Tuesday, October 4, 2016

மறுபடியும் - பிரேமபிரபா



இவ்வளவுதானா வாழ்க்கை? தெரியாது. இனிமேலும் ஓர் வாழ்க்கை இருக்கிறதா? அதுவும் தெரியாது. இப்படி விடை தெரியாத பல கேள்விகளுக்கிடையேதான் நாம் வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம். நமக்கான வாழ்க்கை சிறிது சிறிதாக சுருங்கி கூர் முனையுடன் நம் மனதை அழுத்தும்போதுதான் நம் அனைவருக்கும் வாழ்க்கை குறித்த ஒரு மறு வாசிப்பு தேவைப்படுகிறது. ஒரு காலத்தில் நாம் தேடிக் கொண்டாடிய வாழ்க்கை இப்போது வேண்டாத விருந்தாளியாய், செரிமானம் ஆகாத உணவுச் சக்கையாய் மாறும்போது நமக்குள்ளே ஒரு போராட்டம் நடக்கிறது. இப்படி நம்மையும் அறியாமல் நம் கைகளிலிருந்து தவறிய வாழ்க்கை, என்றாவது சுவற்றில் பட்டு எதிர்விசையுடன் ரப்பர் பந்து போல நம்மிடமே மீண்டும் வந்து விடாதா என்று மனதளவில் ஏங்குகிறோம்.

இதே மனநிலையில்தான் குமரேசனும் அவர் மனைவி அம்புஜமும் இருக்கிறார்கள். அறுபதிற்குண்டான வர்ணனைக்கு நூறு சதவிகிதம் மிகவும் பொருத்தமாக குமரேசன் இருந்தார். எப்போதும் எதையோ எதிர்பார்த்து நிற்கும் விழிகள். எதிர்காலத்தைக் குறித்த மத்தியதர வாழ்க்கையின் ஒட்டு மொத்த பயமும் அவர் முகத்தில் தெரியும். உணவு சார்ந்த ஈர்ப்பு எப்போதோ அவரை விட்டு நழுவிப் போயிருந்தது. வாழ்க்கையின் கொடிய பற்சக்கரத்தில் மாட்டிக் கொண்டு காறித் துப்பிய கரும்புச் சக்கையைப் போன்று சதைப் பற்றில்லாத மெலிந்த உடம்பு வாகு. எண்பதுகளில் நட்சத்திரக் கதைகள் பல எழுதி மக்களின் மனதில் இடம் பிடித்தவர். எழுத்தை நம்பியே தன் வாழ்க்கையை அமைத்து அந்த முயற்சியில் அந்தக் காலத்தில் வெற்றியும் கண்டவர்.

குமரேசனின் மனைவி அம்புஜம் மகனையும் மருமகளையும் அலுவலகத்திற்கு வழி அனுப்ப இரண்டு டிபன் பாக்ஸ் பைகளை இருகைகளிலும் வைத்துக்கொண்டு தன் தாங்குதிறனைத் தாண்டி வாரிச் சுமந்த புன்னகையுடன்  வாசலில் காத்திருந்தாள்.

அத்வைதை ஸ்கூலுக்கு பத்திரமா நேரத்துக்கு கொண்டு போய் விட்டுடுங்க. வேலை அது இதுன்னு ஏதாவதுன்னு சொல்லி நேரம் ஆச்சுதோ!.. கண்களை அகல விரித்து மாமியாரைச் சுற்றி அம்புப்படுக்கை விரித்தாள் மருமகள்.

அவருடைய மகன் புஜ்ஜி, நேரத்துக்கு  சாப்பிடுடா என்று குமரேசனின் காலடியில் சுருண்டு படுத்திருக்கும் வெள்ளைப் பூனையை எடுத்து முத்தம் கொஞ்சி நான் உங்கிட்டே பல தடவை சொல்லி இருக்கேன். புஜ்ஜி பசி தாங்க மாட்டான்னு. அதுக்கு மேல உனக்கு இந்த வீட்டிலே என்ன அப்படி முறிக்கிற வேலை?என்று அவன் பங்கிற்கு அம்புஜத்திடம் நெருப்பைக் கக்கி மனைவியைப் பெருமையுடன் பார்த்தான். தகப்பன் மகனிற்குமான உறவு எந்த நேரத்திலும் காற்றிற்கு முழுதும்  அறுந்துவிடும் கயிற்றுப் பாலம் போல ஊசலாடிக் கொண்டிருந்தது.

எப்பவும் வழி அனுப்பறதுதானே? மசமசன்னு நிக்காம உள்ளே போய் வேலையைப் பாருங்க என்று தன் உக்கிரத்தை மருமகள் காட்ட, நடுவானில்   இறக்கைகள் பழுதாகிப் போய் தடுமாறித் தரையிறங்கும் விமானம் போல வீட்டிற்குள் நுழைந்தாள் அம்புஜம். மூப்பின் அயற்சி அவள் கால்களின் வலுவை முழுவதுமாக உறிஞ்சி வீக்கத்தைக் கொடுத்திருந்தது. மகனும் மருமகளும் சென்று விட்டார்களா என்று ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்து தனக்குள் மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அடுக்களைக்கு வந்தாள். இரண்டு இட்டிலியை சிறு சிறு துண்டங்களாக விண்டு சிறிது அதன் மேல் தேங்காய்ச் சட்டினியை ஊற்றி திண்ணைக்கு விரைந்தாள்.

இப்பவே மணி ஒம்பது ஆகுதுங்க. வெறும் வயத்தோட இருக்காதீங்க என்று குமரேசனின் அருகில் உட்கார்ந்து கொண்டு அவரையே உற்றுப்பார்த்தாள். அப்போது இரு சக்கர வாகனத்தின் சப்தம் கேட்டவுடன் துணுக்குற்று எழப்போனவளின் தோளை அழுத்தி உட்காரவைத்தார். குமரேசன். அது உன் பையன் வண்டி இல்லேம்மா. பேப்பர்காரன் இப்போதான் வந்திருக்கான். எங்கேயாவது தடுமாறி கீழே விழுந்துடாதே என்று மனைவியை சமாதானப்படுத்தி தட்டத்தில் இருக்கும் இட்டிலித் துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டார். முற்றிய சக்கரை வியாதியால் வீங்கிய குமரேசனின் கால்களை மெதுவாகத் தடவிக்கொண்டே தன்னை மறந்து தூணில் சாய்ந்து கண் மூடினாள் அம்புஜம்.

என்ன பாட்டி, நீ இங்கே என்ன பண்றே? அம்மாகிட்டே சொல்லிடுவேன் என்று வயதிற்கு மீறிய அதிகாரத்துடன் பேரன் ஆட்காட்டி விரலை அசைக்க பாதி செப்பனிட்ட இயந்திரத்தின் பரிசோதனை ஓட்ட முயற்சியைப் போல தடுமாறியபடி மீண்டும் கொட்டடிக்குத் திரும்பினாள்.

திண்ணையில் இருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தவர் வீட்டிற்குள் ஒரு புது விருந்தாளியின் தயக்கத்துடன் நுழைந்தார். `அம்புஜம் என்றழைக்க பாதி கழுவிய பாத்திரங்களை அடுக்களை மேடையில் அப்படியே போட்டு விட்டு வேகமாக ஓடி வந்தாள்.

நம்ம பையன் ரொம்ப மாறிட்டான் இல்லை? என்று தயங்கியபடி கேட்ட குமரேசனிற்கு உடனடியாக பதில் அளித்தாள் அம்புஜம். இல்லைங்க, நாமதான் இன்னும் மாறாம அப்படியே இருக்கோம். குமரேசனிற்கு சுரீர் என்று இருந்தது.

நீ சொன்னது சரிதான் அம்புஜம். நாம இப்பவே வீட்டை விட்டுப் போயிடலாம்  என்றவர் மனைவியின் உள்ளங்கைகளைப் பார்த்தார். கரிய அடுக்களைக் கறைகளுடன் ஆங்காங்கே கீறியிருந்தது. மொத்த சோகத்துடன் கலங்கிய கண்கள். முழுவதுமாக நரைக்கத் தொடங்கிய தலைமுடிகளில் இருக்கும் ஒன்றிரண்டு கரிய முடிகள் அவருக்கு கடந்த காலத்தை அரை சுவாசாத்துடன் மீட்டுக் கொடுத்தது.  இடுங்கிய அவளின் கண்களில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு.

நாம எதையும் இங்கிருந்து எடுத்துப் போக வேண்டாம் என்று கூறியவர் பீரோவில் இருக்கும் அரக்கு நிறப்  பேனாவை மட்டும் எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு அம்புஜத்தை பெருமையுடன் பார்த்தார். நம்பிக்கையுடன் இருவரும் கைகளைப் பிடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

நீண்ட இடைவேளிக்குப் பிறகு குமரேசன் எழுதிய சிறுகதை மறுபடியும் பிரபலமான மாத இதழ் ஒன்றில் நட்சத்திரக் கதையாக பிரசுரமானது.


(9790895631 – premaprabha.premkumar@gmail.com)



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.