புதிய ஆசிரியன் இணை ஆசிரியர் அவர்களுக்கு,
நான்
சென்ற ஆண்டு அக்டோபர் 2015 மாதத்திய இதழுக்கு எங்கே போகிறது இளைஞர் சமுதாயம்?
என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கு தாங்கள் அதே இதழில் இரயிலில் பிரயாணம் செய்த இளைஞர்களின்
உதவியைச் சுட்டிக் காட்டி எல்லா இளைஞர்களும் பொறுப்பற்றவர்கள் அல்ல என்றும் விளக்கியிருந்தீர்கள்.
2016 ஜுன் மாத இதழில் நடந்து முடிந்த தேர்தலைப் பற்றி சில பார்வைகளும்
பல படிப்பினைகளும் என்ற தலைப்பில் எஸ்.வி. வேணுகோபாலன் அவர்களின் கட்டுரையைப் படித்தபின்
இதனை எழுதத் தோன்றியது. ஆம்... தேர்தலில் பணம் அதிகம் விளையாடியது. இது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஒவ்வொரு கட்சியும்
வீடு தேடி வந்து பணம் கொடுத்த பொழுது நமது இளைஞர் சமுதாயம் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். இளைஞர்கள்,
.அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் நமது நாட்டின் ஜனநாயகத்தைக்
காப்பாற்ற ஒன்று கூடி எந்தக் கட்சியையும் பணம் கொடுக்கவிடாமல் தடுத்திருக்கலாமே?
அதைவிட,
பணப்பட்டுவாடாவை
இளைஞர்களே செய்தார்கள்
என்ற பத்திரிக்கைச் செய்திகள் அதிர்ச்சி தருவதாக இருந்தன. எவ்வளவோ எண்ணற்ற இளைஞர்கள் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைக்கின்றார்கள். அதையும் மீறி நாட்டின் மீதும் கொஞ்சம் அக்கறை காட்டினால்
கண்டிப்பாக ஜனநாயகம் தழைத்து நமது நாடும் அப்துல் கலாமின் ஆசைப்பட்டதுபோல் ஓரு வல்லரசாகும். இந்தக் கடிதத்தையும் ஒரு எதிர்பார்ப்போடுதான்
எழுதுகிறேன். இதைப்படிக்கும் ஒரு சில மாணவர்கள், இளைஞர்களாவது ஜனநாயகத்தைப் பற்றி சிந்திக்க
மாட்டார்களா? சி.சந்திரபாபு,
ஆத்தூர்..சேலம் (9940070734).
இன்றைய இளைஞர்களின்
கண்ணோட்டம் பற்றிய தங்களின் கடிதத்தைப் படித்தேன். உங்களுடைய
ஆதங்கம் நியாயமானதே. எல்லாத் தரப்பு மக்களிடமும் நல்லவர்களும் இருக்கிறார்கள். தீயவர்களும் இருக்கிறார்கள். போராளிகளும் உள்ளனர். வெற்றுப் பேச்சாளர்களும் உள்ளனர். நடந்து முடிந்துள்ள
தேர்தலில் தி.மு.க.வும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது
இளைஞர்கள் அதனைத் தடுத்த நிறுத்தவில்லையே என்று வருத்தப்பட்டுள்ளீர்கள். அந்தப் பொறுப்பு இளைஞர்களுக்கு
மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே உள்ளது. மதுரையில் மே மாதம் இரண்டாம் நாள் முதல் ஏழாம் நாள் வரை நேர்மையான தேர்தலுக்கான
பிராச்சாரக்குழு ஒன்றினை ஏற்பாடு செய்து தொடர்ந்து ஆறு நாட்கள் வாக்களிக்கப் பணம் வாங்குவதும் கொடுப்பதும்
குற்றம் என்று சொல்லிப் பிரச்சாரம் நடத்தினோம். இந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான இளைஞர்கள்
கலந்து கொண்டார்கள் என்பதைப் பெருமை யுடன் சொல்லுகின்றேன். இளைஞர்களை நாம் ஆற்றுப்படுத்துவதில்தான்
இருக்கிறது. இளைஞர்கள் மீது முழுவதும் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். அவர்களை நம்மால் வென்றெடுக்க முடியும்.
தோழமையுடன், பெ. விஜயகுமார்
உங்களது உள்ளார்ந்த கடிதம் கிடைத்தது. இளைய தலைமுறை இன்னும் கூடுதல் பங்களிப்பை, பொறுப்புணர்வை, சமூக சிந்தனையை, போர்க்குணத்தை,
ஜனநாயக பாதுகாப்பு
உள்ளுணர்வைப் பெற்றிருக்க வேண்டாமா என்று நீங்கள் எழுப்பும் கேள்வி முக்கியமானது. தாராளமயத்தின் நுகர்வோர்
சந்தையின் ஈர்ப்புக்கு பலியாவோரில் முக்கியமான பங்கு இளைஞர்களுடையது. தங்களைச் சுற்றி நடக்கும் பல நிகழ்வுகள்
குறித்த கவனமோ, அக்கறையோ, கரிசனமோ அவர்களுக்குப் புகட்டப்படுவது கிடையாது. வீடுகளில் உரையாடல்கள்
அரிதாகவும், தேவைகளை ஒட்டியதாகவும், பல நேரம் வாதங்களும் சண்டைகளுமாகவே
நடக்கின்றன. பரந்துபட்ட சமூக பிரக்ஞை ஊட்டப்பட வேண்டிய தேவை இன்று பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் நம்பிக்கை ஊட்டும் இளைய சக்தியின் சாத்தியங்களையும்
பிரமிக்கத்தக்க விதத்தில் சென்னை பெருமழை வெள்ளத்தின்போது பார்த்தோம்...நிவாரணப் பணிகளில் கடலூர்,
திருவள்ளூர்
மாவட்டங்கள் உள்பட பல இடங்களில் நேரம் காலமற்று உயிரையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கியோரில்
கணிசமான இளைஞர்கள் உண்டு. சாதி, மத உணர்வுகளை ஏகாதிபத்தியமும், பாசிச வெறிசக்திகளும் தூண்டிவிடுவதில்
இருந்து இளைஞர்களை நாம் மீட்டெடுத்தாக வேண்டும். அதற்கு பண்பாட்டுத் துறையில் மிகப் பெரிய செயல்திட்டங்களோடு பணியாற்ற நாம் திட்டமிட வேண்டும்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.