நான்
தலைமை ஆசிரியராக பணியாற்றும் சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்
சில தினங்களுக்கு முன்பு காலையில் சில பெற்றோர்கள் தொலைபேசியில் அழைத்து “சார் இன்று பள்ளிக்கு விடுமுறையா?” எனக்
கேட்டனர். “இல்லையே.. பள்ளி திறந்துதானே உள்ளது? விடுமுறை
என்று யார் சொன்னார்கள்?” என நான்
கேட்டதுடன் எந்த மாணவர் சொன்னார் என்று சொல்கிறார்களோ அந்த மாணவரை என்னிடம் பேசச் சொன்னேன். காலை வேளையில் பள்ளி ஆரம்பமாகும்
நேரத்திற்கு முன்பாக இந்த திடீர் விடுமுறைத் தகவல் சில பெற்றோர்களை மட்டுமே சென்றடைந்துள்ளதை அறிந்தேன். விடுமுறை இல்லை என
வீட்டில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் தெரிவித்து அவர்களைப் பள்ளிக்கு
வரவழைத்து விட்டோம். பள்ளியும் சரியான நேரத்தில் தொடங்கி விட்டது.
பிறகு
மாணவர்களிடம் விசாரித்ததில், ஒரு குறிப்பிட்ட மாணவர்தான் பள்ளிக்கு விடுமுறை
அறிவித்துள்ளார் எனத் தெரிந்தது. பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மாணவர்களிடமும், பள்ளிக்குக்
கிளம்பிக் கொண்டிருந்த சில மாணவர்களின் வீட்டுக்கும் சென்று “இன்று பள்ளிக்கு திடீர் விடுமுறை.. தொடர்ந்து நான்கு நாட்கள்
விடுமுறை” என்று அந்த மாணவர் சொல்லி உள்ளார். அவர்
மூன்றாம் வகுப்பு மாணவர். ஏன் இப்படிச் சொன்னார் எனக்
கேட்டதற்கு அவரது பதில் எங்களை வியப்பில் ஆய்த்தியது.
“இன்று காலை எனது அக்கா,
தங்கையுடன் பள்ளிக்கு வந்தேன். அக்காவும் மற்ற சில
மாணவர்களும் சதுரங்கப் போட்டிக்கு செல்ல உடற்கல்வி ஆசிரியருடன் வேறு பள்ளிக்குச் சென்று
விட்டனர். எனது தங்கையும்,
நானும் இன்னும் சில மாணவர்களும் பள்ளியின் முன்பு நின்று
கொண்டு இருந்தோம். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. பள்ளிக்கு விடுமுறை, அதுவும்
நான்கு நாட்கள் விடுமுறை என்று என் அருகில் இருந்த முதல் வகுப்பு, இரண்டாம்
வகுப்பு மாணவர்களிடம் சொல்லி விட்டேன். அதையும் உடற்கல்வி
ஆசிரியர்
சொன்னார் என்று சொல்லி விட்டேன். எனது தங்கையுடன் வீட்டிற்குத் திரும்பிக்
கொண்டிருந்தபோது எதிரில் பள்ளிக்கு வந்த சில மாணவர்களிடமும், சில
மாணவர்களின் வீட்டுக்கும் சென்று பள்ளிக்குக் கிளம்பி கொண்டு இருந்த சில
மாணவர்களின் பெற்றோரிடமும் பள்ளிக்கு விடுமுறை எனச் சொல்லி விட்டோம்” என்று கூறினார். காரணம் கேட்டபோது, “நேற்று வியாழக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை. அடுத்த இரண்டும் நாட்களும் சனி, ஞாயிறு
விடுமுறை. தனியார் பள்ளிக ளில் பயிலும் எங்கள் வீட்டின் அருகில் உள்ள மாணவர்களுக்கு நான்கு நாட்கள் பள்ளி
விடுமுறை என்பதால் நாமும் ஏன் விடுமுறை விடக்கூடாது என்று எண்ணினேன். அவர்கள்
வீட்டில் இருப்பது போல் நாமும் வீட்டில் இருக்கலாம் என எண்ணிதான் திடீர் விடுமுறை
அறிவித்தேன். இனிமேல் இது போல் செய்யமாட்டேன்” என்று கூறி வருந்தினார்.
திடீர்
விடுமுறை அறிவித்த மாணவரின் தாயார் அவராகவே பள்ளிக்கு விடுமுறை இல்லை என்பதைத்
தெரிந்து கொண்டு மாணவரையும், அவரது தங்கையையும் அழைத்து வந்தார். அந்த
மாணவரின் தாயார் இருக்கும்போதுதான் அந்த மாணவரிடம் இவ்வளவு தகவலையும் கேட்டுப் பெற்றோம்.
அவரிடம் “உங்கள் பையனுக்கு அறிவு நன்றாக வேலை செய்கிறது. ஆனால் அதனைச் சரியான வழியில் பயன்படுத்துமாறு கூறி நல்வழிப்படுத்துங்கள்
என்று சொல்லி அனுப்பினோம். காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்களிடம் இனி வரும் காலங்களில்
பள்ளி விடுமுறை என்பதை பள்ளி ஆசிரியர்கள் சொன்னால் மட்டுமே நம்ப வேண்டும் என்று
எடுத்துக் கூறினோம். மாணவர் திடீர் விடுமுறை விட்ட நிகழ்வு
எங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
லெ.சொக்கலிங்கம்
(தலைமை ஆசிரியர் - 9786113160)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.