Tuesday, October 4, 2016

நாடெங்குமே செழிக்க நடந்து வாராய் காவேரி

ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது, எண்ணற்ற காலமாக. புவியியல், அரசியல், அறிவியல் எதுவும் அறியாதது அது. தனக்கு என்றொரு பெயர் இருப்பதையோ, பல  பெயர்களால் தான் அழைக்கப்படுவதையோ பற்றியெல்லாம் சிந்திக்காது ஓடிக் கொண்டிருக்கிறது. குப்பைக் கழிவுகளை யும் கூட செரித்துக்கொள்ளப் பழகிவிட்ட அதன் நீரோட்டம், தனது பயன் பாட்டைக் குறித்துப் பொதுவெளியில் நிகழ்த்தப்படும் அரசியல் வன்முறை இழிவுகளால் பெரிதும் காயப்பட்டுக் கருத்துப் போயிருக்கிறது. ஒட்டிப்போன தனது சொந்த வயிறு குறித்துக் கவலையின்றி உலகுக்கெல்லாம் அன்னம் படைக்கும் விவசாயியின் இதயம் வெடிக்கப் பெருகும் கண்ணீர்த்துளியின் வெம்மை தாங்காது கதறி ஓடிக் கொண்டிருக்கிறது காவிரி.

குடகு மலையில் தலைக்காவிரியில் தோன்றிய காவிரி ஆறு கர்நாடகத்தில் 320 கிமீ தொலைவைக் கடந்து தமிழகத்தில் 416 கிமீ அளவிற்கு ஓடி வங்கக் கடலில் கலக்கையில் மொத்தத்தில் 800 கிமீ தூரம் பயணம் செய்கிறது. இந்தத் தண்ணீரில் யாருக்கு எவ்வளவு கொள்ளளவு உரிமை என்ற வழக்கோ இருநூறு ஆண்டுகளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் தமிழக டெல்டா பகுதி பாசனத்திற்காக தங்கு தடையற்ற நீர் வரத்து இருந்திருக்கிறது. மைசூர் பகுதியில் வேளாண்மை அதன் பிற்பகுதியிலேயே பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதையொட்டியே பிரச்சனைகள் முன்னெழவும், 1892 மற்றும் 1924 இரண்டு ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு, மைசூர் விவசாயத்திற்கும் பாதுகாப்பு தரப்பட்டு, டெல்டா பகுதியின் வரலாற்று உரிமையும் தக்க வைக்கப்பட்டிருக்கிறது. ஐம்பதாண்டுக்கான இரண்டாவது ஒப்பந்தம் 1974ல் காலாவதி ஆகிவிட்டது. இயற்கை பொய்க்கும் ஆண்டுகளில் இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவமற்ற சமூகம் வீதிகளில் வெட்டிக் கொண்டு வேதனையில் மூழ்குகிறது. காவிரி நீர் பங்கீடு குறித்த தீர்ப்பாயம் அமைக்கக் கோரி 1986ல் எழுப்பப்பட்ட தமிழகத்தின் குரல், வி பி சிங் பிரதமராக இருந்தபோது செவிமடுக்கப்பட்டு 1990 ஜூனில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இடைக்கால உத்தரவு கோரியது தமிழகம். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து தீர்ப்பாயம் கர்நாடகம் மாதவாரியாக திறந்து விடவேண்டிய தண்ணீர் அளவையும் குறிப்பிட்டு, ஒரு மாதத்தில் ஏற்படும் பற்றாக்குறையை அடுத்துவரும் மாதங்களில் சரிசெய்ய வேண்டுமென்ற அறிவுறுத்தலோடு ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்க இடைக்கால தீர்ப்பு அளித்தது. மழை குறைவான ஆண்டுகளில் இந்த உத்தரவை கர்நாடகம் மதிக்காதபோதெல்லாம் பாதிப்புகளும், அதையொட்டி பிரச்சனைகளும் மூண்டன. குறுகிய பிராந்திய உணர்வுகளின் தீ மூட்டி அரசியல் பலாபலன்களை  அறுவடை செய்யும் போக்கு கொடிகட்டியது.

தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு 2007  பிப்ரவரி 5 அன்று வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி என்றது தீர்ப்பாயம். தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்குள் கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவு 192 டிஎம்சி. இந்தத் தீர்ப்பும் 2013ல் தான் அரசிதழில் வெளியிடப்பட்டது. இத்தனை சுருக்கமாக எழுதப்படும் இந்த விஷயங்கள் ஏராளமான முறையீடுகள், போராட்டங்கள், நீதிமன்றத் தலையீடுகளை அடுத்தே நிகழ்ந்திருக்கின்றன.

உலக நாடுகள் பலவற்றிலும் நதிநீர்ப் பங்கீடு குறித்த சவால்களை அரசுகள் சந்திக்கின்றன. ஆனால், பல நாடுகளுக்கிடையே சத்தத்தோடு பாயும் நதிகளின் பகிர்வு மௌனப் புன்னகையோடு நிகழ்வதை வரலாற்றின் ஏடுகள் சொல்கின்றன. திபேத்தில் உருவாகும் மிகாங் நதி, சீனா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா நாடுகளில் சுமார் 4,300 கி.மீ. நீளம் ஓடி, இறுதியாய் வியட்நாமில் நுழைந்து கடலில் கலக்கிறது. ஆறு நாடுகளின் வழியாக ஓடியும் பெரிய அளவில் எந்தப் பிரச்சனையுமின்றி, மிகாங் ரிவர் கமிஷன் என்ற அமைப்பை உருவாக்கி, ஆறு நாடுகளும் அந்த நதியின் நீரை அவரவர் தேவைக்கேற்ப பங்கிட்டுக் கொள்கிறார்கள் என்பதைத் தமது பயண அனுபவத்தில் வியப்போடு குறிப்பிடுகிறார் எழுத்தாளர் சிவசங்கரி. பங்களாதேஷ் நாட்டு  அரசிடம் நேரடியாக அமர்ந்து பேசி நதிநீர்ப் பிரச்னையை மேற்கு வங்க முதல்வராயிருந்த தோழர் ஜோதிபாசு நேர்த்தியாகத் தீர்வு கண்டதையும் வரலாறு பேசுகிறது.



காவிரி பாசனப் பகுதியில் பயிராகும் உணவு தானியம் ஒரு மாநிலத்திற்கானது அன்று என்ற புரிதல், கர்நாடக விவசாயிக்கு இருக்கலாம். ஆனால் வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு அது  கருத்தில் நிற்காது. இருக்கும் நீரைப் பாதுகாக்க வேண்டும், நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற சமூக ஞானம் இரண்டு பக்கத்திலும் இல்லை என்கின்றனர் சுற்றுச்  சூழலியலாளர்கள். காவிரியின் குடிநீர்ப் பயன்பாட்டில் 48 சதவீதம் எடுத்துக் கொள்ளும் பெங்களூரு, ஒரு காலத்தில் தூய குடிநீராகப் பெருகி ஓடிய விருஷபாவதி நதியை தொழிற்சாலைக் கழிவுகளாலும், மனித அலட்சிய  அராஜகத்தாலும் மோசமாக மாசுபடுத்தி கெங்கேரி சாக்கடை என்று பெயர் மாற்றி வைத்திருக்கிறது. ஏராளமான ஏரிகளைத் தொலைத்துவிட்டது. தமிழகம் மட்டும் என்ன வாழுகிறதாம்  என்ற கேள்வி காதில் விழுகிறது. தாமிரபரணி, பாலாறு, கூவம் உள்ளிட்டு எத்தனையோ ஆறுகளை  மன்னிக்கவியலாத அளவு பாழ்படுத்தியும், ஏரி கண்மாய்களைப் பறிகொடுத்தும் வாய்ச்சொல் வீரராக வாழும் சமூகம்தான் நாமும்! போராட ஒரு காவிரி நதி இல்லாமல் போகும் நிலைமை எதிர்காலத்தில் வரக்கூடும் என்று எச்சரிக்கிறார் ஆய்வாளர் நித்தியானந்த் ஜெயராமன். சந்தைப் பொருளாதாரத்தின் `ஊக்குவித்தலில் சிக்கி தண்ணீரை அதிகமாக உறிஞ்சும் உணவுப்பயிர்கள், தோட்டப் பயிர்களைச் சாகுபடி செய்யப்படும் போக்கு நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. அண்மையில், செப் 5 அன்று, அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 15000 கன அடி நீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், கர்நாடகத்தில் கலவரத்தைத் தொடங்கினர் வன்முறையாளர்கள். தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூடத் தரக் கூடாது என்ற குரல் அங்கே ஓங்கி ஒலிக்கிறது. மாநில முதல்வ   சித்தராமையா உத்தரவை `கனத்த இதயத்துடன் நிறைவேற்றுவேன் என்றார். செப் 20 அடுத்த விசாரணை வருமுன்பே அந்த அளவைக் குறைத்துக் கொள்ளக் கேட்டது கர்நாடகம். ஆனால் அதையும் தரக்கூடாதென பெருத்த சேதம் ஏற்படுத்தப்பட்டது. வாகனங்கள் கொளுத்தப்பட்டன. ஆனால் இதற்கும், காவிரிக்கும் தொடர்பில்லை, வேறு வர்த்தகப் போட்டிகளும் இருந்திருக்கக்கூடும் என்ற கதியில் சமூக ஊடகங்களில் பதிவுகள் போடப்படுகின்றன. தண்ணீர் அளவை மேலும் இறக்கி விநாடிக்கு 3000 கன அடிகள் என்று காவிரி கண்காணிப்புக்குழு உத்தரவு அளித்தும்கூட இனி தண்ணீர் தர வாய்ப்பில்லை என்று தனது நிலையை அறிவித்திருக்கிறார் சித்தராமய்யா. அரசியல் அழுத்தத்தின் வெடிப்பு அது. பா ஜ கவோ, அங்கே தங்கள் வெறிக்கும்பல் கலவரத்தில் ஈடுபடுவதைக் கண்டிக்கக் கூட செய்யாமல், தமிழர்கள் மீது தாக்குதலை எதிர்த்து இங்கே ஆர்ப்பாட்டம் வேறு நடத்துகிறது. இரண்டு தேசிய கட்சிகளின் அரசியல் தர்மம் இப்படி! இதில் சங் பரிவாரத்தின் விஷம ஊடுருவலும், வன்முறை அரசியலும் அபாயகரமானது. சதானந்த கவுடா தான் ஒரு மத்திய அமைச்சர் என்ற பொறுப்பு சிறிதளவும் இன்றி விஷம் கக்குகிறார்.

இரண்டு மாநில அரசுகளும் கலந்து பேசி, நிபுணர் கருத்தொற்றுமையை உருவாக்கி இயற்கையின் கொண்டாட்ட அமுதத்தை உன்னத நிலையில் நின்று பகிர்ந்து கொள்ள உடன்பாடு எட்டவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தமிழகத்திலும் கன்னடர்களுக்கு எதிராக என்று முன்வைக்கப்படும் கருத்தியல் தவறானது. சென்னை வெள்ளத்தில் திண்டாடிய கடந்த ஆண்டில் உடனடியாக வந்து குவிந்த மனிதநேய உதவிகளில் கர்நாடகம் முதல் வரிசையில் இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.

கனத்த இதயத்தோடாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்தே ஆகவேண்டிய கடமை தமக்கு இருப்பதை கர்நாடக மக்களும் அரசும் உணர வேண்டும். சோதனை மிக்க காலங்களில் மிகுந்த பக்குவத்தோடும், எதிர்கால விளைவுகளைக் குறித்த நுண்ணறிவோடும் செயல்பட வேண்டிய பொறுப்புணர்வு இரு மாநில அரசுகளுக்கும் உண்டு. இப்போதைக்கு அதற்கான அடையாளம் தெரியவில்லை. அதன் இழப்பைக் குறித்து கவலை கொள்வோர் பரந்துபட்ட மக்கள் குரலாக ஒரு நியாயப் பகிர்வை நோக்கி ஜனநாயக வழியில் தீர்வுக்கான முயற்சிகளை  திகரிக்கவேண்டும். காவிரி நீரின் சுவை அப்போது இரண்டு மடங்காகி இருக்கும்!
                                                                                                     -sv.venu@gmail.com/ 9445259691



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.