Friday, September 15, 2017

எதற்கும் இருக்கட்டும் - டாக்டர்.ஜி.ராமானுஜம்


ஒரு அலுவலகத்தில் வண்டி வண்டியாகக் கோப்புகள் தேங்கிவிட்டன. குட்டன்பர்க் அச்சு எந்திரத்தைக் கண்டுபிடித்த காலம் தொடங்கி தற்போது வரை அச்சடிக்கப்பட்ட ஏராளமான காகிதக் குப்பைகள் சேர்ந்துவிட்டன. ஊழியர்கள் நடமாடுவதே நடனமாடுவது போல்தான் செல்லவேண்டியிருந்தது. ஆகவே தேவையில்லாத குப்பைகளை எரித்துவிடலாம் என முடிவு செய்து தலைமை அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பினார்கள். தலைமை அலுவலகம் கம்மென்று இருந்தது. முப்பத்தி நான்காவது நினைவூட்டலுக்குப் பிறகு தலைமை அலுவலகத்திலிருந்து பதில் வந்தது, எல்லாக் கோப்புகளையும் ஒரு நகல் எடுத்துவிட்டுப் பின் எரித்து விடுங்கள் என.

இந்த எதற்கும் இருக்கட்டும் மனப்பான்மைதான் பத்து வருடங்களுக்கு முன் பெட்ரோல் போட்ட ரசீது, மாமாங்க காலத்துக்கு முன் மளிகைக்கடையில் மஞ்சள் வாங்கிய பில், பெரியபாளையத்தம்மன் கோவில் கூழூற்றும் பண்டிகைக்குக் கொடுத்த நன்கொடை ரசீது, குற்றாலத்தில் குளிக்கப் போகும்போது எடுத்த பார்க்கிங் டிக்கெட், பதினேழு வருடத்துக்கு முன் பஸ்சில் பயணம் செய்த பயணச்சீட்டு எனப் பலவற்றையும் பத்திரப்படுத்தச் சொல்கிறது.

இன்னொரு வகை எதற்கும் இருக்கட்டும் மனப்பான்மை உண்டு. அது முன் ஜாக்கிரதை முத்தண்ணா வகையறாக்கள் செய்வது. சாப்பாட்டு போட்டிக்குப் போகும்போது ஒருவேளை பசித்தால் எதற்கும் இருக்கட்டும் என டிஃபன்பாக்ஸில் உணவு எடுத்துப் போகிறவர்கள், கல்யாண வீட்டில் செருப்பு தொலைந்து விடக்கூடாது என ஒற்றைக் காலில் மட்டும் செருப்பு அணிந்து கொண்டு செல்லும் இனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

சர்தார்ஜி ஜோக் ஒன்று உண்டு. சர்தார்ஜி ஒருவர் ரயிலில் பயணிக்கும் போது இரண்டு பயணச்சீட்டுகள் வாங்கினாராம். எதற்கு இரண்டு டிக்கட்டுகள் என நண்பர் கேட்டபோது ஒரு பயணச்சீட்டு தொலைந்தால் இன்னொன்று வைத்துச் சமாளிப்பேன் என்றாராம். அந்த இன்னொரு டிக்கெட்டும் தொலைந்தால் என்ன செய்வாய் என நண்பர் கேட்டபோது அதற்குத்தான் சீஸன் டிக்கெட் வைத்திருக்கிறேனே என்று பதிலளித்தாராம்!

இதுபோல் என் உறவினர் ஒருவர் செல்ஃபோன் வாங்கிய புதிதில் குறுஞ்செய்தி யாருக்கேனும் அனுப்பினால் அடுத்த நிமிடம் அவர்களுக்கு போன் செய்து உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறேன் பாருங்கள் என்று அந்த செய்தியையும் சொல்லிவிடுவார். அதைவிடக் கொடுமை சிலசமயம் எதற்கும் இருக்கட்டும் என்று நேரில் ஒருமுறை வந்து அந்த செய்தியைச் சொல்லிவிட்டுச் செல்வார். ஒருவரது வீட்டுக்கு அவரது நண்பர் வந்திருந்தார். பேசிக்கொண்டே இருந்தனர். இரவாகிவிட்டது. மழை வேறு பயங்கரமாகப் பிடித்துக் கொண்டது. எனவே அவர் நண்பரிடம் நீங்கள் இன்று இரவு இங்கேயே தங்கிடுங்க. வீட்டுக்குப் போக முடியாது. உங்கள் மனைவியிடம் போன் செய்து சொல்லிடுங்க எனச் சொல்லிவிட்டு சமையலை ரெடி செய்ய வீட்டுக்குள்ளே சென்றுவிட்டார். சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது நண்பரைக் காணவில்லை. அரை மணிநேரம் கழித்து நண்பர் சொட்டச் சொட்ட நனைந்தபடியே திரும்பி வந்தார். இந்த மழையில் எங்கு சென்றீர்கள் எனக் கேட்டதற்கு நண்பர் பதிலளித்தார் : இன்று இரவு வீட்டுக்கு வர முடியாது என மனைவியிடம் ஃபோனில் சொல்லிட்டேன். எதற்கும் இருக்கட்டும் என வீடு வரை ஓடியே சென்று மனைவியிடம் நேரிலும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தேன். இப்ப மனதுக்கு நிம்மதியாகி விட்டது என்றார்.


இது போலத்தான் வங்கி ஒன்றில் நடந்தது. ஒருவர் தன்னுடைய தந்தை படுத்த படுக்கையாக இருப்பதாகவும், வங்கிக்கு நேரில் வர முடியாது எனவும் ஆகவே அவருடைய கணக்கில் இருக்கும் பணத்தைத் தாம் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். வங்கி அதிகாரி பெருந்தன்மையாக தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான உரிய ஆவணங்களைக் கொண்டுவாருங்கள். எதற்கும் உங்கள் தந்தையை ஒரு முறை வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்துப் போடச் சொல்லுங்கள். அவருக்குப் பதிலாக நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றாராம்.

எதற்கும் இருக்கட்டும் மனப்பான்மையால் நன்மைகளும் உண்டு. எதற்கும் இருக்கட்டும் மனப்பான்மைதான் விமானம் விழுந்தால் என்னாவது என்ற பயத்தில் பாராசூட்டைக் கண்டுபிடித்தது. ஆனால் அதற்காக நாற்காலிமேல் ஏறிப் பரணைச் சுத்தம் செய்யும்போது கூட எதற்கும் இருக்கட்டும் என பாராசூட்டெல்லாம் கட்டிக் கொண்டால் அது கொஞ்சம் ஓவராகத்தானே இருக்கும்?

இந்தக் கட்டுரையை மெயிலில் அனுப்பிவிட்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று தபாலிலும் அனுப்பி விடுகிறேன்.

(9443321004 –ramsych2@gmail.com)



பழைய மாணவர்களுடன் ஒரு உணர்ச்சிகரமான சந்திப்பு

1989-லிருந்து 1992 வரை விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இயற்பியல் பி.எஸ்சி. படித்த மாணவர்கள் ஆகஸ்ட் 18 அன்று பழைய மாணவர்கள் சங்கத்தைத் தொடங்கினர். நிகழ்ச்சியன்று காலை 10 மணிக்கு ஓய்வு பெற்றவர்களும் தற்போது பணியில் இருப்பவர்களுமாக 12 விரிவுரையாளர்கள் கல்லூரிக்கு வந்து விட்டோம். எங்களுக்கு முன்னதாகவே 15 பழைய மாணவர்கள் அங்கே குழுமியிருந்தனர். 25 ஆண்டுகள் கழித்து அனைவரும் சந்தித்துக் கொண்டதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

அரைவட்டமாகப் போடப்பட்ட நாற்காலிகளில் ஆசிரியர்கள் ஒரு பக்கமும் மாணவர்கள் ஒரு பக்கமுமாக அமர்ந்த பிறகு நிகழ்ச்சி தொடங்கியது. ராஜேஷ் குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அந்த வகுப்பில் படித்த 30 மாணவர்களில் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடிந்ததை அவர் தெரிவித்தார். பின் மாணவர்கள் ஒவ்வொருவராக அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அதன் பின் ஆசிரியர்கள் உரையாற்றினர். பி.எஸ்சிக்குப் பிறகு மாணவர்கள் மேலும் படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தது குறித்தும் சுமார் 12 பேர் அயல்நாடுகளிலும் மற்றவர்கள் வெவ்வேறு ஊர்களிலும் நல்ல நிலையில் செட்டில் ஆனது குறித்தும் ஆசிரியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பழைய மாணவர் சங்கத்தை கல்லூரி முதல்வர் வந்து தொடங்கி வைத்தார். மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அன்றைய நாள் அற்புதமான நாளாக அமைந்தது.

கே.ராஜூ