Tuesday, October 4, 2016

அன்பளிப்பு - மலர்மதி


புத்தாண்டு முன்னிட்டு அந்தப் பகுதி மக்கள் இன்னிசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நடுவில் இருந்த அந்தப் பெரிய மைதானத்தில் மேடை  அமைத்திருந்தார்கள். மேடையைச் சுற்றி மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது.

மாலை சரியாக ஏழு மணிக்கு ஸ்டார் ஆர்க்கெஸ்ட்ரா அட்டகாசமாய் அதிர ஆரம்பித்தது. இளம்பாடகன் இளங்குமரனின் கணீர் குரல் இடியோசையாய் முழங்கியது. இசைக்கச்சேரியின் இடையே ரசிகர்கள் எழுந்து பாடகர்களுக்கு அன்பளிப்பாக பத்து, இருபது என ரூபாய் நோட்டுகளைப் போட்டி போட்டு வழங்கிக் கொண்டிருந்தனர்.

முண்டாசு கட்டிய ஒருவன், பார்ப்பதற்கு சாதாரணமாய்த்தான் இருந்தான், ஆனால், இளங்குமரனுக்கு ஐம்பது, நூறு என அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இளங்குமரனும் அவனை மகிழ்விக்க பாடிக்கொண்டே ஆடினான்.

கூட்டம் கைதட்டியது. முண்டாசு விசிலடித்தது.

பத்து மணிக்கு கச்சேரி முடிந்து மூட்டை கட்ட ஆரம்பித்தார்கள்.

குமரா, இன்னைக்கு உனக்கு செம வருமானம் போலிருக்கு..என்றான் சகபாடகன்
ஒருவன்.

ஆமாம்பா. மூவாயிரத்துச் சொச்ச ரூபாய் கிடைச்சிருக்கு என்றான் மகிழ்ச்சி பொங்க.

ஆர்க்கெஸ்ட்ராக்காரர்கள் அனைவரும் ஏறிக்கொள்ள, வேன் புறப்பட்டது.

இளங்குமரனுக்குப் பக்கத்தில் விழா ஏற்பாடு செய்த வேலப்பனும் அமர்ந்திருந்தார்.

சிகரெட் வாங்க ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெட்டிக்கடை முன் வண்டியை நிறுத்தினார் டிரைவர்.

ஐயா, சாமி..தர்மம் பண்ணுங்கய்யா... கைக்குழந்தையுடன் ஒரு பெண் தட்டேந்தி நின்றாள்.

வேலப்பன் குனிந்து இளங்குமரனிடம், சார், இந்தப் பொம்பளை யாருன்னு தெரியுமா? இன்னைக்கு நடந்த நிகழ்ச்சியில அடிக்கடி உங்களுக்கு அன்பளிப்பு கொடுத்துக்கிட்டிருந்தானே ஒருத்தன், அதான் சார்... முண்டாசு கட்டியிருந்தானே, அவனோட பெண்டாட்டிதான் இவ என்றார்.

அதிர்ந்து போனான் இளங்குமரன்.

என்ன சார் சொல்றீங்க? பணத்தைத் தண்ணியா செலவழிக்கிற ஆளோட பெண்டாட்டியா இப்படி பிச்சை எடுக்கிறா? என்னால் நம்பவே முடியலையே..

அதான் சார் கொடுமை. அவனுக்கு நல்ல வருமானம் இருக்கு. ஆனா, எல்லாத்தையும் குடி, கூத்துன்னு ஊதாரித்தனமா செலவழிச்சுடறான். பெண்டாட்டி, புள்ளைங்களை கவனிக்கறதே இல்லை. வேறு வழி இல்லாமத்தான் அவனோட பெண்டாட்டி இந்த நிலைமைக்கு வந்துட்டா.

சுரீரென்றது இளங்குமரனுக்கு. என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென வேனைவிட்டுக் கீழே இறங்கினான். அன்று வசூலான மொத்தப் பணத்தையும் எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தான். விழிகள் விரிய அதைப் பெற்றுக் கொண்டாள். இனி இதுபோன்று இனாமாகக் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கும், அனாதை ஆசிரமங்களுக்கும் வழங்கிவிட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தான் இளங்குமரன்.
                                                                   -malarmathi786@yahoo.com




0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.