Tuesday, October 4, 2016

மண்ணை நேசித்த மக்கள் கலைஞன் - திருவுடையான்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர் அண் மையில் அகால மரணம் அடைந்த திருவுடையான். பேரனின் இசை ஆர்வத்தைக் கண்ட அவரது தாத்தா அவரது ஆர்வத்திற்கு ஊக்கம்  கொடுத்தார். 1993-ம் ஆண்டு முதன்முதலாக தமுஎகச மேடையில் ஏறிய அவரை தமுஎகச மேடை ஆரத் தழுவிக்கொண்டது. தலைசிறந்த கிராமியப் பாடகராகப் பரிணாம வளர்ச்சி பெற்றார் திருவுடையான். அவரது குரல் ஒலிக்காத ஊரே தமிழ்நாட்டில் இல்லையென்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானார். சீர்காழி கோவிந்தராஜன் மீது தீராத காதல் கொண்ட திருவுடையான் அவருக்காகவே சங்கரன்கோவிலில் ஒரு தனி இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதனைத் தொகுத்து வழங்கிய இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல்ஹமீது அவர் மட்டுமே தொடர்ந்து 6 மணி நேரம் பாடியதை வியந்து பாராட்டினார். பாரதியின் அனைத்து பாடல்களையும் மனப்பாடமாகவே பாடக்கூடியவர் திருவுடையான். கவிஞர்கள் காசி ஆனந்தன், ஏகாதசி, நவகவி, ரமணன் போன்றவர்கள் எழுதிய பாடல்களை உணர்வு பொங்கப் பாடி மக்களை கவர்ந்தவர். ஏகாதசி எழுதிய ஆத்தா உன் சேலை.. என்ற பாடல், காசி ஆனந்தனின் தமிழா, நீ பேசுவது தமிழா ஆகிய பாடல்களை அவர் பாடும்போது பலத்த வரவேற்பு கிடைக்கும். தனது கிறுக்கல்கள் நூல் வெளியீட்டு விழாவிற்கு இவரைப் பாட அழைத்த திரைப்பட நடிகர் பார்த்திபன், பிறகு ஒரு படத்தில் பாடவும் வாய்ப்பு கொடுத்தார். விருமாண்டி, மதயானைக் கூட்டம், கோடைமழை, மயிலு, களவாடிய பொழுதுகள் ஆகிய திரைப்படங்களில் திருவுடையான் பாடியுள்ளார். ஆயினும் திரைப்படங்களில் பாடுவதைவிட மக்கள் மத்தியில் பாடுவதுதான் அவரது விருப்பமாக இருந்தது. சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த அவரது இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரின் மறைவு மக்கள் கலையை நேசிக்கிற அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

ஐ.வி.நாகராஜன் (தொடர்புக்கு : 94421 26516)



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.