Wednesday, October 5, 2016

“பிரித் துவைப்போம்” – டாக்டர் ஜி.ராமனுஜம்


பிரிக்க முடியாதது ? தமிழும் சுவையும். பிரியக் கூடாதது ? எதுகையும் மோனையும்? நாகேஷ் பின்புறமாக வளைந்துகொண்டே கேட்கும் கேள்விகளுக்கு சிவாஜி அளிக்கும் பதில்கள் யாராலும் மறக்க முடியாதவை. சில சொற்களைப் பிரித்துப் பார்க்கும்போது விபரீதமான விளைவுகள் ஏற்படும்.

வடிவேலுவிடம் சரத்குமார் தங்கப் பதக்கம் போஸ்டரைக் காட்டி தங்கப்ப ...தக்கம் என்று குதர்க்கமாகப் பிரித்துத் தர்க்கம் செய்வார். ஒரு கட்டத்தில் வடிவேலுவும் வெறுத்துப் போய் `தங்கப்ப தக்கம்தான் என்று சொல்லிச் செல்வார்.

பாடல்களில் இதுபோலப் பிரிப்பவர்கள் சிலருண்டு. `கேள்வியின் நாயகனே என்ற பாடலைக் `கேள் விநாயகனே என்று பதம் பிரித்துப் பதம் பார்ப்பார்கள். கமலஹாசனைப் பற்றிய பாடல் கணபதியைப் பற்றிய பாடலாக மாறிவிடும். தாய் மொழியிலேயே இப்படி என்றால் அடுத்த மொழிகளை அமைதியாக விட்டு விடுவோமா? கர்நாடக இசையில் மிகப் பிரபலமானது `எந்தரோ மகானுபாவுலு என்ற பாடல். பஞ்ச ரத்ன கீர்த்தனைகளுள் ஒன்று. அதை மனம்போன போக்கில் பிரித்துத் துவைப்பவர்கள் உண்டு. `எந்த......ரோ? என்று ஆடியன்ஸில் யாரோ ஒருவரை எந்த ரோவில் அமர்ந்திருக்கிறார் என்று கேட்பதுபோல் பாடுபவர்கள் உண்டு. அதுகூடப் பரவாயில்லை `எந்த... ரோம என்று பிரிக்கும்போது அனர்த்தமாகி விடுகிறது.

இப்படித்தான் `வாச ரோஜா வாடிப் போகலாமா? என்னும் வரிகளை `வா! சரோஜா! வாடி! போகலாமா? என்று பிரித்து கூட்டத்தில் இருக்கும் சாதாரண சரோஜாக்களைப் புலியூர் சரோஜாக்களாக்கிக் கோபத்தில் ஆட வைப்பவர்களும் உண்டு. தமக்குத் தேவையானவாறு பிரித்துப் பொருள் கொள்பவர்கள் `ஊக்கமது கைவிடேல் என்ற ஆத்திச்சூடியை `ஊக்க மது கைவிடேல் என்று டாஸ்மாக்கின் கொள்கைப் பாடலாக மாற்றி அவ்வையாரையே அலற வைப்பார்கள். பாரதி சொன்ன `மெல்லத் தமிழினிச் சாகும் என்ற முதல் வரியை மட்டும் பிரித்துக் கொண்டு` என்றான் ஒரு பேதை என்று அடுத்து வரும் வரிகளை விட்டுவிட்டுத் தமிழுக்கு திதி, இரங்கல் அஞ்சலி எல்லாம் கொடுத்தவர்கள் ஆயிற்றே நாம்!

`தர்மதுரை என்ற திரைப்படம்  கொஞ்சம் ஓடியவுடன் அப்பெயரை `தர் மதுரை எனப் பிரித்து விடுவார்கள். சிலசமயம் வாக்கிய அமைப்புகள் எப்படிப் பிரிப்பது என்று நம்மைக் குழப்பியடிக்கும். வேகமாகப் பாய்ந்த வேணுவின் பூனை என்று எழுதினால் பாய்ந்தது பூனையா வேணுவா என்ற குழப்பம் வரும். பசியோடு இருந்த முதலாளியின் நாய்என்றால் யார் பசியோடு இருந்தது முதலாளியா நாயா என்ற குழப்பம் வரும். தெளிவாக வேணுவின் பூனை பாய்ந்தது, முதலாளியின் நாய் பசியோடு இருந்தது என்று எழுதிவிடலாம்.

நமக்கு ஏற்றவாறு வாக்கியங்களைப் பிரிப்பது பன்னெடுங்காலமாகவே நடந்து வருகிறது. மகாபாரதத்தில் கூட அஸ்வத்தாமன் என்ற யானை இறந்து விட்ட செய்தியை அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்னும் பொருள் வரும்படியாகத் தர்மர் கூறியதாக வருகிறது. அபத்தமாகப் பிரிப்பதுபோல் அனர்த்தமாகச் சேர்ப்பதும் குழப்பத்தை உண்டு பண்ணிவிடும். திரு. நீலகண்டன் திருநீலகண்டன் ஆகிவிடுவதும், திரு. மலையப்பன் திருமலையப்பன் ஆவதும் பெரிய பாதகம் இல்லை. ஆயினும் திரு. மதியரசன், திருமதி. அரசன் என்று பால்மாறி அரசனின் மனைவியாக ஆகும்போது மதியரசன் மலைத்துப் போய்விடுவார். சீனி (சர்க்கரை) வாசனை தனக்குப் பிடிக்கும் என்பதை ஒரு பெண் சீனிவாசனை ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னால் அவளது கணவனுக்குப் பி.பி எகிறுமே!

சிலசமயங்களில் தாறுமாறாகப் பிரிப்பது கூடப் பொருள் பொதிந்ததாக அமையும். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதைக் குழந்தைகள் எழுத்தறிவு வித்தவன் என்று சொல்லும்போது தனியார்மயமான கல்வியைப் பற்றிய குறியீடாகக் கூட அதைப் பார்க்கலாம். ஆனால் சில இடங்களில் இப்படி எடக்கு மடக்காகப் பிரிப்பதிலும் நன்மை இருக்கும். பாரதியை அவமானப்படுத்த நினைத்த காந்திமதிநாதன் என்ற புலவர் அவரிடம் பாரதி சின்னப் பயல் என்று முடியுமாறு பாடல் எழுதச் சொன்னார். பாரதியும் காந்திமதி நாதனைப் பார்! அதி சின்னப் பயல் என்று பிரித்துப் பொருள் வரும்படிக் கவிபுனைந்தார்.

அதுபோல் சமீபத்தில் பாட்மிட்டனில் பதக்கம் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவைப் பாராட்டி அடியேன் எழுதிய குறள்:

சிங்கமாய்ச் சீறிய சிந்துவே உந்தனுக்குத் 
தங்கப்ப தக்கம் தகும்.

இக்கட்டுரை படித் துப்பின் பாராட்டுங்கள் !

{9443321004 – ramsych2@gmail.com)



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.