Tuesday, July 26, 2016

என் வகுப்பு ஆசிரியர்

பிரேம பிரபா
  
ஆறாவது வகுப்பில் தேர்ச்சி பெற்று ஏழாவது வகுப்பிற்கு வந்த முதல் நாள். எங்கள் வகுப்பிற்கு புது ஆசிரியர் மதுரையில் இருந்து வருகிறார் என்றும் அவர்தான் இனிமேல் எங்களின் வகுப்பாசிரியர் என்றும் கூறினார்கள். பிற விபரங்கள் எதுவும் பிடிபடாத நிலையில், அங்கு வேலை பார்க்கும் பியூன் வாசு அண்ணாதான் கூடுதல் தரவுகள் கொடுத்தார். முதுநிலைப் படிப்பிற்குப் பிறகு ஆசிரியர் பயிற்சி எடுத்து முதன்முதலாக எங்கள் பள்ளிக்குத்தான் ஆசிரியராக பணியேற்க வருகிறார் என்றும், அவரின் பெயர் ரவிச்சந்திரன் என்றும் கூறினார். அதைக் கூறும் போது வாசு அண்ணாவின் முகத்தில் அப்படி ஒரு பெருமிதமான மகிழ்ச்சி.


அன்று சீக்கிரமாகவே மாணவர்கள் வகுப்பிற்கு வந்து விட்டார்கள். வாசு அண்ணாதான் புது ஆசிரியரை வகுப்பிற்கு அழைத்து வந்தார். வெள்ளைச் சட்டை. வெள்ளைப் பேண்ட். இன் பண்ணியிருந்தார். மிகவும் மெலிதான பெல்ட்டின் முகப்பில் ஒரு நட்சத்திரம் பொறிக்கப்பட்டு இருந்தது. முக்கியமாக அவரின் கையில் பிரம்பு இல்லை. மலர்க்கொத்து தான் இருந்தது. ஒரு சிறுவனின் துள்ளலுடன் எங்கள் வகுப்பிற்குள் நுழைந்தார். முதலில் அவரை அறிமுகப்படுத்திக் என் வகுப்பு ஆசிரியர் பிரேம பிரபா கொண்டார். பிறகு மாணவர்கள் ஒவ்வொருவரின் சிறிய சுய அறிமுகம். எங்களின் அறிமுகம் முடிந்த பிறகு, எங்களிடம் பொதுவாக ஒரு கேள்வியைக் கேட்டார். உங்களுக்கு மிகவும் பிடித்த பாடம் எது? நாங்கள் பள்ளியில் சேர்ந்த நாளிலிருந்து எந்த ஆசிரியரும் எங்களிடம் கேட்காத கேள்வி. அடுத்த கேள்வி எந்தப் பாடம் மிகவும் கடினம்?. அனைவரும் கணக்குப் பாடம் என்று ஓரே குரலில் சப்தமாகக் கூறினோம். புதிய ஆசிரியரின் அணுகுமுறை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரைப் பற்றியே அன்று முழுவதும் பேசிக் கொண்டிருந்தோம்.

எப்போது வேண்டுமானாலும் கேள்விகள் கேட்க முழு அனுமதி கொடுத்திருந்தார். அவருடைய வகுப்பு என்றாலே பட்டிமன்றம் போல களை கட்டிவிடும். அவர் எங்களிடம் கேள்விகள் கேட்பதை விட நாங்கள்தான் அவரிடம் அதிகம் கேள்விகள் கேட்போம். பாடங்களை மனப்பாடம் செய்வதை  மாற்றி புரிந்து படிக்கும் முறையை முதன் முதலாக எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அதற்கேற்றவாறு கேள்விகள் கேட்பார். குறிப்பாக அடுத்த நாள் நடக்கும் பாடத்தை ஒரு தடவை எங்களை படித்துவிட்டு வரச்சொல்வார். எங்களில் யாராவது ஒருவர் முதல் பத்து நிமிடத்திற்கு வகுப்பு எடுப்போம். மாணவர்களுடன் ஒருவராகக் கடைசி வரிசையில் சார் உட்கார்ந்து கொள்வார். முதலில் தயங்கிய நாங்கள் பிறகு வகுப்பு எடுப்பதற்கென்று கூடுதல் அக்கறையுடன் படிக்க ஆரம்பித்தோம். எங்களுக்கான சந்தேகங்களை எங்களின் சார்பாக அவரே கேட்பார். வகுப்பு நடத்தும் மாணவன் திணற ஆரம்பிக்கும் அந்த நொடியில் அவனருகில் சென்று அவனுக்கு உற்ற துணையாக நிற்பதோடு மட்டுமின்றி எங்களையும் உற்சாகப்படுத்தச் சொல்வார். தலைமை ஆசிரியர் எங்கள் வகுப்பைக் கடந்து செல்லும் போதெல்லாம் ஜன்னலின் அருகில் சிறிது நேரம் நின்று கேட்டுவிட்டுத்தான் போவார்.

எங்களில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் விடுமுறை போட்டால், முதல் ஆளாக அந்த மாணவனைக் காண ரவி சாரே வீட்டுக்கு வந்து விடுவார். ஆசிரியர் மாணவன் என்ற உறவைத் தாண்டி எங்களின் குடும்ப அங்கத்தினர்களின் ஒருவராகவே அவர் இருந்தார். ஒரு சமயம் என் நெருங்கிய நண்பன் சக்கரை இரண்டு நாட்களாக வகுப்பிற்கு வரவில்லை. நான் சரியாக பாடத்தைக் கவனிக்காததைக் கண்ட ரவி சார், பள்ளிக் கூடம் முடிஞ்ச பிறகு சக்கரையை பாக்கப் போறேன். நீயும் வரயா? என்று குறும்பாகச் சிரித்தபடியே கேட்டார். பள்ளி முடிந்ததும் கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கொண்டு சக்கரையைப் பார்க்கக் கிளம்பினோம். வீட்டு வாசலில் வேப்பமரக் கிளைகளைக் கொத்தாகக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். எங்களைப் பார்த்த சக்கரையின் அம்மா வெளியே வந்து நேத்து அவனைப் பாக்க வந்த சார்தானே நீங்க? என்று என்ன வெளியே உட்கார வைத்துவிட்டு ரவி சாரை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றார். சக்கரைக்கு ஒண்ணுமில்லைடா. அம்மை போட்டிருக்கு. அவ்வளவுதான். ஒரு பத்து நாளைக்குள்ளே எல்லாம் சரியாயிடும். கவலைப்படாதே என்று என் தோளில் தட்டிக்கொடுத்தார். இரண்டு நாட்களாக அடக்கி வைத்த அழுகை வெடித்துக் கிளம்பியது.
அடுத்த நாள் வகுப்பில் சக்கரைக்காக கூடுதல் கவனத்துடன் பாடங்களைக் கவனித்தேன். சக்கரைக்கென்று தனியாக நோட்ஸ் எடுத்து ரவி சாரிடம் கொடுத்துவிடுவேன். அன்று மாலையே அந்த நோட்ஸை ரவி சார் சக்கரையிடம் சேர்த்து விடுவார். முதல் கால் ஆண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. எப்போது கணக்கு பாடத்திற்கு தேர்வு வைத்தாலும் நாங்கள் எழுதத் தயாராக இருந்தோம். தேர்வின் முடிவில் அனைவரும் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தோம். அதைப் பாராட்டும் வகையில் எங்கள் ஒவ்வொருவருக்கு ஒரு இங்க் பேனாவை பரிசாகக் கொடுத்தார். எனக்கு பரிசாகக் கிடைத்த சிகப்பு நிற ரைட்டர் பேனாவின் மூடியின் நுனியில் இருக்கும் கருப்பு நிற திருகில் தங்க நிற கிளிப் இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து தடவைகளாவது அதை எடுத்து சட்டையில் துடைத்து வைப்பேன்.

ரவி சார் அன்று பள்ளிக்கு வரவில்லை. வீட்டுக்கு மதியம் வந்தேன். அம்மா மருத்துவமனையில் இருந்து இன்னும் வரவில்லை. மருத்துவமனைக்குச் சென்று பின் வாசலில் இருக்கும் கேட்டைத் தாண்டிக் குதித்தேன். இடதுகைப் பக்கம் பிணவறை. சில அடிகள் தள்ளி பிரசவ வார்டு. அதற்கடுத்து பொது நோயாளிகளின் வார்டு. கேட்டைத் தாண்டிக் குதித்தவுடன் பிணவறையைப் பார்க்காமல் நேராக நடந்தேன். அங்கிருக்கும் மரங்களின் அடியில் போடப்பட்ட கயிற்றுக் கட்டில்களில் இரண்டு மூன்று பிணங்கள் இருந்தன. அதைத் தவிர தரையிலும் கிடத்தி இருந்தார்கள். மிகவும் பயந்தபடி வேகமாக நடந்தேன். இது காலரா சீசன் என்று அம்மா சொன்னது பிறகுதான் ஞாபகம் வந்தது.  புறநோயாளிப் பகுதியில் ஓரே கூட்டமாக இருந்தது. என்னைப் பார்த்ததும் அம்மா வேகமாக வந்தாள். உங்க ரவி சாரை அட்மிட் பண்ணியிருக்காங்க. கொஞ்சம் சீரியஸா இருக்காரு. நான் வர லேட்டாகும். நீ வீட்டுக்குக் கிளம்பு என்று கூறியபடியே என்னைக் கடந்து போனாள். ரவி சாருக்கு சீரியஸ் என்று கேட்டவுடனேயே என்னை மறந்து அழ ஆரம்பித்து விட்டேன். இதைக் கவனித்த என் அம்மாவின் உதவியாளர் செலீன், எனக்கு ஆறுதல் கூறி என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். வழி நெடுக அழுது கொண்டே போனேன்.

அடுத்த நாள் காலையில் ரவி சாரை பிணவறைக்கு அருகில் இருக்கும் மரத்தடியில் ஒரு மரச் சேரில் உட்கார்ந்த நிலையில் வைத்திருந்தார்கள். மாணவர்கள் அனைவரும் அவரைச் சுற்றி கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தோம். ரவி சாரின் அருகில் வாசு அண்ணாதான் கதறி அழுதுகொண்டிருந்தார். எவராலும் அவரைத் தேற்றவே முடியவில்லை. அதன் பிறகு எத்தனையோ
ஆசிரியர்கள் வந்தார்கள். போனார்கள். யாராலும் ரவி சார் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பவே முடியவில்லை. வருடங்கள் உருண்டோடின. பட்டப் படிப்பின் மூன்றாம் ஆண்டின் கடைசித் தேர்வை எழுதி முடித்து என் சிகப்பு ரைட்டர் பேனாவை மூடி மேஜையில் வைக்கும்போது ரவி சார் எங்கேயோ இருந்து கொண்டு என்னை முழுமனதுடன் ஆசீர்வாதம் செய்வதாகவே உணர்ந்தேன்.


(9790895631 – premaprabha.premkumar@gmail.com)

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.