மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பொறியியல்
பட்டதாரி லெனின் தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டிற்குச் சென்று அவரது தந்தையிடம் ஆறுதல் கூறியபோது, என் மகன் இனிமேல் திரும்பி வரப்போவதில்லை; ஆனால் என் மகனுக்கு ஏற்பட்ட கதி இனி எந்தவொரு பட்டதாரிக்கும் ஏற்படக்
கூடாது என்றார். அவர் தினக்கூலிக்கு வேலை செய்யும் ஒரு கட்டுமானத் தொழிலாளி.
லெனின் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று பொறியியல்
படிப்பை முடித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. தினந்தோறும் வேலைக்காக அலைந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகளிடமிருந்து தினமும் தந்தைக்கும் மகனுக்கும் மாறி மாறி தொலைபேசி அழைப்பு, எஸ்எம்எஸ் செய்தி என்று நெருக்கடி அதிகமாகி உள்ளது. நாம் கடன்
வாங்கியது ஸ்டேட் வங்கியில்தானே. ஆனால் நோட்டீஸ் அனுப்புவதும், மிரட்டுவதும் ரிலையன்ஸ் என்கிற
நிறுவனம் அல்லவா என்ற புதிருக்கு அவர்களுக்கு விடை
தெரியவில்லை.
ஸ்டேட் வங்கி எனும் பொதுத்துறை நிறுவனம் தன்னிடம் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஏலம் விட்டு விட்டது. அதனால்தான் கூலிப்படை போல அம்பானி நிறுவனம் மாணவர்களை மிரட்டி வருகிறது. இந்த தேசிய
தேசபக்தப் பொருளாதாரம் எல்லாம் அந்த எளிய கட்டுமானத் தொழிலாளி குடும்பத்திற்குத்
தெரியவில்லை. இவ்வாறு 700 கோடி அளவிற்கு கல்விக்கடன் வசூலிக்கும் பொறுப்பை அம்பானி அடியாள் கும்பல் ஏற்றிருக்கிறது.
லெனின் ஸ்டேட் வங்கியிடம்
பெற்ற தொகை ரூ. 1. 90 லட்சம். இதில் நயா பைசாவைக் கூட
அவர் கண்ணால் பார்க்கவில்லை. மொத்தப் பணத்தையும் தனியார் பொறியியல் கல்லூரி பெற்றுக் கொண்டது. ஆனால் வட்டியுடன்
சேர்த்து 2லட்சத்து 48 ஆயிரத்து 623 ரூபாயைக் கட்ட வேண்டும் என்று கணக்குப் போட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கல்விக் கடனைத் திருப்பிச்
செலுத்த 7 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கால அவகாசம் இருக்கும்போது இந்த ஏழை மாணவனை ஒரே தவணையில் திருப்பிச் செலுத்துமாறு ரிலையன்ஸ்
நிறுவனம் எப்படிக் கிடுக்கி போட்டது? இது லெனின் என்ற ஒரு மாணவருக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவம் அல்ல.
கோவையைச் சேர்ந்த ஒரு
மாணவர் ரூ.90,000 ஆயிரம் கடன் பெற்று அது வட்டியோடு குட்டி
போட்டு 1லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதுபோல, மதுரையில் மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.65,000 வீதம் கடன் பெற வங்கி நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஐந்தாம் ஆண்டு தவணையைக் கேட்டு அவர் சென்றபோது, அவருக்கு வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே வாங்கிய கடனைத்
திருப்பிச் செலுத்த வேண்டுமென்று தனியார் நிறுவனம் ஒன்று மிரட்டத்
துவங்கியிருக்கிறது.
கல்விக் கடன் வழங்குவது ஏதோ மிகப்பெரிய சாதனை போல முந்தைய காங்கிரஸ் அரசும்,
இப்போதைய பாஜக அரசும் பீற்றிக் கொள்வது உண்டு. ஆனால் இது
மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகப்பெரிய கடன் வலையில் சிக்க வைக்கும்
சதி என்பது அம்பலமாகி வருகிறது. வேலை கிடைக்காத வேதனை ஒருபுறம் என்றால், கடன் கேட்டு தரப்படும் நெருக்கடியால் பல குடும்பங்கள் நிலைகுலைந்து
போவது பெரும் துயரம்.
ஸ்டேட் வங்கி தனக்கு வர வேண்டிய கடன் தொகையை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஏலம் விட்டுள்ளது. ஆனால் இந்த அம்பானிகள்தான்
நாட்டிலேயே மிகப் பெரிய கடன்காரர்கள். ரிலையன்ஸ் நிறுவனமே பல வங்கிகளுக்கு ரூ. 1,25,000 கோடிக் கடன்
பாக்கி வைத்துள்ளது. தான் கட்ட வேண்டிய கடனைக் கட்டாத இந்தக் கும்பல்தான் ஏழை, எளிய மாணவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்குகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை வசூலிக்க வேண்டிய
பொறுப்பை நம்முடைய வங்கிகள் யாரிடம் ஒப்படைக்கப் போகின்றன?
இந்தியாவின் முதல் பத்து
நிறுவனங்கள் வைத்துள்ள வங்கிக் கடன் மட்டும் ரூ. 5 லட்சம் கோடியை தாண்டும் என்று
கணக்கிடப்பட்டுள்ளது. வாரச் சந்தையில் சிறுவியாபாரிகளிடம்
கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை மிகப்பெரிய ரவுடிகளிடம் ஒப்படைப்பது போலத்தான், மாணவர்கள் மற்றும் சிறு விவசாயிகளிடம் கடன் வசூலிக்கும் பொறுப்பை அம்பானி போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைப்பதும். சிலை திருடும் கும்பலை கோவில் தர்மகர்த்தாவாக நியமிப்பது போலத்தான் இதுவும்.
விஜய் மல்லையா என்ற பலே கில்லாடி சாராய வியாபாரி பொதுத்துறை வங்கிகளிடம்
ரூபாய் ஒன்பதாயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கிவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவர் லண்டனில் இருந்துகொண்டு இந்திய அரசுக்கு தெனாவட்டாக நிபந்தனை விதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்கோ லெனின் என்ற எளிய பொறியியல் பட்டதாரி அவமானம் தாங்கமுடியாமல் தூக்கில் தொங்குகிறார். மல்லையா மீதான வழக்கில் ஆஜரான ஒரு வழக்கறிஞர் என்னுடைய கட்சிக்காரர் அப்பாவி மல்லையா ரூ. 9 ஆயிரம் கோடிதானே ஏப்பம் விட்டிருக்கிறார்.. ஆனால் ரூ. 1,25,000 கோடி வங்கிக்கடனை வாங்கிக் கட்டாமல்
ஏப்பம் விட்ட அம்பானி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேட்டிருக்கிறார். வங்கியிடமிருந்து பதில் இல்லை. அம்பானி மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
என்று எப்படிக் கூறமுடியும்? அதுதான் கல்விக்கடன் வசூலிக்கும்
மகத்தான பணியை அவர்களிடம் கொடுத்துள்ளோமே என்று வங்கி நிர்வாகம் பதில் கூறியிருக்கலாம்.
லெனின் என்ற மாணவனை
தூக்கில் தொங்கவிட்ட இதே ஸ்டேட் வங்கி நிர்வாகம்தான் அதானி என்ற மோடியின் ஆப்த நண்பருக்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கம்
வாங்க பல லட்சம் கோடியைக் கடன் வழங்க ஒப்புக் கொண்டது. அவரும் ஏற்கனவே வாங்கிய வங்கிக் கடனைக் கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்தான்.
உலகமயம் இந்தியாவுக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டது என்று சிலர்
வாய்கிழியப் பேசுகிறார்கள். இந்த கொள்கைதான் மாணவர்களைத் தூக்கில் தொங்கவிடுகிறது..
மல்லையாக்களைத் தப்ப விடுகிறது. அப்பாவிகளை மிரட்டுகிறது.. அம்பானிகளை வாழ வைக்கிறது. இனிமேல் கல்விக்கடன் பத்திரத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டும் குறிக்க வேண்டாம். தற்கொலைக்குத் தயாராக
இருக்கவும் என்றும் சேர்த்து எழுதி வாங்கிக் கொள்ளலாம்.
(94422 02726 –mathukkur@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.