செல்வகதிரவன்
மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார்
தாமோதரன் அவர்கள் தாயார் தமயந்தி அம்மாள் இன்று அதிகாலை காலமானார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு...
இது மாதிரி மரண அறிவிப்பு
இந்த ஊரில் பழக்கத்திற்கு வந்து இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதற்கு முன்பு இறந்த தகவலை வீடு வீடாகத் தெரிவிக்க குறிப்பிட்ட சமூகத்தினர் பயன்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது அது பழங்கதையாகிவிட்டது. பெரிய நகரமும் இல்லாத,
கிராமத்திலும்
சேர்க்க இயலாத நடுத்தரமான பேருர் இது.. வெளியூரில் இருந்து வேலை நிமித்தம்
இங்கு வந்து வசிப்பவர்களைத் தவிர உள்ளூர்வாசிகள் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாவே இருப்பார்கள். என்னதான் மனஸ்தாபம் உள்ளவர்களாக
இருந்தாலும் கூட கேதம் கேட்பதைப் புறக்கணிக்க மாட்டார்கள். பிடிக்காதவர்களாக
இருந்தபோதிலும் போய் சம்மந்தப்பட்டவரைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டு சில நிமிட நேரம் அவர் கைகளைப் பற்றி மவுனமாக சோகத்தைப்
பகிர்ந்துவிட்டு நகர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்து அரை மணி நேரம் ஆகிய பிறகு சொல்லிக் கொள்ளாமல்
அங்கிருந்து வெளியேறி விடுவார்கள்.
தாமோதரன் ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் உள்ளுர்வாசிகளால் தாசில்தார் தாமோதரன் என்றே இப்பவும் விளிக்கப்படுபவர். பதவியில் இருந்த காலத்திலும் பந்தா இல்லாமல் பழகியவர். பணி நிறைவிற்குப் பிறகும் பல்வேறு வகைப் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். அதனால் துக்கம் விசாரிக்க வந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஆம் .. தாசில்தார் வளர்த்த நாய் செத்தது.. இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமானவர்கள் வந்தார்கள்
தாசில்தார் ஓய்வு பெற்ற பிறகு தாசில்தாரின் தாய் செத்தாள்.. எந்த நாயும் எட்டிப் பார்க்கவில்லை என்கிற புது மொழியை பொய்யாக்கினார்கள் இந்த ஊர் ஜனங்கள். இறந்துபோன
தமயந்தி அம்மாள் தொண்ணூறு வயதைத் தொட்டவர். அதனால் இந்தச் சாவு கல்யாணச் சாவாகக் கருதப்பட்டு கேத வீடு சற்று கலகலப்பாகவே காட்சி அளித்தது. ஆட்டக்காரர்களும்
வந்திருப்பவர்களை தமது வித விதமான செய்கைகள் வாயிலாக சிரிக்க வைத்தார்கள். இரண்டு மேளம்,
இரண்டு
நாதஸ்வரம், பெண் ஆட்டக்காரர்
இருவர், ஆண் ஆட்டக்காரர் இருவர் என்று அவரவர் திறமைகளை வகைவகையாக
வெளிப்படுத்தி அன்பளிப்பாக ரூபாய் நோட்டுக்களை அள்ளியவாறு இருந்தார்கள். பெண் ஆட்டக்கலைஞர்
ஒருவர் பாடிய அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்... ஆசைப்பட்ட எல்லாத்தையும்
வாங்கலாம்.. அம்மாவை வாங்க முடியுமா? என்கிற பாடல்கள் வந்திருந்தோரின் வரவேற்பைப்
பெற்றன.. இறந்தவருக்காகக் கண்கலங்காதவர்கள் கூட இந்தப் பாடல்களைக் கேட்டு கண்கலங்கி நின்றதைக் காண முடிந்தது.
நேரம் நகர்ந்தது. வெளியூரிலிருந்து
உறவினர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். மலர் மாலைகள் மலையாய்க் குவிந்தன. இன்னும் யார் யார் வரணும்.. எத்தனை மணிக்கு எடுக்கலாம்.. தாமோதரனை அணுகி விசாரித்து.. இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கான நேரத்தை நிர்ணயித்தார் நெருங்கிய
உறவினரான நீலமேகம். யப்பா எளவட்டங்களா இங்க வாங்க.. போய் கடேசிப் பயண வண்டியக் கொண்டு வரச் சொல்லுங்க.. ரெண்டு பேரு சுடுகாட்டுக்குப்
போய் வெட்டியானப் பாருங்க. அந்தாள்ட்ட என்ன செய்யணும். என்னென்ன வேணும்னு கேட்டு ஏற்பாட்டப் பண்ணுங்க.. நடக்க வேண்டிய வேலைகளப் பகிர்ந்தளித்து செலவுக்கும்
தேவையான பணம் வழங்கி வாலிபர்களை அனுப்பி வைத்தார் நீலமேகம். கடைசிப் பயண வண்டிக்காகப் போன வாலிபர் உடனே திரும்பி வந்தார்.
என்ன மருமகனே, வண்டிய வரச்சொல்லிட்டிங்களா? இல்ல மாமா,
நம்ம ஆட்கள்ல இன்னும் ரெண்டு வீட்டுல கேதமாகிப் போச்சாம். வண்டிக ரெண்டும் அங்க போயிடுச்சாம். என்ன பண்றதுன்னு தெரியல
என்ன மாப்பிள்ள நமக்குத் தெரியாம நம்ம ஆட்கள்ல யார் போய்ச் சேர்ந்தா?
ஒண்ணு ரயில்வேக் காலனியாம்
மாமா.. இன்னோண்ணு சிப்காட் குடியிருப்பாம். ரெண்டு பேருமே காலையிலயே சொல்லி அனுப்பி வண்டிகள வரவழச்சுட்டாங்க.
சரி.. இப்ப என்ன..? எப்பவும் நடக்காதது நடந்து போச்சு. அத நெனச்சு மறுகிக்கிட்டு நிக்க வேணாம். நம்ம சாதி வண்டியிலதான் பிணத்தக் கொண்டு போகணும்னு
சட்டமா என்ன.? பேரினை நீக்கி பிணம்னு பேர் வச்சாச்சு. அப்பறம் என்ன? வேற சாதி வண்டியக் கேட்டுப் பாப்போம். சாதிக்காரப் பெரியவரு ஒருத்தர் இங்க கேதத்துக்கு வந்திருக்காரு. கேட்டிடுவோம்.
அந்தப் பெரியவரிடம் போய் விசயத்தைச் சொல்லி. ஒங்க இனத்து இறுதிப் பயண வண்டியக் குடுத்து உதவுங்க.. காரியம் முடிஞ்சுதும் சுத்தப்படுத்தித்
தந்திடுறோம் என்றார் நீலமேகம்
அது எப்படிங்கய்யா சரியா இருக்கும்? சாதிப் பேரப் போட்டு இறுதிப் பயண வண்டின்னு கொட்டை எழுத்தால
எழுதி இருக்கோம். அதுல போயி வேற சாதிப் பிணத்தக் கொண்டு போறது சரி இல்ல. நாம சாதி வித்தியாசம்
பாக்காம தாயாப் பிள்ளையா அண்ணந்
தம்பியாப் பழகுறோம். அது வேற. அதுக்காக ஒரு சாதிக்குன்னு உரித்தான வண்டிய இன்னோரு
சாதி பயன்படுத்தறது சரியா இருக்காது...
என்னய்யா
இப்பிடிச் சொல்றீங்க? இன்னக்கி
பெரிய பெரிய டவுண்ல எல்லாம் இதுக்காக மோட்டார் வண்டி வந்திருச்சு. எல்லாச்சாதி பொணங்களயும்
அதுக்குன்னு உரிய கட்டணத்த வாங்கிட்டு எடுத்திட்டுப் போறாங்க..
பெரிய சிட்டியில என்னென்னமோ
நடக்கும் தம்பி.. எளிய சாதி ஆட்கள வீட்டுக்குள்ள விட்டு சேர் போட்டு ஒக்கார வைப்பாங்க.
சரி சமமா அமந்து சாப்பிடுவாங்க. இங்க அது சரிப்பட்டு வருமா?
சரி இதுக்கு மேல்
இது குறித்து இவரிடம் பேசிப் பிரயோசனம் இல்லை. இன்னோரு சாதியில வேண்டிய மனுசன்
சங்கப் பொறுப்பில இருக்காரு. அவர் கிட்டக் கேப்போம் என்று கைபேசியில் அழைத்து
விசயத்தை விளக்கினார் நீலமேகம். எந்த சாதிச் சங்கமும் சாதிசனங்களுக்கு உருப்படியா
என்ன செய்யிது.. சாதிச் சங்கப் பேர்ல காலண்டர் அச்சடிச்சு சாதிக்காரங்களுக்கா விநியோகிக்கிது.
அடுத்து செத்துப்போனா, சுடுகாட்டுக்கு
சுலபமா கொண்டு போக வசதியா இறுதிப் பயண வண்டியச் செஞ்சு வச்சிருக்கு. யாரும் வேற சாதிச்
சங்க காலண்டர வாங்கி வீட்டுல மாட்றது இல்ல.. அப்பிடி இருக்கும்போது இறுதிப் பயண
வண்டிய மட்டும் பயன்படுத்தறது என்ன நியாயம்? கோவிச்சுக்கிடாம
யோசிச்சுப் பாருங்க..
இனிமேலும் வேறு சாதிங்காரங்ககிட்ட
வண்டி கேட்பது நல்லா இருக்காது.. இந்த வண்டியில எடுத்துப் போறது பழக்கத்துக்கு
வந்து பல வருசமாகிப் போச்சு அதனால இந்த ஊர்ல பாடை கட்டுற ஆட்களும் இல்லாமப் போயிட்டாங்க.
இப்ப என்ன செய்யலாம்.. நேரம் வேற ஆகிக்கிட்டே இருக்கு.
நீண்ட யோசனைக்குப்
பின் நெருங்கிய உறவினர்கள் நீண்ட நாள் நண்பர்கள் ஆகியோரிடம் விவாதித்து ஒரு முடிவுக்கு
வந்தார் நீலமேகம். அதாவது சுற்று வட்டாரத்தில் எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன.
அங்கெல்லாம் மரணமடைந்தோரை பாடையில்தான் சுடுகாட்டிற்கு எடுத்துப் போகிறார்கள்.
பாடை கட்டுவதில் கைதேர்ந்த மனிதர்கள் அங்க
இருக்காங்க.. அவர்களைக் கூப்பிட்டு பாடையைக் கட்டிடலாம் என்று துத்திக்குளம்
கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் இருவரை அனுப்பி வைத்தார்
நீலமேகம்.
போன வேகத்தில்
பாடை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நான்கைந்து நபர்களைக் கூட்டி வந்தார்கள்.
பேரம் எதுவும் பேசாமல் கேட்ட தொகையைத் தரச் சம்மதித்தார்கள். வேண்டிய பொருட்கள்
வாங்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் தேர் வடிவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பாடை நிமிர்ந்து
நின்றது.
நீர் மாலை
எடுத்தல், குளிப்பாட்டுதல், கோடிபோடுதல்.. இத்தியாதி சடங்குகளை நிறைவேற்றிய பிறகு நிர்ணயிக்கப்பட்ட
நேரத்தில் காதுகளைச் செவிடாக்கும் வெடிச்சத்தத்துடன் தமயந்தி அம்மாளின் இறுதி
ஊர்வலம் தொடங்கியது. பாடையில் உட்கார்ந்திருக்கும் போஸில் இருந்தார் தமயந்தி
அம்மாள். நான்கைந்திற்கு மேற்பட்ட நபர்களால் பாடை தூக்கிச் செல்லப்பட்டது.
பாடை
தூக்கியவர்களில் ஒருவர் கூட தாசில்தார் தாமோதரன் சாதியைச் சார்ந்தவர்கள் கிடையாது. இறுதிப் பயணத்திற்கு தங்கள்
சாதி வண்டியைத் தர மறுத்த சாதிக்காரர்கள்தான் கோவிந்தா.. கோவிந்தா என்கிற கம்பீர
முழக்கத்தோடு பாடையைத் தோளில் சுமந்து சுறுசுறுப்பாய் நடந்தார்கள்.
(99445 09530 – selvakathiravan54@gmail.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.