Thursday, October 6, 2016

பெரியார் மண்ணிலா இந்தப் படுகொலைகள்?

சிருஷ்டிகர்த்தா மக்கட் படையில் அடங்கிய ஆண் பெண்களை ஏற்றத்தாழ்வுடன் படைக்கவில்லை என்பதை அறிவுலகம் ஏற்கும். அங்க அமைப்பின்றி அறிவின் பெருக்கத்திலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வான வித்தியாசம் காண இயலுமோ? இயலவே இயலாது. ஆடவரிலும் சரி, பெண்டிரிலும் சரி முறையே அறிவாளிகளும், ஆண்மையுடையோரும், அறிவிலிகளும், பேடிகளும் உள்ளனர். இவ்வாறிருக்க திமிர்பிடித்த இந்த ஆண் உலகம் சாந்தகுல பூஷணமாக பெண் உலகத்தைத் தாழ்த்தி, அடிமைப்படுத்திவருதல் முறையும் தர்மமுமான செயலாகாது.

இது பெரியார் 1926ல் எழுதியது. ஆணும் பெண்ணும் அடிப்படையில் சமமான படைப்புகள்தாம் என்பது அவரது அழுத்தமான கருத்தாகும். இது அறிவியல்பூர்வமானதும்கூட. பெரியாரின் கொள்கைகளுக்கு பேரறிஞர் அண்ணாவால் பெற்றுத்தரப்பட்ட புதிய அரசியல் அங்கீகாரமாகவே 1967ல் நடந்த அந்தத் தலைகீழ் ஆட்சி மாற்றத்தை எல்லோரும் வியந்து வரவேற்றார்கள். ஆட்சி மாறினும் இன்னும் பலவகைகளிலும் காட்சிகள் மாறாததற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு?

தந்தை பெரியார் சமுதாயத்தின் சகல பகுதிகளிலும் நவீன மாற்றங்களை சாதீயத்திற்கு மாற்றாக முன்வைத்தவர். குடும்பம், ஆண் – பெண் உறவு, குழந்தை வளர்ப்பு எல்லாம் பழைய ஆணாதிக்க சிந்தனையின் அடிப்படையிலேயே தொடர்வது பெரியாருக்குச் செய்கிற பச்சைத் துரோகமின்றி வேறென்ன? பெரியாரின் வாரிசு என்று சொல்லிக் கொள்பவர்கள் பதவியைப் பிடித்தபின் சமுதாய சீர்திருத்த விஷயத்தில், பெண் விடுதலை விஷயத்தில் அக்கறையின்றி இருந்துவிட்டதன் பலனைத்தான் இன்று இரண்டு விதங்களில் தமிழகம் அனுபவிக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. ஒன்று, ஆணவக்கொலை. இன்னொன்று, ஒருதலை விருப்பத்தால் (அதைக் காதல் என்று எப்படி சொல்ல முடியும்?) நடைபெறும் கொலை.

காதலித்தால் பெற்றோராலேயே கொல்லப்படுவதும், ஒருதலை விருப்பத்தை ஏற்கவில்லையெனில் சம்பந்தப்பட்டவனே மறுப்பவளைக் கொல்வதும்   இன்றைய தமிழகத்தின் அன்றாட நடைமுறையானதற்கு சமுதாயத்தை நெறிப்படுத்தாத ஆட்சியாளர்கள் அல்லாமல் வேறு யார் பொறுப்பு? பிராமணியம் என்பது சாதியப் படிநிலையும், ஆணாதிக்கமும், தீண்டாமையும் எனில் அதனை எதிர்த்துக் கிளம்பிய இயக்கம் இன்றுவரையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு அதற்கெதிராக என்னதான் செய்தன?
பெரியாரையும் அண்ணாவையும் படங்களில் தாங்கிக்கொண்டு, கட்சிச் சின்னங்களிலும் கொடிகளிலும் வைத்துக்கொண்டு, ஆனால் முற்றிலும் இன்றைய தேவையாக இருக்கிற அவரது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் காற்றில் பறக்கவிட்டதுதானே இவர்கள் செய்த திருத்தொண்டு? அதனால் தானே இன்று மந்திரிகள் மண் சோறு சாப்பிடுவது சந்தி சிரிக்கிறது? தங்கள் சாதிப் பெண்கள் "தாழ்ந்த" சாதி ஆணுடன் இணை சேர்வதற்கு பெரியாரின் மண்ணில் எப்படி எதிர்ப்புகள் வெடிக்கின்றன? தர்மபுரி இளவரசனும், உடுமலை சங்கரும் செய்த தவறென்ன? சாதி ஆணவம் அவர்களை வாழவிடாமல் செய்து விட்டதென்றால் அந்த ஆணவத்தின் பின்னால் திமுக – அதிமுக கட்சிகளின் சுயநல அரசியல் அந்த ஆணவத்திற்கு முட்டுக்கொடுத்து நிற்கின்றனவா இல்லையா?

இன்னொரு பக்கம் ஒருதலை விருப்பத்தால் பரிதாபமாகக் கொலை செய்யப்படுகிற அப்பாவி இளம் பெண்கள். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த சுவாதி படுகொலை, கரூர் தனியார் பொறியியல் கல்லூரி வகுப்பறையில் நடந்த மாணவி சோனாலி படுகொலை, கோவை தன்யா படுகொலை போன்றவை நாள்தோறும் நடந்தவண்ணம் உள்ளன. வயது வந்த பெண்ணை வெளியே அனுப்பும் பெற்றோர்கள் அவர் வீடு திரும்பும்வரை வயிற்றில் நெருப்பைச் சுமந்தபடி காத்திருக்கின்றனர்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஆணவக் கொலைகளும், ஒருதலை விருப்பத்தால் நடக்கும் பெண் கொலைகளும், சின்னஞ்சிறுமிகளும், பெண் சிசுகக்களும் கூட பாலியல் தொல்லைகளிலிருந்து தப்ப முடிவதில்லை என்பதற்கு ஒட்டுமொத்த சமூகமும்ஆண்- பெண் விஷயத்தில் போதிய அறிவு முதிர்ச்சியின்றி இருப்பதே
பிரதான காரணம். பெண் என்பவள் எவ்வளவுதான் படித்தாலும், வேலைக்குப்
போனாலும் இன்னொருவனிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவள்தானே என்ற
அலட்சியப் பார்வையும், என்னதான் இருந்தாலும் அவன்ஆண்பிள்ளை என்கிற இறுமாப்பும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஒழிந்தபாடில்லை.

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவும், 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளும் குடும்ப அமைப்புக்குள் ஜனநாயகமின்மைக்கு எதிராக,ஆண்- பெண் பேதத்திற்கு எதிராக, பெரியாரின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுத்திடவில்லை. மாறாக பதவி சுகத்துக்காக சாதீயத்தின் கொம்பைச் சீவிவிடுகிற கயமையைத்தான் இவை செய்திருக்கின்றன, செய்து வருகின்றன.

இவற்றுக்கு மாற்று எனச் சொல்லிக் கொள்ளும் பாமகவோ சாதி ஆதிக்கத்திற்கு மூடுதிரை கூட அவசியமில்லை என்ற முடிவுடன் இயங்குகிறது. திமுக, அதிமுகவைவிட ஆபத்தான சக்தியாக அது எழுந்திருக்கிறது. உண்மையான மாற்றாக இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே பெரியாரைப் புரிந்துகொண்ட இயக்கங்களாக களத்தில் இருக்கின்றன.

அறிவியல்பூர்வமாக மக்களைத் திரட்டி, ஆணும் பெண்ணும் சமம்தான் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தீண்டாமைக்கு எதிராக களம் இறங்கியிருக்கின்றன. இந்த இயக்கங்கள் மேலும் மக்களிடையே சென்றடைவது பாலியல் சமத்துவத்திற்கு வலு சேர்க்கக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. மறுபக்கம், ஆண்களுக்கு சிறுவயது முதற்கொண்டே பெண்ணை மதிக்கவும், சக தோழியாகக் கருதி அன்பு செலுத்தவும் கற்றுத்தரும் பணியில் பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

"பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை இருக்கவேண்டும் என்றால்,
இன்றுள்ள வாழ்க்கைமுறையே அடியோடு மாறவேண்டும். சமைப்பது, பிள்ளை
வளர்ப்பது, குடும்பத்தை நடத்துவது ஆகிய மூன்று பொறுப்புகளும் பெண்களைச் சார்ந்தவைகளே என்ற மனப்பான்மை ஒழியவேண்டும்" என்கிறார் பெரியார். குடும்பங்களில் ஜனநாயகம் வேண்டும் என்பதே அவரது குரல். அப்படிப்பட்ட ஜனநாயகக் குடும்பங்களில் வளர்பவர்கள் புதிய சமுதாயத்தின் அறிவியல் பூர்வ அடையாளங்களாக,ஆண்- பெண் பேதம் ஒழிந்தோராக உயர்ந்து மிளிர்வர் என்பதில் ஐயமில்லை.

(9842593924-cholanagarajan@gmail.com)
 

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.