Wednesday, July 27, 2016

கம்பம் பீர்முகம்மது (நினைவு நாள் : ஜூலை 12)


பெரணமல்லூர் சேகரன்
இந்திய விடுதலைப் போரில் சாதி மதம் இனம் மொழி வயது கடந்து ஈடுபட்டோர் எண்ணற்றோர். வேற்றுமையில் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்துப் போராடியதன் விளைவாகவே இன்று நாம் சுதந்திர சஞ்சீவியைச் சுவாசித்து வருகிறோம்.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டவர்களை அறிந்து கொள்ள வேண்டியது இன்றைய தலைமுறையினரின் அவசியக் கடமை. அவ்வரிசையில் வருபவர் பலரறியாத கம்பம் பீர் முகம்மது. 1888 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரைப் போன்ற இசுலாமியர்கள் எண்ணற்றோர் இந்தியச் சுதந்திரப் போரில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆங்கிலேயரின் ஆட்சியின்போது காவல் துறையில் பணியாற்றினார் பீர் முகம்மது. அரசின்  மீது வெறுப்பும் நாட்டு விடுதலையில் பற்றும் அவருக்கு ஏற்பட்டது. அரசுப் பணியில் இருந்தபோது அவர் கண்ட ஒழுக்கக் கேடுகள், மது அருந்துதல், பொய்பேசுதல், மக்களிடம் கையூட்டுப் பெறுதல், அடி பணிந்து செயல்படுதல் முதலியவை அவருக்கு வெறுப்பை உண்டாக்கியது. தமது உதவி காவல் ஆய்வாளர் பதவியை தூக்கியெறிந்தார்.

எனது நண்பர் பீர் முகம்மது போலீஸ் அதிகாரி பதவியையும் தாசில்தார் பதவியையும், தாய்நாட்டிற்குத் தொண்டு செய்வதற்காகத் தூக்கியெறிந்தார். என்று பீர்முகம்மதுவைப் புகழ்ந்துரைத்துள்ளார் தந்தை பெரியார்.

இந்து முஸ்லீம் ஒற்றுமையால் இன்பமுண்டாமே
இன்பமுண்டாமே என அன்பு கொண்டோமே
எனும் பீர்முகம்மதுவின் வரிகள் வைரம் பாய்ந்தவை..

பீர்முகம்மது தமது பாடலில் சாராயக் குடியை சாடியுள்ளார். அந்நியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1923ஆம் ஆண்டு கம்பத்தில் அனைத்து வணிகர்களையும் கூட்டி அந்நியத் துணிகளைத் தாங்கள் விற்பதில்லை என்று உறுதிமொழி பெற்று வரலாறு படைத்துள்ளார் பீர்முகம்மது. மேலும் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு 1941ஆம் ஆண்டு சிறையேகியுள்ளார். 1943ஆம் ஆண்டு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது ஏழைக் களஞ்சியம் எனும் அமைப்பை ஏற்படுத்தி செல்வந்தர்களிடம் உணவுப் பொருட்களை வாங்கி ஏழை மக்களுக்கு விநியோகம் செய்துள்ளார். கம்பம் பீர் முகம்மது 1945ஆம் ஆண்டு ஜூலை 12ல் மறைந்தார். மக்கள் ஒற்றுமைக்காகவும் இந்தியச் சுதந்திரத்திற்காகவும் உழைத்த பீர்முகம்மது போன்றவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
9442145256 - sekernatesan@gmail.com



Tuesday, July 26, 2016

பல நாள் திருடன்

மரத்தடியில் சோகமாய் நின்றிருந்தான் சோமன். அவனை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த வீரையன், மெல்ல அவனை நெருங்கினான். சாருக்கு ஏதும் பிரச்சனையா? என்று கேட்டான்.

திரும்பி அவனைப் பார்த்த சோமன், ஒண்ணா, ரெண்டா? ஏகப்பட்ட பிரச்சனைகள். நீ அதைக் கேட்டு என்ன பண்ணப்போறே? என்றான் எரிச்சலோடு.


எந்தப் பிரச்சனையானாலும் ஒரு விசேஷ பூஜை இருக்கு. அதை செஞ்சா எல்லாம் சரியாகிவிடும். நீங்களே அசந்து போயிருவீங்க.
உண்மையாவா சொல்றே? சோமன் ஒரு புதிய நம்பிக்கையுடன் வீரையனைப் பார்த்தான்.

என்னால் எத்தனையோ பேர் வாழ்க்கைல நல்ல நிலையை அடஞ்சிருக்காங்க சார். நீங்களும் முயற்சி பண்ணிப் பார்க்கலாமே?

சரி, நான் என்ன செய்யணும்?

உங்க வீட்டுக்குப் போகலாம் வாங்க...

வீட்டை அடைந்ததும், ஒரு லிஸ்ட் எழுதிக் கொடுத்தான் வீரையன். அவன் கேட்ட அனைத்துப் பொருட்களையும் கொண்டுவந்து கொடுத்தான் சோமன். அவற்றை வைத்து பூஜையை ஆரம்பித்தான் வீரையன்.

உங்க ஒய்ஃபோட நகையைக் கொடுங்க சார்.

எதுக்கு?

அதை வெச்சு நான் மந்திரம் போடுவேன். அப்புறம் அதை பத்திரமா நீங்க பூஜை அறையில பத்து நாள் வெச்சிருந்து எடுக்கணும். ஜாக்கிரதை. பத்து நாள் முழுசா கழிஞ்சபிறகுதான் அதைப் பிரிக்கணும். அவசரப்பட்டு இடையில் எடுத்தீங்கன்னா உங்க பிரச்சினைகள் தீராது. மேலும் அதிகமாயிடும். புரிஞ்சதா?

சரி.. என்றவாறு மனைவியின் நகைகளைக் கொண்டு வந்து கொடுத்தான் சோமன். மொத்தம் பத்து சவரன். அதை ஒரு துணியில் சுருட்டி ஒரு சொம்பில் வைத்து மூடி, மந்திரித்துக் கொடுத்தான் வீரையன்.

அதைப் பயபக்தியோடு வாங்கிப் பூஜை அறையில் வைத்துவிட்டு வந்த சோமன், வீரையன் கேட்ட தொகையைக் காணிக்கையாகக் கொடுத்தான். பணத்தைப் பெற்றுக்கொண்டு சந்தோஷமாகப் புறப்பட்டான் வீரையன்.

ரெயில் நிலையத்தை ஒட்டி இருந்த  மாந்தோப்பில் கூடியது கும்பல். மொத்தம் ஆறு பேர். பூஜை போடுகிறேன் பேர்வழி என்று சொல்லி நகைகளை வாங்கிச் சுருட்டிக் கொண்டு கம்பிநீட்டுவதே இந்தக் கும்பலின் வேலை. தலைவன் வீரையன். தலைவா.. இன்னைக்குச் செம வருமானம்.. என்றவாறு பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த நகைகளை எடுத்து வீரையனிடம் கொடுத்த போது திடீரென அங்கே வந்தான் சோமன். அவனைப் பார்த்ததும் வெலவெலத்துப்போனான் வீரையன்.

ஏண்டா, ராஸ்கல்... வீட்ல தனியா இருக்கிற பொம்பளைங்களை எல்லாம் ஏமாத்தி இப்படி நகையைக் கொள்ளையடிக்கிறீங்களா? என்றான் சோமன்.

ஏய்.. என்ன சவுண்டு வுட்றே? நான் யார் தெரியுமா? என எகிறினான் வீரையன்.

நீ யாருன்னு தெரிஞ்சுதாண்டா உனக்கு ஆப்பு வெச்சேன். இப்ப நான் யாருன்னு தெரிஞ்சுக்க.. புதுசா வந்திருக்கற போலீஸ் இன்ஸ்பெக்டர்டா நான்.. வீரையனும், அவன் கோஷ்டியும் திடுக்கிட்டுத் திரும்ப, அவர்களைச் சுற்றி வட்டமடித்தது போலீஸ் படை. அனைவரையும் தள்ளிக் கொண்டுபோய் போலீஸ் வேனில் ஏற்ற, மிடுக்காய் ஜீப்பில் ஏறி அமர்ந்தார் இன்ஸ்பெக்டர் சோமன்..

(malarmathi786@yahoo.com)