இந்தியாவின்
நீர்நிலைகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, தேவைக்கேற்ப பகிர்ந்து கொள்ளப்பட்டால்
உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும்.. என்று 100 ஆண்டுகளுக்கு
முன்பே கூறியிருக்கிறார் ஆர்தர் காட்டன். அவ்வார்த்தைகளில் கவனம் செலுத்தாததன் விளைவை
நாம் இன்றளவும் அனுபவித்து வருகிறோம். இந்தியாவை ஆங்கில அரசு சுரண்டிச் சென்றது
ஒரு
புறம் இருப்பினும் மறுபுறம் பென்னிகுக், ஆர்தர் காட்டன், தாமஸ்
மன்றோ, காலின் மெக்கன்சி,
எல்லீஸ் துரை போன்றவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன்
பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆங்கிலேய
அதிகாரியாகப் பணியாற்றிய ஆர்தர் காட்டன் இந்தியாவின் நீர்ப்பாசனத் தந்தை என அழைக்கப்பட்டதோடு
அவருக்கு ஆந்திர மாநிலத்தில் 3000க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருப்பது
பலர் அறியாதது. ஏரி,
குளம், கண்மாய் போன்ற நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை
தூர்வாரிப் பராமரித்தது என இவர் மேற்கொண்ட அளப்பரிய நீர் மேலாண்மைப் பணிகள் காரணமாக
பத்து லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக
மாறி இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
1821ஆம் ஆண்டு தனது 18வது
வயதில் இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்து, சென்னை மாநிலத் தலைமைப் பொறியாளர்
அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார் காட்டன். மறு ஆண்டே கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி
மாவட்டங்களிலுள்ள ஏரி,
கண்மாய், குளங்களைப் பராமரித்து நீர் விநியோகம் செய்யும்
பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேரடியாகக் களத்திற்குச் சென்று ஒவ்வொரு நீர்நிலையின்
இயல்பையும் அதன் தனித்துவத்தையும் ஆராய்ந்தார்.
ஒரு
கோமாளியைப் போல காட்டன் ஏரியின் சகதிக்குள் இறங்கி எதையோ தேடி அலைகிறார் என்று அவரது
உயர் அதிகாரிகள் கேலி செய்தனர். இந்தியா முழுவதுமுள்ள ஆறுகளை ஒன்றிணைப்பது எனும் பெரும்
கனவு கண்டார் காட்டன். காவிரி, பெண்ணையாறு ஆகிய ஆறுகளின் முகத்துவாரங்களை
வண்டல் மண் அடைத்துவிடாமல் நீர் பாய்வதற்கு வசதியாக கல்லணையின் கிழக்குப் பகுதியில்
ஐந்து மதகுகளை அவர் கட்டினார். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் மேலணை இவரால்
கட்டப்பட்டதால்,
காவிரிக்குள் நீர் பாய்வதற்கு வேண்டிய தண்ணீரைத் திருப்பி விடுவதற்கு
வழி ஏற்பட்டது.
கொள்ளிடத்தின்
கீழே அமைந்த கீழணையின் தண்ணீர், வீணாகக் கடலில் கலக்காமல் வீராணம் ஏரிக்குச்
சென்று பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களுக்கும் தண்ணீர் பாய வழி ஏற்பட்டது. சென்னையில்
உள்ள துறைமுகத்தில் பாறைகளைக் கொண்டு கடற்கரையின் பாதுகாப்பை உருவாக்கியதும் ஆர்தர்
காட்டன்தான். துறைமுகத்துக்குள் நேரடியாகச் சரக்குகளைக் கொண்டு வந்து சேர்க்க ரயில்
பாதை ஒன்றையும் அவர் அமைத்தார்.
கோதாவரி
ஆற்றுநீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போனதே பஞ்சத்துக்கான முக்கியக் காரணம்
என்பதை அறிந்த காட்டன்,
கோதாவரி ஆற்றின் குறுக்கே தவளேஸ்வரத்தில் ஓர் அணையைக் கட்டத்
திட்டமிட்டார். 1855ஆம் ஆண்டு பெஜவாடாவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே ஓர் அணை கட்டி முடித்தார். இவ்விரு
அணைகளால் ஆந்திராவின் தானியக் களஞ்சியமானது கோதாவரி மாவட்டம்.
இவ்வாறு
அர்ப்பணிப்புடன் காட்டன் மேற்கொண்ட
மகத்தான பணிகள் நினைவுகூரத் தக்கவை. ஆனால் ஆர்தர் காட்டனின் கனவை-வேளாண் மக்களின் வாழ்விற்கான
கனவை-நனவாக்க 100 ஆண்டுகளாக சுதந்திர இந்தியாவில் ஆண்ட, ஆளும் அரசுகள் தொலைநோக்குப் பார்வையுடன்
எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதது கசக்கும் உண்மை.
(9442145256 - sekernatesan@gmail.com
)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.