Friday, August 5, 2016

பெரும் பெரும் வார்த்தைகள். ஆனால்........... - ச.மாடசாமி

சென்ற ஆண்டு ( ஏப்ரல் 2015) வெளிவந்த ஓர் கல்வி அறிக்கை இப்படித் தொடங்குகிறது......

1947இல் துர்காதேவி விடுதலை பெற்றாள்(சுதந்திரம்). 1991இல் லட்சுமி விடுதலை பெற்றாள் (தாராளமயம்). 2015 இல் சரஸ்வதி விடுதலை பெறுவாள் (பல்வேறு கல்வி அமைப்புகளை ஒழிப்பதன் மூலம்).

பஜனை மொழியில் எழுதப்பட்ட இந்த அறிக்கை, AICTE, UGC போன்ற அமைப்புகளை ஒழித்துக் கட்டும் முகமாக வெளியிடப்பட்டது. இந்தியாவை உலகின் `ஜெகத்குரு என்றும் இந்த அறிக்கை வர்ணிக்கிறது. இப்போது வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை 2016இன் பயணமும் இதே பாதையில்தான்.

வேதக்கல்வியைப் போற்றியும், பாகுபாடுகளின் ஊற்றுக் கண்ணான குருகுலக் கல்வியைப் பாராட்டியும் தொடங்குகிறது இக்கல்விக் கொள்கை. Rich Heritage, Glorious Past, Great Tradition - என்று கல்விக் கொள்கை பொங்கி வழியும்போது... இந்த வார்த்தைகள்-ஒரு வலை என்பதும், ஒரு வஞ்சகம் என்பதும் நமக்குப் புரியாதா?...

`பண்பாடு என்ற பெயரில் பழைய அழுக்கு மூட்டைகள் நம் தலையில் ஏறும் என்ற உண்மை நமக்குத் தெரியாதா?...

1968இல் இந்திரா காந்தி அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் பொதுப்பள்ளி குறித்த குரல் ஓங்கி ஒலித்தது. அடுத்து 1986இல் ராஜீவ்காந்தி அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் மாதிரிப் பள்ளி போன்ற மேட்டிமை சார்ந்த யோசனைகள் இருந்தபோதும், பொதுப்பள்ளிக்கான குரலும் சேர்ந்து ஒலித்தது.

இன்று என்ன நிலை?...
எளிய, சிறிய அமைப்புகளை `வலுவற்றவை எனக் குற்றஞ் சாட்டி மூடிவிடுவது, பதிலுக்குச் சர்வ அதிகாரமும், மதச்சார்பும் கொண்ட ஒற்றைப் பேரமைப்பை உருவாக்குவது- என்ற திட்டத்தை நோக்கித்தான் இன்றைய அரசின் கல்விக் கொள்கை நகர்கிறது.

இந்தக்கல்விக் கொள்கை பெருங் குரலெடுத்துப் பேசும் Composite Schools, Skill Schools போன்ற யோசனைகள் எளிய பள்ளிகளின் மரணத்தை இப்போதே அறிவிக்கவில்லையா?....

பெரும் பெரும் வார்த்தைகள். ஆனால் எல்லா ஆபத்துகளும் நுட்பங்களுக்குள் ஒளிந்து கிடக்கின்றன. Devil is in the devil.... தொடர்ந்து பேசுவோம்..
முனைவர் ச. மாடசாமி, முகநூலில்


0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.