Thursday, October 6, 2016

இம்மாதம் பாராட்டு


பெரியார் மண்ணிலா இந்தப் படுகொலைகள்?

சிருஷ்டிகர்த்தா மக்கட் படையில் அடங்கிய ஆண் பெண்களை ஏற்றத்தாழ்வுடன் படைக்கவில்லை என்பதை அறிவுலகம் ஏற்கும். அங்க அமைப்பின்றி அறிவின் பெருக்கத்திலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வான வித்தியாசம் காண இயலுமோ? இயலவே இயலாது. ஆடவரிலும் சரி, பெண்டிரிலும் சரி முறையே அறிவாளிகளும், ஆண்மையுடையோரும், அறிவிலிகளும், பேடிகளும் உள்ளனர். இவ்வாறிருக்க திமிர்பிடித்த இந்த ஆண் உலகம் சாந்தகுல பூஷணமாக பெண் உலகத்தைத் தாழ்த்தி, அடிமைப்படுத்திவருதல் முறையும் தர்மமுமான செயலாகாது.

இது பெரியார் 1926ல் எழுதியது. ஆணும் பெண்ணும் அடிப்படையில் சமமான படைப்புகள்தாம் என்பது அவரது அழுத்தமான கருத்தாகும். இது அறிவியல்பூர்வமானதும்கூட. பெரியாரின் கொள்கைகளுக்கு பேரறிஞர் அண்ணாவால் பெற்றுத்தரப்பட்ட புதிய அரசியல் அங்கீகாரமாகவே 1967ல் நடந்த அந்தத் தலைகீழ் ஆட்சி மாற்றத்தை எல்லோரும் வியந்து வரவேற்றார்கள். ஆட்சி மாறினும் இன்னும் பலவகைகளிலும் காட்சிகள் மாறாததற்கு என்ன காரணம்? யார் பொறுப்பு?

தந்தை பெரியார் சமுதாயத்தின் சகல பகுதிகளிலும் நவீன மாற்றங்களை சாதீயத்திற்கு மாற்றாக முன்வைத்தவர். குடும்பம், ஆண் – பெண் உறவு, குழந்தை வளர்ப்பு எல்லாம் பழைய ஆணாதிக்க சிந்தனையின் அடிப்படையிலேயே தொடர்வது பெரியாருக்குச் செய்கிற பச்சைத் துரோகமின்றி வேறென்ன? பெரியாரின் வாரிசு என்று சொல்லிக் கொள்பவர்கள் பதவியைப் பிடித்தபின் சமுதாய சீர்திருத்த விஷயத்தில், பெண் விடுதலை விஷயத்தில் அக்கறையின்றி இருந்துவிட்டதன் பலனைத்தான் இன்று இரண்டு விதங்களில் தமிழகம் அனுபவிக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. ஒன்று, ஆணவக்கொலை. இன்னொன்று, ஒருதலை விருப்பத்தால் (அதைக் காதல் என்று எப்படி சொல்ல முடியும்?) நடைபெறும் கொலை.

காதலித்தால் பெற்றோராலேயே கொல்லப்படுவதும், ஒருதலை விருப்பத்தை ஏற்கவில்லையெனில் சம்பந்தப்பட்டவனே மறுப்பவளைக் கொல்வதும்   இன்றைய தமிழகத்தின் அன்றாட நடைமுறையானதற்கு சமுதாயத்தை நெறிப்படுத்தாத ஆட்சியாளர்கள் அல்லாமல் வேறு யார் பொறுப்பு? பிராமணியம் என்பது சாதியப் படிநிலையும், ஆணாதிக்கமும், தீண்டாமையும் எனில் அதனை எதிர்த்துக் கிளம்பிய இயக்கம் இன்றுவரையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு அதற்கெதிராக என்னதான் செய்தன?
பெரியாரையும் அண்ணாவையும் படங்களில் தாங்கிக்கொண்டு, கட்சிச் சின்னங்களிலும் கொடிகளிலும் வைத்துக்கொண்டு, ஆனால் முற்றிலும் இன்றைய தேவையாக இருக்கிற அவரது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் காற்றில் பறக்கவிட்டதுதானே இவர்கள் செய்த திருத்தொண்டு? அதனால் தானே இன்று மந்திரிகள் மண் சோறு சாப்பிடுவது சந்தி சிரிக்கிறது? தங்கள் சாதிப் பெண்கள் "தாழ்ந்த" சாதி ஆணுடன் இணை சேர்வதற்கு பெரியாரின் மண்ணில் எப்படி எதிர்ப்புகள் வெடிக்கின்றன? தர்மபுரி இளவரசனும், உடுமலை சங்கரும் செய்த தவறென்ன? சாதி ஆணவம் அவர்களை வாழவிடாமல் செய்து விட்டதென்றால் அந்த ஆணவத்தின் பின்னால் திமுக – அதிமுக கட்சிகளின் சுயநல அரசியல் அந்த ஆணவத்திற்கு முட்டுக்கொடுத்து நிற்கின்றனவா இல்லையா?

இன்னொரு பக்கம் ஒருதலை விருப்பத்தால் பரிதாபமாகக் கொலை செய்யப்படுகிற அப்பாவி இளம் பெண்கள். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த சுவாதி படுகொலை, கரூர் தனியார் பொறியியல் கல்லூரி வகுப்பறையில் நடந்த மாணவி சோனாலி படுகொலை, கோவை தன்யா படுகொலை போன்றவை நாள்தோறும் நடந்தவண்ணம் உள்ளன. வயது வந்த பெண்ணை வெளியே அனுப்பும் பெற்றோர்கள் அவர் வீடு திரும்பும்வரை வயிற்றில் நெருப்பைச் சுமந்தபடி காத்திருக்கின்றனர்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஆணவக் கொலைகளும், ஒருதலை விருப்பத்தால் நடக்கும் பெண் கொலைகளும், சின்னஞ்சிறுமிகளும், பெண் சிசுகக்களும் கூட பாலியல் தொல்லைகளிலிருந்து தப்ப முடிவதில்லை என்பதற்கு ஒட்டுமொத்த சமூகமும்ஆண்- பெண் விஷயத்தில் போதிய அறிவு முதிர்ச்சியின்றி இருப்பதே
பிரதான காரணம். பெண் என்பவள் எவ்வளவுதான் படித்தாலும், வேலைக்குப்
போனாலும் இன்னொருவனிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவள்தானே என்ற
அலட்சியப் பார்வையும், என்னதான் இருந்தாலும் அவன்ஆண்பிள்ளை என்கிற இறுமாப்பும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஒழிந்தபாடில்லை.

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவும், 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளும் குடும்ப அமைப்புக்குள் ஜனநாயகமின்மைக்கு எதிராக,ஆண்- பெண் பேதத்திற்கு எதிராக, பெரியாரின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுத்திடவில்லை. மாறாக பதவி சுகத்துக்காக சாதீயத்தின் கொம்பைச் சீவிவிடுகிற கயமையைத்தான் இவை செய்திருக்கின்றன, செய்து வருகின்றன.

இவற்றுக்கு மாற்று எனச் சொல்லிக் கொள்ளும் பாமகவோ சாதி ஆதிக்கத்திற்கு மூடுதிரை கூட அவசியமில்லை என்ற முடிவுடன் இயங்குகிறது. திமுக, அதிமுகவைவிட ஆபத்தான சக்தியாக அது எழுந்திருக்கிறது. உண்மையான மாற்றாக இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே பெரியாரைப் புரிந்துகொண்ட இயக்கங்களாக களத்தில் இருக்கின்றன.

அறிவியல்பூர்வமாக மக்களைத் திரட்டி, ஆணும் பெண்ணும் சமம்தான் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தீண்டாமைக்கு எதிராக களம் இறங்கியிருக்கின்றன. இந்த இயக்கங்கள் மேலும் மக்களிடையே சென்றடைவது பாலியல் சமத்துவத்திற்கு வலு சேர்க்கக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. மறுபக்கம், ஆண்களுக்கு சிறுவயது முதற்கொண்டே பெண்ணை மதிக்கவும், சக தோழியாகக் கருதி அன்பு செலுத்தவும் கற்றுத்தரும் பணியில் பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

"பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை இருக்கவேண்டும் என்றால்,
இன்றுள்ள வாழ்க்கைமுறையே அடியோடு மாறவேண்டும். சமைப்பது, பிள்ளை
வளர்ப்பது, குடும்பத்தை நடத்துவது ஆகிய மூன்று பொறுப்புகளும் பெண்களைச் சார்ந்தவைகளே என்ற மனப்பான்மை ஒழியவேண்டும்" என்கிறார் பெரியார். குடும்பங்களில் ஜனநாயகம் வேண்டும் என்பதே அவரது குரல். அப்படிப்பட்ட ஜனநாயகக் குடும்பங்களில் வளர்பவர்கள் புதிய சமுதாயத்தின் அறிவியல் பூர்வ அடையாளங்களாக,ஆண்- பெண் பேதம் ஒழிந்தோராக உயர்ந்து மிளிர்வர் என்பதில் ஐயமில்லை.

(9842593924-cholanagarajan@gmail.com)
 

ஓவியம்


ராஜகுரு பதில்கள்


எதிர்வினை


கேலிச்சித்திரம்


ஒன்றும் புரியவில்லை


செப்டம்பர் இதழில் இரோம் ஷர்மிலா ராணுவத்தின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மணிப்பூரை விடுவிக்கட்டும் என வாழ்த்திருந்தீர்கள். சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட உத்தியாகப் பயன்படுத்தினார். அன்று, அவர் உண்ணாவிரதமிருந்தபோது, அவரது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க  பிரிட்டிஷ் அரசு கூட தயாராக இருந்தது; மக்களும், முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

ஆனால், இன்று காந்தி காட்டிய வழியில் மணிப்பூரில் இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர, எந்த விதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவர்மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்து, மருத்துவமனையில் அடைத்து திரவ உணவளித்து எப்படியோ உயிரோடு வைத்திருந்தார்கள். பதினாறு ஆண்டுகளில் ஒரு துளி தண்ணீர் கூட அவர் நாவை நனைக்கவில்லை. அவரது இளமைக்காலத்தின் பெரும்பகுதி இப்படிக் கழிந்தது. 2016 ஆகஸ்ட் 9 அன்று அவர் உண்ணாவிரதத்தை நிறுத்தியபோது, அவரது முடிவுக்கு பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அப்படி என்றால் என்ன அர்த்தம்? இப்படியே இருந்து இறந்து போ என்பதுதானே? தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினால், காவல் துறையினரின் உதவியுடன், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்படுகிறது.

பிரச்சனைகளைத் தீர்க்க ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்கிறார்கள். உண்மைதான், ஒப்புக்கொள்வோம். ஆனால், அமைதியாக, அறவழியில் இராம் ஷர்மிளா போன்றோர் லட்சிய வெறியுடன், ஆண்டுக்கணக்கில் உண்ணாவிரதம் இருக்கின்றபோது, பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், ஆணவம் பிடித்த அரசு இடித்துவைத்த புளி போல் இருந்தால் என்னதான் செய்வது? இதற்குத் தீர்வுதான் என்ன? காந்தியை தேசத்தந்தையாகக் கொண்டாடுவதற்கு நமக்கு என்ன அருகதை இருக்கிறது? ஒன்றும் புரியவில்லை!
பேரா.சாமுவேல் லாரென்ஸ்,
மதுரை (99407 52852)


Wednesday, October 5, 2016

காட்டனின் கனவு கனவாகவே.......பெரணமல்லூர் சேகரன்


இந்தியாவின் நீர்நிலைகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, தேவைக்கேற்ப பகிர்ந்து கொள்ளப்பட்டால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும்.. என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் ஆர்தர் காட்டன். அவ்வார்த்தைகளில் கவனம் செலுத்தாததன் விளைவை நாம் இன்றளவும் அனுபவித்து வருகிறோம். இந்தியாவை ஆங்கில அரசு சுரண்டிச் சென்றது

ஒரு புறம் இருப்பினும் மறுபுறம் பென்னிகுக், ஆர்தர் காட்டன், தாமஸ் மன்றோ, காலின் மெக்கன்சி, எல்லீஸ் துரை போன்றவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.


ஆங்கிலேய அதிகாரியாகப் பணியாற்றிய ஆர்தர் காட்டன் இந்தியாவின் நீர்ப்பாசனத் தந்தை என அழைக்கப்பட்டதோடு அவருக்கு ஆந்திர மாநிலத்தில் 3000க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருப்பது பலர் அறியாதது. ஏரி, குளம், கண்மாய் போன்ற நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை தூர்வாரிப் பராமரித்தது என இவர் மேற்கொண்ட அளப்பரிய நீர் மேலாண்மைப் பணிகள் காரணமாக பத்து லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள்  விளைநிலங்களாக மாறி இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

1821ஆம் ஆண்டு தனது 18வது வயதில் இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்து, சென்னை மாநிலத் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார் காட்டன். மறு ஆண்டே கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி மாவட்டங்களிலுள்ள ஏரி, கண்மாய், குளங்களைப் பராமரித்து நீர் விநியோகம் செய்யும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேரடியாகக் களத்திற்குச் சென்று ஒவ்வொரு நீர்நிலையின் இயல்பையும் அதன் தனித்துவத்தையும் ஆராய்ந்தார்.

ஒரு கோமாளியைப் போல காட்டன் ஏரியின் சகதிக்குள் இறங்கி எதையோ தேடி அலைகிறார் என்று அவரது உயர் அதிகாரிகள் கேலி செய்தனர். இந்தியா முழுவதுமுள்ள ஆறுகளை ஒன்றிணைப்பது எனும் பெரும் கனவு கண்டார் காட்டன். காவிரி, பெண்ணையாறு ஆகிய ஆறுகளின் முகத்துவாரங்களை வண்டல் மண் அடைத்துவிடாமல் நீர் பாய்வதற்கு வசதியாக கல்லணையின் கிழக்குப் பகுதியில் ஐந்து மதகுகளை அவர் கட்டினார். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் மேலணை இவரால் கட்டப்பட்டதால், காவிரிக்குள் நீர் பாய்வதற்கு வேண்டிய தண்ணீரைத் திருப்பி விடுவதற்கு வழி ஏற்பட்டது.

கொள்ளிடத்தின் கீழே அமைந்த கீழணையின் தண்ணீர், வீணாகக் கடலில் கலக்காமல் வீராணம் ஏரிக்குச் சென்று பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களுக்கும் தண்ணீர் பாய வழி ஏற்பட்டது. சென்னையில் உள்ள துறைமுகத்தில் பாறைகளைக் கொண்டு கடற்கரையின் பாதுகாப்பை உருவாக்கியதும் ஆர்தர் காட்டன்தான். துறைமுகத்துக்குள் நேரடியாகச் சரக்குகளைக் கொண்டு வந்து சேர்க்க ரயில் பாதை ஒன்றையும் அவர் அமைத்தார்.

கோதாவரி ஆற்றுநீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போனதே பஞ்சத்துக்கான முக்கியக் காரணம் என்பதை அறிந்த காட்டன், கோதாவரி ஆற்றின் குறுக்கே தவளேஸ்வரத்தில் ஓர் அணையைக் கட்டத் திட்டமிட்டார். 1855ஆம் ஆண்டு பெஜவாடாவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே ஓர் அணை கட்டி முடித்தார். இவ்விரு அணைகளால் ஆந்திராவின் தானியக் களஞ்சியமானது கோதாவரி மாவட்டம்.

இவ்வாறு அர்ப்பணிப்புடன் காட்டன்  மேற்கொண்ட மகத்தான பணிகள் நினைவுகூரத் தக்கவை. ஆனால் ஆர்தர் காட்டனின் கனவை-வேளாண் மக்களின் வாழ்விற்கான கனவை-நனவாக்க 100 ஆண்டுகளாக சுதந்திர இந்தியாவில் ஆண்ட, ஆளும் அரசுகள் தொலைநோக்குப் பார்வையுடன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதது கசக்கும் உண்மை.
(9442145256 - sekernatesan@gmail.com )




“பிரித் துவைப்போம்” – டாக்டர் ஜி.ராமனுஜம்


பிரிக்க முடியாதது ? தமிழும் சுவையும். பிரியக் கூடாதது ? எதுகையும் மோனையும்? நாகேஷ் பின்புறமாக வளைந்துகொண்டே கேட்கும் கேள்விகளுக்கு சிவாஜி அளிக்கும் பதில்கள் யாராலும் மறக்க முடியாதவை. சில சொற்களைப் பிரித்துப் பார்க்கும்போது விபரீதமான விளைவுகள் ஏற்படும்.

வடிவேலுவிடம் சரத்குமார் தங்கப் பதக்கம் போஸ்டரைக் காட்டி தங்கப்ப ...தக்கம் என்று குதர்க்கமாகப் பிரித்துத் தர்க்கம் செய்வார். ஒரு கட்டத்தில் வடிவேலுவும் வெறுத்துப் போய் `தங்கப்ப தக்கம்தான் என்று சொல்லிச் செல்வார்.

பாடல்களில் இதுபோலப் பிரிப்பவர்கள் சிலருண்டு. `கேள்வியின் நாயகனே என்ற பாடலைக் `கேள் விநாயகனே என்று பதம் பிரித்துப் பதம் பார்ப்பார்கள். கமலஹாசனைப் பற்றிய பாடல் கணபதியைப் பற்றிய பாடலாக மாறிவிடும். தாய் மொழியிலேயே இப்படி என்றால் அடுத்த மொழிகளை அமைதியாக விட்டு விடுவோமா? கர்நாடக இசையில் மிகப் பிரபலமானது `எந்தரோ மகானுபாவுலு என்ற பாடல். பஞ்ச ரத்ன கீர்த்தனைகளுள் ஒன்று. அதை மனம்போன போக்கில் பிரித்துத் துவைப்பவர்கள் உண்டு. `எந்த......ரோ? என்று ஆடியன்ஸில் யாரோ ஒருவரை எந்த ரோவில் அமர்ந்திருக்கிறார் என்று கேட்பதுபோல் பாடுபவர்கள் உண்டு. அதுகூடப் பரவாயில்லை `எந்த... ரோம என்று பிரிக்கும்போது அனர்த்தமாகி விடுகிறது.

இப்படித்தான் `வாச ரோஜா வாடிப் போகலாமா? என்னும் வரிகளை `வா! சரோஜா! வாடி! போகலாமா? என்று பிரித்து கூட்டத்தில் இருக்கும் சாதாரண சரோஜாக்களைப் புலியூர் சரோஜாக்களாக்கிக் கோபத்தில் ஆட வைப்பவர்களும் உண்டு. தமக்குத் தேவையானவாறு பிரித்துப் பொருள் கொள்பவர்கள் `ஊக்கமது கைவிடேல் என்ற ஆத்திச்சூடியை `ஊக்க மது கைவிடேல் என்று டாஸ்மாக்கின் கொள்கைப் பாடலாக மாற்றி அவ்வையாரையே அலற வைப்பார்கள். பாரதி சொன்ன `மெல்லத் தமிழினிச் சாகும் என்ற முதல் வரியை மட்டும் பிரித்துக் கொண்டு` என்றான் ஒரு பேதை என்று அடுத்து வரும் வரிகளை விட்டுவிட்டுத் தமிழுக்கு திதி, இரங்கல் அஞ்சலி எல்லாம் கொடுத்தவர்கள் ஆயிற்றே நாம்!

`தர்மதுரை என்ற திரைப்படம்  கொஞ்சம் ஓடியவுடன் அப்பெயரை `தர் மதுரை எனப் பிரித்து விடுவார்கள். சிலசமயம் வாக்கிய அமைப்புகள் எப்படிப் பிரிப்பது என்று நம்மைக் குழப்பியடிக்கும். வேகமாகப் பாய்ந்த வேணுவின் பூனை என்று எழுதினால் பாய்ந்தது பூனையா வேணுவா என்ற குழப்பம் வரும். பசியோடு இருந்த முதலாளியின் நாய்என்றால் யார் பசியோடு இருந்தது முதலாளியா நாயா என்ற குழப்பம் வரும். தெளிவாக வேணுவின் பூனை பாய்ந்தது, முதலாளியின் நாய் பசியோடு இருந்தது என்று எழுதிவிடலாம்.

நமக்கு ஏற்றவாறு வாக்கியங்களைப் பிரிப்பது பன்னெடுங்காலமாகவே நடந்து வருகிறது. மகாபாரதத்தில் கூட அஸ்வத்தாமன் என்ற யானை இறந்து விட்ட செய்தியை அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்னும் பொருள் வரும்படியாகத் தர்மர் கூறியதாக வருகிறது. அபத்தமாகப் பிரிப்பதுபோல் அனர்த்தமாகச் சேர்ப்பதும் குழப்பத்தை உண்டு பண்ணிவிடும். திரு. நீலகண்டன் திருநீலகண்டன் ஆகிவிடுவதும், திரு. மலையப்பன் திருமலையப்பன் ஆவதும் பெரிய பாதகம் இல்லை. ஆயினும் திரு. மதியரசன், திருமதி. அரசன் என்று பால்மாறி அரசனின் மனைவியாக ஆகும்போது மதியரசன் மலைத்துப் போய்விடுவார். சீனி (சர்க்கரை) வாசனை தனக்குப் பிடிக்கும் என்பதை ஒரு பெண் சீனிவாசனை ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னால் அவளது கணவனுக்குப் பி.பி எகிறுமே!

சிலசமயங்களில் தாறுமாறாகப் பிரிப்பது கூடப் பொருள் பொதிந்ததாக அமையும். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதைக் குழந்தைகள் எழுத்தறிவு வித்தவன் என்று சொல்லும்போது தனியார்மயமான கல்வியைப் பற்றிய குறியீடாகக் கூட அதைப் பார்க்கலாம். ஆனால் சில இடங்களில் இப்படி எடக்கு மடக்காகப் பிரிப்பதிலும் நன்மை இருக்கும். பாரதியை அவமானப்படுத்த நினைத்த காந்திமதிநாதன் என்ற புலவர் அவரிடம் பாரதி சின்னப் பயல் என்று முடியுமாறு பாடல் எழுதச் சொன்னார். பாரதியும் காந்திமதி நாதனைப் பார்! அதி சின்னப் பயல் என்று பிரித்துப் பொருள் வரும்படிக் கவிபுனைந்தார்.

அதுபோல் சமீபத்தில் பாட்மிட்டனில் பதக்கம் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவைப் பாராட்டி அடியேன் எழுதிய குறள்:

சிங்கமாய்ச் சீறிய சிந்துவே உந்தனுக்குத் 
தங்கப்ப தக்கம் தகும்.

இக்கட்டுரை படித் துப்பின் பாராட்டுங்கள் !

{9443321004 – ramsych2@gmail.com)



பள்ளிக்கு திடீர் விடுமுறை அறிவித்த மாணவர்



நான் தலைமை ஆசிரியராக பணியாற்றும் சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு காலையில் சில பெற்றோர்கள் தொலைபேசியில் அழைத்து சார் இன்று பள்ளிக்கு விடுமுறையா? எனக் கேட்டனர். இல்லையே.. பள்ளி திறந்துதானே உள்ளது? விடுமுறை என்று யார் சொன்னார்கள்? என நான் கேட்டதுடன் எந்த மாணவர் சொன்னார் என்று சொல்கிறார்களோ அந்த மாணவரை என்னிடம்  பேசச் சொன்னேன். காலை வேளையில் பள்ளி ஆரம்பமாகும் நேரத்திற்கு முன்பாக இந்த திடீர் விடுமுறைத் தகவல் சில பெற்றோர்களை மட்டுமே  சென்றடைந்துள்ளதை அறிந்தேன். விடுமுறை இல்லை என வீட்டில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் தெரிவித்து அவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து விட்டோம். பள்ளியும் சரியான நேரத்தில் தொடங்கி விட்டது.

பிறகு மாணவர்களிடம் விசாரித்ததில், ஒரு குறிப்பிட்ட மாணவர்தான் பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளார் எனத் தெரிந்தது. பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மாணவர்களிடமும், பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சில மாணவர்களின் வீட்டுக்கும் சென்று இன்று பள்ளிக்கு திடீர் விடுமுறை.. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்று அந்த மாணவர் சொல்லி உள்ளார். அவர் மூன்றாம் வகுப்பு மாணவர். ஏன் இப்படிச் சொன்னார் எனக் கேட்டதற்கு அவரது பதில் எங்களை வியப்பில் ஆய்த்தியது.

இன்று காலை எனது அக்கா, தங்கையுடன் பள்ளிக்கு வந்தேன். அக்காவும் மற்ற சில மாணவர்களும் சதுரங்கப் போட்டிக்கு செல்ல உடற்கல்வி ஆசிரியருடன் வேறு பள்ளிக்குச் சென்று விட்டனர். எனது தங்கையும், நானும் இன்னும் சில மாணவர்களும் பள்ளியின் முன்பு நின்று கொண்டு இருந்தோம். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. பள்ளிக்கு விடுமுறை, அதுவும் நான்கு நாட்கள் விடுமுறை என்று என் அருகில் இருந்த முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் சொல்லி விட்டேன். அதையும் உடற்கல்வி
ஆசிரியர் சொன்னார் என்று சொல்லி விட்டேன். எனது தங்கையுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரில் பள்ளிக்கு வந்த சில மாணவர்களிடமும், சில மாணவர்களின் வீட்டுக்கும் சென்று பள்ளிக்குக் கிளம்பி கொண்டு இருந்த சில மாணவர்களின் பெற்றோரிடமும் பள்ளிக்கு விடுமுறை எனச் சொல்லி விட்டோம் என்று கூறினார். காரணம் கேட்டபோது, நேற்று வியாழக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை. அடுத்த இரண்டும் நாட்களும் சனி, ஞாயிறு விடுமுறை. தனியார் பள்ளிக        ளில் பயிலும் எங்கள் வீட்டின் அருகில் உள்ள மாணவர்களுக்கு நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் நாமும் ஏன் விடுமுறை விடக்கூடாது என்று எண்ணினேன். அவர்கள் வீட்டில் இருப்பது போல் நாமும் வீட்டில் இருக்கலாம் என எண்ணிதான் திடீர் விடுமுறை அறிவித்தேன். இனிமேல் இது போல் செய்யமாட்டேன் என்று கூறி வருந்தினார்.

திடீர் விடுமுறை அறிவித்த மாணவரின் தாயார் அவராகவே பள்ளிக்கு விடுமுறை இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு மாணவரையும், அவரது தங்கையையும் அழைத்து வந்தார். அந்த மாணவரின் தாயார் இருக்கும்போதுதான் அந்த மாணவரிடம் இவ்வளவு தகவலையும் கேட்டுப் பெற்றோம். அவரிடம் உங்கள் பையனுக்கு அறிவு நன்றாக வேலை செய்கிறது. ஆனால் அதனைச் சரியான வழியில் பயன்படுத்துமாறு கூறி நல்வழிப்படுத்துங்கள் என்று சொல்லி அனுப்பினோம். காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்களிடம் இனி வரும் காலங்களில் பள்ளி விடுமுறை என்பதை பள்ளி ஆசிரியர்கள் சொன்னால் மட்டுமே நம்ப வேண்டும் என்று எடுத்துக் கூறினோம். மாணவர் திடீர் விடுமுறை விட்ட நிகழ்வு எங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.


லெ.சொக்கலிங்கம் (தலைமை ஆசிரியர் - 9786113160)

 

Tuesday, October 4, 2016

மறுபடியும் - பிரேமபிரபா



இவ்வளவுதானா வாழ்க்கை? தெரியாது. இனிமேலும் ஓர் வாழ்க்கை இருக்கிறதா? அதுவும் தெரியாது. இப்படி விடை தெரியாத பல கேள்விகளுக்கிடையேதான் நாம் வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம். நமக்கான வாழ்க்கை சிறிது சிறிதாக சுருங்கி கூர் முனையுடன் நம் மனதை அழுத்தும்போதுதான் நம் அனைவருக்கும் வாழ்க்கை குறித்த ஒரு மறு வாசிப்பு தேவைப்படுகிறது. ஒரு காலத்தில் நாம் தேடிக் கொண்டாடிய வாழ்க்கை இப்போது வேண்டாத விருந்தாளியாய், செரிமானம் ஆகாத உணவுச் சக்கையாய் மாறும்போது நமக்குள்ளே ஒரு போராட்டம் நடக்கிறது. இப்படி நம்மையும் அறியாமல் நம் கைகளிலிருந்து தவறிய வாழ்க்கை, என்றாவது சுவற்றில் பட்டு எதிர்விசையுடன் ரப்பர் பந்து போல நம்மிடமே மீண்டும் வந்து விடாதா என்று மனதளவில் ஏங்குகிறோம்.

இதே மனநிலையில்தான் குமரேசனும் அவர் மனைவி அம்புஜமும் இருக்கிறார்கள். அறுபதிற்குண்டான வர்ணனைக்கு நூறு சதவிகிதம் மிகவும் பொருத்தமாக குமரேசன் இருந்தார். எப்போதும் எதையோ எதிர்பார்த்து நிற்கும் விழிகள். எதிர்காலத்தைக் குறித்த மத்தியதர வாழ்க்கையின் ஒட்டு மொத்த பயமும் அவர் முகத்தில் தெரியும். உணவு சார்ந்த ஈர்ப்பு எப்போதோ அவரை விட்டு நழுவிப் போயிருந்தது. வாழ்க்கையின் கொடிய பற்சக்கரத்தில் மாட்டிக் கொண்டு காறித் துப்பிய கரும்புச் சக்கையைப் போன்று சதைப் பற்றில்லாத மெலிந்த உடம்பு வாகு. எண்பதுகளில் நட்சத்திரக் கதைகள் பல எழுதி மக்களின் மனதில் இடம் பிடித்தவர். எழுத்தை நம்பியே தன் வாழ்க்கையை அமைத்து அந்த முயற்சியில் அந்தக் காலத்தில் வெற்றியும் கண்டவர்.

குமரேசனின் மனைவி அம்புஜம் மகனையும் மருமகளையும் அலுவலகத்திற்கு வழி அனுப்ப இரண்டு டிபன் பாக்ஸ் பைகளை இருகைகளிலும் வைத்துக்கொண்டு தன் தாங்குதிறனைத் தாண்டி வாரிச் சுமந்த புன்னகையுடன்  வாசலில் காத்திருந்தாள்.

அத்வைதை ஸ்கூலுக்கு பத்திரமா நேரத்துக்கு கொண்டு போய் விட்டுடுங்க. வேலை அது இதுன்னு ஏதாவதுன்னு சொல்லி நேரம் ஆச்சுதோ!.. கண்களை அகல விரித்து மாமியாரைச் சுற்றி அம்புப்படுக்கை விரித்தாள் மருமகள்.

அவருடைய மகன் புஜ்ஜி, நேரத்துக்கு  சாப்பிடுடா என்று குமரேசனின் காலடியில் சுருண்டு படுத்திருக்கும் வெள்ளைப் பூனையை எடுத்து முத்தம் கொஞ்சி நான் உங்கிட்டே பல தடவை சொல்லி இருக்கேன். புஜ்ஜி பசி தாங்க மாட்டான்னு. அதுக்கு மேல உனக்கு இந்த வீட்டிலே என்ன அப்படி முறிக்கிற வேலை?என்று அவன் பங்கிற்கு அம்புஜத்திடம் நெருப்பைக் கக்கி மனைவியைப் பெருமையுடன் பார்த்தான். தகப்பன் மகனிற்குமான உறவு எந்த நேரத்திலும் காற்றிற்கு முழுதும்  அறுந்துவிடும் கயிற்றுப் பாலம் போல ஊசலாடிக் கொண்டிருந்தது.

எப்பவும் வழி அனுப்பறதுதானே? மசமசன்னு நிக்காம உள்ளே போய் வேலையைப் பாருங்க என்று தன் உக்கிரத்தை மருமகள் காட்ட, நடுவானில்   இறக்கைகள் பழுதாகிப் போய் தடுமாறித் தரையிறங்கும் விமானம் போல வீட்டிற்குள் நுழைந்தாள் அம்புஜம். மூப்பின் அயற்சி அவள் கால்களின் வலுவை முழுவதுமாக உறிஞ்சி வீக்கத்தைக் கொடுத்திருந்தது. மகனும் மருமகளும் சென்று விட்டார்களா என்று ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்து தனக்குள் மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அடுக்களைக்கு வந்தாள். இரண்டு இட்டிலியை சிறு சிறு துண்டங்களாக விண்டு சிறிது அதன் மேல் தேங்காய்ச் சட்டினியை ஊற்றி திண்ணைக்கு விரைந்தாள்.

இப்பவே மணி ஒம்பது ஆகுதுங்க. வெறும் வயத்தோட இருக்காதீங்க என்று குமரேசனின் அருகில் உட்கார்ந்து கொண்டு அவரையே உற்றுப்பார்த்தாள். அப்போது இரு சக்கர வாகனத்தின் சப்தம் கேட்டவுடன் துணுக்குற்று எழப்போனவளின் தோளை அழுத்தி உட்காரவைத்தார். குமரேசன். அது உன் பையன் வண்டி இல்லேம்மா. பேப்பர்காரன் இப்போதான் வந்திருக்கான். எங்கேயாவது தடுமாறி கீழே விழுந்துடாதே என்று மனைவியை சமாதானப்படுத்தி தட்டத்தில் இருக்கும் இட்டிலித் துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டார். முற்றிய சக்கரை வியாதியால் வீங்கிய குமரேசனின் கால்களை மெதுவாகத் தடவிக்கொண்டே தன்னை மறந்து தூணில் சாய்ந்து கண் மூடினாள் அம்புஜம்.

என்ன பாட்டி, நீ இங்கே என்ன பண்றே? அம்மாகிட்டே சொல்லிடுவேன் என்று வயதிற்கு மீறிய அதிகாரத்துடன் பேரன் ஆட்காட்டி விரலை அசைக்க பாதி செப்பனிட்ட இயந்திரத்தின் பரிசோதனை ஓட்ட முயற்சியைப் போல தடுமாறியபடி மீண்டும் கொட்டடிக்குத் திரும்பினாள்.

திண்ணையில் இருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தவர் வீட்டிற்குள் ஒரு புது விருந்தாளியின் தயக்கத்துடன் நுழைந்தார். `அம்புஜம் என்றழைக்க பாதி கழுவிய பாத்திரங்களை அடுக்களை மேடையில் அப்படியே போட்டு விட்டு வேகமாக ஓடி வந்தாள்.

நம்ம பையன் ரொம்ப மாறிட்டான் இல்லை? என்று தயங்கியபடி கேட்ட குமரேசனிற்கு உடனடியாக பதில் அளித்தாள் அம்புஜம். இல்லைங்க, நாமதான் இன்னும் மாறாம அப்படியே இருக்கோம். குமரேசனிற்கு சுரீர் என்று இருந்தது.

நீ சொன்னது சரிதான் அம்புஜம். நாம இப்பவே வீட்டை விட்டுப் போயிடலாம்  என்றவர் மனைவியின் உள்ளங்கைகளைப் பார்த்தார். கரிய அடுக்களைக் கறைகளுடன் ஆங்காங்கே கீறியிருந்தது. மொத்த சோகத்துடன் கலங்கிய கண்கள். முழுவதுமாக நரைக்கத் தொடங்கிய தலைமுடிகளில் இருக்கும் ஒன்றிரண்டு கரிய முடிகள் அவருக்கு கடந்த காலத்தை அரை சுவாசாத்துடன் மீட்டுக் கொடுத்தது.  இடுங்கிய அவளின் கண்களில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு.

நாம எதையும் இங்கிருந்து எடுத்துப் போக வேண்டாம் என்று கூறியவர் பீரோவில் இருக்கும் அரக்கு நிறப்  பேனாவை மட்டும் எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு அம்புஜத்தை பெருமையுடன் பார்த்தார். நம்பிக்கையுடன் இருவரும் கைகளைப் பிடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

நீண்ட இடைவேளிக்குப் பிறகு குமரேசன் எழுதிய சிறுகதை மறுபடியும் பிரபலமான மாத இதழ் ஒன்றில் நட்சத்திரக் கதையாக பிரசுரமானது.


(9790895631 – premaprabha.premkumar@gmail.com)



விவசாயம், சுற்றுச்சூழல், உடல் நலன்

பேராசிரியர் கே. ராஜு தீக்கதிரில் எழுதி வரும் அறிவியல் கட்டுரைகளின் நான்காவது தொகுப்பு விவசாயம், சுற்றுச் சூழல், உடல் நலன் என்ற தலைப்பில் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. விவசாயம், சுற்றுச்சூழல், உடல் நலன் ஆகிய மூன்று தலைப்புகளுமே ஒன்றோடொன்று தொடர்புடையவைதான்.


இந்த நூலைப் படிக்கும் விவசாயத்தில் ஈடுபடாத அல்லது விவசாய முறையையே அறிந்திராத ஒரு சாதாரண நகரவாசிக்கே தமக்கும் ஒரு துண்டு நிலம் இருந்தால் விவசாயம் பண்ணிப் பார்க்கலாமே என்ற எண்ணம் ஏற்படும். நகரத்திற்குச் சென்று வேலை செய்யலாம் என்ற எண்ணம் இருப்பவர்களுக்குக் கூட விவசாயமும் ஒரு தொழில், அதை விஞ்ஞான ரீதியில் செய்தால் பொருளீட்ட முடியும் என்ற சிந்தனையை இந்நூல் நிச்சயம் உருவாக்கும்.

புதிய முறையில் விவசாயம் செய்து வெற்றி பெற்றவர்களின் இமெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களை கட்டுரையுடன் இணைத்திருப்பதால் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள முடியும். காலங்காலமாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அனுபவசாலிகளே கற்றுக் கொள்ளக் கூடிய புதிய சாகுபடி முறைகள், நவீன கருவிகளை உருவாக்கும் முயற்சிகள், ஆரோக்கியமான விதைகளைப் பயன்படுத்துதல், இயற்கை உரம் மற்றும் பூச்சிக் கொல்லி தயாரிப்பு போன்ற பல புதிய யுக்திகளைப் பயன்படுத்தும் ஆர்வத்தை இந்த நூல் ஏற்படுத்தும். இன்றைக்கு உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசுபட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் நீரிலும்  நிலத்திலும் வாழும் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக மனித இனம் தங்களது வளங்கள் அனைத்தையும் இழந்து தவிக்கும் நிலை உருவாகி வருகிறது.

தொழில் வளர்ச்சி என்ற பெயரால் காடுகளை அழிப்பது, நீர் நிலைகள் அனைத்திலும் தொழிற்சாலைகளின் கழிவுகளைத் திறந்து விட்டு தண்ணீரை நஞ்சாக்குவது தினம் நடந்து வரும் சோகம் என்பதை எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. இவ்வாறு சுருக்கமாகச் சொல்லுகின்ற பாணி எல்லா எழுத்தாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஓன்று. இந்த நூலின் மூன்றாவது பகுதி உடல் நலன் குறித்தது. தட்பவெப்ப நிலையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் மக்கள் உடல் நலத்திற்கு மிகப் பெரிய கேடு விளையும் என்று எச்சரிக்கும் அவர் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதையும் குறிப்பிடுகிறார். மேலும் மனிதர்களுக்குப் பரவும் பல்வேறு நோய்கள் சம்பந்தமாகவும், தொற்று நோய்களிலிருந்து எப்படி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது போன்ற விவரங்களையும் இந்த நூலில் தந்துள்ளார். தொப்புள் கொடி சேகரிக்கும் வங்கி, ஸ்டெம் செல் சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, மரபணு சிகிச்சை போன்ற நவீன சிகிச்சை முறைகளைப் பற்றியெல்லாம் தெளிவாக அனைவருக்கும் புரியும் வண்ணம் சொல்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக விவசாயம், சுற்றுச்சூழல், உடல் நலன் ஆகியவை பற்றிய ஒரு பருந்து பார்வையை இந்த நூல் நமக்கு வழங்குகிறது. பேராசிரியர் வெ.பா. ஆத்ரேயா அணிந்துரை எழுதி சிறப்பித்துள்ளார். அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.
சி.ராமலிங்கம், முன்னாள் பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வெளியீடு : மதுரை திருமாறன் வெளியீட்டகம்,
புதிய எண் 21 சாதுல்லா தெரு,
தி.நகர், சென்னை 600 017
செல் : 78717 80923 / 94437 22311
192 பக்கங்கள் / விலை : ரூ. 130