Tuesday, July 26, 2016

தனிப்படிப்பு

ச.சீ.இராஜகோபாலன்

25 ஆண்டுகட்கு முன்னர் சென்னையில் குடியேறிய பொழுது தினமும் காலையில் நீண்ட நடை மேற்கொள்வேன். காலை 5.30 மணிக்கு முன்னரே சாரி சாரியாக இரு பால் மாணவரும் பள்ளிச் சீருடையில் சைக்கிளிலும், பிற இருசக்கர வாகனங்களிலும் விரைவாகச் சென்று கொண்டிருப்பார்கள்.   விசாரித்ததில் தனிப்படிப்பிற்காகச் செல்கின்றனர் என்றும் தனிப் படிப்பு வகுப்புகளினின்று நேராகப் பள்ளிக்குச் சென்று விடுவார்கள் என்றும் அறிந்தேன். பெரும்பான்மையோர் வகுப்பறையைப் பற்றிக் கவலைப்படவில்லை. தனிப்படிப்பிற்குச் சென்று வரும் களைப்பில் வகுப்பறையில் கவனம் செலுத்த  இயலவில்லை என்றும், எதையும் தனிப்படிப்பு மையத்திலேயே கற்றுக் கொள்ளலாமென்று நினைப்பதும் மாணவரது பொதுவான அணுகுமுறைகளாக இருந்தன.

அறிவியல் கூடமில்லாத தனிப் பயிற்சி மையங்கள் எவ்வாறு அறிவியல் பாடங்களைக் கற்பிக்கின்றார்கள் என்பது எனக்கு வியப்பாக இருந்தது. செய்முறையில் அனைவர்க்கும் முழு மதிப்பெண் கொடுப்பதால் மாணவர் அது பற்றிக் கவலைப்படுவதில்லையென்றும் செய்முறைப் பதிவேட்டினைத் தயாரிக்க உதவும் மையங்களும் உண்டு என்றும் அறிந்தேன். பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், வேலை கிடைக்காத ஆசிரியர்கள், இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் மாணவர்கள், வங்கி, காப்பீடு நிறுவனப் பணியாளர்கள் போன்ற பலவகைப்பட்டவரும் தனிப் படிப்பு மையங்களை நடத்தி வருவதையும் கண்டேன். சில மையங்களில் நுழைவுத் தேர்வு வைத்து 85 விழுக்காட்டிற்கு மேல் பெறுவோரை மட்டும் சேர்க்கும் நடைமுறையும் இருந்தது! அம்மையங்கள் பொதுத் தேர்வில் சதமடிக்க உதவுபவை என்று பெயர் பெற்றன.

நாள்தோறும் சிறு தேர்வு நடத்தப் பெற்று உடனடியாகத் திருத்தப்படுவது தனிப்படிப்பு மையங்களின் சிறப்பு. மாணவர் படிப்பில் அக்கறை காட்டாவிட்டால் அவர் நீக்கப்படுவார். கட்டின தொகையும் திருப்பித் தரப்பட மாட்டாது. மாணவரது   தேர்ச்சி பற்றி பெற்றோர்க்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் கொடுக்கப்படும். பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்பிற்குச் செல்ல விரும்புவோர் தனிப்படிப்பிற்கு அதிகமாகச் செல்கின்றனர். கணக்குப் பதிவியலுக்கும் சிலர் செல்கின்றனர். ஆனால் மொழிப்பாடங்களுக்கும், வரலாறு போன்ற கலைப்பாடங்களுக்கும் தனிப்படிப்பு தேவைப்படுவது இல்லை. மேனிலைக் கல்வி ஒருவரது வாழ்க்கையை நிர்ணயிக்கும் வகுப்பாக உள்ளது.

மாணவரது ஆற்றலுக்கு மிஞ்சி பெற்றோரது கட்டாயத்தால் தொழிற்படிப்பிற்குச் செல்ல வேண்டியிருப்பதால் மாணவர்க்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகின்றது. இரண்டு முதல் நான்கு மணி நேரம் தனிப் படிப்பு மையங்களிலும், பயண நேரம் ஒரிரண்டு மணி நேரமும் மாணவர்கள் செலவழிக்கின்றனர். ஆக மாணவர் தாமே படிப்பதற்கான காலம் வீணாகின்றது. தனிப் படிப்பிற்காகச் செலவழிக்கும் நேரத்தைத் தாமே படிக்கப் பயன்படுத்தினால் மாணவர் அதிக மதிப்பெண் பெற இயலும் என்பது எனது கருத்து. எனது குடியிருப்பில் உள்ள எனது உறவினர்களே இதனை ஏற்க மறுத்து தம் குழந்தைகளைத் தனிப்படிப்பு மையங்களுக்கு அனுப்பினார்கள். மேனிலைக் கல்வியைப் பொறுத்த வரையில் தனிப்படிப்பு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது.

தனிப்படிப்பிற்குச் செல்ல இயலாத மாணவரது நிலை என்ன?. மிகப் பிரபலமான பள்ளியொன்றின் மாணவர் ஒருவர் என்னிடம் சந்தேகம் கேட்டு வந்தார். பார்க்க 8-ஆம் வகுப்பு மாணவர் போன்ற தோற்றம். உங்கள் ஆசிரியரிடமே கேட்டிருக்கலாமே, இவ்வளவு தூரம் வந்திருக்கத் தேவையில்லையே என்றேன். மிகுந்த தயக்கத்திற்குப் பின் அவர் சொன்னார். ஒரு முறை கற்பிப்பதற்குத்தான் தனக்கு ஊதியம் கொடுக்கின்றார்கள் என்று அவரது ஆசிரியர் கூறுவாராம். இரண்டாம் முறை கற்பிக்க அவரிடம் தனிப் படிப்பிற்குப் போகவேண்டும். ஒரு தனியார் பள்ளி நிர்வாகி தலைமையாசிரியரிடம் ஆசிரியர்கள் தனிப் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதால் வகுப்பறைக் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று புகார் வருவதாகக் கூறி அரசு விதிகள்படித் தனிப்படிப்பினைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். தனிப்படிப்பே தம் பள்ளியின் உயர் தேர்ச்சிக்கு வித்தாகும், அதனைக் கட்டுப்படுத்தினால் தேர்ச்சி விகிதம் குறையுமென்று தலைமையாசிரியர் யதார்த்தத்தை வெளிப்படையாகக் கூறினார்நிர்வாகி வாயடைத்துப் போய்விட்டார்.

ஒரு நாள் மாலை நான் நடைப்பயிற்சியில் இருந்தபோது ஒரு இள வயதுத் தாயார் எல்.கே.ஜி. படிக்கும் தனது பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். பள்ளியில் ஏதேனும் நிகழ்ச்சியா, இவ்வளவு நேரமாயிற்றே என்றதற்கு டியூஷன் முடிந்து வருவதாகக் கூறினார். அவர் பட்டதாரி. நீங்களே சொல்லித் தரலாமே என்று நான் கேட்டதற்கு அந்த பள்ளியில் சேரும் பொழுதே தனிப்படிப்பிற்கு அனுப்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்ததாகக் கூறினார். எல்.கே.ஜி.க்கு என்ன தனிப்படிப்பு தேவை என்பது எனக்குப் புரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தொடக்கக் கல்வி நிலை பற்றி ஆய்வறிக்கை வெளியிடும் பிரதமும் தனிப் படிப்பின் வீச்சு ஆண்டிற்காண்டு அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளது. ஆசிரியத் தொழிலில் நான் நுழைந்த புதிதில் எனது கல்லூரித் தோழர் தன் தம்பிக்குத் தனிப்படிப்பு சொல்லித் தர வற்புறுத்தினார்.  தலைமையாசிரியரும் பரிந்துரைத்தார். அந்த மாணவர் தம்மோடு மூன்று பேரையும் கூட்டி வந்தார். ஒரு மாதமாயிற்று. மாலையில் மாணவரோடு விளையாடுவதும் சக ஆசிரியர்களோடு நடை செல்வதும் நின்று   விட்டன. அந்த மாணவர்களிடம் பள்ளியிலேயே என்னிடம் எப்பொழுது வேண்டுமென்றாலும் வந்து கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி அவர்களிடமிருந்து தப்பித்தேன்.

இளங்கலை படிக்கும் பொழுது சக மாணவர்க்கு உணவு இடை வேளையில்  கணிதம் கற்பிப்பேன். அம்மாணவர்க்குப் பயனுள்ளதாக இருந்ததா என்பது தெரியாது. ஆனால் எனக்கு கணிதக் கோட்பாடுகளில் நல்ல தெளிவு  ஏற்பட்டது. வகுப்பறைக் கற்பித்தலில் குறை இருந்தால்தான் தனிப் படிப்பு தேவைப்படும்.  பள்ளி நேரத்தில் அனைத்து மாணவர்க்கும் கற்பிக்க இயலாதென்றால் குறை பாடத்திட்டத்தில்தான் உள்ளது. சுமை கூடிய பாடத்திட்டம்தான் தனிப்படிப்பினை அவசியமாக்குகின்றது. கணிதத்தில் எண்கோடு மிகச் சிறந்த ஒரு கற்றல்கருவி. அதே எண் கோட்டைக் கற்றல் கோடாக அமைக்கலாம். 8 வயது மாணவர் 4-ஆம் வகுப்பில் இருப்பார். கற்றல் கோட்டில் அனைத்து மாணவரும் 4 ஆம் புள்ளியில் இருப்பதாகக் கருதி வகுப்பறைக் கற்பித்தல் நடைபெறுகின்றது. ஒரு மாணவர் 2 அல்லது 3 ஆம் புள்ளியிலும் இருக்கலாம், 5-ல் கூட ஒரு சிலர் இருக்கலாம். தமிழில் 6-ஆம் புள்ளியிலும் ஆங்கிலத்தில் 3-ஆம் புள்ளியிலும், கணிதத்தில் 4-ஆம் புள்ளியிலும் ஒருவர் இருக்கக்கூடும். ஆண்டுத் தொடக்கத்தில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவரும் கற்றல்  கோட்டில் எங்கு இருக்கின்றார் என்பதை அறிய முற்பட வேண்டும். நிறை குறைகளைச் சரி செய்து நான்காம் நிலைக்குத் தயார் செய்ய வேண்டும். இல்லையென்றால் வகுப்பறைக் கற்றல் மாணவர்க்கு உதவாது. அறியாமை படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். 35 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்றால் 65 விழுக்காடு அறியாமையோடு அடுத்த வகுப்பிற்குச் செல்கின்றார் என்பதுதானே பொருள்?

ஒவ்வொரு நாளும் கற்றல் முழுமையாக இருந்தால்தான் அறிவாற்றல் ஓங்கும். தனிப் படிப்பு தேவைப்படாது. அந்த நேரத்தில் ஒடி விளையாடலாம். நூலகம் சென்று படிக்கலாம். நட்பினைப் போற்றலாம். தனிப்படிப்பு இவற்றையெல்லாம் இழக்கச் செய்கின்றது. தனிப்படிப்பு தேவைப்படாத சீரிய கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.