அண்மைக் காலத்தில் தமிழகத்தில் `பிக்பாஸ் போல இத்தனை பரபரப்பை உண்டாக்கின வேறொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைச்
சொல்லமுடியாது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது
கமல்ஹாசன் நெறியாளராகப் பங்கேற்கும் இந்த பிக்பாஸ். தமிழில் புதிய புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கும் விஜய் தொலைக்காட்சி
பிக்பாஸ் என்ற முற்றிலும் புதிய வடிவிலான நிகழ்ச்சியை நடத்தப்போகிறது என்ற பேச்சு அடிபட்டபோதே
அது தொடர்பான எதிர்பார்ப்புகளும் உருவாகத் தொடங்கிவிட்டன. கமல்தான் இதனை நடத்தப்போகிறார்
என்ற செய்தி பலரையும் பரபரக்கவைத்தது.
இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் மொத்தம் 15 பேர். அவர்கள் ஒரே வீட்டில் நூறு நாட்களுக்குத்
தங்கவேண்டும் என்பது நிபந்தனை. அங்கே தங்குபவர்கள் வெளித்தொடர்பு எதையும் பெற
முடியாது. அலைபேசி, தொலைக்காட்சி, செய்தித்தாள் எதுவும் கிடையாது, படிக்கப் புத்தகங்களோ; எழுத நோட்டோ - பேனாவோ எதுவும்
கிடையாது. உள்ளே இருக்கும் நாளெல்லாம் அவர்கள் தங்கள் உணவைத் தாங்களே தயார் செய்துகொள்ள
வேண்டும். கழிவறைகளைத் தாங்களே சுத்தம் செய்துகொள்ள வேண்டும்,
தங்களுக்குத் தேவையானவற்றை குழுக்களாகப் பிரிந்து நிறைவு செய்துகொள்ள
வேண்டும். அப்புறம் தினமும் ஏதாவது போட்டி,
விளையாட்டு, நடனம்,
நடிப்பு என்று போய்க்கொண்டேயிருக்கும். நூறு
நாட்களை ஓட்டவேண்டாமா? இதில் பங்கேற்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் தொலைக் காட்சியில்
நிகழ்ச்சியைப் பார்க்கிறவர்களுக்கும் கடமைகள் உண்டு. ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்கள் ரகசிய
அறைக்குச் சென்று தாங்கள் யாரை இந்தப் போட்டியிலிருந்து வெளியேற்ற விரும்புகிறோம்
என்று தங்கள் அனுபவத்திலிருந்து ஒவ்வொருவரும் சொல்லவேண்டும். அதிகம் பேர் பரிந்துரைத்த
மூன்று நபர்களில் ஒருவரை நேயர்கள் வாக்களித்து வீட்டுக்கு அனுப்புவார்கள். இப்படி பல விதங்களிலும்
உள்ளேயிருப்பவர்களுக்கும் வெளியே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கும் அலுப்புத் தட்டாமல் நிகழ்ச்சியைக் கொண்டுபோக மண்டையைக்
குடைந்து, யோசித்து
யோசித்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த பிக்பாஸ்.
பங்கேற்பாளர்கள் 15 பேர்களில் பெரும்பாலோர் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள். வேறு துறைகள்
சார்ந்தோர் சிலரும் உண்டு. நடிகர்கள் வையாபுரி,
கஞ்சா கருப்பு, கணேஷ் வெங்கட்ராம், பரணி,
ஸ்ரீ,
விளம்பர மாடல் ஆரவ், இயக்குநர் பி. வாசுவின் மகன் சக்தி, கவிஞர் சிநேகன், நடிகைகள் நமீதா, ஓவியா,
ஆர்த்தி கணேஷ், அனுயா,
நடன இயக்குநர் காயத்ரி ரகுராமன், மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்ற ராய்சா
வில்சன், மெரினாவில்
நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டு பலரின் கவனத்தை ஈர்த்த ஜூலியானா
ஆகியோர்தான் பங்கேற்பாளர்கள். ஆர்ப்பாட்டமான விளம்பரங்கள்,
துவக்க விழா என்று துவக்கத்திலேயே பார்வையாளர்களது
எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டிருந்தது இந்த பிக்பாஸ்.
பிக்பாஸ் தொடங்கிய சில நாட்களிலேயே கமல்ஹாசன் தமிழக\ அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டைக்
கடுமையாக முன்வைத்து ட்விட்டரில் எழுதியதால் ஒரு பக்கம் ஆளும் கட்சித்
தரப்பிலிருந்தும், மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழகத் தலைவர்களிடமிருந்தும் பெரும்
எதிர்ப்பை எதிர் கொண்டார். ஆனால், அந்த எதிர்ப்பிற்கு அஞ்சிடாமல் பதிலுக்கு பதில்
கொடுத்துக்கொண்டுமிருந்தார். இதன் காரணமாகவும் தொலைக்காட்சி நேயர்களின் முதல் விருப்பமாக பிக்பாஸ் ஆகிப்போனது.
முதல் வார இறுதிநாளான சனிக்கிழமையன்று கமல் மீண்டும் பார்வையாளர்கள் முன்னிலையில்
தோன்றினார். பங்கேற்பாளர்களின் நடவடிக்கைகள்,
பேச்சுக்கள், அவர்களுக்குள் உண்டான முரண்கள், அதனையொட்டி எழுந்த வசைச் சொற்கள்
என்று எல்லாம் அலசப்பட்டன. இதேபோல ஞாயிறு அன்று கமல் தோன்றும் நிகழ்வு. மற்ற நாட்களில் அந்த
அடைக்கப்பட்ட வீட்டினுள் இருக்கும் பங்கேற்பாளர்களின் சண்டைகள், பரிவுகள்,
குழு மனப்பான்மையோடு அவர்கள்
பேசும் புறணி என்பதையெல்லாம்விட ஒவ்வொரு வாரமும் சனி,
ஞாயிறு ஆகிய கிழமைகளில் கமல்
தோன்றுகிற நிகழ்வு சற்றே சுவாரஸ்யம் நிறைந்ததாய் உருப்பெற்றது ஒரு கட்டத்தில்.
கமலின் பங்கேற்பு நிகழ்ச்சிக்கு மெருகேற்றுவது காரணமாக மற்ற நாட்களில் பிக்பாஸ்
பார்க்காத, பார்க்க
இயலாதவர்கள்கூட சனி, ஞாயிறுகளின் பார்வையாளர்கள்ஆனார்கள்.
ஒருபுறம் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற வெற்றிகரமான நிகழ்ச்சியாக
பிக்பாஸ் கருதப்பட்டாலும் இதற்கு சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியதைக் காண முடிந்தது. ஒரே
இடத்தில் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத ஆண்களையும்,
பெண்களையும் நூறு நாட்களுக்கு
அடைத்துவைப்பதா? நமது\ கலாச்சாரம் என்னாவது? பண்பாட்டுச் சீரழிவில்லையா இது என்றெல்லாம் கலாச்சாரக்
காவலர்களும், மதவாத
அமைப்புகளைச் சேர்ந்தோரும் குரலெழுப்பத் தொடங்கினார்கள். கமல்ஹாசனைக் கைது செய்யவேண்டும் என்றுகூட
அறிக்கை விட்டனர். அதற்குத் தோதாக மேட்டிமையோடு சாதாரண மக்களை இழிவுபடுத்தும் விதமான
உரையாடல் நிகழ்ந்தபோது முற்போக்காளர்களின் எதிர்ப்பும் சேர்ந்துகொண்டது. அதனைக்
கமல் கண்டிக்கத் தவறிவிட்டார் என்றும், அவரது பதில் மழுப்பலானது என்றும் விமரிசனங்கள் வந்தன.
ஆனாலும் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இதுவரையில் தராத மகத்தான ஆதரவை தமிழ் மக்கள் இந்நிகழ்ச்சிக்கு
அளித்து வருகின்றனர். 4 கோடிப் பேர் இதனை தினமும் பார்ப்பதாக ஒரு புள்ளி விபரம்
சொல்கிறது. இதன் வெற்றிக்கு முதற்காரணமாக நடிகர் கமல்ஹாசனைத்தான் சொல்ல வேண்டும்.
அவரது பக்குவமான
அணுகுமுறை நிகழ்ச்சிக்கு மாபெரும் பலம். தனது விரிந்த சமூக சிந்தனையை,
பட்டறிவை அவர் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும்
விதம் காண்போரைக் கட்டிப்போடுகிறதென்றால் அது மிகையல்ல. தங்களது தவறான பேச்சுக்களால், நடத்தைகளால் வெளியேறும் நபர்களை
அவர் ஆற்றுப்படுத்தி அனுப்பும் விதம் அபாரமானது. வெளியேறுகிறவர்களிடமிருந்து படிப்பினைகளைப் பெறும் உள்ளிருப்போர் தங்களது
தவறுகளைக் களைந்து கொண்டு பண்பட்டுவருவதையும் பார்க்கமுடிகிறது.
நூறு நாட்கள் என்ற சவாலில் இதுவரையில் மூன்றில் ஒரு
பங்குதான் நிறைவடைந்திருக்கிறது. இன்னமும் நாட்கள் பல மிச்சமிருக்கின்றன. தொலைக்காட்சிகள் வணிக நோக்கத்தோடுதான் செயல்பட முடியும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
அந்த வணிகத்தினூடாக நமக்கும் சமூகத்துக்கும் ஏதாவது பலன் உண்டா என உற்றுநோக்க எவருக்கும் உரிமையுண்டு.
ஆனால், பெண்களைக் கட்டிப்போட்டுவைக்கும் மெகா தொடர்களுக்கு மத்தியில்,
பில்லி சூனியம், பேய்,
பிசாசு என்று சமூகத்தை அச்சத்தில் கிட்த்தும் நிகழ்ச்சிகளுக்கு ஊடாக, பக்தி வியாபாரம்,
பலவிதமான சாமியார்களின் உபதேசப்
படையெடுப்புகளுக்கு இடையில் தமிழில் இந்த பிக்பாஸ் ஒரு புதிய முயற்சியாக இருக்கிறது. நிகழ்ச்சியை
முழுவதுமாகப் பார்த்துவிட்டுத்தான் ஒரு முடிவுக்குப் நாம் போகமுடியும். டச்சு மொழியில்
பிக்பிரதர் (2006) என்று
தொடங்கிய நிகழ்ச்சி, பிக்பாஸ் என்று ஆங்கிலம்,
இந்தி,
தெலுங்கு போன்ற மொழிகளில்
வந்ததுதான் இந்த பிக்பாஸ். மற்ற மொழிகளில் வந்த நிகழ்ச்சிகள் பற்றி நாம் அறியோம்.
ஆனால் தமிழில்
முழுக்க முழுக்க சினிமா உள்ளிட்ட கலைத்துறையினருடம் ஒரு ஜல்லிக் கட்டுப் போராளியைச் சேர்த்துக்கொண்டதுபோல, ஒரு விவசாயப் போராளியை, கல்வியாளர் ஒருவரை, மாணவர்களின் பிரதிநிதியை, ஒரு நல்ல அரசியல்வாதியை என்று இந்தப்
பங்கேற்போர் கலவையை சற்றே மாற்றி யோசித்திருந்தால் இந்த நிகழ்ச்சி அறிவார்ந்த தளத்தில் வேறு சில சிந்தனைகளைப் பார்வையாளரிடத்தில்
விதைத்திருக்கும். தற்போதைய நிகழ்ச்சியில் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களிடம் சிறிது
கூட சமூக அக்கறை வெளிப்படவேயில்லை
என்பது வருத்தத்திற்குரியது. இருப்பினும் நாம் கேட்க விரும்புவது கமல் கேட்டதுபோல, இந்த ஒரு நிகழ்ச்சியால் சீரழிந்துவிடும் என்றால் அத்தனை பலவீனமானதா
நமது பண்பாடு? தொடர்ந்து
கவனிப்போம். நூறு நாட்களை நிறைவு செய்தபின் ஒரு முழு விமரிசனத்தை முன்வைப்போம். வெறும் வணிகத்தை மட்டும்
இனி எவரும் முன்வைக்க
முடியாது. அப்படி மட்டும்தானா முடியப்போகிறார் இந்த பிக்பாஸ்? பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
(cholanagarajan@gmail.com , 98425
93924)