பேராசிரியர்
கே. ராஜு தீக்கதிரில் எழுதி வரும் அறிவியல் கட்டுரைகளின் நான்காவது தொகுப்பு
விவசாயம், சுற்றுச் சூழல்,
உடல் நலன் என்ற தலைப்பில் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய
ஒன்று. விவசாயம்,
சுற்றுச்சூழல், உடல் நலன் ஆகிய மூன்று
தலைப்புகளுமே ஒன்றோடொன்று தொடர்புடையவைதான்.
இந்த
நூலைப் படிக்கும் விவசாயத்தில் ஈடுபடாத அல்லது விவசாய முறையையே அறிந்திராத ஒரு
சாதாரண நகரவாசிக்கே தமக்கும் ஒரு துண்டு நிலம் இருந்தால் விவசாயம் பண்ணிப்
பார்க்கலாமே என்ற எண்ணம் ஏற்படும். நகரத்திற்குச் சென்று வேலை செய்யலாம் என்ற
எண்ணம் இருப்பவர்களுக்குக் கூட விவசாயமும் ஒரு தொழில், அதை
விஞ்ஞான ரீதியில் செய்தால் பொருளீட்ட முடியும் என்ற சிந்தனையை இந்நூல் நிச்சயம் உருவாக்கும்.
புதிய
முறையில் விவசாயம் செய்து வெற்றி பெற்றவர்களின் இமெயில் முகவரி, தொலைபேசி
எண் போன்ற தகவல்களை கட்டுரையுடன் இணைத்திருப்பதால் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு
கொள்ள முடியும். காலங்காலமாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அனுபவசாலிகளே கற்றுக் கொள்ளக்
கூடிய புதிய சாகுபடி முறைகள், நவீன கருவிகளை உருவாக்கும் முயற்சிகள், ஆரோக்கியமான
விதைகளைப் பயன்படுத்துதல்,
இயற்கை உரம் மற்றும் பூச்சிக் கொல்லி தயாரிப்பு போன்ற பல
புதிய யுக்திகளைப் பயன்படுத்தும் ஆர்வத்தை இந்த நூல் ஏற்படுத்தும். இன்றைக்கு
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசுபட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால்
நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள்
அழிவின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக மனித இனம் தங்களது வளங்கள்
அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலை உருவாகி வருகிறது.
தொழில்
வளர்ச்சி என்ற பெயரால் காடுகளை அழிப்பது, நீர் நிலைகள் அனைத்திலும்
தொழிற்சாலைகளின் கழிவுகளைத் திறந்து விட்டு தண்ணீரை நஞ்சாக்குவது தினம் நடந்து
வரும் சோகம் என்பதை எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருப்பது
மிகவும் சிறப்பான ஒன்று. இவ்வாறு சுருக்கமாகச் சொல்லுகின்ற பாணி எல்லா
எழுத்தாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஓன்று. இந்த நூலின் மூன்றாவது பகுதி உடல்
நலன் குறித்தது. தட்பவெப்ப நிலையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் மக்கள் உடல்
நலத்திற்கு மிகப் பெரிய கேடு விளையும் என்று எச்சரிக்கும் அவர் மலேரியா, டெங்கு
போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதையும் குறிப்பிடுகிறார். மேலும்
மனிதர்களுக்குப் பரவும் பல்வேறு நோய்கள் சம்பந்தமாகவும், தொற்று
நோய்களிலிருந்து எப்படி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது போன்ற விவரங்களையும் இந்த
நூலில் தந்துள்ளார். தொப்புள் கொடி சேகரிக்கும் வங்கி, ஸ்டெம்
செல் சிகிச்சை,
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, மரபணு
சிகிச்சை போன்ற நவீன சிகிச்சை முறைகளைப் பற்றியெல்லாம் தெளிவாக அனைவருக்கும்
புரியும் வண்ணம் சொல்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக விவசாயம், சுற்றுச்சூழல், உடல்
நலன் ஆகியவை பற்றிய ஒரு பருந்து பார்வையை இந்த நூல் நமக்கு வழங்குகிறது.
பேராசிரியர் வெ.பா. ஆத்ரேயா அணிந்துரை எழுதி சிறப்பித்துள்ளார். அனைவரும் படிக்க
வேண்டிய ஒரு நூல்.
சி.ராமலிங்கம், முன்னாள்
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு
அறிவியல் இயக்கம்
வெளியீடு
: மதுரை திருமாறன் வெளியீட்டகம்,
புதிய
எண் 21 சாதுல்லா தெரு,
தி.நகர், சென்னை
600 017
செல்
: 78717
80923 / 94437 22311
192 பக்கங்கள் / விலை : ரூ. 130
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.