Wednesday, July 27, 2016
உட்தா பஞ்சாப் - வெறும் பொழுதுபோக்கு மட்டுமா கலை
பஞ்சாபி சினிமா ஒன்று நமது திரைப்படத் தணிக்கைக் குழுவின் உபயத்தினால் உலகப் புகய் பெற்றிருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் உட்தா பஞ்சாப். பஞ்சாபி மொழி சினிமா உலகம் பிற மொழிகள் போலவே நீண்ட வரலாறுடையது. அண்மையில் தயாரிக்கப்பட்டு,
தணிக்கைக் குழுவினால் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும்
பஞ்சாபி படம்தான் இது.
உட்தா பஞ்சாப் என்றால் பறக்கும் பஞ்சாப் என்பது பொருள். அதனை மிதக்கும் பஞ்சாப் என்றும் சொல்லலாம். அதாவது,
போதையில்
மிதக்கும் பஞ்சாப். பஞ்சாப் மாநிலம் போதைப் பொருட்களால் எப்படியெல்லாம் சீரழிந்து போயிருக்கிறது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார்கள். இதனை பிரபல இயக்குநர் அபிஷேக் செளபே இயக்கியிருக்கிறார். 39 வயது செளபேவுக்கு இது அவர் பணியாற்றும் பத்தாவது படம். வணிகப் படங்களை இயக்கினாலும் என்னை நான் இழந்துவிடச் சம்மதிக்க மாட்டேன் என்று கூறும் செளபேயின் இந்த உட்தா பஞ்சாப் படத்துக்கு அப்படி என்னதான் பிரச்சனை?
பஞ்சாப் மாநிலம் போதைப் பழக்கத்தினால் கடுமையாகச் சீரழிந்து
போயிருக்கிறது என்று இந்தப் படம் பேசுவதாகக் குற்றம் சாட்டும் திரைப்படத் தணிக்கைக்குழு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதில் முக்கியமான ஒன்று படத்தின் பெயரில் உள்ள பஞ்சாப் என்பதை நீக்க வேண்டும் என்பது. அத்துடன் 89 இடங்களில் கத்தரி போட வேண்டும் என்றும் குழுவினர்
பிடிவாதம்காட்டினர். இந்த ஜூன் 17அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த உட்தா பஞ்சாப் இப்படிச் சிக்கலில் சிக்கிக் கொண்டதற்கு ஆளுவோர் தரப்பில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அனுராக் காஸ்யப் ஆம் ஆத்மியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தை மோசமாகச் சித்தரித்துள்ளார் என்று சொல்லப்பட்டது. தங்களை வம்புக்கிழுப்பதை அறிந்த ஆம் ஆத்மியின் ஆஷிஸ் கேத்தன் கூறும் போது,
உட்தா பஞ்சாப் பட விவகாரத்தில் மோடி அரசு தனது கறைபடிந்த
அரசியல் விளையாட்டினை விளையாடக்கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சென்சார் போர்டு தலைவர் நிஹலானி ஒரு சர்வாதிகாரியைப் போல செயல்படுவதாக இதன் தயாரிப்பாளர் கூறியுள்ளார். தணிக்கைத்துறையின்
மறுபரிசீலனைக்குழு இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இதில் இடம் பெற்றிருக்கும் 13 காட்சிகளை வெட்டிவிட்டு, ஏ சான்றிதய் வழங்கி படத்தை வெளியிடலாம் என்று கூறியது. தணிக்கைக்குழுவின் இந்தப் போக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமாவுலகினையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி
விட்டது. இதிலெல்லாம் சமாதானமாகாத படக்குழுவினர் வேறு மார்க்கத்தையோசித்தனர். நிலைமை இப்படிப்போக படத் தயாரிப்பாளர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். அங்கு தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துவைத்து
முறையிட்டனர். நீதிமன்றம் படைப்புச் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் வகையில் ஒரு தீர்ப்பினை வழங்கி கலையுலகினை - குறிப்பாக சினிமாத்துறையினரை-நிம்மதிப்
பெருமூச்சு விட வைத்துள்ளது.
நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி,
ஷாலினி பன்சால் ஜோஷி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய இந்தத் தீர்ப்பில்,
"இந்தப் படத்தின் திரைக்கதையில் நாட்டின் இறையாண்மையையும்,
ஒருமைப்பாட்டினையும் பாதிக்கும்
எந்த விஷயமும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை..." என்று கூறியுள்ளனர். நீதிபதிகள் அத்துடன் நிறுத்தவில்லை. மேலும் அவர்கள்ஆணித்தரமாக
வலியுறுத்தியிருக்கும் கருத்துக்களை கவனியுங்கள். "ஒரு இயக்குநர் எப்படிப் படமெடுக்க வேண்டும் என யாரும் கட்டளையிட முடியாது. பிரச்சனைகளும்,
முரண்பாடுகளும் மண்டிக்கிடக்கும் இந்த நாட்டின் மனச்சாட்சியாகத் திகழுபவர்கள் எழுத்தாளர்கள்,
கலைஞர்கள். அவர்களின் படைப்புச்
சுதந்திரம் பாதுகாக்கப்பட்டாலே நல்ல படைப்பாக்கங்களை உருவாக்குதல் சாத்தியம். அரசியல் - சமூக விமரிசனங்களைக் கூர்மையாக முன்வைக்கக்கூடிய படைப்புகளாலேயே இங்கே மாற்றங்களுக்கான விதைகளை ஊன்ற இயலும். எனவே, கருத்துரிமை எப்பாடுபட்டேனும் காக்கப்படுதல் அவசியத்திலும்அவசியம்." தாதாசாகேப் பால்கே 1913ல் உருவாக்கிய முதல் இந்திய சினிமாவான
ராஜா ஹரிச்சந்திரா வெளிவந்து ஏழு ஆண்டுகளில் இந்திய சினிமாட்டோகிராப்
சட்டம் 1920ல் அமலுக்கு வந்தது.
சென்சார் போர்டு என்றழைக்கப்பட்ட
அச்சட்டத்திற்கு ஒவ்வொரு இந்தியப் பெரு நகரத்திலும் காவல் துறை உயர் அதிகாரிகளும் பொறுப்பாக்கப்பட்டிருந்தனர். பிரிட்டிஷ் இந்தியாவில் நாட்டு விடுதலை உணர்வு உள்ளிட்ட வெள்ளை அரசுக்குத் தலைவலி தரும் எந்தச் சிந்தனையும் கலை வடிவம் பெற்று மக்களைக் கவர்ந்துவிடாமல் பார்த்துக்
கொள்ளவேண்டிய தேவையிலிருந்தே இந்த சென்சார் முறை தோற்றுவிக்கப்பட்டது. ஆனால்,
விடுதலைக்குப் பின்னர் இது நமது சுதேசி அரசு. இதற்கு எதிரான கிளர்ச்சிகள்
இனி தேவையற்றது என்றும், வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே சினிமா இருந்தால் போதுமானது என்றும் கருதப்பட்டு 1952 ஆம் ஆண்டு பழைய சென்சார் போர்டு திருத்தியமைக்கப்பட்டு மத்திய திரைப்படத்
தணிக்கை வாரியம் உருவாக்கப்பட்டது. சினிமா குறித்த ஆய்ந்த ஞானமில்லாத பலரும் இதன் உறுப்பினர்கள் ஆக்கப்பட்டதால் இங்கே காலந்தோறும் பல்வேறு கேலிக்கூத்துகள் நடந்துள்ளன. அதன் ஒரு தொடர்ச்சியாகத் தான் இந்த உட்தா பஞ்சாப் படத்திற்கேற்பட்ட அவலத்தையும் பார்க்கவேண்டியுள்ளது. இந்தி மொழியிலும்,
மாநில மொழிகளிலும் எத்தனையோ படங்கள் அபத்தமான காரணங்கள் கூறப்பட்டு தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் பலவும் இதுபோல நீதிமன்றங்களாலேயே உயிர் பெற்று ரசிகர்களைச் சென்று அடைந்திருக்கின்றன. இந்த நெடிய அனுபவம் நம்
மனங்களில் இந்தக் கேள்வியையே மீண்டும் எழுப்புகிறது... "கலைஎன்பது
வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும்தானா?" உலகமயப் பொருளாதார நடவடிக்கைகள் மேலோங்கியிருக்கும்
இன்றைய சூழலில், மதவழிப்பட்ட வெறியுணர்வு இன்னும் தீவிரமாக ஊட்டப்படுகிற இந்தக் கால நிலையில் மக்களின் சார்பில் நின்று இவற்றைக் கேள்விக்குட்படுத்தும் வீர்யமிக்க படைப்புகள் - குறிப்பாக சினிமாக்கள்
அனைத்து இந்திய மொழிகளிலுமே உருவாக்கப்படுதல் இன்றைய வரலாற்றுத் தேவையாகும். கலைகள் யாவும் மக்களின் வாழ்க்கையைக் கண்டு சொல்லி அதனை மேம்படுத்துவதாகவே இருத்தல் அவசியம். வெறும் பொழுதுபோக்கு சாதனங்களல்ல கலையும் இலக்கியமும் என்கிற புரிதல் இங்கு எல்லா தரப்பாருக்கும் வந்தாக வேண்டும். நல்ல கலைச்சூழலுக்கு இது போல நீதிமன்றங்கள் அவ்வப்போது உதவினாலும் மறுபுறம் மக்கள் மன்றம் இதுபோன்ற விஷயங்களில்
விழிப்போடு இருத்தல் முக்கியம். உட்தா பஞ்சாப் இந்தியக் கலைஞர்களுக்குள் இப்படி பலவற்றையும் தூண்டிவிட்டிருக்கிறது
என்பது உண்மை.
cholanagarajan@gmail.com
Labels:
puthiya asiriyan,
சோழ.நாகராஜன்,
திரைப்பார்வை,
புதிய ஆசிரியன்,
ஜூலை 2016