எல்லாவற்றிற்கும் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. எவர் முடிவு செய்கிறார்கள் என்று அறிந்திடாத
பெருங்கூட்டம் தகுதியை அடைந்திட முட்டி மோதுகிறது. எவர் எவர் எந்த எந்த வட்டத்திற்குள் என்பதை அறிந்திடாமல் வட்டங்களை நோக்கிப் பாய்கிறது கூட்டம். கவர்ந்திழுக்க வட்டங்களின் மீது விதவிதமான
வண்ணம் பூசப்படுகிறது. வண்ணங்கள் வரைந்த பிறகு வட்டத்திற்குள் நுழைவதொன்றும் அவ்வளவு எளிதில்லை. அதிலும் எளியவர்களால் எட்டிப் பிடிக்க முடியாத வெகு தொலைவிற்குள் வட்டங்கள் நகர்ந்து விடுகின்றன. வட்டங்களை நோக்கி எளியவர்கள்
முன்னேறும் வேகத்தை விட பல நூறு மடங்கு வேகத்தில் வட்டங்கள் அவர்களை விட்டு விலகி வெகுதூரம் சென்று விடுகின்றன. வண்ணம் பூசப்பட்ட வட்டங்களைத் தொட முடியாத ஏக்கத்தைச் சுமந்தபடி வந்து தன் பிள்ளைகளைக் கொண்டு வந்து அழுக்குப் பிடித்த வட்டங்களில் தொப்பெனப் போட்டு விட்டுச் சென்று விடுகிறார்கள் பெற்றவர்கள்.
வண்ண வட்டங்களை அடைய முடியாத பெரும் துக்கத்தைச் சுமந்தலைகிற பெற்றோரை யாராலும் தனித்து அடையாளம் காண முடியும். அவர்கள் யாருமற்ற சாலைகளில் தனியாக பேசிக் கொண்டும் அலைந்து கொண்டும் இருப்பார்கள். நிகழ்ந்து கொண்டிருக்கும் ஜூன், ஜூலை மாதங்களில் யாராவது ரோட்டில் தனியாக பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அலைந்தால் எவரும் பயப்பட வேண்டாம். பாவம் அப்பாவிகள் அவர்கள். மனப்பிறழ்வு நோயில் பகுதிநேரம் விழுந்து விட்டவர்கள் என இரக்கம் கொள்க. அருகே சென்று அன்பு ததும்பும் சொற்களால் மெதுவாக விசாரியுங்கள்
அவ்வளவு தான் எல்லாம் உடைந்து நொறுங்கி விடும். ஆறுதல் மொழியில் வெளிப்படும் சொற்களால் மருந்திடுகிற
மருத்துவனாகிப் போவீர்கள் நீங்கள்.
குறைந்தது இருபது தனித்த மனிதர்களை நான் சந்தித்துள்ளேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஆற்றாமை குமைந்துகிடக்கிறது. சார் நீங்களே சொல்லுங்க 700 மார்க்லாம் மார்க்கே கிடையாதாமே! பீ.காம்ல சேர 1000க்கு மேல எடுக்கணுமாம்ல.. நான் கூட பீ.காம் இல்லாட்ட பரவாயில்ல, ஏதாவது என் பிள்ளை படிச்சிகிடட்டும்
ஏதாவது ஒரு டிகிரிக்கு இடம் குடுங்கன்னு கெஞ்சியாச்சு.. நடக்கல பார்க்கலாம் சொல்லிவிடுறோம்னாங்க.. அதான் சார் தினமும் அலைஞ்சிகிட்டு இருக்கோம்.. இப்படி ஒரு மனிதரை நான் தனியார் கல்லூரி வாசலில் சந்தித்தேன். அவர் எழுதப் படிக்கத் தெரியாதவரோ, விவசாயக்கூலி வேலைக்கு செல்லும் எளிய மனிதரோ அல்ல நன்றாக படித்து வங்கிப்பணியில் இருப்பவர்
ஒன்பதாம் வகுப்பு பாஸாயிட்டேன். ஆனா பத்தாம் வகுப்பில் சேர்க்க மாட்டேங்குறாங்க. அதிலயும் எல்கேஜியில இருந்து இதே ஸ்கூல்தான். பிறகு என்ன சிக்கல். வேற ஒண்ணுமில்லை சார். எம் மகன் பத்தாம் வகுப்பை பாஸ்
பண்ண மாட்டானாம். அதனால வேற ஸ்கூல் பர்த்துக்கிடவாம். ஏய்யா ஒன்பதாம் வகுப்பு வரை படிச்சுக் கொடுத்தது நீங்கதானே? அவன் பத்தாம் வகுப்பு பாஸாக மாட்டான்னு எல்லாப் பொறுப்பையும் அவனோட தலையில் கொட்டுறீங்களே இது நியாயமான்னு கேட்கணும்னு
வார்த்தை வாய் வரைக்கும் வந்துருச்சு சார்.. ஆனா நான் கேட்கல ஏன் தெரியுமா?
எப்படியாவது எம்மகன சேர்த்துக்கிடுவாங்க அப்படிங்கிற நம்பிக்கையில வீட்டுக்கும் பள்ளிக் கூடத்துக்குமா அலைஞ்சுகிட்டேஇருக்கேன். கால் செருப்பு தேஞ்சு போச்சு. நாளும் பத்து ஒடிப்போச்சு போங்க. பிள்ளை பிறக்குறதுக்க
முன்னாடியே பெர்த் சர்டிபிகேட் வாங்கியாச்சு ஆம்பளப் பிள்ள பொறந்தா அதுக்கு ஒரு பேரு, பொண்ணு பொறந்தா அதுக்கு ஒரு பேரும் வச்சு பெர்த் சர்டிபிகேட் வாங்கியாச்சு. எதுக்கு இவ்வளவு பிரயாசைன்னு நினைக்கிறீங்க. எம் பிள்ளைய அந்த ஸ்கூல்ல சேத்திரணும். புள்ளைக்கு நல்ல கல்வி கொடுக்கிறது நம்ம கடமையில்லையா? பட், எல்லாமே வேஸ்டாயிப்போச்சு. குழந்தை பொறந்து மூணு வருசமாஅந்த
ஸ்கூலுக்கு அப்ளிக்கேஷன்
போட்டோம். எம் பிள்ளையோட ஒவ்வொரு பிறந்த நாளைக்கும்
அந்த பள்ளிகூட வாசல்ல இருக்கிற ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தினோம். ஒரு பிரயோஜனமும்
இல்ல. எம் பிள்ளை இந்த பள்ளிகூடத்திலதான் ப்ரீகேஜி படிக்கணும்னு மூணு வருசமா நான் கண்டு வந்த கனவு கலைஞ்சுகிட்டு இருக்கு. இருந்தாலும் விடக்கூடாதுன்னு முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்..
எல்லோருக்கும் தரமான கல்வி என்பது இனி சாத்தியமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது. பணம் வைத்திருப்பவர்களுக்கு
மட்டுமே கல்வி என்பது வெளிப்படையான பிறகும் கூட நம்முடைய அறிவுச் சமூகம் நிகழும் கல்விச்சூழல் குறித்து விவாதிக்கத் தயங்குகிறது. மதிப்பெண்களை மட்டும் மாணவனின் திறனை அளந்திடும் அளவுகோலாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிற வன்முறைக்குத் தங்களுடைய அசலான வாழ்க்கைப்
பொழுதுகளை தத்தம் செய்தவர்கள் யாவருக்குள்ளும் உருவாகிப் படரும் எரிச்சலை, எல்லாவற்றிற்குள்ளும் பதுங்கியிருக்கும் வர்த்தகச் சூதாடிகளின் கையைப் புரிந்து கொள்ள மறுத்தால் எப்படி சரி செய்வது?
துரத்தியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு பெரும் கூட்டம். ஆரம்பக் கல்வியை எட்டுவதற்கு முன்பே விருப்பமான பள்ளிக்கூடத்தைத் தொட முடியாத ஏக்கத்துடன் கல்வியைத் தொடர்பவர்கள், ஒன்பதாம் வகுப்பு முடிந்தவுடன் சப்தமில்லாமல் பள்ளியை விட்டு வெளியேற்றப்படுபவர்கள் என்றிருக்கிறார்கள் மாணவர்கள். எப்பாடுபட்டாகினும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பது என்கிற முடிவுடன் வகை தொகையற்ற பயிற்சி எனும் பெயரில் தமிழகம் முழுவதும்
பள்ளிக் கூடங்கள் யாவும் டியூசன் சென்ட்டர்களாக மாற்றப்பட்டு விட்டன. எல்லோரும் தேர்ச்சி பெறுவது தவறில்லை தான். ஆனால் தேர்வைத் தவிர வேறு எந்த கல்விச் செயல்பாடுகளும் அற்ற வெற்று ஸ்டடி சென்ட்டர் களாக பள்ளிக் கூடங்கள் மாறி விட்டதை ஆசிரியர்கள் அறிந்தாவது வைத்திருக்கிறார்களா? பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பிற்குச் செல்ல முடியாது வெளியேற்றப்பட்டவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு விதக் குழப்பமான சூழல் கல்விச் சாலைகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எல்லாக் குழம்பிய குட்டைகளிலும் மீன் பிடிக்கும் வியாபாரிகள்
மட்டும் மகிழ்ச்சியில்
துள்ளிக் குதித்து தங்கள் பைகளை நிறைக்கிறார்கள். எல்லாவற்றையும் சகித்து சகித்துப் பழகிய எளிய மனம் எதுவும் செய்திடும் பலமற்று மௌனித்துக் கிடக்கிறதே... எப்படிச் சரி செய்யப் போகிறோம்?
யார் கலைத்திட மௌனம் காத்துக் கிடக்கிறது?
விரக்தியின் குரலல்ல இது. ஆற்றாமையைத் தொலைத்திட விவாதிப்பது மட்டுமே முதல் புள்ளி.
9443620183 - maran.sula65@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.