குடும்பத்தில் குழந்தை வளர்ப்பில் அப் பாவின் பங் களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை அழகிய கலையாகச் சொல்கிற படம்தான் இயக்குநர் சமுத்திரக்கனியின் இந்த அப்பா. படத்தில் மூன்றுவகையான அப்பாக்கள் காட்டப்படுகிறார்கள். ஒருவர், எப்படியும் தன் மகன் மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி, மருத்துவம் படித்து, உலகிலேயே உயர்ந்த இடமாகக் கருதப்படுகிற அமெரிக்காவில் வேலை பெற்று செட்டில் ஆக்கிவிட வேண்டும் என்று கண்டிப்போ கண்டிப்பாக மகனை வளர்க்கிற அப்பா. இன்னொருவர், நாம் இருக்கிற இடம் தெரியாமல் வாழ்ந்துவிட்டுப் போய்விடவேண்டும் என்ற கோழைத் தத்துவத்தின் அடிப்படையில் மகனை வளர்க்க முற்படும் அப்பா.
இந்த இருவருக்கும் நேர் மாறாக, குழந்தைகளை அவர்கள் இயல்பில் வளரவிட வேண்டும். படிப்பு, வேலை, குடும்பம் என்ற சுயநல வட்டத்திற்குள் சிக்காமல் சக மனிதர்களை மதிக்கிற
பண்போடு வளர்க்கவேண்டும் என்பது போன்ற உயரிய கொள்கைகளோடு தன் மகனை வளர்க்கிறவர் இன்னொரு அப்பா. ஆக, இந்த மூன்று அப்பாக்களின் விருப்ப முயற்சிகளில்
அவர்களின் மூன்று மகன்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கையே படத்தின் கதை.
அதாவது, இந்த உலகம் ஆபத்தானது என்கிற மனநிலையைக் குழந்தைகளிடத்தில் விதைக்கிற மனநிலைக்கும் இந்த உலகம் அழகானது என்கிற சிந்தனையை விதைக்கிற மனநிலைக்கும் என்ன விதமான பலன்கள் குழந்தைகளிடையே உண்டாகும் என்பதை அழகாகச் சொல்கிறது படம்.
சிந்தனைத் தெளிவும், அறிவோடும் அறிவியல் பார்வையோடும், நமது அடுத்த தலைமுறைச் சிறார்களை அணுகவேண்டும் என்கிற உறுதிப்பாடும் கொண்ட அப்பா பாத்திரத்தில் வாழ்ந்து கரைந்திருக்கிறார் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சமுத்திரக்கனி. அவரிலும் இன்னமும் அழுத்தமான நடிப்பினை வழங்கி முத்திரை பதித்துள்ளார் சுயநலமும், அதற்காக மகனிடம் கொடூரமான
கண்டிப்பும், சதா பதட்டமுமாக வலம்
வரும் தம்பி ராமய்யா. மனிதர் படம் முழுக்க நடிப்பில் அசத்திவிட்டார்... சிற்சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போலத் தோன்றினாலும். மகனை மாநிலத்திலேயே முதல் மாணவனாக பத்தாம் வகுப்பில்
தேர்ச்சி பெறச் செய்வதிலாகட்டும், பின்னர் கோழிப் பண்ணையைப் போல மாணவர்களை அடைத்துப் போட்டு அவர்களின் சிறகுகளை வெட்டிக்
கொடுமைப்படுத்தும் மதிப்பெண் வெறியூட்டிப் பணம் பிடுங்கும் பள்ளியில் அவனைச் சேர்த்துவிட்டு அவருக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்களில் ஆகட்டும்
தம்பி ராமய்யா கலக்கு கலக்கு என கலக்கிவிட்டார். மூன்று அப்பாக்களின் மகன்களாக வரும் சிறுவர்களான காக்கா முட்டை புகழ் விக்னேஷ், காப்ரியல் ராகவ், நசாத் மற்றும் ப்ரீத்தி, விநோதினி, நீலநந்தின் என படத்தின் எல்லாக் கதாபாத்திரங்களுமே தங்கள் பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா
ஆகியோரும் படத்தின் நோக்கத்திற்குத் துணை செய்துள்ளனர்.
காட்சி ஊடகமான சினிமாவில் வெறும் அறிவுரை மழையாக வசனங்களை
அள்ளித் தெளித்திருப்பது
போன்ற குறைகளையும் மீறி, இந்த அப்பா தமிழ்
சினிமாவின் முற்றிலும் புதிய முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். இன்றைக்கு நமது கல்வியும், குடும்பங்களின் சூழலும் சுயநலம் மிக்க படிப்பாளிகளையே உற்பத்தி செய்கிற கொடுமைக்கு எதிராக, சமுதாய உணர்வும், இயல்பான மனிதநேயப் பண்புகளும் நிறைந்த மனிதர்களாக நமது குழந்தைகளை வளர்க்க வலியுறுத்தும் அரிய படைப்புதான்
இந்த அப்பா. குழந்தைகளிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்கச்
சொல்லுகிற படமாக, ஒவ்வொரு குழந்தையிடமும் ஒளிந்திருக்கும் தனித்திறனைக் கண்டறிந்து அதில் அக்குழந்தையை ஊக்கப்படுத்த
வேண்டும் என்று மிகச் சரியாக எடுத்துரைக்கும் படமாக, பாலியல் குறித்த குழப்பமும், அறியாமையும்
துளிர்விடுகிற பதின்பருவத்தில் அவர்களுக்கு உற்ற தோழனாக பெற்றோர் இருந்து, இயல்பாக மனம்விட்டுப் பேசி அவர்களின் ஐயத்தைத் தீர்த்திட வேண்டும் என்று துணிச்சலோடு சொல்லும் படமாக, சாதி-மத பேதமற்ற, ஆண்-பெண் நட்பென்பது இயல்பானதுதான், அதுவும் இயற்கை சார்ந்ததுதான் என்று அழுத்தமாக முன்வைக்கிற படமாக, அதிக மதிப்பெண் பெறவைக்கிறோம் என்று மாணவர்களை அடைத்து வைத்து, அக்கிரமங்கள் செய்கிற நாமக்கல் போன்ற பகுதிகளில் செயல்படும் சிலவகைப் பள்ளிகளைத் துணிந்து அம்பலப்படுத்தி நல்ல சினிமாவில் இதுவும் சாத்தியமே என்று வியக்கவைத்திட்ட படமாக பலவகைகளிலும் தமிழ் சினிமாவை தரமுயர்த்தித் தலைநிமிர வைத்திருக்கிறது இந்த அப்பா. அடுத்த தலைமுறை உருப்படியாக உருவாக வேண்டுமே என்று ஆதங்கப்படுகிற சமுதாய அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தங்கள் அடுத்த தலைமுறை வாரிசுகளோடு அவசியம் பார்க்கவேண்டிய படம் இந்த அப்பா.
தமிழ் சினிமாவில் நல்ல சிந்தனைகளை விதைக்கும் முயற்சியில் தொடர்ந்து
தன்னை ஈடுபடுத்திவரும் சமுத்திரக்கனிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியும்..!