டாக்டர் வி. ராமானுஜம்
அழிக்கும் தொழிலை ஆம்னிபஸ் டிரைவர்களிடமும்
அடியேனைப் போன்ற மருத்துவர்களிடமும் கொஞ்சம் ஒப்படைத்தபின் சிவபெருமானுக்குப் போரடித்தது. உடனே முருகனை அழைக்க முருகனும் உலகத்தைச் சுற்றி வரவேண்டுமா? இந்தமுறை ஏமாற மாட்டேன். கையில் உள்ள ஐபேடில் கூகிள் மேப்பில் உலகத்தைச் சுற்றிவந்திடுவேனே ! என்று கூற சிவனோ அதெல்லாம் ஏ.பி. நாகராஜன் காலம். இப்போது எனக்குப் போரடிக்கிறது. ஏதாவது செய்! என்று சொல்ல முருகனும் உடனே நெல்லிக்கனி,
நாவல்பழம் என்று சாப்பிட்டுச் சும்மாயிருக்கும் அவ்வையைக் கூப்பிட்டு நவீன காலத்தில் அரியது எது?
பெரியது எது? என்றெல்லாம் கேள்விமேல் கேட்டார். அப்டேட்டாக இருக்கும் அவ்வை கொடியது எது என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தாள் :
கொடியது கேட்கின் நெடியவல் வேலோய்
கொடிது கொடிது ரயில்வே வெப்சைட்
அதனினும் கொடிது
தட்கல் டிக்கட்
மே மாத வார இறுதி
தட்கலின் கொடுமை
சொல்லவும் கொடிதே!
ஞான பண்டிதா! குமரா! எங்கு சென்றாலும்
மயிலிலேயே செல். ரயிலிலே செல்லாதே
முன்பெல்லாம் தனது மகளைத் திருமணம் செய்து கொள்பவர்கள்
மாட்டை அடக்கவேண்டும், இளவட்டக் கல்லைத் தூக்கவேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் போடுவார்கள். இன்றைய தினம் தட்கல் டிக்கெட் எடுப்பவர்களுக்கே எனது மகள் என்று சந்தேகமின்றித்
தகப்பன்கள் நிபந்தனை போடலாம்.
முதலில் ரயில்வே வெப்சைட் திறக்க வேண்டும். திருமறைக்காடு
கோவிலின் கதவைத் திறக்க மணிக்கதவே தாழ்திறவாய்! என்று அப்பரும் சம்பந்தரும் இறைஞ்சுவது போல் வருந்தியபின் மெதுவாகத் திறக்கும்
அந்த வலைத்தளம். வந்த உடனேயும் உள்ளே நுழையமுடியாது.
வாயிற்காப்பாளன் போல் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்கென்றே
இருக்கும் சமாச்சாரம்தான் கேப்சா (capcha). அதாவது சில எழுத்துக்கள், எண்கள் மாடர்ன் ஆர்ட் ஓவியர் பிக்காஸோ பேனா எழுதுகிறதா என்று கிறுக்கிப்
பார்த்ததுபோல் இருக்குமே அவைதான். அவற்றைச் சரியாகப் பதிந்தால்தான்
சொர்க்கவாசல் திறக்கும். ஆனால் ஆரியாவுக்கும் சூரியாவுக்குமே வித்தியாசம் தெரியாத நம்மைப் போன்ற ஊனக்கண்கள்
உடையவர்களுக்கு அது 6 ஆ இல்லை ஆங்கில எழுத்து -யா என்றெல்லாம் சந்தேகம் வரும். டாஸ்மாக்கிலிருந்து ஃபுல்லாக வெளியே வந்தவன் கண்களுக்குச் சீன எழுத்துக்கள்
தெரிவதுபோல் தெரியும் அவற்றை அன்றைய தினம் நம்முடைய ஜாதகத்தில் யுரேனஸ்,
நெப்ட்யூன்
போன்ற கிரகசஞ்சாரங்கள் சரியாக அமைந்தால் சிலபல முயற்சிகளுக்குப் பின் திறந்து விடலாம்.
இப்பவே கண்ணைக் கட்டுகிறதா?
பெருமூச்சு
விடாதீர்கள். இது வெறும் தொடக்கம்தான். ஒரு வருடத்தின் அருமையைத் தேர்வில் தோல்வி அடைந்தவனிடம் கேள். ஒரு நிமிடத்தின் அருமையை ரயிலைத் தவற விட்டவனிடம் கேள். ஒரு விநாடியின் அருமையை ஓட்டப் பந்தயத்தில் தோற்றவனிடம்
கேள் என்பார்கள். அதுபோல் ஒரு மைக்ரோ விநாடியின் அருமையைத் தட்கலில் சீட்டு எடுப்பவர்களிடம் கேட்க வேண்டும். கண்ணிமைக்கும் நேரம் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டாலும் இருக்கும் இடம் போய் வெய்ட்டிங் லிஸ்ட் என்று வந்துவிடும்.
ஆகவே மனித சஞ்சாரமே இல்லாத இடத்துக்குப் போய் முதலில் அமரவேண்டும்.மிகச்சரியாக நாம் பதிவுசெய்யும்
நேரத்தில் மின் தடை ஏற்படும். ஒவ்வொரு நானோ விநாடியும் முக்கியம் என்பதால் முதலிலேயே
லாப்டாப் , கணினி எல்லாம் சார்ஜ் ஏற்றப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து வைக்கவேண்டும். செல்போனில் பயணச்சீட்டு
பதிவு பண்ணுவது ஒரு கூடுதல் கொடுமை. மிகச் சரியாக நாம் பார்க்கும்போதுதான்
பத்து வருடங்களாகப் பேச்சுவார்த்தையே இல்லாத நண்பரிடமிருந்து அழைப்பு வரும். ஒண்ணுமில்லை சும்மாத்தான்
கூப்பிட்டேன் என்பார்.
அதுபோல் இணைய இணைப்பும்
மாநகராட்சிக் குழாய் நீர்போல் திடீரென்று தேயும், வரும். ஆகவே இணையவசதி உள்ள இடமாகப் பார்த்து அமரவேண்டும். செல்போன் டவர்மீது அமர்தல் நலம். ஆனால் ஏதோ போராட்டக்காரர் என்று நினைத்து போலீஸ் தடியுடன் வரும் அபாயமும் உண்டு.
ஒருமுறை தட்கல் டிக்கட் எடுத்தால் ஆயுளில் ஒருநாள் குறையும். அந்த அக்கறையினால்தான் ரயில்வே நிர்வாகமே மாதத்துக்கு
ஆறுமுறைக்கு மேல் ஒருவர் இணையத்தில் பதிவுசெய்ய முடியாது என்று விதிமுறை வைத்திருக்கின்றனர். அதுவும் மனைவியை ஊருக்கு அனுப்பும்போது தட்கல் டிக்கெட் எடுக்க ஏற்படும் பதற்றம் இருக்கிறதே,
அதைக்
கம்பனும் காளிதாசனும்கூட விளக்க முடியாது. டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பயணத்தை ரத்து செய்துவிடுவாளோ என்ற பதற்றத்தில் வயிற்றுக்கும்
தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளும். (கந்துவட்டிக்குக் கடன் வாங்கி
விமானத்திலாவது அனுப்பி வைத்து விடுவோம். அது வேறுவிஷயம்). பெண்ணியவாதிகள் என்னிடம் சண்டைக்கு வரப்போகிறார்கள்.
கடைசியாக வங்கியில்
பணப்பரிமாற்றம். அதற்கும் இதே கேப்சா சித்திரகுப்தர்கள். உபரியாக வங்கிக்கொரு
கடவுச்சொல். சிலசமயம் நமது செல்போனுக்கு ஒரு கடவுச்சொல்
வரும். அதைப் பார்க்க போனைத் தேடினால் நான்கு வீடுதள்ளி நம் குழந்தை அதில் ஆங்கிரிபேர்ட்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும். எல்லாம் சரியாக அமைந்து மகாபாரதத் தொடரில் காலச்சக்கரம் சுழல்வதுபோல்
ஒரு வட்டம் மெதுவாகச் சுழன்று ஒருவழியாக டிக்கெட் புக் செய்து பார்த்தால் பதற்றத்தில்
ஏறும் இடத்தையும் இறங்கும் இடத்தையும் மாற்றிப் பதிவு செய்திருப்போம். கடைசியில்
புஷ்பேக் வேலை செய்யாத ஆம்னிபஸ்ஸில் கங்காரு மாதிரி அமர்ந்து பயணம் செய்ய வேண்டியிருக்கும். அவ்வையார்
சொன்னது உண்மைதானே?
(9443321004
–ramsych2@gmail.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.