Tuesday, October 4, 2016

ஆசிரியர் சங்கங்களின் கவனத்திற்கு

தி இந்துவிற்கு நான் அளித்த பேட்டியில் பள்ளிகளின் நிர்வாகம் உள்ளாட்சி
அமைப்புகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கும்போதே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். அது நடந்தது. பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரது இடையூறுகளும், அவமதிப்பும் நான்  அறியாதது அல்ல. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நடத்தி வரும் பல போராட்டங்களுக்கு நான் ஆதரவாக இருப்பவன். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லையென்ற குற்றச்சாட்டை சிலர் சுமத்தும்போது எந்த ஆசிரியர், எந்த பள்ளி, நீங்கள் எடுத்த  நடவடிக்கையென்ன என்று அவர்களை வினவுவேன். அவர்களால் திட்டவட்டமாக பதில் அளிக்க முடிவதில்லை. தனியார் பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருக்கும்போது அரசுப்பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஆசிரியர் பணியிடங்களே அனுமதிக்கப்பட்டுள்ள விவரம் பொது மக்களுக்குத் தெரிவதில்லை.

நான் மாவட்டக் கழகப் பள்ளிகளில் 16 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன்.
மாவட்டக் கழகத் தலைவர், மாவட்டக் கழகங்கள் கலைக்கப்பட்ட பின் பொறுப்பு வகித்த மாவட்டஆட்சியர் ஆகியோர் என்னிடம் மரியாதையாகத்தான் நடந்துகொண்டனர். கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட பின்னர் கல்வி அதிகாரிகள் என்னை கல்விப்பணியாற்றிடும் ஒரு சகாவாகப் பார்க்கவில்லை, ஊழியனாகவே பார்த்தனர். தன்மானத்துடன் பணியாற்ற இயலாது என்று அறிந்தே நான் ஆசிரியர்களை மதிக்கும் சரியானதொரு தனியார் பள்ளிக்குச் சென்றேன். தற்போதுள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளாட்சித் தலைவர்களைவிட அரசின் அதிகார வர்க்கத்தினரை மேம்பட்டவர் என்று கருதுவது எனக்கு வியப்பாகவே உள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தனி இயக்கம் கண்டவர் மாஸ்டர்
ராமுண்ணி.. திடமான முதுகெலும்பையும் தந்தவர். அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளைத் தகர்த்தவர். கொள்கைப்பற்றே அவரது அரண். ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் இந்த ஒன்றுபட்ட இயக்கத்தைச் சிதறடித்தனர். ஒரு இயக்கமாக இருந்த நிலை மாறி பல சங்கங்கள் காளான்களாக முளைத்தன. அவற்றில் பல அரசைச் சார்ந்து அதிகாரிகளின் புகழ் பாடி ஆசிரியர்க்கு மாறுதல் பெறவும், மாறுதலை நிறுத்தவும் ஆற்றும் பணியே தம் சங்கத்தை நிலைநிறுத்த இயலும் என்ற நம்பிக்கையில் செயலாற்றுகின்றன. இது இயக்கத்தின் கூட்டுபேர சக்தியைக் குலைத்து விட்டது.

மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளின் மேலாண்மை பற்றிப் பரிந்துரைக்க அன்றைய
கல்விச் செயலர் ஆர்.ஏ.கோபால்சாமி, ஐ.சி.எஸ் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பெற்றது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு இடைநிலைக்  கல்வி வாரியம் அமைக்கப்பட்டு அதன் பொறுப்பிற்கு மாவட்டக் கழகப் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஊராட்சிகள் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகளும் மாற்றப்பட வேண்டுமென்று பரிந்துரைத்தது. அவ்வாரியம் 9 உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கும். மாவட்டக் கல்வி அலுவலரோ அல்லது தனி நபரோ தலைவராகவும் ஒரு கல்வி அலுவலர் செயலராகவும் மற்ற எழுவர் கல்வி சம்பந்தப்பட்டவர்களாகவும் இருப்பர். ஒரு பொதுப் பள்ளித் தலைமையாசிரியரும், ஒரு தனியார் பள்ளித் தலைமையாசிரியரும் உறுப்பினர்களாவார்கள். அனைவரும் அரசால் நியமிக்கப்படுவர். தனியார் பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் பொறுப்பும் இவ்வாரியத்திற்கு அளிக்கப்பட்டது. கல்வி வரி, அரசு மானியம் ஆகியவை நிதி ஆதாரங்களாக இருக்கும். ஒரு மாதிரிக் கல்விச் சட்டத்தையும் அக்குழு தயாரித்தது. நியமன உறுப்பினர்கள் என்பதற்கு மாறாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற கருத்தோடு இப்பரிந்துரைகளை ஆசிரியர் இயக்கங்கள் வரவேற்றன.

சில தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களும் இதே போன்று தம் பள்ளிகளுக்கும்
ஒரு அமைப்பு வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தன. ஆனால் குழுவின் பரிந்துரைகளை அரசு கிடப்பில் போட்டது. பிரிட்டனில் உள்ளாட்சிகளில் இரு அமைப்புகள் உண்டு. ஒன்று உள்ளாட்சிக் குழு . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு. நமது நகராட்சிகளுக்கு ஒப்பானது. மற்றொன்று உள்ளாட்சி கல்வி ஆணையம். உள்ளாட்சிக் குழு தெரிவு செய்யும் ஒரு நபரும் கல்வி ஆணையத்தில் இருப்பார். மற்றபடி அதில் கல்வியாளர்களும், பெற்றோர்களும் உறுப்பினர்களாவார்கள். இவ்வாணையமே அதன் எல்லைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளை நிர்வகிக்கவும், ஆய்வு செய்திடவும் அதிகாரமுள்ளது. இவ்வதிகாரப் பகிர்வு நன்முறையில் இயங்கி வருகின்றது. நான் அமெரிக்க  சென்றிருந்தபோது கனெக்டிகட் மாநிலக் கல்வி நிர்வாக அமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அம்மாநிலக் கல்விப் பொறுப்பு முழுமையும் அவ்வமைப்பைச் சார்ந்தது. 13 உறுப்பினர்கள் கொண்ட அந்த அமைப்பில் இரண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களும் இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. மற்ற உறுப்பினர்கள் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டவர்கள். சில மாநிலங்களில் தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்  என்று அறிந்தேன். அம்மாநிலம் மிகச் சிறப்பான கல்வி அளிக்கின்றது என்று பெயரெடுத்தது. நம் நாட்டுக் கல்வி அமைப்பைப் பற்றி இரண்டு மணி நேரம் நிறைய வினாக்கள் எழுப்பி அறிந்தனர். அன்றைய நிலவரப்படி பத்து டாலரில் ஒரு மாணவர்க்கு நல்ல கல்வி அளிக்கின்றோம் என்று நான் சொன்னபோது எப்படி என்று கேட்டனர். வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று  சொன்னேன். மாவட்டக் கழகத்திலும், ஒன்றியத்திலும் இருந்தபோது நம்ம பள்ளிகள் என்று அழைக்கப்பட்டவை தனியார்மயத்திற்குப் பின் அரசுப் பள்ளிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. பள்ளிகள் சமூகத்தின் சொத்து. எங்கு  பள்ளிக்கும் அது சார்ந்த சமூகத்திற்கும் நல்ல உறவு இருக்கின்றதோ அப்பள்ளி கல்வியில் சிறந்து விளங்குவதைக் காணலாம்.

பழம்பெரும் பள்ளிகளை ஊர் மக்கள் நிலமும் நிதியும் கொடுத்து உருவாக்கினார்கள்.
அவர்களுக்குத் தனியாக எந்த இலாபமும் கிடையாது. வரும் தலைமுறையினர் கற்றுத்
தேர்ந்தவராக விளங்க வேண்டுமென்ற பேரவாவினால் உந்தப்பட்டு ஆற்றிய சேவை
அது. இவற்றைப் பேணிக் காத்து அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கும் கடமை
இன்றைய ஆசிரியர்க்கு உண்டு.

                                                                (044-23620551 –rajagopalan31@gmail.com)


0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.