நண்பர்கள் வெளியூர்
செல்லும் போது பயணம் இனிதாகட்டும் என்று வாழ்த்துவது வழக்கம். ஆனால் இந்தியாவில்
பயணங்கள் இனிதாகவும் இல்லை;
பாதுகாப்பாகவும் இல்லை. சென்ற ஆண்டில் மட்டும் 1,46,133
பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். முந்தைய ஆண்டில் 1,39,671 பேர் மரணத்தைத்
தழுவினர். சாலை விபத்துகளில் ஊனமானவர்களின் எண்ணிக்கை தனி. நாளொன்றுக்கு சராசரியாக
நானூறு மனிதர்கள் இந்தியச் சாலைகளில் தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர்.
இது ஒரு நாளைக்கு ஒரு விமானம் விழுந்து பயணிகள் அனைவரும் இறப்பதற்கு இணையானது. விமான விபத்து பரபரப்புச் செய்தியாகிறது.
ஆனால், இதே எண்ணிக்கையில் சாலைகளில் செத்து விழும் உயிர்கள் எந்த பரபரப்பையும்
ஏற்படுத்துவதில்லை. சாலை விபத்துகளை வெறுமனே இறப்பவர்களின் எண்ணிக்கையாக மட்டும்
பார்ப்பது சரியல்ல. இதன் பின்னணியில் இருக்கும் சமூக சோகம் மனதைப் பிழியக்கூடியது.
வாழ வேண்டிய வயதில் உள்ள மகனையோ மகளையோ இழந்து வாடும் குடும்பங்கள், பொருளீட்டும்
ஒரே குடும்ப நபரை இழந்து சீரழியும் குடும்பங்கள் என்று எண்ணற்ற கண்ணுக்குப்
புலப்படாத துயரங்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றன.
சரியாகப் பராமரிக்கப்படாத சாலைகள், சாலை விதிகளைப் பற்றிய
அக்கறையே இல்லாத ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம், வாகனப்
பரிசோதனை இவைகளில் நிலவிடும் முறைகேடுகள், குடித்துவிட்டு வாகனம்
ஓட்டுதல் எல்லாம் சாலை விபத்துகளுக்கான காரணங்கள் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
இவைகளையெல்லாம் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சாலைப்
பாதுகாப்புச் சட்டங்கள் இங்கு ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன. சல்மான்கான் மாதிரி
ஒரு விஐபி சாலை விதிகளை மீறி தெருவோரங்களில் படுத்திருப்போர் மீது காரை ஓட்டிக்
கொன்று போட்டாலும் சட்டம் வளைந்து கொடுத்து அவரை விடுவித்துவிடும். பஸ், லாரி, கார்
என்று விரைவு வாகனங்களை மட்டுமே மனதிற் கொண்டு இந்தியச் சாலைகள்
உருவாக்கப்படுகின்றன.
ஆனால், வானவில் போன்று விதவிதமான பயனாளிகளைக் கொண்டது இந்தியச் சாலைகள். எண்ணற்ற
பாதசாரிகள், தெருவோரக் கடைகள்,
வீடுகளற்று சாலைகளிலேயே குடியிருப்போர், பிச்சைக்காரகள்
என்று அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளை யும் உள்ளடக்கியதாக சாலை களும், சாலை
விதிகளும் இருக்க வேண்டும். சாலை விபத்துகளில் நாள்தோறும் நூற்றுக்கணக் கான
மனித
உயிர்கள் மாய்வதைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வும், அரசு
அதிகாரிகளிடம் கடமை யுணர்வும் உருவாகும்போதுதான் இந்தியாவில் பயணங்கள் இனிதாக அமைய
முடியும்.
ஆசிரியர்
குழு
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.