Friday, August 5, 2016

கிட்னியை விற்கும் விவசாயிகள்


மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்கனவே கடன் தொல்லையில் சிக்கிய பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா பகுதியில் தற்கொலைகள் அதிக அளவில் நடந்துள்ளன. இப்போது புது பாணியைத் தொடங்கியுள்ளனர். மகாராஷ்ட்ராவிலும் குஜராத்திலும் விவசாயிகள் தாங்கள் பெற்ற கடன்களை அடைப்பதற்கு தங்களுடைய கிட்னியை விற்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். விதர்பா பகுதியில் உள்ள ஒரு விவசாயி சந்தோஷ்   காவ்லி என்பவர் இலங்கைக்குச் சென்று தன்னுடைய கிட்னியை ரூ. 4 லட்சத்துக்கு விற்று தனது கடனை அடைத்துள்ளார். இவர் வாங்கிய கடன் தொகை வெறும் ரூ. 20 ஆயிரம் மட்டுமே. இந்த 20 ஆயிரத்திற்கு ரூ. 3 லட்சத்து 80ஆயிரம் வட்டியாக மட்டும் இவர் கொடுத்துள்ளார். கிட்னி விற்பனைத் துயரம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணையில் கடனில் சிக்கியுள்ள விவசாயிகளை ஆசை காட்டி அழைத்துச் சென்று கிட்னியை அகற்றி அதற்கு பணம் ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு மிகப் பெரிய வலைப்பின்னல் அமைத்து செயல்படும் கும்பல் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்னி விற்பனையைக் கண்டித்து தங்களுடைய உடல் உறுப்புகளை ஏலம் விடும் போராட்டத்தை அம்மாநில விவசாயிகள் நடத்தியுள்ளனர். இந்த நூதனமான போராட்டத்தைக் கூட மாநில அரசுகளோ மத்திய அரசோ கண்டுகொள்ளவில்லை. இது இந்தியாவிற்கே அவமானம் என்பதை அவை புரிந்துகொள்ளவில்லை. மத்திய மாநிலஆட்சிகளின் விவசாய விரோதக்  கொள்கைகளால்தான் விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாக மாறியுள்ளது. தற்போது கிட்னி விற்பனைத் துயரமும் சேர்ந்துகொண்டுள்ளது. விவசாயிகளின் துயரத்தை முடிவுக்கு கொண்டுவர உறுதியான நடவடிக்கைகள் உடனடித் தேவை என்பதை வலியுறுத்தி மக்கள் இயக்கங்கள் பெருக வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

(தொடர்புக்கு 94421 26516)

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.