பெரணமல்லூர் சேகரன்
இந்திய விடுதலைப் போரில் சாதி மதம் இனம் மொழி வயது கடந்து ஈடுபட்டோர் எண்ணற்றோர். வேற்றுமையில் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்துப் போராடியதன் விளைவாகவே இன்று நாம் சுதந்திர சஞ்சீவியைச் சுவாசித்து வருகிறோம்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டவர்களை அறிந்து கொள்ள வேண்டியது இன்றைய தலைமுறையினரின் அவசியக் கடமை. அவ்வரிசையில் வருபவர் பலரறியாத கம்பம் பீர் முகம்மது. 1888 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரைப் போன்ற இசுலாமியர்கள் எண்ணற்றோர் இந்தியச் சுதந்திரப் போரில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆங்கிலேயரின் ஆட்சியின்போது காவல் துறையில் பணியாற்றினார்
பீர் முகம்மது. அரசின் மீது வெறுப்பும் நாட்டு விடுதலையில் பற்றும் அவருக்கு ஏற்பட்டது. அரசுப் பணியில் இருந்தபோது அவர் கண்ட ஒழுக்கக் கேடுகள், மது அருந்துதல், பொய்பேசுதல்,
மக்களிடம்
கையூட்டுப் பெறுதல், அடி பணிந்து செயல்படுதல் முதலியவை அவருக்கு வெறுப்பை உண்டாக்கியது. தமது உதவி காவல் ஆய்வாளர் பதவியை தூக்கியெறிந்தார்.
எனது நண்பர் பீர் முகம்மது போலீஸ் அதிகாரி பதவியையும்
தாசில்தார் பதவியையும்,
தாய்நாட்டிற்குத் தொண்டு செய்வதற்காகத் தூக்கியெறிந்தார். என்று பீர்முகம்மதுவைப் புகழ்ந்துரைத்துள்ளார் தந்தை பெரியார்.
இந்து முஸ்லீம் ஒற்றுமையால் இன்பமுண்டாமே
இன்பமுண்டாமே என அன்பு கொண்டோமே
எனும் பீர்முகம்மதுவின் வரிகள் வைரம் பாய்ந்தவை..
பீர்முகம்மது தமது பாடலில் சாராயக் குடியை சாடியுள்ளார். அந்நியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1923ஆம் ஆண்டு கம்பத்தில் அனைத்து வணிகர்களையும் கூட்டி அந்நியத் துணிகளைத் தாங்கள் விற்பதில்லை என்று உறுதிமொழி பெற்று வரலாறு படைத்துள்ளார் பீர்முகம்மது. மேலும் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு 1941ஆம் ஆண்டு சிறையேகியுள்ளார். 1943ஆம் ஆண்டு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது ஏழைக் களஞ்சியம் எனும் அமைப்பை ஏற்படுத்தி செல்வந்தர்களிடம் உணவுப் பொருட்களை வாங்கி ஏழை மக்களுக்கு விநியோகம் செய்துள்ளார். கம்பம் பீர் முகம்மது 1945ஆம் ஆண்டு ஜூலை 12ல் மறைந்தார். மக்கள் ஒற்றுமைக்காகவும் இந்தியச் சுதந்திரத்திற்காகவும் உழைத்த பீர்முகம்மது போன்றவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
9442145256 - sekernatesan@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.