காவின் இளைய பங்காளி என்றுதான்
பொருள். அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு அடிபணிவது என்பதுதான் பொருள்.
இந்தியாவின் தன்னாளுமையுடன் சமரசம் செய்து கொண்டு தன்னுடைய சுயாட்சி உரிமையை
அமெரிக்காவின் காலடியில் சரணடைய வைப்பதாகத்தான் பொருள். இதற்கு மாறாக, பிரிக்ஸ், சார்க், ஷாங்காய்
போன்ற கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தி எந்த நாட்டுக்கும் வால்பிடிக்காத, சுதந்திரமான
அயல் உறவுக் கொள்கையை உருவாக்குவதே இந்தியாவின் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.
உலகில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட பகைமை அரசியலை வளர்த்திடும் அமெரிக்காவின்
வழி சென்றிடாமல்,
உலக நாடுகளிடையே நட்பை வளர்த்து அமைதியை நிலைநாட்ட இந்தியா
முயல்வதுதான் நமது எதிர்கால நலனையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள உதவும்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.