கல்லூரிப்
படிப்பை முடித்துவிட்டு வந்த கார்த்திகேயன் இளைஞர் குழுவில் இணைந்தான். இந்த
இளைஞர் குழு கடந்த பல வருடங்களாக கண்ணகி தெருவில் இயங்கி வருகின்றது. தெருப் பிரச்சனைகள், கோயில்
விசேடங்கள் முதலியனவற்றில் குழுவில் உள்ள இளைஞர்கள் செயல்படுவார்கள்.
”பிள்ளையார் சதுர்த்தி வரப்போகுதே. இன்னமும் ஒண்ணும் பண்ணாம இருக்கோம்..”
“சாயங்காலம் பாரதி அச்சகம் போயி ரசீது புக் அடிக்க ஆர்டர் கொடுத்திடலாமா..?”
”இந்தத் தடவ பெரிய பிள்ளையார் பொம்ம செஞ்சிடுவோம்.. “
”நல்ல பக்திப் பாட்டுக் கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணலாம்.. “
இப்படி
ஒவ்வொருவரும் வரப்போகிற விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது குறித்து அவரவர்
அபிப்ராயங்களை அள்ளி வீசினார்கள்.
“தெருவில் ரெண்டு பிள்ளையார் கோயில் இருக்கு. அந்த கோயிலுக்குச் சொந்தக்காரங்க
பெரியளவில கொட்டக போட்டு மைக்செட் வச்சு அர்ச்சகரக் கூப்பிட்டு பூஜை செஞ்சு எல்லாருக்கும்
சுண்டல் கொழுக்கட்ட விநியோகம் பண்ணப் போறாங்க. அப்பறம் எதுக்கு நாம வேற வசூல்
பண்ணி பெரிய அளவுல பிள்ளையார் பொம்ம வாங்கி, கொட்டகயில வச்சு, அதுக்கு
ஒரு அர்ச்சகரப் பிடிச்சு நைவேத்யம் வகையறா பண்ணணும்? வேற எதாவது
உருப்படியான காரியம் நம்ம பேர் சொல்ற மாதிரி செய்யலாமே.. என்று தனது கருத்தை
தைரியமாக எடுத்து வைத்தான் கார்த்திகேயன்.
வேற
என்னத்த உருப்படியாப் பண்றது என்கிற தினுசில் பலரும் நினைத்தாலும். கார்த்திகேயன் கருத்தில்
இருந்த நியாயத்தை யாராலும் நிராகரிக்கவும் முடியவில்லை.
”சரி உருப்படியான காரியம் பண்ணலாம். என்ன பண்ணலாமுன்னு நீயே சொல்லு” என்று பந்தை அவனிடமே திருப்பி விட்டார்கள்.
“அடுத்தாப்பில வரப்போறது மழைகாலம். இந்த வருசம் நல்ல மழை பெய்யும்னு சொல்றாங்க.
மழை தொடர்ந்து பேஞ்சா ஆத்தில தண்ணி வரும். ஆத்தில தண்ணி வந்துச்சுன்னா நம்ம
தெருக்காரங்க,
பள்ளிக்கூடம் போற பிள்ளைங்க, அக்கறைக்கு வேலைக்குப்
போற ஆளுக, ரயில்வே ஸ்டேசன் பஸ் ஸ்டாண்டு போறவுங்க எல்லாம் பாலம் சுத்தித்தான் போறோம். ரெண்டு
கிலோ மீட்டரு சுத்திப் போகணும்.. அப்படிப் போகும்போது நம்ம கஷ்டத்துக்கு வழியே பொறக்காதான்னு
பொலம்பிட்டு போயிட்டு தண்ணி வத்தின உடனே அப்படியே மறந்திடுறோம். அதனால நம்ம
தெருவுக்கு நேர பாலங்கட்ட முயற்சி பண்ணலாம். “
”என்ன செய்யலாம்?
எப்படிமுயற்சிக்கலாம்?” - பந்து பழையபடி கார்த்திகேயன் திடலுக்கே
வந்து சேர்ந்தது.
“இப்போதைக்கி நம்ம தெருவில வீடு வீடா கையெழுத்த வாங்கி கலெக்டர்கிட்ட மனுக்கொடுப்போம்..
எம்.எல்.ஏ, சேர்மனப் பாப்போம்.. பஞ்சாயத்து ஆபிசு முன்னாடி ஒரு அடையாள உண்ணாவிரதம் இருப்போம்.
போகப் போக என்ன செய்யலாம்னு யோசிப்போம்..”
மனதிற்குள்
தயக்கம் இருந்தாலும் வெளிப்படையாக இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்
இளைஞர் குழுவினர்.
அந்த
நகரை ஆறு மிகச் சரிபாதியாகப் பிரித்தது. நகரின் தொடக்கத்தில் ஊரை இணைக்கக் கூடிய ஆத்துப் பாலம் இருக்கிறது. சிறிதும்
பெரிதுமான முந்நூறு வீடுகளை உள்ளடக்கிய கண்ணகி தெருவில் இதுவரையில் ஆஸ்பத்திரி இல்லை.
பகுதி நேரமாய்க் கூட வந்துபோகிற மருத்துவரில்லை . ஆட்டோ நிலையம்
கிடையாது. எல்லாவற்றுக்கும் கருக்குள்தான் வரவேண்டும்.. சில விசயங்களுக்கு ஆற்றைக்
கடந்து அக்கரை போகவேண்டும். அங்குதான் மேனிலைப் பள்ளி, பேருந்து
நிலையம், ரயில்வே ஜங்சன்,
வங்கிகள் இருக்கின்றன.
சட்டசபைத்
தேர்தல் வருகிறபோது களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வாக்குறுதியை வாரி வழங்கிடுவார்கள்..
”எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தால் கண்ணகி
தெருக்காக ஆற்றில் பாலம் கட்ட ஆவன செய்வேன்.
”
பாராளுமன்றத்
தேர்தல் வரும்போதும்,
பஞ்சாயத்துத் தேர்தல் சமயத்திலும் வார்த்தைகள் மாறாமல் இதே
பல்லவியைத்தான் பாடுவார்கள்.
தேர்தல்
முடியும்.. வெற்றி பெற்றவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா நோய் தொற்றிக் கொள்ளும்.
பாலத்தின்
அவசியத்தை வலியுறுத்தி விரிவான கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டது. ஜனங்களின் கையெழுத்துக்
கேட்டுப் போனபோது நல்ல வரவேற்பு தென்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஆவலுடன்
கையெழுத்துப் போட்டார்கள்.
மனுநீதி
நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அத்தோடு வேலை முடிந்தது
என்றில்லாமல் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்திற்கு நாள் குறித்தார்கள்.
உண்ணாவிரதப்
பந்தல் நிரம்பி வழிந்தது. கண்ணகி தெருவின் வாலிபர்கள் மட்டுமல்ல, நடுத்தர
வயதினர், மாணவர், பெண்கள் என்று திரளாக வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். நகரத்தின்
நாலாபக்கமும் இந்த உண்ணாவிரதமே பேசும் பொருளாயிற்று. நகர இந்திய ஜனநாயக வாலிபர்
சங்கத்தைச் சார்ந்த பாலமுருகன், பாரதிசத்யா, தேவதாஸ், சங்கர்
ஆகியோர் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து ஆதரவுக் கரம் நீட்டினார்கள்.
கோககோலா
நிறுவனம் நமது ஆற்றின் நீரை எடுத்து லாப வேட்டை நடத்த வந்தது. பதினோரு மாதங்கள்
தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடி அவர்களை அடித்து விரட்டியவர்கள் நாம்.
அதுபோல் விடாமல் போராடினால் பாலம் பெறுவது பெரிய காரியமில்லை. இன்று விதைக்கப்பட்ட
போராட்ட விதைகள் வீணாகாது. வெகுவிரைவில் வெற்றிக் கனியை விழச் செய்யும்.
ஆற்றுக்குள் பாலம் உருவாக நம்மவர்கள்
ஒவ்வொருவருக்கும் ஒற்றுமைப் பாலமும் உருவாக வேண்டும்... உரைவீச்சுகள் தொடர்ந்தன.
-99445 09530- selvakathiravan54@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.