மரத்தடியில் சோகமாய் நின்றிருந்தான் சோமன். அவனை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த வீரையன், மெல்ல அவனை நெருங்கினான். சாருக்கு ஏதும் பிரச்சனையா?
என்று கேட்டான்.
திரும்பி அவனைப் பார்த்த சோமன், ஒண்ணா,
ரெண்டா?
ஏகப்பட்ட
பிரச்சனைகள். நீ அதைக் கேட்டு என்ன பண்ணப்போறே?
என்றான்
எரிச்சலோடு.
எந்தப் பிரச்சனையானாலும் ஒரு விசேஷ பூஜை இருக்கு. அதை செஞ்சா எல்லாம் சரியாகிவிடும். நீங்களே அசந்து போயிருவீங்க.
உண்மையாவா சொல்றே? சோமன் ஒரு புதிய நம்பிக்கையுடன் வீரையனைப் பார்த்தான்.
என்னால் எத்தனையோ பேர் வாழ்க்கைல நல்ல நிலையை அடஞ்சிருக்காங்க சார். நீங்களும் முயற்சி பண்ணிப் பார்க்கலாமே?
சரி, நான் என்ன செய்யணும்?
உங்க வீட்டுக்குப் போகலாம் வாங்க...
வீட்டை அடைந்ததும்,
ஒரு லிஸ்ட் எழுதிக் கொடுத்தான் வீரையன். அவன் கேட்ட அனைத்துப் பொருட்களையும் கொண்டுவந்து கொடுத்தான் சோமன். அவற்றை வைத்து பூஜையை ஆரம்பித்தான் வீரையன்.
உங்க ஒய்ஃபோட நகையைக் கொடுங்க சார்.
எதுக்கு?
அதை வெச்சு நான் மந்திரம் போடுவேன். அப்புறம் அதை பத்திரமா நீங்க பூஜை அறையில பத்து நாள் வெச்சிருந்து எடுக்கணும். ஜாக்கிரதை. பத்து நாள் முழுசா கழிஞ்சபிறகுதான் அதைப் பிரிக்கணும். அவசரப்பட்டு இடையில் எடுத்தீங்கன்னா உங்க பிரச்சினைகள் தீராது. மேலும் அதிகமாயிடும். புரிஞ்சதா?
சரி.. என்றவாறு மனைவியின் நகைகளைக் கொண்டு வந்து கொடுத்தான் சோமன். மொத்தம் பத்து சவரன். அதை ஒரு துணியில் சுருட்டி ஒரு சொம்பில் வைத்து மூடி, மந்திரித்துக் கொடுத்தான் வீரையன்.
அதைப் பயபக்தியோடு வாங்கிப் பூஜை அறையில் வைத்துவிட்டு வந்த சோமன், வீரையன் கேட்ட தொகையைக் காணிக்கையாகக் கொடுத்தான். பணத்தைப் பெற்றுக்கொண்டு சந்தோஷமாகப் புறப்பட்டான் வீரையன்.
ரெயில் நிலையத்தை ஒட்டி இருந்த மாந்தோப்பில் கூடியது கும்பல். மொத்தம் ஆறு பேர். பூஜை போடுகிறேன் பேர்வழி என்று சொல்லி நகைகளை வாங்கிச் சுருட்டிக் கொண்டு கம்பிநீட்டுவதே இந்தக் கும்பலின் வேலை. தலைவன் வீரையன். தலைவா.. இன்னைக்குச் செம வருமானம்.. என்றவாறு பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த நகைகளை எடுத்து வீரையனிடம் கொடுத்த போது திடீரென அங்கே வந்தான் சோமன். அவனைப் பார்த்ததும் வெலவெலத்துப்போனான்
வீரையன்.
ஏண்டா, ராஸ்கல்... வீட்ல தனியா இருக்கிற பொம்பளைங்களை எல்லாம் ஏமாத்தி இப்படி நகையைக் கொள்ளையடிக்கிறீங்களா?
என்றான் சோமன்.
ஏய்.. என்ன சவுண்டு வுட்றே? நான் யார் தெரியுமா? என எகிறினான் வீரையன்.
நீ யாருன்னு தெரிஞ்சுதாண்டா உனக்கு ஆப்பு வெச்சேன். இப்ப நான் யாருன்னு தெரிஞ்சுக்க.. புதுசா வந்திருக்கற போலீஸ் இன்ஸ்பெக்டர்டா நான்.. வீரையனும்,
அவன் கோஷ்டியும் திடுக்கிட்டுத் திரும்ப, அவர்களைச்
சுற்றி வட்டமடித்தது போலீஸ் படை. அனைவரையும் தள்ளிக் கொண்டுபோய் போலீஸ் வேனில் ஏற்ற,
மிடுக்காய் ஜீப்பில் ஏறி அமர்ந்தார் இன்ஸ்பெக்டர் சோமன்..
(malarmathi786@yahoo.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.