நரேந்திர மோடி அரசின்
2 ஆண்டுகள்
731 கிலோ லட்டும் எடை போட
முடியாத அபாயங்களும்
எஸ்.வி.வேணுகோபாலன்
731 கிலோ எடைக்கு ஒரு லட்டு தயாரித்து (அது 14,000 லட்டுகளுக்குச் சமமாம்!) அதில் தங்கள் ஆட்சியின்
சாதனைகளை காகிதக் கொடிகளில் எழுதி ஊன்றி வைத்துக் கொண்டாடி இருக்கின்றனர் -
நரேந்திர மோடி அரசாட்சியின் இரண்டாமாண்டு நிறைவை! பக்கம் பக்கமாக நாளேடுகளில் வண்ண
வண்ண விளம்பரங்கள். தலைநகர் அருகே இந்தியா கேட்டில் திரை
நட்சத்திரங்களோடு கொண்டாட்டம். உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் பேரணியோடு
அமர்க்களம். இந்தக் கொண்டாட்டங்களுக்கு எல்லாம் தேவையில்லாமல் மக்கள் வரிப் பணத்தை
ஆயிரம் கோடிக்கு சூறை விட்டிருக்கிறது மத்திய ஆளும் கட்சி என்று
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். சரத்
பவாரது தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணித் தலைவர் பிரணாய் அஜ்மீர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்
மத்திய அரசு சார்பில் எவ்வளவு செலவுக்கணக்கு எழுதப்பட்டுள்ளது என்று கேட்டதற்கு, ஒரு துக்காணி கூட செலவிடப்படவில்லை என்று பதில்
சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் யார் இந்த
ஆர்ப்பாட்டங்களுக்குப் பணம் கொடுத்தது? உள்நாட்டு வெளிநாட்டு நிதி
மூலதனத்தின் செல்லப் பிள்ளையின் ஆட்சிக் கொண்டாட்டங்களை யார் யார் ஸ்பான்சர்
செய்வார்கள் என்பதற்குப் பெரிய ஞானம் எதுவும் தேவையில்லை.
கடந்த நிதியாண்டில்
மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் வெளிநாடுகளுக்குச் செல்ல செலவழித்த தொகை மட்டுமே ரூ567 கோடி! தேசப்பொருளாதாரம் தேக்கத்தில் தத்தளிக்கிறது. சமூக
நிலைமைகள் படுமோசம். அரசியல் விவகாரங்கள் அராஜகம். எந்தவோர்
அம்சத்திற்காகவும் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி தன்னைப் பெருமையோடு அடையாளப்படுத்திக்
கொள்ள முடியாது. புதிய தாராளமய சந்தைப் பொருளாதார மோகத்தில்
காங்கிரஸ் – பாஜக இரண்டு கட்சிகளுக்கும் இடையே பார்வையில் மாறுபாடு
கிடையாது என்பது பொதுவான புரிதல். ஆனால்,
விஷயம் இன்னும்
ஆழமானது, பாஜக எடுக்கும்
நிலைப்பாடு இன்னும் மோசமானது என்று சுட்டிக் காட்டுகிறார் பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக். சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில்
முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் சுணக்கம் காட்டினார், நாங்கள் பல மடங்கு வேகமாக அவற்றைக் கொண்டுவருவோம் என்று நிதியமையச்சர் அருண் ஜெட்லீ பேசியதை கவனித்தவர்களுக்கு இது எளிதில் புரியும்.
ஐமு கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் இடதுசாரிகளின் வலுவான எதிர்ப்பின் காரணமாக அவர்கள் விரும்பிய சீர்திருத்தங்களை, அவர்கள் விரும்பிய வேகத்தில் கொண்டுவர முடியவில்லை. மேலும் ஊரக வேலை வாய்ப்பு திட்டம், கல்வி உரிமைச் சட்டம், வனத்துறை பாதுகாப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற வரவேற்கத்தக்க நடவடிக்கைகளையும் ஆட்சியாளர்கள் எடுத்தாக வேண்டி இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய தத்துவார்த்த முரண்பாடுகள், சீர்திருத்தங்களுக்கு ஒரு மனித முகம் இருக்கவேண்டும் என்று அவர்களைப் பேச வைத்துக் கொண்டிருந்தது. பாரதிய ஜனதாவுக்கு அப்படி எல்லாம் எந்தவொரு நிர்ப்பந்தமும் இல்லை. வகுப்புவாதமும் நவீன தாராளமயமும் கைகோத்துக் கொண்டிருப்பதை நரேந்திர மோடி ஆட்சியின் இன்னோர் அச்சம் தரத்தக்க விஷயமாக எடுத்துரைக்கின்றனர் சமூக அறிவியலாளர்கள். ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினத்தை அனுசரித்ததை ஊடகங்கள் பக்தி சிரத்தையாகக் காட்டிய அளவுக்கு, அதே நாளில் பாதுகாப்புத் துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டுக்கு வழிவகை செய்யப்பட்டதை அதே அழுத்தத்தில் மக்களுக்குக் கொண்டு சேர்க்கவில்லை. உத்தரப்பிரதேசம் தாத்ரி எனும் சிற்றூரில் மாட்டுக்கறி உண்டதாகச் சொல்லி அப்பாவி இஸ்லாமியர் முகம்மத் அக்லாக்கை அடித்தே கொன்று போட்ட சங்பரிவாரத்தின் திமிரும், வன்மமும் அடங்கவில்லை. குடும்பத்தில் மீதி இருப்போரையும் அடித்து நொறுக்கத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஹைதராபாத் பல்கலையில் ரோஹித் வெமுலா தற்கொலைக்குத் தள்ளப்பட்டதும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கன்னையா
குமார் சிறையில் அடைக்கப்பட்டதும் சாதாரண நிகழ்வுகள் அல்ல. சாதிய வெறித்தனத்தின்
சாட்சியங்கள் இந்த இரண்டாண்டுகளில் அதிகரிக்கவே செய்திருக்கின்றன. வரலாற்றுத்
துறைக்கு சங்பரிவாரத்தின் விசுவாசி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கழகத்திற்கும் அப்படியே
என்று வெறுப்பு அரசியலின் பிரதிநிதிகளை அரசுத் துறைகளில் நுழைத்துக் கொண்டிருக்கிறது
தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி. தேசத்தின் முக்கிய தினங்களைத் தங்களது தத்துவார்த்த உள்ளீடு
செய்து அவற்றின் பெருமையைக் குறைப்பதைச் செய்து கொண்டிருக்கும் நரேந்திர மோடி அரசு, ஸ்வச் பாரத் என்று
அடித்த கூத்து குப்பையில் மூழ்கிக் கிடக்கிறது. வேளாண் துறை நசிவிலிருந்து மீளும்
திசை தெரியவில்லை. விவசாயிகள்
தற்கொலை நிற்பதாயில்லை. கிராம மக்கள் இலக்கற்று வேலை தேடி, வாழ்வாதாரம் நாடி
இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் அவலம் ஊடக கவனத்திற்குச் செல்வதில்லை. இதைத் தடுத்து
நிறுத்துவதற்கு மாறாக, நிலங்களைப் பறித்து கார்ப்பொரேட் உலகின்
காலடியில் வைத்து படையல் செய்வதற்கே சட்டம் இயற்றிக் கொண்டிருக்கின்றனர்
மத்திய ஆட்சியாளர்கள்.
புராணப் பெருமைகளை பேசிக் கொண்டிருப்போரின் ஆட்சியில் கலைமகளான கல்வி படும் பாடு
வேதனைக்குரியது. புதிய கல்விக் கொள்கை இன்னும் மோசமான திசை வழிகளைக் கருத்தில்
கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. மருத்துவம், சுகாதாரம் எதுவும் அரசின் பொறுப்பு கிடையாது என்பதை மோடி
அரசு பல்வேறு சொற்களில் சொல்லிவிட்டது. வேலை வாய்ப்பற்றோர் விகிதம் உயர்ந்து
கொண்டே இருக்கிறது. தொழிலாளர் உரிமைகளுக்கு வேட்டு வைத்து சட்ட திருத்தங்கள்
கொண்டுவர முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஓய்வுக் காலத்தில்
திரும்பப் பெரும் பிராவிடண்ட் நிதியைப் பெறவும் கட்டுப்பாடுகளும், வரி விதிப்பும் செய்ய
ஆட்சியாளர்கள் முயன்றதும், கர்நாடகத் தொழிலாளரது கடுமையான போராட்டங்களுக்குப் பின் அதை நிறுத்தி வைத்து
சமயம் பார்த்து வேறு வழியில் கொண்டுவரக் காத்திருப்பதும் இன்னும் பரவலாகப் பேசப்
படாத கொடுமைகள். எல்லா ஆர்ப்பாட்டங்களையும் மீறி உண்மையைத் தேடித் பார்த்தால், அயல்நாட்டுக் கொள்கையில்
பெரிய சாதனை எதுவும் நிகழ்த்தப்படவில்லை. சொல்லப் போனால் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின்
விஷயத்தில் வெளிப்படையான ஏகாதிபத்திய சார்பு நிலைபாடுகளை எடுத்திருக்கிறது மோடி
அரசு.
அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர்
மோடி, தேச நலனுக்கு ஆபத்து
விளைவிக்கக் கூடிய சரத்துக்களைக் கொண்ட அணு உலை ஒப்பந்தங்களை ஏற்றிருப்பது
மிகுந்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. 2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற பெரிய வெற்றிக்குப் பிறகு மாநில
சட்டமன்றத் தேர்தல்களில் சீராகத் தோற்று வந்த பாஜவுக்கு
கேரளத்தில் உள்ளே நுழையக் கிடைத்த வாய்ப்பும், அஸ்ஸாம் தேர்தல் முடிவுகளும் கொஞ்சம்
ஆறுதல் தந்திருக்கின்றன. உத்தரப்பிரதேச தேர்தல்களுக்குமுன் வகுப்புவாத
வன்முறைகளைத் தூண்டிவிட அமித் ஷா வகையறாக்கள் முயலுவதை அரசியல்
விமர்சகர்கள் சுட்டிக் காட்டி எச்சரித்துள்ளனர். சமூக பண்பாட்டு வெளியில் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர், பெண்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்கொள்ளும்
தாக்குதல்கள் இந்த இரண்டு ஆண்டுகளில் மேலும்
தீவிரமாயிருப்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
அறிஞர்கள், கலைஞர்கள் பலரும் தாம்
பெற்ற சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பித் தரும்
அதிர்ச்சிப் போராட்டம் நடத்தியது நிலைமைகளின் ஒரு
பிரதிபலிப்பு. பொருளாதார வளர்ச்சி என்று ஆட்சியாளர்கள் கொண்டாடப்
பார்க்கையில், கண்ணில்லாதவர்கள் ராஜ்ஜியத்தில்
ஒரு கண் உடையவரே ராஜா என்று சொல்லி உலகப் பொருளாதார நிலையின் பின்புலத்தில்
இவர்களை அம்பலப்படுத்தியதற்காகவே ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனைக்
குறி வைத்தது சங் பரிவாரத்தின் அரசியல். முதலாளித்துவ கொள்கையைத்தான்
அவரும் சீரிய முறையில் பின்பற்றுபவர் என்றாலும் வகுப்புவாத அச்சுறுத்தலை
அவர் கண்டிக்கவே செய்தார் என்பதும் ஒரு காரணம்.
இருபது சமையல் கலைஞர்கள் இராப்பகலாக
உழைத்து உருவாக்கியது அந்த 731 கிலோ லட்டு. அதன்
இனிப்புக்கு அவர்கள் பொறுப்பு. ஆனால், சங் பரிவாரத்தின் நேரடி
கண்காணிப்பில், வழிகாட்டுதலில், தலையீட்டில் அதன் விசுவாசமிக்க சேவகர் நரேந்திர
மோடியும் அவரது உற்ற நண்பர்களும் சேர்த்து வழிநடத்தும் கொள்கைகளால் அவர் பதவி
ஏற்றுக் கடந்திருக்கும் 731 நாட்களில்
ஏற்பட்டிருக்கும் விளைவுகளால் திரண்டு நிற்கும் அராஜக அபாய லட்டு நச்சுப் பொருளால் ஆனது.
அதன் மீது பறக்கும் காவிக் கொடிகளில்
தெறிக்கும் அவர்களது சாதனைகள் தேச
நலனை சவாலுக்கு அழைப்பவை. அதனாலேயே எதிர்த்து முறியடித்தாக
வேண்டியவையும் கூட..
9445259691
sv.venu@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.