Saturday, November 5, 2016

இம்மாதம் பாராட்டு


மற்றவை



ஓவியம்


ராஜகுரு பதில்கள்


எதிர்வினை



ஜான் கிரியக்கவ், அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏவில் ஒரு ஏஜெண்டாக பணிபுரிந்தவர். சிஐஏவின் கொடூரமான திட்டங்கள் கண்டு, மனம் கொதித்து அந்தப் பணியிலிருந்து வெளியேறி, சிஐஏவின் நாசகரத் திட்டங்களை  அம்பலப்படுத்துவதிலேயே காலத்தைக் கழித்தவர். இதற்காக கைது செய்யப்பட்டு  இரண்டாண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்தவர். ரஷ்யக் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஏடான பிராவ்தாவுக்கு ஜான் கிரியக்கவ் அளித்த நேர்காணல் இது:

அமெரிக்க மக்களின் துரதிர்ஷ்டம், இரண்டு மிக மிக மோசமான, நம்பகத்தன்மையற்ற வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஹிலாரி கிளிண்டனைப் பொறுத்தவரை நம்பகத்தன்மையற்றவர்; அவர் ஒரு கிரிமினல் என்று சொல்வேன்; மோசமான ஊழல் பேர்வழியும் கூட. டொனால்டு டிரம்ப்பைப் பொறுத்தவரை வெறிபிடித்தவர்; காட்டுக் கூச்சல் போடுபவர்; இனவெறியை முன்வைத்து மக்களைத் திரட்டிவிடலாம் என்று நினைப்பவர். இரண்டு பெரிய தீமைகளில் பாதகம் சற்று குறைவான தீமை எதுவோ அதைத்தான் அமெரிக்கர்கள் தேர்வு செய்தாக வேண்டும். அந்த தீமை ஹிலாரி கிளிண்டன்தான்.

என்னைப் பொறுத்தவரை இரண்டு பேருமே கொடூரமான வேட்பாளர்கள் தான். ஒருவர் உள்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக, அகதிகளுக்கு எதிராகப் பேசுகிறார். ஒருவர் வெளிநாடுகளில் ஆட்சிகளை கவிழ்ப்பது, போர்களை நடத்துவது என்று கொடூரங்களில் ஊறிப்போன போர்வெறியர். இந்தக் காரணங்களுக்காக இருவருமே மோசமானவர்கள்தான். நான் யாருக்கு வாக்களிப்பேன் என்று கேட்டீர்களானால், விடுதலைக் கட்சியின் வேட்பாளரான கேரி ஜான்சனைத்தான் தேர்வு செய்வேன்.


ஆனால் பொதுவாக அமெரிக்க மக்களின் முன்பு ஹிலாரியும், டிரம்ப்பும்தான் முன்வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹிலாரியைத்தான் அவர்கள் தேர்வு செய்வார்கள்.

வதந்திகளின் வாசல் எது?

மதுக்கூர் இராமலிங்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்.22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு சில மணி நேரங்களில் வீடு திரும்புவார் என்றும் அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர்  தொடர்ந்து சுவாச சிகிச்சை, இதய சிகிச்சை, பிசியோதெரபி சிகிச்சைகள் பெற்று வருவதாகச் செய்திகள் வருகின்றன. முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு  முரண்பட்ட தகவல்களை அதிமுகவினரே கூறிவருகின்றனர். அவர் தொடர் சிகிச்சை பெறவேண்டியிருக்கும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறும் நிலையில், அவர் அன்றாடப் பணிகளை கவனிப்பதாகவும் நாளேடுகளை படிப்பதாகவும் காவிரிப் பிரச்சனை, உள்ளாட்சித் தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்களில் ஆலோசனை கூறுவதாகவும் அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் மருத்துவமனை வாசலில் நின்றபடி
பேட்டியளிக்கின்றனர்.

இதனிடையே முதல்வர் குறித்து வதந்தி பரப்பியதாக அன்றாடம் கைது படலங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. வங்கி ஊழியர்கள் இருவர் முதல்வரின் உடல்நிலை குறித்து தவறாகப் பேசியதாக அவர்களுக்கு வேண்டாத ஒருவர் போலீசில் போட்டுக்கொடுக்க வங்கிக் கவுண்டரில் அமர்ந்து பணம் எண்ணிக்கொண்டிருந்த ஊழியர்கள் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் முதல்வர் குறித்த செய்திகளை ஷேர் செய்தால் கூட காவல்துறை அவர்கள் மீது பாய்ந்து கைது செய்து சிறையில் தள்ளுகிறது. இவ்வாறு  கைது செய்யப்படுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று மிரட்டப்படுகிறது. 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் ஒரு பிரிவான 66-ஏ அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் 2015-ஆம் ஆண்டில் ரத்து செய்துவிட்டது என்றும், தற்போது கைது செய்யப்படுபவர்கள் எந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள் என்று கூடத் தெரியவில்லை என்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறுகிறார். வெளிப்படையான அரசு மட்டுமே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், மாறாக பழிவாங்கும் நடவடிக்கைகள் மேலும் அதிக வதந்திகளுக்கே வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

முதல்வருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவர் குழு, சிங்கப்பூர் மருத்துவர் குழு என பலரும் சிகிச்சையளிப்பதாகக் கூறப்படுகிறது, இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது நான்கு வாரங்களுக்குப் பிறகு அவர் எழுந்து உட்கார்ந்து விட்டார், முழு நினைவோடு இருக்கிறார், சைகை மூலமாகப் பேசி வருகிறார் என்ற செய்திகள் வருகின்றன. அவர் பூரண நலம் பெற்று இல்லம் திரும்பி மக்களால் வழங்கப்பட்ட முதல்வர் பணியை செவ்வனே நிறைவேற்றட்டும்.

பொதுவாக ஒருவருக்கு ஏற்பட்டுள்ள நோய் மற்றும் சிகிச்சை குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஒருவர், ஆளுங் கட்சியின் தலைவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரும்போது அது தனிப்பட்ட பிரச்சனையாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாநிலத்தின் நிர்வாகத்தோடு தொடர்புடைய ஒன்றாகவே கருதப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனைக்கு  ஆளுநர் உட்பட பலரும் சென்றுவந்துள்ளனர். ஆனால், முதல்வரை நேரில் சந்தித்ததாக யாரும் கூறவில்லை. மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாகவே கூறுகின்றனர்,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூட லண்டன் மருத்துவரின் விசிட்டிங் கார்டைப் பெற்று வந்ததாகவே தெரிவித்தார். அரசியல் சாசனத்தின்படி நியமிக்கப்பட்டுள்ள முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கூடிய ஆளுநர் கூட முதல்வரைச் சந்திக்கவில்லை. ஆனால், முதல்வரின் ஒப்புதலோடு அவரது துறைகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்படுவதாக அறிவித்தார். இத்தகைய முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகள்தான் வதந்திகளின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன.

அண்மையில், நண்பர் ஒருவர் சொன்னார். என்னுடைய சொந்த அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். ஆனால், இதை தொலைபேசியில் உறவினர்களுக்கு சொல்லக்கூட பயமாக இருக்கிறது. இதை உளவுத்துறை ஒட்டுக்கேட்டு என்னையும் சிறையில் போட்டுவிட்டால் என்ன செய்வது? என்றார். முடிந்தவரை இந்தத் தகவலை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் என்னாலும் கூறமுடிந்தது. மாநில நிர்வாகப் பணிகளில் ஏற்பட்டுள்ள தேக்கம் ஒருபுறமிருக்க, ஆளுங்கட்சியை மையமாக வைத்து பல்வே று சர்ச்சைகள் நடந்து வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை அந்தக் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தனி நபரை, அவருடைய பிம்பத்தை அடிப்படையாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா அவருடைய இடத்தை பூர்த்தி செய்தார். அந்த பிம்பத்தையும் காப்பாற்றி வருகிறார். இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே கூட்டுத் தலைமை அடிப்படையில் இயங்குகின்றன. முதலாளித்துவக் கட்சிகள் பெரும்பாலும் தலைவரின் தடம் பற்றியே செல்கின்றன. தலைவருக்கு ஒரு பாதிப்பு வரும்போது அந்தக் கட்சியே தடுமாறிவிடுகிறது. அதிமுகவில் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒன்றும் மன்னர் ஆட்சிக் காலமல்ல. தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துவிட்ட நிலையில் எதையும் மறைப்பது சாத்தியமல்ல. மேலும், மக்களாட்சியில் மக்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். வெளிப்படையாக நடந்துகொள்வதே அனைவருக்கும் நல்லது. மூடிய கைக்குள் என்ன இருக்கும் என யோசிப்பது மனித இயல்பு.





ஜாடிக்கேத்த ஜோடி - டாக்டர் ஜி.ராமானுஜம்

வின்னர் என்ற திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உண்டு. வடிவேலு பிரசாந்திடம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறுவார். உடனே பிரசாந்த் கொன்னுடுவேன். அந்த பெண்ணை நான் காதலிக்கறேன் என்பார். உடனே வடிவேலு  சரி நீயா இருந்தா என்ன, நானாக இருந்தா என்ன ? ஆக மொத்தம் அந்தக் குடும்பம் விளங்காமப் போகணும். அதான் வேணும் என்பார்.

உறவினர் அல்லது நண்பர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவராக இருந்தாலும் வருமானம் அவர்களுக்கே கிடைக்குமாறு ஏற்பாடு செய்து கொள்ள முடியும். ஒருவர் கடையில் தேநீர் குடித்துவிட்டு வயிற்றைக் கலக்கியதால் அருகே இருந்த கட்டணக் கழிப்பிடத்துக்குள் சென்றார். என்ன கேவலமான டீ என்று டீக்கடையைத் திட்ட அதற்குக் கழிப்பிடக்காரர் என் மகனுடைய கடைதான் அது என்றாராம். கழிப்பறையும் மோசமாக இருக்கவே வந்தவர் இங்கு வந்ததற்கு என் புத்தியைச் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும் என்றார். கழிப்பிடக்காரர் நாலு கடை தள்ளி என் இரண்டாவது மகன் செருப்புக் கடை வைத்திருக்கிறான். அங்கு வாங்குங்களேன் என்று கூலாகச் சொன்னாராம்.

ஒரு ஆங்கிலச் சிறுகதை உண்டு. ஒரு ஊரில் பாம்பு என்று ஒரு பத்திரிகை இருக்கும். சுமாரான விற்பனைதான். சிலகாலம் கழித்து கீரி என்றொரு பத்திரிகை வெளிவந்து பாம்பு பத்திரிகையைக் கிழிகிழி எனக் கிழிக்கத் தொடங்கியது. பதிலுக்குப் பாம்பு பத்திரிகையும் கீரியைக் கிழிகிழி எனக் கிழிக்கத் தொடங்கியது. மக்கள் இரு பத்திரிகைகளையும் ஆர்வத்துடன் வாங்கிப் படித்தனர். ஒரு கட்டத்தில் தாக்குதல் மிகவும் தரம் தாழ்ந்து போனது. அந்த ஊரின் பாதிரியார் இரண்டு பத்திரிகைக்கும் சமாதானம் செய்து வைக்க அவர்களை அழைத்தார். கூட்டத்திற்கு ஒரு பத்திரிகையின் ஆசிரியர் மட்டுமே வந்திருந்தார். இன்னொரு பத்திரிகையின் ஆசிரியர் வரவில்லையா எனப் பாதிரியார் கேட்டதற்கு நான்தான் அந்தப் பத்திரிகைக்கும் ஆசிரியர் என்பார். பாதிரியார் மயங்கி விழுந்து விட்டார்.

மருத்துவத்துறையில் இதுபோன்ற ஜோடிப் பொருத்தம் பொதுவாக டாக்டர்-நர்ஸ், அறுவை சிகிச்சை மருத்துவர்- மயக்க மருந்து நிபுணர் என்று ஆபத்தில்லாதவைகளாக இருக்கும். சில சமயம் மருத்துவர்- ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அறுவை சிகிச்சை நிபுணர்- போஸ்ட் மார்ட்டம் நிபுணர் என்றெல்லாம் விபரீதக் கூட்டணிகள் அமைந்துவிட நேரிடும்.

இன்னொரு வடிவேலு காமெடியில் ஒரு பாட்டி தெருவில் போகிறவர்களை ஒரு வெறிநாயை ஏவி கடிவாங்க வைத்துப் பின் அருகில் நாய்க்கடி ஊசி போடும் டாக்டரிடம் கமிஷன் வாங்குவது நினைவிருக்குமே?

ஒரு டாக்டர் தனக்கு வரும் எல்லா நோயாளிகளிடமும் புரோட்டா சாப்பிடுங்கள் என்று ஆலோசனை கூறிக் கொண்டிருந்தார். புரோட்டா ஆரோக்கியமான உணவு இல்லையே என்று அவரிடம் கேட்டதற்கு என்ன செய்ய.. என் தம்பி புரோட்டா கடைதானே வைத்திருக்கிறான் என்றாராம்.

ஒரு மருத்துவர் இருந்தார். அவர் குழந்தைப் பேறின்மை சிகிச்சை நிபுணர். அவரது மனைவி ஒரு மகப்பேறு மருத்துவர். அவர் என்னிடம் எங்களை அழைக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் நாங்கள் சென்று விடுவோம். பெரும்பாலும் என் மனைவியிடம் அழைத்து வருவார்கள். இல்லையென்றால் என்னிடம் அழைத்து வருவார்கள். எப்படியோ எங்கள் இருவரில் ஒருவருக்கு கேஸ் நிச்சயம் என்று சொன்னார்.

இப்பொழுதெல்லாம் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது வழக்குகள் அதிகம் தொடரப்படுவதால் மருத்துவர்கள் வழக்கறிஞர் ஜோடியே எதிர்காலத்தில் வெற்றிகரமான கூட்டணியாக இருக்கக் கூடும்.

என்போன்ற மனநல மருத்துவர்கள் ஏகப்பட்ட மனநோயாளிகளை உருவாக்கும் கல்வி
நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தால் அசைக்க முடியாத ஜோடியாக விளங்க வாய்ப்புக்கள் அதிகம்.

புதிய ஆசிரியன் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் முன்பெல்லாம் பேப்பரை எடைக்குப் போடும் கடைகளுடன் கூட்டணி வைத்திருந்தனர் (வரும் கதைகள் கவிதைகளையெல்லாம் விலைக்குப் போட). இப்பொழுதுதான் எல்லாமே ஈமெயிலில் வருகிறதே.. இது போன்ற கட்டுரைகள் வருவதால் தலைவலி மருந்து நிறுவனத்துடன் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம்.
9443321004 – ramsych2@gmail.com










                                                                                              பிரேம பிரபா
பி.ஏ பொருளாதாரம் படித்த உடனே எனக்கு வேலை கிடைக்கும் என்று கம்பீரத்துடன் இருந்த நாட்கள் அவை. பொருளாதாரம் எனக்கு மிகவும் பிடித்த பாடம். ஒரு ஏக்கர் புஞ்சையையும் இரண்டு கறவை மாடுகளையும் காவு கொடுத்துத்தான் என்னால்  மேற்படிப்பு படிக்க முடிந்தது. எஞ்சியது ஏரிக்கரையில் இருக்கும் ஒரு குடிசை வீடு மட்டும்தான்.

பிறகு தொடர்ந்தது வேலை தேடும் போராட்டம். இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. குடிசை வீடும் அதை ஒட்டியிருந்த அரை வேலி நிலமும் மயிரிழையில் தடுமாறிக்கொண்டிருந்தன. என் வாழ்க்கை குறித்தான முக்கியமான தீர்மானம் எடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தேன். குடிசை வீட்டை வைத்து வங்கியில் கடன் வாங்கி ஏதாவது தொழில் செய்யலாம் என்ற என் பரிந்துரையை அப்பாவும் அம்மாவும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள்.

நீங்க கேக்கற ஒரு லட்சத்தை இந்த கூரை வீட்டை வைச்சு எங்களாலே நிச்சயமா கொடுக்க முடியாது. ஐம்பதாயிரம் தரலாம். வேறு ஏதாவது அசையா சொத்து இருக்கா? என்ற வங்கி மேலாளரின் கேள்விக் குறி தலைகீழாக மாறி ஒரு கொக்கி போல என்னைத் தூக்கி அந்தரத்தில் நிறுத்தி கதற வைத்தது. :அது சரி, என்ன பிசினஸ் செய்யப் போறீங்க? என்ற வங்கி மேலாளரின் அடுத்த கேள்விக்கு நான் தயங்காமல் உடனே பதில் அளித்தேன்: கொள்கைகளை விற்கப்போகிறேன் சார்.

அவரும் துளியும் சளைக்காமல் ஒரு மாதத்திற்கு எவ்வளவு விற்பீர்கள்? என்று கேட்டார். ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒன்று என்று நிச்சயம் விற்றுவிடுவேன். தேர்தல் காலத்தில் உங்கள் முழுக் கடன் தொகையையும் கொடுத்து விட்டு சொந்தமாக பெரிய அலுவலகம் ஒன்றை அண்ணாசாலையிலேயே வைத்திடுவேன் சார் என் நம்பிக்கையான பதிலால் வங்கி மேலாளரின் கண்களில் தெரிந்த ஒளி என் நம்பிக்கைக்கு வழி காட்டியது. அவரின் இதழில் வரத்துடித்த ஒப்புதல் புன்னகை அதை மேலும் ஊர்ஜிதப்படுத்தியது.


இப்படியாகத்தானே ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒரு கொள்கை என விற்கத் தொடங்கிய என்னால் இப்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு கொள்கையை சுலபமாக விற்பனை செய்ய முடிகிறது. முதலில் கொள்கைகளை நான் தரவாரியாகப் பிரித்துக்கொண்டேன். முதலாவதாக அமுல்படுத்தக் கூடிய கொள்கைகள். விற்பது கடினம் என்றாலும் என்னிடம் ஏராளமாக இருந்தன. பல சமயங்களில் இலவச இணைப்பாகவே கொடுக்க வேண்டியிருந்தது. இதற்கு அரசியல் வட்டாரத்தில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பதை என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.

இரண்டாவதாக அமுல்படுத்த இயலாத கொள்கைகள். தோற்றத்தில் அமுல் படுத்தக் கூடியவையாக மக்களுக்குத் தெரிந்தாலும், நிச்சயம் நிறைவேற்ற முடியாது என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும். இவற்றுக்கு எப்போதும் அதிக தேவை இருந்தது. புதிது புதிதாக என் ஆராய்ச்சி மையத்தில் இதற்கான பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டிருந்தன.

மூன்றாவதாக தற்காலிகக் கொள்கைகள். அவசரத் தேவை அடிப்படையிலோ அல்லது எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களில் இருந்து தற்காலிகமாகத் தப்பிப்பதற்கோ இந்த வகைக் கொள்கைகள் மிகவும் உதவும். தேவை கருதி இவை வடிவமைக்கப்படுவதால், விலை சற்று அதிகம்.

நான்காவதாக தேர்தல் காலக் கொள்கைகள். இவற்றுக்கான தேவை ஐந்து வருடத்திற்கு  ஒரு முறை வருவதால், ஆட்சியைப் பிடிப்பதும், ஆட்சியைக் கவிழ்ப்பதும் எங்கள் வேலையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. இதற்கான விலையை நாங்கள் ஏலத்தில்தான் ஆரம்பிப்போம்.

கடைசியாக ஜனரஞ்சகமான கொள்கைகள். இதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேற்றுமை எல்லாம் கிடையாது. முக்கியமாக அமுல்படுத்த இயலாத கொள்கைகளுடன் இந்தக் கொள்கைகளை இலவச இணைப்பாக இல்லாமல் சந்தை விலையை அனுசரித்தே கொடுப்போம். வியாபார யுக்தியில் முதல் படி நிலை இது. பொதுவாக சாலையில் இருக்கும் பேனர்கள், அரசுப் பேருந்துகளில் காணப்படும்   வாசகங்கள், இலவச இணைப்புகளில் எழுதப்படவேண்டிய வாசகங்கள் என மக்கள் மனதில் ஆழமாகப் பதியவேண்டிய கட்சி விளம்பரச் சொற்களாகத்தான் இந்தக் கொள்கைகள் இருக்கும். முதலில் கொள்கைகளை அப்படியே விற்க ஆரம்பித்தாலும், புதுப்புதுக் கொள்கைகளை கண்டு பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்பதை நாளடைவில் உணர ஆரம்பித்தோம். முன்பு போல கொள்கைகளை அப்படியே விலை பேசி விற்றுவிடாமல், அவற்றுக்கான காப்புரிமையை எங்களிடம் தக்க வைத்துக்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றின் உபயோக உரிமையை மட்டும் கொடுக்க ஆரம்பித்தோம். அதிகபட்ச காலக் கெடு நான்கு வருடங்கள் ஆறுமாதம். கட்சிகள் தம் கொள்கைகளை உடனே புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு நெருக்கடியை இதன் மூலம் நாங்கள் ஏற்படுத்தினோம். அது மட்டும் அல்லாது எதிர்க்கட்சிகளை மனதில் வைத்துக்கொண்டு எங்கள் பேரத்தை சாதகமாக நடத்தவும் முடிந்தது.

இப்படியாக எங்கள் தொழிலும் மிகவும் நல்ல முறையில் போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் எங்களுக்குப் போட்டியாக ஒரு வெளி நாட்டுக் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அமுல்படுத்த முடியாத கொள்கைகளை அவர்கள் மலிவு விலைக்குக் கொடுத்தது மட்டும் இல்லாமல், கொள்கை விற்பனைப் படிவத்தில் வாக்குறுதியும் கொடுக்க ஆரம்பித்தார்கள். எங்கள் பங்குச் சந்தை குறியீடும், உயிருக்குப் போராடும் ஒரு முதியவரின் இ.சி.ஜி. கிராஃப் போல தடுமாற ஆரம்பித்தது. எங்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள் போட்டிக் கம்பெனிக்கு ஆதரவைத் தெரிவித்ததால், எங்களது கொள்கைகளின் விலை வேகமாகச் சரிய ஆரம்பித்தது.

கொள்கைகளின் மொத்தக் கையிருப்பையும் ஒரு குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்வதாக சில நிறுவனங்கள் முன்வந்தது என்னவோ உண்மைதான். ஏதோ வந்த விலைக்கு விற்றுவிடலாம் என்று என் கடையை 24 X 7 திறந்தே வைத்திருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது கொள்கைகள் வேண்டுமென்றால் நானே நேரில் வந்து இலவசமாக செய்முறை விளக்கமும் கொடுக்கிறேன். ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம். அதற்கான முழு உரிமையையும் உங்களுக்கே எழுதிக் கொடுத்து விடுகிறேன். நான் எப்போது உங்களைத் தொடர்புகொள்ள?? இது வரை நீங்கள் என் நிலைமையை மிகவும் அக்கறையுடன் தெரிந்து கொண்டதால், உங்களுக்கு ஒரு கூடுதல் செய்தி. மத நிறுவனம் சார்ந்த கொள்கைகள் குறித்து என் கைவசம் பிராஜெக்ட் X இருக்கிறது. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் உறுதி. ஒரு பங்கின் விலை ரூபாய் பத்து மட்டுமே. உங்களுக்கு நிச்சயம் 10 சதம் கழிவு உறுதி.

9790895631 – premaprabha.premkumar@gmail.com



பேரிடர் மேலாண்மைக்குழு செயல்படுமா?

சென்னையில் கடந்த ஆண்டு கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பொதுமக்கள் தங்கள் சேமிப்பை இழந்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தப் பாதிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் தானாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அப்போது தமிழக அரசு இது போன்ற வெள்ளச் சேதங்களின் போது ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க பேரிடர் மேலாண்மைஆலோசனைக் குழுவை அமைக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்றமே பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 143 கோடி அறிவிக்கப்பட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல்,  கால்வாய் தூர்வாருதல் பணிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டன. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15 ஏரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் 44 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. தற்போது மழைவெள்ளநீரை கால்வாய்கள் மூலம் கடலில் சென்று கலக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன. இவ்வாண்டுக்கான வடகிழக்குப் பருவ மழை தீவிரமடையும் சூழ்நிலையில் அரசு நீதிமன்றம் வலியுறுத்திய அடிப்படையில் பேரிடர் மேலாண்மைக் குழுவை உடனடியாகக் கூட்டி பணிகளை முடுக்கிவிட வேண்டும். அப்படி அரசு செயல்படுகிறதா என்பதை மக்கள் கண்காணித்து உரிய இயக்கங்களை முன்னெடுப்பது மிக அவசியம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஐ.வி. நாகராஜன் (தொடர்புக்கு 94421 26516 )


வைட்டமின்கள் – ஏன்? எதற்கு?

மனித உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது நாம் உண்ணும் உணவுகளே. சில உணவு வகைகளில்தான் நமக்கு மிகுதியான ஆற்றலைத் தரும் சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளன. ஆரோக்கியமான உணவுகளுக்கு மூலக்கூறுகளாக இருப்பவை  வைட்டமின்கள்.


1734-ஆம் ஆண்டு ஸ்கர்வி எனும் தொற்று நோய் மிகுதியாக பரவத் தொடங்கியது. ஆஸ்திரிய மருத்துவர் ஜெ.ஜி.ஹெச். கிராமர் சாதாரண ராணுவ வீரர்களைத் தாக்கும் ஸ்கர்வி, அதிகாரிகளைப் பாதிப்பதில்லை என்பதைக் கவனித்தார். ராணுவ வீரர்கள் ரொட்டி மற்றும் பீன்ஸ் சாப்பிடுவதையும், அதிகாரிகள் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவதையும் கவனித்த அவர், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஸ்கர்வியைத் தடுக்கும் என்கிற உண்மையைக் கண்டறிந்தார். கிராமர் தொடங்கிய இந்த ஆராய்ச்சியை முன்னோட்டமாக வைத்தே, உணவுப் பொருட்களிலுள்ள சத்துக்கள் பற்றிய ஆராய்ச்சிகள் வேகமெடுக்கத் தொடங்கின. 1906-இல் ஆங்கில விஞ்ஞானி பிரடெரிக் கௌலண்ட் ஹாப்கின் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். இப்படியாகத் தொடர்ந்த ஆய்வுகள் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் உள்ள வைட்டமின்கள் என்ன என்பதை கண்டறியும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்தன. இன்றைக்கும் கூட மூன்றாம் உலக நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டே இருக்கின்றன. அறிவியல் அறிஞர் ஐசக் அஸிமோவ் வைட்டமின்கள் பற்றி எழுதிய இந்த நூலை வினோத் கண்ணன், சுந்தரம்பாள் கோதண்டபாணி இருவரும் எளிமையாக மொழிபெயர்த்துத் தந்துள்ளனர்.
 - மு.முருகேஷ் (9444360421)

ஐசக் அஸிமோவ்யுரேகா புக்ஸ் (044-28601278)- விலை ரூ. 30/, 30/45, பைகிராப்ட்ஸ் ரோடு முதல் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14.


கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாநாடு

கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் மாற்று கல்விக் கொள்கைக்கான மாநில மாநாடும், வரைவு சாசனம் வெளியீட்டு நிகழ்ச்சியும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.மணி தலைமையில் 2016 அக்டோபர் 8 அன்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் நிதிக் காப்பாளர் மோசஸ் வரவேற்றார். இந்த வரைவு அறிக்கையை கேரள அரசின் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி வெளியிட, ஆந்திர மாநில சட்ட மேலவை உறுப்பினர் வி.பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

தற்போது கூட்டமைப்பில் 40 சங்கங்கள் இணைந்துள்ளன. மேலும் சில சங்கங்கள் இணைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்கள் உரையாற்றினர். ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் வெளியிடப்பட்ட மாற்றுக் கொள்கைக்கான மக்கள் சாசனம் என்ற 64 பக்க நூலினை அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் படித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

18 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும், குடியிருப்புகளுக்கு அருகாமையில் சமச்சீர்க்கல்வியை அரசே வழங்க வேண்டும், கல்வி வணிகமயமாவதை தடுத்து நிறுத்த வேண்டும், 8வது வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் வடிகட்டாமல் மேல்வகுப்புக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும், தாய்மொழிக் கல்விக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், கல்வியில் சமஸ்கிருதத் திணிப்புகாவியமயத் திணிப்பு-குலக்கல்வித் திட்டம் ஆகிய சமூகநீதிகளுக்கு எதிரான முயற்சிகளைக் கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.


தமிழகக் கல்வி வரலாற்றில் இது முக்கியத் திருப்புமுனை என்பதில் ஐயம் இல்லை.


தாய்மொழியில் தழைத்த தாவரவியல் விஞ்ஞானி

பெரணமல்லூர் சேகரன்

காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. மனித சமூக மேன்மைக்காக மேதினியில்  தோன்றி மகோன்னதங்களைப் பலர் புரிந்து வருகின்றனர். அத்தகைய வரிசையில்  முதலிடம் பிடிப்பவர்கள் அறிவியல் அறிஞர்கள் எனலாம். அவர்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. வங்க மண்ணில் தோன்றிய அறிவியல் அறிஞர் ஜகதீச சந்திர போஸைப் பற்றி இங்கே பார்ப்போம்

நான் தாய்மொழிப் பள்ளியில் படித்ததால்தான், மொழிப் பற்றையும், இலக்கிய அறிவையும் பெற்றேன்; உயர்சாதி, கீழ்சாதி என்ற வேற்றுமை உணர்வுக்குப் பலியாகாமல் சமத்துவத்தைப் பயின்றேன் என்றார் ஜெ.சி.போஸ். 1895ஆம் ஆண்டு ஆகஸ்டில் கல்கத்தா மாநகராட்சி மண்டபத்தில் வங்காள கவர்னர் தலைமையில் கூடியிருந்த மக்கள் முன்பு, கம்பிகள் துணையின்றி பொருள்களைக் கடந்து செல்லும் தன்மை பெற்றது மின்சாரம் என்பதை அவர் நிரூபித்தார். இலண்டன் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் ஆப் சயின்ஸ் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. இயற்பியலில் சாதனை படைத்த போஸ் தாவரவியலிலும் வரலாறு படைத்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் விலங்குகளைப் போலவே தாவரங்களுக்கும் உணர்ச்சியுண்டு.. தாவரங்களுக்கும் நரம்பு மண்டலமுண்டு.. கள்ளும் சாராயமும் தாவரங்களையும் பாதிக்கின்றன...பயிர்கள் வெப்பம், ஒலி, ஒளி, குளிர் ஆகியவற்றை உட்கிரகிக்கின்றன என்று உரையாற்றினார். நிரூபித்தும் காட்டினார்.

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்த, தாய்மொழிவழிக் கல்வியைப் போற்றிய இந்த மாபெரும் விஞ்ஞானியைக் கொண்டாடுவோம்.


புதிய கல்விக் கொள்கை – ஆதாரமான இரண்டு இலக்குகளைக் காணோம்!

வாழ்க்கைத் திறன்கள் (Life Skills), மதிப்புக் கல்வி (Value Education) என்று இந்தக் கல்விக் கொள்கை பேசும்போது, இவ்வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன என்ற சந்தேகம் வருவது இயல்பானது. Value, Moral, Ethics, Culture, என்று கல்விக்கொள்கை முழங்குகையில் – இவற்றைப் பாடத்திட்டத்தில் இணைப்பதாகச் சொல்லுகையில்- சிலர் மத்தியவர்க்கப் புளகாங்கிதங்களுக்கு ஆளாகலாம். வார்த்தைகளுக்கு ஒற்றை அர்த்தமா என்ன?...

Moral -என்பது சிலருக்குச் சமூக சிந்தனை; வேறு சிலருக்கு அது கடவுள் நம்பிக்கை. Moral Education என்றால் சாமி கதைகளைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

பண்பாடு என்பது மானுடவியலாளர்க்கு- கூடி வாழும் வாழ்க்கை; அவ்வாழ்க்கை வழி  உருவாகும் உறவுகள்; உரையாடல்கள்; பழக்க வழக்கங்கள். வர்ணாசிரமவாதிகளுக்குப் பண்பாடு என்பது - பேதங்கள்; பிரிவுகள்; வன்மங்கள்!

தேசப்பற்று என்பது சிலருக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சேவை; வேறு சிலருக்கு- தேசப்பற்று என்பது மதம் சார்ந்த வன்முறை; வன்முறைக்கான வாய்ப்பு.  ஒவ்வொருவருக்கும் ஓர் அர்த்தம்; மகாத்மாவுக்கு ஓர் அர்த்தம்; கொலைகாரனுக்கு வேறோர் அர்த்தம். அரசின் கையில் இருப்பது யாருடைய டிக்ஷனரி என்று நமக்குத் தெரியாதா?.....

இக்கல்விக் கொள்கையில் பாடத்திட்டம் பற்றி எத்தனை கூப்பாடு?... யாருடைய பாடத்திட்டம்? ஏற்கனவே சில மாநிலங்களின் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் நேருவை நீக்கி காந்தியின் கனத்தைக் குறைத்தாயிற்று. இந்த லட்சணத்தில் சமூக அறிவியலில் ஒரு பகுதி இந்தியா பூராவும் பொதுப் பாடத்திட்டத்தில் வருமாம். எந்தப் பகுதி?

சுதந்திரப் போராட்ட வரலாறா?...

வேதக் கல்வியையும், குருகுலக் கல்வியையும் கொண்டாடித் தொடங்கும் போதே கல்விக்கொள்கையின் கோணல் பாதை தெரிந்து விடுகிறது. Rich Heritage, Glorious Past, Great Tradition என்று கல்விக்கொள்கை திரும்பத் திரும்பக் கூத்தாடுகிறது. காலங்காலமாய், பாகுபாடுகளைச் சுமந்து அழுந்தியவர்களுக்குத்தானே Glorious Past இன் லட்சணம் தெரியும்! இந்தியாவின் பழம்பெருமை வேறு; அதை வைத்து அரசியல் பண்ணும் உங்கள் பழம்பெருமை வேறு. கோவில்களும் கலைகளும் இந்தியாவின் பழம்பெருமை என்றால் அங்கெல்லாம் சாதியைக் கொண்டு போய் பலரையும் விலக்கி வைத்தது உங்களின் பழம் பெருமை. தமிழகத்தின்  பழம்பெருமை திருக்குறள் என்றால் திருவள்ளுவருக்கு ஒரு சாதி கற்பித்து அவர் சிலையைச் சாக்கில் கட்டி வீதியில் எறிவது உங்கள் பழம்பெருமை!

வேதக்கல்வியில் தொடங்கும் கல்விக்கொள்கை இந்தியக் கல்வியைச் சர்வதேசமயமாக்கும் (internationalization) திட்டத்தில் போய் முடிகிறது. சர்வதேசம் என்ற வார்த்தையைத் திருப்பிப் போட்டால் வியாபாரம்! ஆக, வேதத்தில் தொடங்கி  வியாபாரத்தில் முடிகிறது கல்விக்கொள்கை. பழமைவாதத்துக்கும் வர்த்தகத்துக்கும் இடையே கூட்டு! அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து அதன் கல்விக்கொள்கை வேறுபட்டிருக்காது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?,,,

கல்விக்கொள்கை 13 நோக்கங்களை முன்வைக்கிறது. இந்தியா இன்று அதிகம் எதிர்நோக்கும் இரு நோக்கங்கள் அவற்றில் இல்லை.
1) பொதுப்பள்ளிகள்- அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் நோக்கம்
2) தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கம்.

இவை இரண்டும் ஆதாரமானவை.

அக்கறையையும் அரசியல் உறுதியையும் கோருபவை. இவை அரசின் இலக்குகளில் இல்லை!

(aruvi.mli@gmail.com – 9444164836 )

(ஜூலைஆகஸ்ட் விழுது இதழில் பேரா.. மாடசாமி எழுதிய கட்டுரையிலிருந்து சில வைரவரிகள்)


குழந்தைகளின் புத்திக் கூர்மையை மேம்படுத்துவது எப்படி?

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் புத்திக் கூர்மையை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி நடைபெற்றது. கூட்டத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இராமநாதபுர மாவட்டம், அபிராமம் கிராமத்தைச் சேர்ந்த மொழிப்பிரியன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவரது மகன் அக்ரம். பத்து வயதே ஆகியுள்ள இச்சிறுவன், உலக இளம் வயது தட்டச்சு சாதனையாளன் (World’s youngest multilingual typist) என்ற பரிசைப் பெற்றுள்ளான். தனது 7 வயது முதல் பல்வேறு மொழிகளைக் கற்று வந்துள்ளான். தற்போது இஸ்ரேல் நாட்டில் படித்து வருகிறான். நானூறு மொழிகள் அறிந்தவன். அந்த மொழிகளின் பெயர்களை மூன்றே நிமிடத்தில் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். நீங்க எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன் என்பதை நாற்பது மொழிகளில் பேசிக் காட்டினான். தேவகோட்டை என்கிற வார்த்தையை நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் எழுதிக் காண்பித்து அசத்தினான். குழந்தைகளின் புத்திக் கூர்மையை மேம்படுத்துவது தொடர்பாக மூளைக்குப் பயிற்சி அளிக்கும் இருபத்தைந்து வழிமுறைகளை செய்து காண்பித்தான். கேழ்வரகு, சாமை, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற இயற்கை உணவுகளையும் பழங்களையும் சீதாப்பழம், கொய்யா, சப்போட்டா போன்ற பழங்களையும் உண்பதால் தனக்கு எந்த வியாதியும் இதுவரை வந்தது கிடையாது என்றும் மொழி வல்லுநராகி அனைவருக்கும் பல்வேறு மொழிகளைக் கற்று தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்றும் தெரிவித்தான். சிறு வயதிலேயே மொழி ஆற்றல் மிக்கவனாக வளர்ந்து நின்ற  அவனைப் பார்த்து நாங்கள் அனைவரும் பிரமித்துப் போனோம்.
(மொழிப்பிரியனுடன் தொடர்பு கொள்ள : 97899 60549)

லெ.சொக்கலிங்கம் (தலைமை ஆசிரியர் - 9786113160)


குஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்

குஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்

2002 ஆம் ஆண்டு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்லாமியர்கள் குஜராத்தில் கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பது உலகம் அறிந்த செய்திதான். அந்த வன்முறை  குறித்த சில மறைக்கப்பட்ட உண்மைகளை தனது இந்த நூலின் மூலம்  வெளிக்கொணர்ந்துள்ளார் ரானா அயூப் என்ற ஒரு முஸ்லிம் இளம் பெண்.

இந்த நூல் வெளிவந்த விதமே சுவையானதாகும். தெஹல்கா, ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அதிகார வர்க்கத்தினரின் ரகசிய பேரங்களை அம்பலப்படுத்திய ஒரு புலனாய்வுப் பத்திரிக்கை. குஜராத் படுகொலைகள் குறித்து இரண்டு ஸ்டிங் ஆபரேஷன்களை  தெஹல்கா நடத்தியுள்ளது. இப்பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த அஷிஷ் கேதன் ஒரு சங்பரிவார் ஆதரவாளர் போல் நடித்து வன்முறைகளில் ஈடுபட்ட பஜ்ரங்தள் தலைவர்களையும், மற்ற அடியாட்களையும் சந்தித்து, அந்த உரையாடல்களை வெளியிட்டார். இதன் தமிழாக்கத்தை பேரா.அ.மார்க்ஸ், குஜராத் 2002: தெஹல்கா அம்பலம் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

ரானா அயூப் தெஹல்காவின் மற்றுமொரு ஸ்டிங் ஆபரேஷனை 2010ஆம் ஆண்டில் (அப்போது அவருக்கு வயது 26தான்) வெற்றிகரமாக நடத்தி குஜராத் கோப்புகள்-மறைக்கப்பட்ட கோர வடிவங்கள் என்ற இந்த நூலினை எழுதியுள்ளார். இந்த இடைவெளிக்குள் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானதும், தெஹல்கா பத்திரிக்கை இந்த நூலினை வெளியிடத் தயங்கியது. பா.ஜ.க.வையும், சங் பரிவாரங்களையும் பகைத்துக் கொண்டு நூலினை வெளியிட வேறு எந்த நிறுவனமும் முன்வராததால், ராணா அயூப் தன் சொந்தப் பொறுப்பில் நண்பர்களிடம் கடன் பெற்று இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார் என்பது அவரின் தீரத்திற்கு மற்றுமொரு சாட்சியாகும். காயஸ்தர் என்ற மேல்சாதி இந்து வகுப்பைச் சேர்ந்த பெண்போல் வேடமிட்டு தன்னுடைய பெயரை மைதிலி தியாகி என்று மாற்றிக் கொண்டு களமிறங்கினார் ரானா. தான் அமெரிக்காவில் வாழும் ஒர் இந்தியப் பெண்மணியென்றும் குஜராத் மாநிலத்தின் அருமை பெருமைகளைக் குறும்படமாக எடுப்பதற்காக குஜராத் வந்திருப்பதாகவும் கூறி, அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பேசி திறம்பட நடித்துள்ளார். அவர் படம்  எடுப்பதற்குத் துணையாக ஒரு பிரான்சு நாட்டு இளைஞனை அமர்த்திக் கொண்டார். அகமதாபாத் நகரில் பல மாதங்கள் தங்கி மிகுந்த சிரமங்களுக்கு இடையே காரியத்தைக் கச்சிதமாக முடித்துள்ளார். உடலெங்கும் ரகசியக் காமெராக்களைப் பொருத்திக் கொண்டு இவர் சந்தித்த நபர்கள் எல்லாம் வன்முறைகள் நடந்த காலத்தில் அதிகாரப் படிகளின் உச்சத்தில் இருந்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள். அதிகாரிகள் மோடி அரசுக்கு எப்படி அடிவருடிகளாக இருந்தார்கள் என்பதை இந்த நூல் அம்பலப்படுத்துகிறது. இறுதியில் அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை ரானா சந்தித்தது நாடகத்தின் கிளைமாக்ஸ். ஒரு துப்பறியும் நாவல் போல் புத்தகம் விறுவிறுப்புடன் விரிந்து செல்கிறது. உரையாடல்களை உரையாடல் வடிவத்திலேயே கொடுத்திருப்பது மேலும் சுவையூட்டுகிறது. இவர் உளவு பார்க்கும் ரகசியம் இடையில் தெரிந்து போயிருந்தால் அவரை அப்போதே தீர்த்துக் கட்டியிருப்பார்கள். இவ்வளவு ரிஸ்க் எடுத்து காரியத்தில் இறங்கியதால் சமயங்களில் மன அழுத்தத்திற்கு ஆளானார் ரானா. அந்தத் தருணங்களில் எல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தது அவரது பெற்றோர்கள்தாம்.

இந்த ஆபரேஷனுக்குக் கொஞ்சம் முன்னர் சொராபுதீன், கவுசர் பீவி, பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவின் பங்கினை அம்பலப்படுத்தி அவர் கைதாகக் காரணமாக இருந்தவரும் இந்த ரானாதான்.

கலவரத்தைக் கட்டுப்படுத்திட மிகவும் மெதுவாகப் போகுமாறு முதல்வர் மோடி உங்களைக் கேட்டுக் கொண்டாரா என்ற ரானா அயூபின் கேள்விக்கு உள்துறைச் செயலர் அசோக் நாராயணனின் பதில் முக்கியமானது. எப்போதுமே அவர் நேரடியாக வரமாட்டார். விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள், காவல்துறை அதிகாரிகள் என்று அவர் கட்டளையிடுவதைச் செய்வதற்கு ஆட்கள் இருந்தார்கள். குஜராத்தில் இத்தகு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவர் தான் இன்று இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்று நமக்கு மதச்சார்பின்மை, தேசபக்தி குறித்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ரானா அயூபைக் கொண்டாட வேண்டிய ஊடகங்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றன. ஊடகங்களை அம்பலப்படுத்த ரானா அயூப் மற்றொரு அவதாரமா எடுக்க முடியும்?

பேரா. பெ. விஜயகுமார் -9500740687 –vijaykumarmuta@gmail.com