சிங்காரம் தன் அண்ணன் வீட்டுக்குப் போனார். வாடா.. என
வரவேற்றார் வேலு.
ஆமாம், பவானிக்கு ஏதோ வரன் வந்திருக்காமே? பையன் யாரு? என்று கேட்டுக் கொண்டே சாவகாசமாய் சோபாவில் சரிந்தார் சிங்காரம்.
ரெண்டு இடத்திலேர்ந்து வந்திருக்கு. ரெண்டு வரன்களும்
ஏறக்குறைய சமநிலையில இருக்கு. ரமேஷ் வங்கி ஒன்றில் மானேஜர். சுரேஷ் பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரி. இருவருக்கும் கை நிறைய சம்பளம். இவங்க ரெண்டு பேர்ல யாரை பெண் பார்க்க வரச் சொல்றதுன்னுதான் புரியலை என்றார் வேலு.
அண்ணே.. இந்தப் பிரச்சினையை என்கிட்ட விடுங்க. நான் பார்த்துக்கறேன் என்றார் சிங்காரம்.
ஒரு வாரம் ஓடிவிட்டது. மீண்டும் வந்தார் சிங்காரம்.
சித்தப்பா, ரெண்டு பேர்ல யாரைத் தேர்ந்தெடுத்தீங்க? என்று ஆவலுடன் கேட்டாள் பவானி.
சுரேஷ்தாம்மா உனக்கு ஏத்த வரன்என்றார் அவர்.
அப்படியா? அதை எப்படி முடிவு பண்ணே? என்று
கேட்டுக்கொண்டே வந்தார் வேலு.
ரெண்டு
பேருக்கும் புகை பிடிக்கிற பழக்கம் இருக்கு. சுரேஷ் சிகரெட்டை புகைத்துவிட்டு தரையில்
போட்டு அதை பூட்ஸ் காலால் மிதிச்சு அணைத்துவிட்டுப் போனான். ரமேஷ் சிகரெட்டை அணைக்காமல்
அப்படியே தூக்கி வீசினான். அது பக்கத்தில் இருந்த குப்பையில் விழுந்து எரிய ஆரம்பித்தது.
சுற்றுப்புறச் சூழலைப் பற்றிக் கொஞ்சங்கூட கவலைப்படாத ரமேஷ் பவானிக்குத் தகுதியற்றவன்னு
தீர்மானிச்சேன்.
சிங்காரம்
சொன்னதைக் கேட்ட பவானி முகத்தைச் சுளித்தாள். புகைபிடிப்பது புடிக்கறவங்களுக்கு
மட்டுமில்லை, சுத்தியிருக்கறவங்களுக்கும் கெடுதல். இவங்க ரெண்டு பேரையுமே என்னாலே ஏத்துக்க
முடியலை. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இல்லாத வேற நல்ல வரனாப் பாருங்க சித்தப்பா என்றாள் பவானி தீர்மானமாக.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.