Wednesday, July 27, 2016

போராட்டங்கள் தேவையா இல்லையா - விஜய் டிவியில் ஒரு விவாதம்


இன்றைய நவீன தாராளமயமாக்கல் சூழலில் போராட்டங்கள் என்பது தேவைதானா என்ற கேள்வியினை மையப்படுத்திய விவாத நிகழ்வு கடந்த மே ஒன்றாம் தேதியன்று விஜய் டி.வியில் நீயா? நானா? நிகழ்ச்சியில்  ஒளிபரப்பப்பட்டது. தமிழகத்தில் நடந்துள்ள மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்று  போராட்டங்களை ஆதரிப்பவர்களை நோக்கி வினாவெழுப்பி நெறியாளர் கோபிநாத் அன்றைய விவாதத்தைத் துவக்கினார்.

தமிழகத்தில் 1968 ஆம் ஆண்டு கீழ்வெண்மணியில் நடந்த விவசாயத் தொழிலாளிகளின் என்றென்றும் நினைவில் நிற்கும் போராட்டம், 1985-ம் ஆண்டு தமிழக ஆசிரியர்கள் ஜாக்டீ என்ற  அமைப்பின் கீழ் நடத்திய போராட்டம், 1965-ல் தமிழகம் முழுவதும் இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் எழுச்சியுடன் நடந்த போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த போராட்டம், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 2008- 2009 காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை அந்த அணியினர் முன் வைத்தனர். தோல்வியுற்ற சில போராட்டங்களை மாற்று அணியினர் பதிவு செய்தனர். போராட்டங்களின் இன்றைய நிலைமை குறித்து விவாதம் திரும்பியபோது, ஆர்ப்பாட்டம் நடத்துவற்கென நகரின் ஒதுக்குப்புறமான சில இடங்களை காவல்துறை ஒதுக்கியுள்ளது. அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் அல்லது உண்ணாவிரதப் போராட்டங்கள் மக்களின் பார்வைக்கே போகக்கூடாது என்பதுதான் அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார் ஒருவர்.

சமீபத்தில் ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் போராடினார்கள். அவர்கள் தங்களின் சம்பள உயர்விற்காகப் போராடவில்லை. அந்த வங்கியை தனியாருக்கு தாரைவார்க்க எடுத்த முடிவிற்கு எதிராகப் போராடினார்கள். வங்கிகள் தனியார் கைகளுக்குப் போனால் பொதுமக்களுக்குத்தான் நஷ்டம் என்பதைப் புரிந்துகொள்ளாமல் போராடுபவர்களைத் திட்டுவது சரியல்ல என்ற கருத்தை போராட்ட அணியினர் முன்வைத்தனர். இன்று போராட்டங்கள் குறைந்துபோனதற்கும் அல்லது நடைபெறும் போராட்டங்கள் வெற்றி பெற முடியாமைக்கும், தொழிலாளர்களிடையே யும், தொழிற்சங்கங்களிடையேயும் முன்பிருந்த அளவிற்கு ஒற்றுமை இல்லாதது, ஒரு தொழிற்சாலையில் உள்ள பல்வேறு யூனியன்களுக்குள் ளான போட்டி மனப்பான்மை, ஒரு நிறுவனத்தில் பெரும்பான்மையோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றால் அங்கு வேலை நிறுத்தத்திற்கான தேவை இருந்த போதிலும் சாத்தியம் இல்லாமல் போய்விடுவது, தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு தொழிலாளியின் இடத்தை நிரப்புவதற்கு பல வேலையில்லாத இளைஞர்கள் மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்யத் தயாராக இருப்பது ஆகியவை முக்கிய காரணங்களாகச் சுட்டிக் காட்டப்பட்டன. சமீபத்தில் பெங்களூரில் டெக்ஸ்டைல் தொழிலாளிகள் பி.எஃப் பிரச்சனைக்காகப் போராடி வெற்றி பெற்றார்கள். ஒட்டு மொத்த இந்தியத் தொழிலாளர்களும் பயனடைந்தார்கள்.

இப்படித்தான் வரலாறுதோறும் ஒரு சிறுபான்மையினர் போராட போராடாத பலரும் பயனடைகிறார்கள்... ஊழியர்களின் குறைகளை அரசாங்கமோ அல்லது தனியார் நிர்வாகங்களோ தாங்களாகவே முன்வந்து, அவற்றை எந்தக் காலத்திலும் களைந்ததில்லை. அவர்களுக்கு புரியும் ஒரே மொழி வேலை நிறுத்தம்தான். கோரிக்கை எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும் போராடினால்தான் நிறைவேறும்... சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளால் நிரம்பி வழியும் இன்றைய கல்வித்துறையில் மிகக் குறைவான சம்பளம், பணிநிரந்தரம் இன்மை, பணி வரன்முறைப்படுத்தப்படாமை, போதிய விடுப்பு வசதிகள் இன்மை ஆகிய காரணங்களால் கொத்தடிமைகள் போல் ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள்... என்ற கருத்துகளை போராட்ட அணியினர் முன்வைத்தனர்.

போராட்டத்தில் இழக்கின்ற அந்த ஒரு நாள் ஊதியத்தை நான் இழக்க விரும்பவில்லை போராட்டங்கள் இல்லாமலேயே என்னால் அனைத்தையும் பெற முடியும், இது வரை எந்தப் போராட்டத்திலும் ஈடுபடாமலேயே அனைத்தையும் நான் பெற்றிருக்கிறேன் என்று கூட எதிர் அணியில் இருந்த ஒருவர் பெருமிதப்பட்டுக் கொண்டார். அறிவுஜீவிகளோட கவன ஈர்ப்பு இந்தப் பக்கம் வர்றதேயில்லை. போராட்டங்களை எள்ளி நகையாடறதுதான் அவங்களோட பொழுது போக்கா இருக்கு. அரசாங்கத்தோட கவனத்தை ஈர்க்க நாங்க போராடித்தான் ஆகணும்.. மனிதனோட வாழ்க்கையே போராட்டம்தான். நவீன பொருளாதாரம் வந்தபிறகுதான் போராட்டங்களை மழுங்கடிக்கற வேலையை இவங்களைப் போன்ற படித்த வர்க்கம் செய்து கொண்டிருக்கிறது என்று போராட்ட அணியினர் எதிரணியைக் குற்றம் சாட்டினர்.

இந்தியாவில் தொழிலாளிகள் சந்திக்கின்ற ஏராளமான பிரச்சனைகளுக்கான தீர்வினைக் காண்பதற்கு எண்ணற்ற போராட்டங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இன்று நடத்தப்படுகின்ற பெரும்பான்மையான போராட்டங்கள் ஈவு இரக்கமின்றி நசுக்கப்படுவதால், உள்ளதும் போய் விடுமோ என்று அச்சத்தில், தொழிலாளிகள் போராடத் தயங்குகின்றனர். இழப்புகளுக்கு பயந்தால் போராட்டம் சாத்தியமில்லை. சென்னை தி நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் மிக மோசமான நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். வேலை பார்க்கும் இடங்களில் அவர்கள் உட்காரவே கூடாது என்பது அங்குள்ள சட்டம். துப்புரவுத் தொழிலாளிகள் கழிப்பிடங்களிலேயே தங்குகிறார்கள். எல்லாவிதமான சுரண்டல்களுக்கும் ஊற்றுக்கண்களாக  இத்தகைய பணியிடங்கள் உள்ளன. எத்தனை வருடங்கள் ஆனாலும் நிர்வாகம் திட்டமிட்டு தொழிலாளர்களை தற்காலிகப் பணியாளராகவே வைத்திருக்கிறது... சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் போராட்டம் எல்லாம் செல்லாது.  புதுப்புதுச் சட்டங்களைப் போட்டு, போராடிப் பெற்ற பழைய தொழிலாளர் சட்டங்களையெல்லாம் நீர்த்துப் போக வைத்துவிட்டார்கள் என்றார் சிப்காட் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர். .டியில் ஒரே இடத்தில் மிக அதிகமான பேர் வேலை பார்த்தாலும், ஒவ்வொருவரும் தனித் தனி ஆளாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். யார் வேகமாக ஓடுகிறார்களோ அவர்களுக்கு அதிக மதிப்பெண், பதவி உயர்வு வழங்கப்படுகிறது. யாரும் இங்கே நிரந்தரமில்லை என்றிருக்கும் போது ஊழியர்களிடையே ஒரு இணக்கம் உருவாவது கிடையாது. ஆனாலும் 2014 டிசம்பர் மாதம் டி.சி.எஸ். என்ற .டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்த இருபத்தையாயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதற்கான முயற்சிகளை நிர்வாகம் எடுத்தபோது, அந்த ஐ.டி.நிறுவன ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து, ஃபேஸ்புக்கில், ஆன்லைனில் நடத்திய போராட்டமே அத்தனை பேரோட வேலையையும் காப்பாற்றியது. அந்த ஆன்லைன் போராட்டம், போராட்ட வரலாற்றில் ஒரு மைல் .. இது போராட்ட அணியினரின் குரல்.

கேரள மாநிலம் மூணாறு பகுதி தேயிலைத் தோட்டத்தில் ஊதிய உயர்வு கேட்டு கல்வியறிவு குறைவான ரேவதி, கோமதி, கௌசல்யா, முனியம்மாள் போன்ற தமிழ்ப் பெண்களால் சிறு பொறியாகத் தொடங்கிய போராட்டத்தினால் கேரள மாநிலமே ஸ்தம்பித்தது. மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டியே நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தி அனைத்துத் தொழிலாளருக்குமான ஊதிய உயர்வுடன் போராட்டம் முடிக்கப் பெற்றது. அந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய கோமதி எந்தவொரு நிர்வாகமும் நமக்கான உரிமைகளை வலிய வந்து தராதுகேட்டால்தான் கிடைக்கும் எனக் கூறினார்.
சிறப்பு அழைப்பாளர்கள் கருத்து
இந்தியாவில் போராட வேண்டியதற்கான காரணங்கள் ஏராளமாக இருக்கின்றன. உண்மையில் இங்கே தினமும் ஒரு புரட்சி நடக்க வேண்டும். ஏன் அவ்வாறு நடப்பதில்லை என்றால், அடிப்படையில் தலைவிதி தத்துவத்தில் நம்பிக்கையுள்ளவர்களாக நாம் இருப்பதால், மிகவும் எளிதாக காம்பரமைஸ் ஆகி விடுகிறோம். அமைப்புசாராத் தொழிலாளர்களைப் பற்றி தொழிற்சங்கங்கள் கவலைப்படாமல் இருக்கும் தற்போதைய நிலை மாறவேண்டும்.

விவாதத்தில் நாம் கவனித்தவை
போராட்டம் வேண்டாம் அல்லது தேவையில்லை என்று சொன்ன தரப்பில் எந்தவொரு முதலாளியும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. போராட்டங்களுக்கு எதிராக இந்த விவாதத்தில் பங்கேற்றது பெரும் நிறுவனங்களில் பணி புரியும் பெருத்த சம்பளம் வாங்கக் கூடியவர்கள்தான். நீங்க எதைத் தேவையில்லாத போராட்டம்கறீங்க, நாளைக்கி உங்களை வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னு வச்சுக்குங்க, என்ன செய்வீங்க என்ற கோபிநாத்தின் கேள்விக்கு அவர்களிடம் விடை இல்லை. பின்னணியில் வெறுமனே திரையில் எழுத்துக்களாக உருண்டோடிய, கல்வி, மருத்துவத்திற்கு தனியாரிடம் பணம் கட்டும் நெருக்கடியில் உள்ள ஒரு சமூகம் போராடத் தயங்கும் . . .பணி நிரந்தரம் இல்லை என்னும் பூச்சாண்டி . போன்ற வரிகள் விவாதத்திற்கு மெருகூட்டின. இன்றைய சமூகம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சத்தின்மீது விவாதம் நடத்திய விஜய் டிவிக்கு பாராட்டுகள்.



0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.