Tuesday, October 4, 2016

கல்வியா, அரசியலா?

புதிய கல்விக் கொள்கை மீதான விமர்சனம் அரசியல் ரீதியாக உள்ளது.. கல்வி சார்ந்து வரவில்லை எனச் சிலர் பேசுவதும், அப்படிப் பேசுவோர் நடுநிலையாளர் போல தங்கள் முகத்தை வைத்துக்கொள்வதும் ஒரு வேடிக்கை..!

கல்விக் கொள்கையில் இல்லாத அரசியலா..?

ஒருபுறம், வர்ணாசிரம நஞ்சு கலந்த பழமையைக் கொண்டாடியும்  மறுபுறம் சர்வதேச நவீன வர்த்தகத்துக்குக் கடை விரித்தும் கல்விக் கொள்கையில் ஒரு நாடகம் நடக்கிறதே! அந்த நாடகத்தின் கரு என்ன?

அது கல்வியா? அரசியலா?

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் குழந்தைகள் தொழிலாளிகள் ஆவதும், கடத்தப்படுவதுமான அவமானம் தொடரும் நாட்டில், 5ஆம் வகுப்பிலேயே தேர்வு வைத்து வடிகட்டிப் பிள்ளைகளைப் பள்ளியை விட்டுத் துரத்த நினைப்பது... கல்வியா?அரசியலா?

பல்வேறு சூழலில்-பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் பிள்ளைகள் இங்கு வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவர்க்கும் தேசிய அளவில் ஒரே விதமான பாடத்திட்டமாம்! இந்த மூர்க்கத்தனமான யோசனையின் பின்னணி என்ன? அது கல்வியா? அரசியலா?

கல்வி குறித்த புதிய புரிதல்களால் உலகம் முழுக்க வெளிச்சம் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கல்விக் கொள்கை மட்டும் வேலைவாய்ப்புக்கான திறன்கள் குறித்து வறட்டுத்தனமாய்க் கூப்பாடு போட்டு, மொழி, வரலாறு போன்ற கலைப் பாடங்களுக்கு எதிராகக் கத்தியைத் தீட்டுகிறதே! இது கல்வியா?
அரசியலா?

கல்வி வேறு அரசியல் வேறா?....

கல்வியில் இல்லாத அரசியல் வேறு எங்கிருக்கிறது?
 பேரா. ச.மாடசாமி


மண்ணை நேசித்த மக்கள் கலைஞன் - திருவுடையான்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர் அண் மையில் அகால மரணம் அடைந்த திருவுடையான். பேரனின் இசை ஆர்வத்தைக் கண்ட அவரது தாத்தா அவரது ஆர்வத்திற்கு ஊக்கம்  கொடுத்தார். 1993-ம் ஆண்டு முதன்முதலாக தமுஎகச மேடையில் ஏறிய அவரை தமுஎகச மேடை ஆரத் தழுவிக்கொண்டது. தலைசிறந்த கிராமியப் பாடகராகப் பரிணாம வளர்ச்சி பெற்றார் திருவுடையான். அவரது குரல் ஒலிக்காத ஊரே தமிழ்நாட்டில் இல்லையென்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானார். சீர்காழி கோவிந்தராஜன் மீது தீராத காதல் கொண்ட திருவுடையான் அவருக்காகவே சங்கரன்கோவிலில் ஒரு தனி இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதனைத் தொகுத்து வழங்கிய இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல்ஹமீது அவர் மட்டுமே தொடர்ந்து 6 மணி நேரம் பாடியதை வியந்து பாராட்டினார். பாரதியின் அனைத்து பாடல்களையும் மனப்பாடமாகவே பாடக்கூடியவர் திருவுடையான். கவிஞர்கள் காசி ஆனந்தன், ஏகாதசி, நவகவி, ரமணன் போன்றவர்கள் எழுதிய பாடல்களை உணர்வு பொங்கப் பாடி மக்களை கவர்ந்தவர். ஏகாதசி எழுதிய ஆத்தா உன் சேலை.. என்ற பாடல், காசி ஆனந்தனின் தமிழா, நீ பேசுவது தமிழா ஆகிய பாடல்களை அவர் பாடும்போது பலத்த வரவேற்பு கிடைக்கும். தனது கிறுக்கல்கள் நூல் வெளியீட்டு விழாவிற்கு இவரைப் பாட அழைத்த திரைப்பட நடிகர் பார்த்திபன், பிறகு ஒரு படத்தில் பாடவும் வாய்ப்பு கொடுத்தார். விருமாண்டி, மதயானைக் கூட்டம், கோடைமழை, மயிலு, களவாடிய பொழுதுகள் ஆகிய திரைப்படங்களில் திருவுடையான் பாடியுள்ளார். ஆயினும் திரைப்படங்களில் பாடுவதைவிட மக்கள் மத்தியில் பாடுவதுதான் அவரது விருப்பமாக இருந்தது. சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த அவரது இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரின் மறைவு மக்கள் கலையை நேசிக்கிற அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

ஐ.வி.நாகராஜன் (தொடர்புக்கு : 94421 26516)



ஆசிரியர் சங்கங்களின் கவனத்திற்கு

தி இந்துவிற்கு நான் அளித்த பேட்டியில் பள்ளிகளின் நிர்வாகம் உள்ளாட்சி
அமைப்புகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கும்போதே தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். அது நடந்தது. பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரது இடையூறுகளும், அவமதிப்பும் நான்  அறியாதது அல்ல. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நடத்தி வரும் பல போராட்டங்களுக்கு நான் ஆதரவாக இருப்பவன். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லையென்ற குற்றச்சாட்டை சிலர் சுமத்தும்போது எந்த ஆசிரியர், எந்த பள்ளி, நீங்கள் எடுத்த  நடவடிக்கையென்ன என்று அவர்களை வினவுவேன். அவர்களால் திட்டவட்டமாக பதில் அளிக்க முடிவதில்லை. தனியார் பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருக்கும்போது அரசுப்பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஆசிரியர் பணியிடங்களே அனுமதிக்கப்பட்டுள்ள விவரம் பொது மக்களுக்குத் தெரிவதில்லை.

நான் மாவட்டக் கழகப் பள்ளிகளில் 16 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன்.
மாவட்டக் கழகத் தலைவர், மாவட்டக் கழகங்கள் கலைக்கப்பட்ட பின் பொறுப்பு வகித்த மாவட்டஆட்சியர் ஆகியோர் என்னிடம் மரியாதையாகத்தான் நடந்துகொண்டனர். கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட பின்னர் கல்வி அதிகாரிகள் என்னை கல்விப்பணியாற்றிடும் ஒரு சகாவாகப் பார்க்கவில்லை, ஊழியனாகவே பார்த்தனர். தன்மானத்துடன் பணியாற்ற இயலாது என்று அறிந்தே நான் ஆசிரியர்களை மதிக்கும் சரியானதொரு தனியார் பள்ளிக்குச் சென்றேன். தற்போதுள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளாட்சித் தலைவர்களைவிட அரசின் அதிகார வர்க்கத்தினரை மேம்பட்டவர் என்று கருதுவது எனக்கு வியப்பாகவே உள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தனி இயக்கம் கண்டவர் மாஸ்டர்
ராமுண்ணி.. திடமான முதுகெலும்பையும் தந்தவர். அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளைத் தகர்த்தவர். கொள்கைப்பற்றே அவரது அரண். ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் இந்த ஒன்றுபட்ட இயக்கத்தைச் சிதறடித்தனர். ஒரு இயக்கமாக இருந்த நிலை மாறி பல சங்கங்கள் காளான்களாக முளைத்தன. அவற்றில் பல அரசைச் சார்ந்து அதிகாரிகளின் புகழ் பாடி ஆசிரியர்க்கு மாறுதல் பெறவும், மாறுதலை நிறுத்தவும் ஆற்றும் பணியே தம் சங்கத்தை நிலைநிறுத்த இயலும் என்ற நம்பிக்கையில் செயலாற்றுகின்றன. இது இயக்கத்தின் கூட்டுபேர சக்தியைக் குலைத்து விட்டது.

மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளின் மேலாண்மை பற்றிப் பரிந்துரைக்க அன்றைய
கல்விச் செயலர் ஆர்.ஏ.கோபால்சாமி, ஐ.சி.எஸ் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பெற்றது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு இடைநிலைக்  கல்வி வாரியம் அமைக்கப்பட்டு அதன் பொறுப்பிற்கு மாவட்டக் கழகப் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஊராட்சிகள் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகளும் மாற்றப்பட வேண்டுமென்று பரிந்துரைத்தது. அவ்வாரியம் 9 உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கும். மாவட்டக் கல்வி அலுவலரோ அல்லது தனி நபரோ தலைவராகவும் ஒரு கல்வி அலுவலர் செயலராகவும் மற்ற எழுவர் கல்வி சம்பந்தப்பட்டவர்களாகவும் இருப்பர். ஒரு பொதுப் பள்ளித் தலைமையாசிரியரும், ஒரு தனியார் பள்ளித் தலைமையாசிரியரும் உறுப்பினர்களாவார்கள். அனைவரும் அரசால் நியமிக்கப்படுவர். தனியார் பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் பொறுப்பும் இவ்வாரியத்திற்கு அளிக்கப்பட்டது. கல்வி வரி, அரசு மானியம் ஆகியவை நிதி ஆதாரங்களாக இருக்கும். ஒரு மாதிரிக் கல்விச் சட்டத்தையும் அக்குழு தயாரித்தது. நியமன உறுப்பினர்கள் என்பதற்கு மாறாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற கருத்தோடு இப்பரிந்துரைகளை ஆசிரியர் இயக்கங்கள் வரவேற்றன.

சில தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களும் இதே போன்று தம் பள்ளிகளுக்கும்
ஒரு அமைப்பு வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தன. ஆனால் குழுவின் பரிந்துரைகளை அரசு கிடப்பில் போட்டது. பிரிட்டனில் உள்ளாட்சிகளில் இரு அமைப்புகள் உண்டு. ஒன்று உள்ளாட்சிக் குழு . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு. நமது நகராட்சிகளுக்கு ஒப்பானது. மற்றொன்று உள்ளாட்சி கல்வி ஆணையம். உள்ளாட்சிக் குழு தெரிவு செய்யும் ஒரு நபரும் கல்வி ஆணையத்தில் இருப்பார். மற்றபடி அதில் கல்வியாளர்களும், பெற்றோர்களும் உறுப்பினர்களாவார்கள். இவ்வாணையமே அதன் எல்லைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளை நிர்வகிக்கவும், ஆய்வு செய்திடவும் அதிகாரமுள்ளது. இவ்வதிகாரப் பகிர்வு நன்முறையில் இயங்கி வருகின்றது. நான் அமெரிக்க  சென்றிருந்தபோது கனெக்டிகட் மாநிலக் கல்வி நிர்வாக அமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அம்மாநிலக் கல்விப் பொறுப்பு முழுமையும் அவ்வமைப்பைச் சார்ந்தது. 13 உறுப்பினர்கள் கொண்ட அந்த அமைப்பில் இரண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களும் இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. மற்ற உறுப்பினர்கள் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டவர்கள். சில மாநிலங்களில் தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்  என்று அறிந்தேன். அம்மாநிலம் மிகச் சிறப்பான கல்வி அளிக்கின்றது என்று பெயரெடுத்தது. நம் நாட்டுக் கல்வி அமைப்பைப் பற்றி இரண்டு மணி நேரம் நிறைய வினாக்கள் எழுப்பி அறிந்தனர். அன்றைய நிலவரப்படி பத்து டாலரில் ஒரு மாணவர்க்கு நல்ல கல்வி அளிக்கின்றோம் என்று நான் சொன்னபோது எப்படி என்று கேட்டனர். வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று  சொன்னேன். மாவட்டக் கழகத்திலும், ஒன்றியத்திலும் இருந்தபோது நம்ம பள்ளிகள் என்று அழைக்கப்பட்டவை தனியார்மயத்திற்குப் பின் அரசுப் பள்ளிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. பள்ளிகள் சமூகத்தின் சொத்து. எங்கு  பள்ளிக்கும் அது சார்ந்த சமூகத்திற்கும் நல்ல உறவு இருக்கின்றதோ அப்பள்ளி கல்வியில் சிறந்து விளங்குவதைக் காணலாம்.

பழம்பெரும் பள்ளிகளை ஊர் மக்கள் நிலமும் நிதியும் கொடுத்து உருவாக்கினார்கள்.
அவர்களுக்குத் தனியாக எந்த இலாபமும் கிடையாது. வரும் தலைமுறையினர் கற்றுத்
தேர்ந்தவராக விளங்க வேண்டுமென்ற பேரவாவினால் உந்தப்பட்டு ஆற்றிய சேவை
அது. இவற்றைப் பேணிக் காத்து அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கும் கடமை
இன்றைய ஆசிரியர்க்கு உண்டு.

                                                                (044-23620551 –rajagopalan31@gmail.com)


வேஸ்ட் இல்லாம வாழவே முடியாது


தாத்தா பேரனிடம் கூறினார்.

”கண்ணா, காசைக் கருத்துடன் செலவழிக்கணும். எந்தப் பொருளுக்கும் நியாய விலையைவிட அதிகக் காசு கொடுக்கக்கூடாது. பணத்தின் அருமை தெரியணும். காலம் பொன்னானது; எதையும் வேஸ்ட் பண்ணாதே” என்று அறிவுரைகளை அள்ளித்
தெளித்தார்.

பேரனோ ”அட போங்க தாத்தா.. இன்று, வேஸ்ட் இல்லாம வாழவே முடியாது. பணம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட், டைம் வேஸ்ட் எல்லாம் வாழ்வின் அங்கம்” என்று பொன்மொழி உதிர்த்தான்.

எப்படி என்று வினவிய தாத்தாவுக்கு பேரனின் பதில் :

“காலை எழுந்ததும் ஃப்ரிட்ஜைத் திறந்தால், இரவு முழுதும் கரண்ட் இல்லாம பால் பாக்கெட் கெட்டுப் போயிருக்கும். ரூ 40/- வேஸ்ட். ஆபீஸ் கிளம்பி பஸ்ஸுக்கு நின்றால், நம்முடைய பஸ் நம்பர் தவிர மற்ற பஸ்கள் படையெடுக்கும். நேரத்துக்கு ஆபீஸ் போகணுமே என்ற கவலையில் ஆட்டோ பிடிப்போம். பின்னாலேயே நம்முடைய நம்பர் பஸ் இரண்டு அடுத்தடுத்து வந்து வயிற்றெரிச்சலைக் கிளப்பும். ஆறு ரூபாய் சவாரிக்கு அறுபது ரூபாய் கொடுத்திருப்போம். வேறு வழி? ஆறு மனமே ஆறு.. நேரத்தில் ஆபீஸ் சென்றோமா என்றால் அதுவுமில்லை. தொழிலாளர் நல அமைச்சர் உழைப்பாளர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகிறார் என்று இரண்டு கிலோமீட்டருக்கு டிராபிக் ஜாம் ஆகியிருக்கும். எட்டாவது மாடியிலிருக்கும் ஆபீசுக்கு லிப்ட்டில் செல்ல கீழ்தளம் சென்றால், லிப்ட் அவுட் ஆப் ஆர்டர் வாசகம் தொங்கும். பிறகென்ன, வேர்த்து விறுவிறுத்து, மூச்சு முட்ட எட்டு மாடி ஏறி, லன்ச் பாக்ஸ்-ஐத் திறப்போம். மணி ஒன்று ஆகிவிட்டதே... அரை நாள் லீவு லெட்டர். அரை நாள் லீவு போச்சு!

வேலை முடிந்ததும் மாலை, டென்ஷனால் ஏற்பட்ட தலைவலியால், டாக்டரிடம் போவோம். சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்து, பிறகு, ஒன்றுமில்லை சார்... மூச்சுப் பயிற்சி பண்ணுங்க, வருவது வரட்டும்னு எப்போதும் ரிலாக்ஸ்ட் ஆக இருங்க என்று அட்வைஸ் செய்து, பாராசிட்டமால் ஒரு மாத்திரை போதும் என்பார். ரூ. 6301/- தண்டம் அழுதிருப்போம். ( ரூ 300 கன்சல்டேஷன் + ரூ. 6000 சிட்டி ஸ்கேனுக்கு + ரூ 1 பாராசிட்டமாலுக்கு ).

மறுநாள் எழுந்ததும் முந்தைய நாள் நிகழ்வுகள் அனைத்தும் மறந்து நிம்மதியாய்  அடுத்த நாளைத் துவக்குவோம். அடுத்த வாரம் சுற்றிப் பார்க்க சிம்லா போகப்போகிறோம் என்ற மகிழ்ச்சியை நினைத்து. மறுநாள் ஆபீஸ் போனதும், சிம்லா பயணத்துக்கு வேட்டு வைக்கப்பட்டிருக்கும். எம்.டி. விசிட் இருப்பதால் லீவு கிடையாது என்பார் மானேஜர். 10000 ரூபாய் செலவில் செய்யப்பட ரிசர்வேஷளைக் கேன்சல் செய்ய ரூ. 500 தெண்டம்.

அதனால் தாத்தா.. இன்றைய வாழ்க்கையில் வேஸ்ட் ஒரு முக்கியமான அங்கம். தவிர்க்கவே முடியாது. 30 பர்சென்ட் சம்பளம் வேஸ்ட்டை எதிர்கொள்ளத்தான்” என்றான்.

தாத்தா ஒத்துக்கொள்ளவில்லை. ”என்னதான் இருந்தாலும், கொஞ்சம் திட்டமிட்டு வாழ்ந்தால் வேஸ்ட்-ஐத் தவிர்க்கலாம்” என்றார்.

பேரன் கடுப்பாகி, ”இதுதான் தாத்தா... உங்க பாலிசியெல்லாம் இன்றைய நடைமுறைக்கு ஒத்துக்காது. உங்ககிட்ட இதுவரை பேசியதே டைம் வேஸ்ட்” என்று நடையைக் கட்டினான்.
- எஸ். தேவநாதன், குரோம்பேட்டை

(கைபேசி: 9380696474)


மறைக்க முடியாத சூரிய ஆற்றல்

சூரிய ஒளியைக் கண்டு மனிதர்கள் பயந்த காலங்கள் எப்போதோ மலையேறிவிட்டன. சூரிய ஒளியின் ஆற்றலை, சிறப்பைக் கண்டறிந்து, அதனைப் பல்வேறு ஆய்வுகளின்  வழியாக எப்படி பயன்படுத்துவது என்பதற்கான ஆராய்ச்சிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. சூரிய வெப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான  முயற்சிகளை நாம் முன்னிலும் சிரத்தையோடு செய்ய வேண்டிய காலமிது.


நம்மை விடக் குறைவாக சூரிய வெப்பம் கிடைக்கும் நாடுகள், நம்மை விட அதிகமாக சூரிய ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள். பூமியிலிருந்து சூரியன் சுமார் 15 கோடி  கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தாலும், சூரிய சக்தியினால்தான் பூமியில் உயிர்கள்  இயங்கிக் கொண்டிருக்கின்றன.

கி.மு.230-இல் கிரேக்க கணித ஆய்வாளரான டோசிதெஸ் என்பவர் குவிப்பான்கள் மூலமாக சூரிய ஆற்றலை ஓரிடத்தில் குவிக்கும் முயற்சியை மேற்கொண்டார். இப்படியாய்த் தொடங்கிய சிறுசிறு முயற்சிகளின் தொடர் விளைவாக, இன்று சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, பல்வேறு பணிகள் நடைபெறும் அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம். பூமியிலிருந்து மட்டுமல்ல, நேரடியாக விண்வெளியில் இருந்தே சூரிய ஆற்றலை நுண்ணலைகளாக மாற்றி, பூமிக்கு அனுப்பி, இங்கே அதை மின்சாரமாக மாற்றிப் பயன்படுத்துவதற்கான விண்வெளி சூரிய சக்தி நிலையத்தின் தொடர் ஆராய்ச்சிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூரிய ஆற்றலின் ஆய்வுகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி அறிவியல் அறிஞர் ஐசக் அஸிமோவ் எழுதியதே இந்நூல். ஹேமபிரபா, சரவணன், கௌதம், அருண்குமார், விஷ்ணு ஆகியோர் எளிமையாய் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்கள்.
-மு.முருகேஷ் (9444360421)

ஐசக் அஸிமோவ் - யுரேகா புக்ஸ் (044-28601278) விலை : ரூ.25

30/45 பைகிராப்ட்ஸ் ரோடு முதல் தெரு, ராயப்பேட்டை, சென்னை – 14


அன்பளிப்பு - மலர்மதி


புத்தாண்டு முன்னிட்டு அந்தப் பகுதி மக்கள் இன்னிசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நடுவில் இருந்த அந்தப் பெரிய மைதானத்தில் மேடை  அமைத்திருந்தார்கள். மேடையைச் சுற்றி மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது.

மாலை சரியாக ஏழு மணிக்கு ஸ்டார் ஆர்க்கெஸ்ட்ரா அட்டகாசமாய் அதிர ஆரம்பித்தது. இளம்பாடகன் இளங்குமரனின் கணீர் குரல் இடியோசையாய் முழங்கியது. இசைக்கச்சேரியின் இடையே ரசிகர்கள் எழுந்து பாடகர்களுக்கு அன்பளிப்பாக பத்து, இருபது என ரூபாய் நோட்டுகளைப் போட்டி போட்டு வழங்கிக் கொண்டிருந்தனர்.

முண்டாசு கட்டிய ஒருவன், பார்ப்பதற்கு சாதாரணமாய்த்தான் இருந்தான், ஆனால், இளங்குமரனுக்கு ஐம்பது, நூறு என அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இளங்குமரனும் அவனை மகிழ்விக்க பாடிக்கொண்டே ஆடினான்.

கூட்டம் கைதட்டியது. முண்டாசு விசிலடித்தது.

பத்து மணிக்கு கச்சேரி முடிந்து மூட்டை கட்ட ஆரம்பித்தார்கள்.

“குமரா, இன்னைக்கு உனக்கு செம வருமானம் போலிருக்கு..” என்றான் சகபாடகன்
ஒருவன்.

“ஆமாம்பா. மூவாயிரத்துச் சொச்ச ரூபாய் கிடைச்சிருக்கு” என்றான் மகிழ்ச்சி பொங்க.

ஆர்க்கெஸ்ட்ராக்காரர்கள் அனைவரும் ஏறிக்கொள்ள, வேன் புறப்பட்டது.

இளங்குமரனுக்குப் பக்கத்தில் விழா ஏற்பாடு செய்த வேலப்பனும் அமர்ந்திருந்தார்.

சிகரெட் வாங்க ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெட்டிக்கடை முன் வண்டியை நிறுத்தினார் டிரைவர்.

“ஐயா, சாமி..தர்மம் பண்ணுங்கய்யா..”. கைக்குழந்தையுடன் ஒரு பெண் தட்டேந்தி நின்றாள்.

வேலப்பன் குனிந்து இளங்குமரனிடம், ”சார், இந்தப் பொம்பளை யாருன்னு தெரியுமா? இன்னைக்கு நடந்த நிகழ்ச்சியில அடிக்கடி உங்களுக்கு அன்பளிப்பு கொடுத்துக்கிட்டிருந்தானே ஒருத்தன், அதான் சார்... முண்டாசு கட்டியிருந்தானே, அவனோட பெண்டாட்டிதான் இவ” என்றார்.

அதிர்ந்து போனான் இளங்குமரன்.

“என்ன சார் சொல்றீங்க? பணத்தைத் தண்ணியா செலவழிக்கிற ஆளோட பெண்டாட்டியா இப்படி பிச்சை எடுக்கிறா? என்னால் நம்பவே முடியலையே..”

“அதான் சார் கொடுமை. அவனுக்கு நல்ல வருமானம் இருக்கு. ஆனா, எல்லாத்தையும் குடி, கூத்துன்னு ஊதாரித்தனமா செலவழிச்சுடறான். பெண்டாட்டி, புள்ளைங்களை கவனிக்கறதே இல்லை. வேறு வழி இல்லாமத்தான் அவனோட பெண்டாட்டி இந்த நிலைமைக்கு வந்துட்டா.”

சுரீரென்றது இளங்குமரனுக்கு. என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென வேனைவிட்டுக் கீழே இறங்கினான். அன்று வசூலான மொத்தப் பணத்தையும் எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தான். விழிகள் விரிய அதைப் பெற்றுக் கொண்டாள். இனி இதுபோன்று இனாமாகக் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கும், அனாதை ஆசிரமங்களுக்கும் வழங்கிவிட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தான் இளங்குமரன்.
                                                                   -malarmathi786@yahoo.com




பாலம் - செல்வகதிரவன்

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வந்த கார்த்திகேயன் இளைஞர் குழுவில் இணைந்தான். இந்த இளைஞர் குழு கடந்த பல வருடங்களாக கண்ணகி தெருவில் இயங்கி வருகின்றது. தெருப் பிரச்சனைகள், கோயில் விசேடங்கள் முதலியனவற்றில் குழுவில் உள்ள இளைஞர்கள் செயல்படுவார்கள்.

”பிள்ளையார் சதுர்த்தி வரப்போகுதே. இன்னமும் ஒண்ணும் பண்ணாம இருக்கோம்..”

“சாயங்காலம் பாரதி அச்சகம் போயி ரசீது புக் அடிக்க ஆர்டர் கொடுத்திடலாமா..?”

”இந்தத் தடவ பெரிய பிள்ளையார் பொம்ம செஞ்சிடுவோம்.. “

”நல்ல பக்திப் பாட்டுக் கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணலாம்.. “

இப்படி ஒவ்வொருவரும் வரப்போகிற விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது குறித்து அவரவர் அபிப்ராயங்களை அள்ளி வீசினார்கள்.

“தெருவில் ரெண்டு பிள்ளையார் கோயில் இருக்கு. அந்த கோயிலுக்குச் சொந்தக்காரங்க பெரியளவில கொட்டக போட்டு மைக்செட் வச்சு அர்ச்சகரக் கூப்பிட்டு பூஜை செஞ்சு எல்லாருக்கும் சுண்டல் கொழுக்கட்ட விநியோகம் பண்ணப் போறாங்க. அப்பறம் எதுக்கு நாம வேற வசூல் பண்ணி பெரிய அளவுல பிள்ளையார் பொம்ம வாங்கி, கொட்டகயில வச்சு, அதுக்கு ஒரு அர்ச்சகரப் பிடிச்சு நைவேத்யம் வகையறா பண்ணணும்? வேற எதாவது உருப்படியான காரியம் நம்ம பேர் சொல்ற மாதிரி செய்யலாமே.. என்று தனது கருத்தை தைரியமாக எடுத்து வைத்தான் கார்த்திகேயன்.

வேற என்னத்த உருப்படியாப் பண்றது என்கிற தினுசில் பலரும் நினைத்தாலும். கார்த்திகேயன் கருத்தில் இருந்த நியாயத்தை யாராலும் நிராகரிக்கவும் முடியவில்லை.

”சரி உருப்படியான காரியம் பண்ணலாம். என்ன பண்ணலாமுன்னு நீயே சொல்லு” என்று பந்தை அவனிடமே திருப்பி விட்டார்கள்.

“அடுத்தாப்பில வரப்போறது மழைகாலம். இந்த வருசம் நல்ல மழை பெய்யும்னு சொல்றாங்க. மழை தொடர்ந்து பேஞ்சா ஆத்தில தண்ணி வரும். ஆத்தில தண்ணி வந்துச்சுன்னா நம்ம தெருக்காரங்க, பள்ளிக்கூடம் போற பிள்ளைங்க, அக்கறைக்கு வேலைக்குப் போற ஆளுக, ரயில்வே ஸ்டேசன் பஸ் ஸ்டாண்டு போறவுங்க எல்லாம் பாலம் சுத்தித்தான் போறோம். ரெண்டு கிலோ மீட்டரு சுத்திப் போகணும்.. அப்படிப் போகும்போது நம்ம கஷ்டத்துக்கு வழியே பொறக்காதான்னு பொலம்பிட்டு போயிட்டு தண்ணி வத்தின உடனே அப்படியே மறந்திடுறோம். அதனால நம்ம தெருவுக்கு நேர பாலங்கட்ட முயற்சி பண்ணலாம். “

”என்ன செய்யலாம்? எப்படிமுயற்சிக்கலாம்?” - பந்து பழையபடி கார்த்திகேயன் திடலுக்கே வந்து சேர்ந்தது.

“இப்போதைக்கி நம்ம தெருவில வீடு வீடா கையெழுத்த வாங்கி கலெக்டர்கிட்ட மனுக்கொடுப்போம்.. எம்.எல்.ஏ, சேர்மனப் பாப்போம்.. பஞ்சாயத்து ஆபிசு முன்னாடி ஒரு அடையாள உண்ணாவிரதம் இருப்போம். போகப் போக என்ன செய்யலாம்னு யோசிப்போம்..”

மனதிற்குள் தயக்கம் இருந்தாலும் வெளிப்படையாக இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள் இளைஞர் குழுவினர்.

அந்த நகரை ஆறு மிகச் சரிபாதியாகப் பிரித்தது. நகரின் தொடக்கத்தில் ஊரை  இணைக்கக் கூடிய ஆத்துப் பாலம் இருக்கிறது. சிறிதும் பெரிதுமான முந்நூறு வீடுகளை உள்ளடக்கிய கண்ணகி தெருவில் இதுவரையில் ஆஸ்பத்திரி இல்லை. பகுதி நேரமாய்க் கூட வந்துபோகிற மருத்துவரில்லை . ஆட்டோ நிலையம் கிடையாது. எல்லாவற்றுக்கும்  கருக்குள்தான்  வரவேண்டும்.. சில விசயங்களுக்கு ஆற்றைக் கடந்து அக்கரை போகவேண்டும். அங்குதான் மேனிலைப் பள்ளி, பேருந்து நிலையம், ரயில்வே ஜங்சன், வங்கிகள் இருக்கின்றன.

சட்டசபைத் தேர்தல் வருகிறபோது களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வாக்குறுதியை வாரி வழங்கிடுவார்கள்.. ”எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தால் கண்ணகி  தெருக்காக ஆற்றில் பாலம் கட்ட ஆவன செய்வேன். ”

பாராளுமன்றத் தேர்தல் வரும்போதும், பஞ்சாயத்துத் தேர்தல் சமயத்திலும் வார்த்தைகள் மாறாமல் இதே பல்லவியைத்தான் பாடுவார்கள்.

தேர்தல் முடியும்.. வெற்றி பெற்றவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா நோய் தொற்றிக் கொள்ளும்.

பாலத்தின் அவசியத்தை வலியுறுத்தி விரிவான கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டது. ஜனங்களின் கையெழுத்துக் கேட்டுப் போனபோது நல்ல வரவேற்பு தென்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஆவலுடன் கையெழுத்துப் போட்டார்கள்.

மனுநீதி நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அத்தோடு வேலை முடிந்தது என்றில்லாமல் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்திற்கு நாள் குறித்தார்கள்.

உண்ணாவிரதப் பந்தல் நிரம்பி வழிந்தது. கண்ணகி தெருவின் வாலிபர்கள் மட்டுமல்ல, நடுத்தர வயதினர், மாணவர், பெண்கள் என்று திரளாக வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். நகரத்தின் நாலாபக்கமும் இந்த உண்ணாவிரதமே பேசும் பொருளாயிற்று. நகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சார்ந்த பாலமுருகன், பாரதிசத்யா, தேவதாஸ், சங்கர் ஆகியோர் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து ஆதரவுக் கரம் நீட்டினார்கள்.

கோககோலா நிறுவனம் நமது ஆற்றின் நீரை எடுத்து லாப வேட்டை நடத்த வந்தது. பதினோரு மாதங்கள் தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடி அவர்களை அடித்து விரட்டியவர்கள் நாம். அதுபோல் விடாமல் போராடினால் பாலம் பெறுவது பெரிய காரியமில்லை. இன்று விதைக்கப்பட்ட போராட்ட விதைகள் வீணாகாது. வெகுவிரைவில் வெற்றிக் கனியை விழச் செய்யும். ஆற்றுக்குள் பாலம் உருவாக   நம்மவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றுமைப் பாலமும் உருவாக வேண்டும்... உரைவீச்சுகள் தொடர்ந்தன.

கார்த்திகேயனின் நிறைவுரை விடாது செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கைப் பூவை கண்ணகி தெரு வாலிபர்கள் மனதில் மட்டுமல்ல வந்திருந்தோர் அனைவரின் மனதிலும் பூக்கச் செய்தது.

                                                   -99445 09530- selvakathiravan54@gmail.com