Friday, September 15, 2017

Orientation வகுப்பு ஆ அது

ஒரு சில மாதங்களுக்கு முன் பத்தாம் வகுப்புத் தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் சிறப்புப் பயிற்சியாளர் ஒருவரது சிறப்புப் பட்டறைக்கு மகன் நந்தாவை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். நிறைய பட்டங்களை வாங்கியவர் அந்த சிறப்பு வகுப்பின் ஆசிரியர். தமிழ் இலக்கணம் முதல் வேதியியல் பாடங்கள் வரை தலைகீழ் மனப்பாடம் அவருக்கு. ஆனால் மாணவர்களை ஊக்கப்படுத்தும் எளிய மந்திரம் மட்டும் சித்திக்கவில்லை... பாவம் மாணவர்கள்! தயங்கித் தயங்கி பதில் சொன்ன மாணவ மாணவியரை நோ .. தப்பு.. வேஸ்ட்.. சரியில்லை... எந்த ஸ்கூல் நீங்க.. இதுகூட சரியா சொல்லிக் கொடுக்கலியா உங்க டீச்சர் என்பதாக கமெண்ட்ஸ்! சரியான விடை சொல்கையில் மடக்கிக் கேட்டு, பாத்தியா டப்பா அடிச்சிருக்கிற... அதுதான் மாட்டிக்கிட்ட..படிக்கணும். ஒழுங்காய்ப் படிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். சூத்திரங்களை மடமட என்று வேகமாக ஒப்பித்துக் கொண்டே போனார். இடையிடையே நான் ஒரு motivation expert ...ஆனா அதுக்கு இங்க நேரமில்ல...என்று வேறு சொன்னார். பத்து நாளில் தேர்வு தொடங்க இருக்கையில் மாணவரிடம் என்ன மொழியில் நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்று அவர் சற்றும் அறிந்திருக்கவில்லை. நான் பேப்பர் செட் பண்ணினா நீங்க எல்லாம் முட்டைதான் வாங்குவீங்க என்பது அவரது கமெண்ட்களில் சூப்பர் கமெண்ட்! Orientation டிவகுப்பு என்று சொன்னார்கள். ஆனால் எல்லோரையும் disorient பண்ணுவதாகவே அவரது வகுப்பு இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

இறுதியில் நன்றி தெரிவிக்க நான் சென்று ஒரு நிமிடம் பேசினேன். மதிப்பெண்கள் முக்கியமில்லை. ஆர்வத்தோடு படியுங்கள். எல்லாம் அறிந்தவர் யாருமில்லை. ஆனால் கற்கும் ஆர்வத்தை எந்த வயதிலும் விட்டுவிடாதீர்கள். எல்லா மாணவர்களுக்கும் இந்த உலகில் எதிர்காலம் உண்டு. வாய்ப்புகள் உண்டு. மலைவாழை அல்லவோ கல்வி என்கிறார் பாரதிதாசன்.. உற்சாகமாகப் படியுங்கள்.. தேர்வுகளைக் கண்டு அஞ்சாதீர்கள். திறமை மிகுந்த ஆசிரியருக்கு நன்றி. மாணவர்களுக்கு வாழ்த்துகள். பெற்றோர்க்கு பாராட்டுதல்கள் என்று சொல்லி முடித்துக் கொண்டேன்.

நந்தா மிகுந்த ஏமாற்றத்தோடு திரும்பினான்.
எஸ்.வி.வி



















இன்னும் ஆயிரம் பெரியார்கள் வேண்டும் - பெரணமல்லூர் சேகரன்

மூத்திரப் பையைச் சுமந்தபடி என் கடன் பணி செய்து கிடப்பதே என இறுதி மூச்சுவரை சமூக மாற்றத்திற்கான விதைகளை விதைத்தவர் பெரியார். வைதீகப் பாசி படிந்த இந்து சமுதாயத்தினைச் சீர்திருத்த வேண்டும் என்று வாழ்நாள் முழுதும் பாடுபட்டார்.

தமது திராவிட கழகத்தின் குறிக்கோள்கள் எவை என்று 1950-ம் ஆண்டில் அறுதியிட்டுக் கூறியுள்ளார் : திராவிட இயக்கமானது மத சமுதாயச் சீர்திருத்த அமைப்பு. சமுதாயத்தை இப்போதைவிட, அதிக மனிதாபிமானமும் பகுத்தறிவும் கொண்ட அடிப்படையில் சீர்திருத்தி
அமைக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். சாதியை அடியோடு ஒழித்துக்கட்டவும் விரும்புகிறது என்றார் பெரியார்.

கடவுள் இல்லை என்ற கொள்கையை வாழ்நாள் முழுதும் சற்றும் தளராது பரப்பினார். தீண்டாமை, சாதி வேற்றுமைகள், மூட நம்பிக்கைகள், மடமைச் சடங்குகள் ஆகியவற்றை இவர் கடுமையாக, வன்மையாகக் கண்டித்து அவற்றை விட்டொழிக்கும்படி வலியுறுத்தி வந்தார். மத்திய அரசின் ஆதிக்கத்திலிருந்து திராவிட நாடு விடுபட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வந்தார்.

சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று வந்தபின் பொதுவுடமைக் கொள்கை மூலம் சமூக மாற்றம் ரஷ்யாவில் சாத்தியமானதைப் பற்றி பரப்புரை மேற்கொண்டார்.

இன்று பெரியார் இல்லாத காலத்தில் இன்னும் ஆயிரம் பெரியார்கள் பிறக்க வேண்டும் என்பதை உணர்வது ஒருபுறம். சாதியமும் மதவாதமும் முன்னெப்போதையும் விட அதிகமாகக் கோலோச்சும் யதார்த்த நிலை மறுபுறம். இத்தகைய சூழலில் பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கி பரப்புரை மேற்கொள்ளவும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் காலத்தின் அவசியம்.

(9442145256 – sekematesan@gmail.com)


வீழ்ச்சியடையும் தமிழக தொழில்துறை - ஐ.வி.நாகராஜன்

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தால் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் சரிவை சந்தித்து வருகிறது. ஆளும் கட்சிக்குள் எண்ணற்ற கோஷ்டிகள். அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அவை இணைந்தாலும் மனதளவில் இணையப் போவதில்லை. மக்கள் நலப்பணிகளிலும் அரசு நிர்வாகத்திலும் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றி ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. உற்பத்தித் துறைகளில் கடந்த 2016 ஏப்ரல் தொடங்கி 2017 மார்ச் வரையிலான நிதியாண்டு காலத்தில் வெறும் 1.65 சதவீத வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது. இது தமிழகப் பொருளாதாரத்தில் மிகப் பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஆனால் இதே சமயத்தில் உற்பத்தித் துறைகளில் ஆந்திரா 10.36 சதவீதமும் தெலுங்கானா 7.1 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வேகமான வளர்ச்சி இந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் யாரிடம் அனுமதி வாங்குவது.. யார் யார் லஞ்சம் கேட்பார்கள் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுவதால் இங்கே முதலீடு செய்ய அவர்களிடையே தயக்கம் நிலவுகிறது.

தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதாகவும் ரிசர்வ் வங்கியின் அறிக்கை எச்சரிக்கிறது. இந்திய அளவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும் தற்போது ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் தமிழகம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களித்த மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

இந்தத் தேக்கநிலை முடிவுக்கு வருவது எப்போது?

(தொடர்புக்கு 94421 26516)

எனது பணி அனுபவங்கள் - சு.சீ.ராஜகோபாலன்



எனக்குத் தலைமையாசிரியர் பதவி உயர்வு கிடைத்ததும் புதிய பள்ளியில் பொறுப்பேற்றபின் என் தந்தையைப் பார்க்கச் சென்றேன். அவர் நாடறிந்த சிறந்த தலைமையாசிரியர். கல்வி விதிகள் தலைமையாசிரியர்க்கு நிறைய அதிகாரங்களைக் கொடுத்துள்ளன. மாணவரைச் சேர்க்கும் பொறுப்பு தலைமையாசிரியருடையது. நீ படித்திருக்கின்றாய். யாரையும் படிக்க இலாயக்கற்றவர் என்று சொல்ல உனக்கு உரிமை கிடையாது. அது போல வகுப்புத் தேர்ச்சியிலும் தாராளப் போக்கைக் கடைப்பிடி. பத்தாம் வகுப்பு வரை ஒரு மாணவரைத் தூக்கிவிட உன்னால் முடியும். பின்னர் அந்த மாணவர் தாமே பிழைத்துக் கொள்வார். அதிகாரிகள் விதிகளைத்தான் கடைப்பிடிப்பர். நேர்மையாக இருக்கும் வரையில் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தினார். அவ்வறிவுரைகளை முடிந்த அளவு பின்பற்றி வந்தேன் தலைமையாசிரியராக முதல் தேர்ச்சி முடிவுகளை வெளியிட்ட நாளன்று இரவு 8 மணிக்கு ஒரு தாயார் வந்து ஊருக்கே எம்பொண்ணு ஒண்ணுதான் இளிச்சவாய் கிடைத்தாளோ, அப்பனில்லாப் புள்ளையென்றால் என்ன வேண்டுமனாலும் செய்வீர்களோ என்று கூக்குரலிட்டார். அடுத்த நாள் காலை பள்ளிக்கு வரச்சொல்லி அனுப்பி வைத்தேன். தமிழில் குறைந்த மதிப்பெண் பெற்றதால்தான் தேர்ச்சி கொடுக்கப்படவில்லை என்று சொன்னேன். அப்படியா என்று சொல்லிவிட்டு மௌனமாக இருந்தார். தாயார் இந்த பள்ளி வேண்டாம், வேற பள்ளியில் சேரலாம் என்றார். இல்லை, நான் இங்கேயே படிக்கின்றேன் என்று சொல்லிவிட்டு படிப்பைத் தொடர்ந்தார் மகள். என்னிடம் பேசுவதில்லை. எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேறினார்.

பல ஆண்டுகட்குப் பின் ஒருமாவட்டத் தலைநகரில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற பள்ளிக்குச் சென்றேன். தலைமையாசிரியர் வகுப்பு வகுப்பாக அழைத்துச் சென்று ஆசிரியர்களை அறிமுகம் செய்தார். இவர் எங்கள் பள்ளிக்கே பெருமை சேர்ப்பவர். தமிழில் ஒருவர் கூட தேர்ச்சி பெறத் தவறியதில்லாதது மட்டுமல்ல, சராசரி 65-க்கு மேல் இருக்கும் என்று சொன்னவுடன் வாழ்த்துகள் என்றேன். உங்களுக்கு இவரைத் தெரியுமா என்று த.ஆ. கேட்க
அவர் எனது மாணவர் என்றேன். சிறந்து விளங்குவதற்கு அவரது தொழில் ஈடுபாடேயன்றி நான் காரணமல்ல என்றேன். தேர்ச்சி\ மறுத்தது சரியா, தவறா என்பது விடைதெரியா கேள்வியாகவே இன்றுவரை இருந்து வருகின்றது. தேர்ச்சி கொடுத்திருந்தால் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கமாட்டார். படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். தேர்ச்சி மறுக்கப்பட்டது அவரது தன்மானத்தைத் தூண்டிவிட்டு தமிழாசிரியர் ஆக்கியது. கற்றலைச் சவாலாக மாற்றுவது நன்மை பயக்கும் என்ற படிப்பினை பெற்றேன்.

கணவனை இழந்த ஒரு ராஜஸ்தானி பெண்ணை 8-ஆம் வகுப்பிலும், ஒரு கேரளப் பெண்ணை 7-ஆம் வகுப்பிலும் சேர்த்தேன். இருவர்க்கும் தமிழ் சிறிதும் தெரியாது. அந்த ஊரில் எங்கள் பள்ளி ஒன்றே இருந்ததால் நாங்கள் சேர்க்கவில்லை என்றால் கல்வி மறுக்கப்படுவார்கள். மாவட்டக் கல்வி அலுவலரோ இச்சேர்க்கைகள் தவறானவை என்று அம்மாணவர்களை பள்ளியினின்று நீக்கச் சொன்னார். வயது வந்த பெண்களைச் சேர்க்கக் கூடாதென்ற கல்வி விதியினைச் சுட்டிக்காட்டி ராஜஸ்தானி பெண்ணை வெளியேற்றச் சொன்னார். அவர்களுக்குக் கல்வி மறுப்பது அநீதியாகும் என்று அன்றைய இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலுவிற்கு இச்சேர்க்கைகளை அனுமதிக்க வேண்டினேன். அவர் என் செயலைப் பாராட்டி ஏற்பு வழங்கினார். தமிழாசிரியர்கள் மூன்றே மாதங்களில் அம்மாணவர்க்கு எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்கும் மொழித் திறனை வளர்த்தது பெரும் செயலாகும். பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவ்விரு பெண்களும் கற்றுத் தேறினர். கற்கும் ஆர்வமே உந்துசக்தியாகும் என்றறிந்தேன்.

ஆண்டுத் தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கும் பொழுது ஒரு மாணவர் ஒரே வகுப்பில் மூன்றாண்டுகள் இருந்தும் குறைந்த பட்ச மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் அவருக்குத் தேர்ச்சி மறுக்க மனம் இடம் கொடுக்கவில்லை. ஒரே வகுப்பில் இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கியிருப்பவர்களுக்கு மதிப்பெண்ணைக் கருதாது தேர்ச்சி கொடுக்கலாம் என்ற விதியை உருவாக்கித் தேர்ச்சி கொடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் ஒரே வகுப்பில் இருந்தும் ஏன் அவரால் 30 மதிப்பெண்களைக்கூடப் பெற முடியவில்லை என்று யோசித்தேன்.

ஒரு மாணவர் அறிவியல் கண்காட்சிகளில் தேசிய அளவில் பங்கு கொண்டும் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களே பெற்று வந்தார். வகுப்பாசிரியர் வகுப்பில் நல்ல முறையில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றார் என்றும் தேர்வில்தான் பின்தங்கியிருக்கின்றார் என்றும் சொன்னார். அம்மாணவரை அழைத்து விசாரித்த பொழுது எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரியும், ஆனால் தேர்வறைக்குள் சென்றவுடன் எல்லாம் மறந்து விடுகிறது என்றார். தேர்வறை அச்சம் நம் மாணவரில் பலர்க்கும் உண்டு. முந்தைய ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி மறுக்கப்பட்டவரது கற்றலை ஆய்வு செய்ய முற்பட்டேன். தேர்ச்சி மறுக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். தொடர்ந்து படித்தவர்களில் ஒரிருவர் தவிர மற்றவர்களது மதிப்பெண்கள் இரண்டாம் ஆண்டில் குறைந்தே காணப்பட்டது. தக்க வைப்பதால் பயனேதும் இல்லை.. மாறாக பிற மாணவரை விட மூத்தவர்களாக இருந்தது உளவியல் ரீதியாக வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.. ஆசிரியர்களும் கற்க இலாயக்கற்றவர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே அவர்களை நடத்தினர்.. வீட்டிலும் ஆதரவு இல்லை.. தக்க வைத்தலால் மாணவர்க்கோ, பள்ளிக்கோ பயனேதுமில்லை என்றறிந்து அனைவர்க்கும் தேர்ச்சி அளிப்பது என்று முடிவெடுத்தேன். 90 விழுக்காடு நாட்கள் பள்ளிக்கு வருகை தந்தால் மதிப்பெண்களைப் பாராது தேர்ச்சி அளிக்கப்படும் என்று தேர்ச்சிவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டக் கல்வி அலுவலர் தேர்ச்சியில் தாராளம் காட்டினால் பள்ளியின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் என்ற கல்வி விதி 30-ஐச் சுட்டிக்காட்டி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சிப் பட்டியலை மீளத் தயாரித்து அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். கல்வி இதழ்கள் பலவற்றிலும் மலரும் பருவம் மாணவர்க்கு மாணவர் மாறுபடுமென்றும், பள்ளிப் பருவத்தில் சாதாரணமாக இருப்பவர் பிற்காலத்தில் சாதனையாளர்களாக உருவாகக்கூடும் என்றும் கட்டுரைகளைப் படித்திருந்தேன். பள்ளி நிழலே படாதவர்கள் படைப்பாளியாகத் திகழ்ந்துள்ளனர். பல துறைகளிலும் சாதனையாளர்களாக விளங்கியவர் பலர்க்கும் பள்ளிப் பருவம் ஒளியற்றதாக இருந்துள்ளது. பல நாடுகளிலும் தக்கவைத்தல் முறை கிடையாது. வயதைச் சொன்னால் வகுப்பையும், வகுப்பைச் சொன்னால் வயதையும் கூறமுடியும். எங்கள் பள்ளியில் படித்து தம் துறைகளில் சிறந்து விளங்குபவர் பட்டியலைத் தயாரித்தேன்.

அவர்களது பள்ளிப் பருவத்தை அறிந்திட முற்பட்டேன். கிராமப்புற விவசாயி குடும்பங்களிலிருந்து திண்ணைப் பள்ளியில் படித்து சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி குறைவாக இருந்ததால் அடுத்த ஆண்டு வாரம் ஒரு மணி நேரம் ஆங்கில இலக்கண வகுப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையுடன் தேர்ச்சி கொடுக்கப்பட்டிருந்தனர். ஒருவர் இங்கிலாந்து சென்று படித்து ஒரு பஞ்சாலை மேலாளர் ஆனார். மற்றொருவர் மருத்துவப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்று சிறந்த மருத்துவரானார். இவற்றையெல்லாம் மேற்கோள் காட்டி தக்க வைத்தலே, கழிப்பதல்ல என்பதே என் இலட்சியம் (சுநவநவேடி, டிவ னநவநவேடி ளை அல யீடிடஉல) என்று ஏழு பக்கங்களுக்கு விளக்கக்கடிதம் எழுதினேன். இன்று வரை கல்வித் துறை அதற்குப் பதில் தரவில்லை.

தற்பொழுது கல்வி உரிமைச் சட்டத்தில் ஐந்து, மற்றும் எட்டாம் வகுப்புகளில் தேர்வுகள் நடத்தி தேர்ச்சி கொடுக்க வழிசெய்யும் திருத்தத்தினை பாராளுமன்றத்தில் அரசு வைத்துள்ளது மிகப் பிற்போக்கான நடவடிக்கை. இதனால் கல்வி மறுக்கப்பட்டவர்கள் எளியவரே. இடை விலகல் அதிகரிக்கும். வகுப்பறைக் கற்பித்தலிலும், தேர்வு முறைகளிலும் சீரிய மாற்றங்களைக் கொணர்ந்து மாணவர் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தடை போடுவது தவறு. ஒன்றாம் வகுப்பில் சேரும் ஒவ்வொரு மாணவரையும் பத்தாண்டுகளில் பத்து வகுப்புகளை முடிக்க வைக்க வேண்டும்

044-23620551 – rajagopalan31@gmail.com